(நெவில் அன்தனி)
சீனாவின் ஹங்ஸோவில் நடைபெற்றுவரும் 19ஆவது ஆசிய விளையாட்டு விழாவில் மகளிர் கிரிக்கெட் போட்டியில் இலங்கை வெள்ளிப் பதக்கம் வென்று திருப்தி அடைந்தது.
இம்முறை ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கை வென்றெடுத்த முதலாவது பதக்கம் இதுவாகும்.
உதேஷிகா ப்ரபோதனி, இனோகா ரணவீர, சுகந்திகா குமாரி ஆகிய பந்துவீச்சாளர்கள் பலம்வாய்ந்த இந்திய துடுப்பாட்டத்தைக் கட்டுப்படுத்தியபோதிலும் இலங்கை வீராங்கனைகள் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறியமை இலங்கையின் தோல்விக்கு காரணமானது.
ஹங்ஸோ விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (25) நடைபெற்ற மகளிர் இருபது 20 கிரிக்கெட் போட்டியில் இந்தியாவிடம் 9 ஓட்டங்களால் தோல்வி அடைந்ததால் இலங்கைக்கு வெள்ளிப் பதக்கம் சொந்தமானது.
இன்ச்சொன் 2014 ஆசிய விளையாட்டு விழாவில் வெண்கலப் பதக்கம் வென்ற இலங்கைக்கு மகளிர் கிரிக்கெட்டில் கிடைத்த 2ஆவது ஆசிய விளையாட்டு விழா பதக்கம் இதுவாகும்.
இந்தியாவினால் நிர்ணயிக்கப்பட்ட 117 ஓட்டங்களை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 97 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
அனுஷ்கா சஞ்சீவனி (1), விஷ்மி குணரட்ன (0), அணித் தலைவி சமரி அத்தபத்து (12) ஆகிய மூவரும் ஒரு ஓட்ட வித்தியாசத்தில் ஆட்டம் இழக்க, இலங்கை 14 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
எனினும் ஹசினி பெரேரா (25), நிலக்ஷி டி சில்வா ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 36 ஓட்டங்களைப் பகிர்ந்து வீழ்ச்சியைக் கட்டுப்படுத்தினர்.
தொடர்ந்து நிலக்ஷி டி சில்வா (23), ஓஷாதி ரணசிங்க (19) ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 28 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவுக்கு நெருக்கடியைக் கொடுத்தனர். ஆனால் இருவரும் 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்ததால் இலங்கை மீண்டும் அழுத்தத்தை எதிர்கொண்டது.
அதன் பின்னர் ஓட்டங்களைப் பெறுவதில் சிரமத்தை எதிர்கொண்ட இலங்கை, வெள்ளிப் பதக்கத்தை வென்று திருப்தி அடைந்தது.
பந்துவீச்சில் டிட்டாஸ் சாந்து 6 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ராஜேஷ்வரி கயக்வாட் 20 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இந்தியா 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 116 ஓட்டங்களைப் பெற்றது.
இலங்கை பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்ட இந்தியா சார்பில் ஸ்ம்ரித்தி மந்தனா (46), ஜெமிமா ரொட்றிகஸ் (42) ஆகிய இருவரே திறமையை வெளிப்படுத்தி சுமாரான ஓட்டங்களைப் பெற்றனர்.
அவர்கள் இருவரும் 2ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 73 ஓட்டங்களே ஆட்டத்தில் திருப்பு முனையாக அமைந்தது.
ஏனைய வீராங்கனைகள் ஒற்றை இலக்க எண்ணிக்கைகளையே பெற்றனர்.
இந்தியாவின் பிரபல மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளான ஷபாலி வர்மா (9), ரிச்கா கோஷ் (9), அணித் தலைவி ஹாமன்ப்ரீத் கோர் (2), ஆமன்ஜோத் கோர் (1) ஆகியோர் இலங்கை பந்துவீச்சில் துவண்டு போயினர்.
பந்துவீச்சில் உதேஷிகா ப்ரபோதனி 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் இனோக்கா ரணவீர 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் சுகந்திகா குமாரி 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM