உடற்பயிற்சியின் மூலம் வலிகளை குணப்படுத்துவோம் - இயன்மருத்துவர் அஞ்சலி விஜயரட்ணம்

25 Sep, 2023 | 03:49 PM
image

வலிக்குரிய பிரதான காரணங்களை கண்டுபிடித்து அதற்குரிய உடற்பயிற்சியினை‌ அறிமுகப்படுத்துவதன் மூலம் வலியினை குணப்படுத்துவது இயன்மருத்துவம் ஆகும் என இயன்மருத்துவர் அஞ்சலி விஜயரட்ணம் கூறுகிறார்.

இயன்மருத்துவர் அஞ்சலி விஜயரட்ணத்திடம் வீரகேசரி இணையத்தளம் சார்பாக முன்னெடுத்த நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் வழங்கிய நேர்காணல் வருமாறு,

1) இயன்மருத்துவம் பற்றி சுருக்கமாக கூறவும்?

இயன் மருத்துவம் என்று சொல்வது எங்களுடைய உடல் இயக்கத்துடன் சம்பந்தப்பட்ட  மருத்துவம் அதாவது இதில் மேற்கத்திய (Western) மருத்துவத்தில் பயன்படுத்துகிற மாதிரி எந்தவித மருந்துகளையும் பயன்படுத்தி இந்த மருத்துவத்தை நாங்கள் செய்யப்போவதில்லை இதில் எங்களுடைய உடலுடைய இயற்கையான அசைவினை கருவியாக பயன்படுத்திதான் இந்த மருத்துவ முறை செய்யப்படுகிறது. உதாரணமாக பாடசாலை காலங்களில் முதுகு வலி வருவது மிகக்குறைவு. ஆனால் வேலை செய்யும் காலங்களில் பல மணிநேரம் உட்கார்ந்து இருக்கும்போது வலி வருகிறது.

இதற்கான‌ காரணம் அந்த இயக்கத்தில் ஏற்பட்ட தடையால் வந்த வலி, ஆகவே வலிக்கான நிவாரணியாக அந்த இருக்கை முறையில் உள்ள இயக்கத்தை நெறிப்படுத்துவதாகவோ அல்லது சிறிது ஓய்வு எடுப்பதாகவோ அமையலாம்.

மேலும் வலிக்குரிய பிரதான காரணங்களை கண்டுபிடித்து அதற்குரிய உடற்பயிற்சியினை‌ அறிமுகப்படுத்துவதன்  மூலம் வலியினை குணப்படுத்துவது இயன்மருத்துவம் ஆகும். இதுபோல் கழுத்து வலி , தோல்பட்டை வலி போன்றவற்றிற்கும் காரணம் அறிந்து அதற்குரிய உடற்பயிற்சிகள் மூலம் குணமடைய செய்யலாம்.

ஆகவே இயற்கையாக எங்களுடைய வாழ்க்கை முறை‌ மூலம் செய்யப்படும் மருத்துவ முறை என்றும் இயன்மருத்துவத்தை கூறலாம்.

2) சிறுவயதிலிருந்தே மருத்துவராக வரவேண்டும் என்ற விருப்பம் உங்களுக்கு இருந்ததா? அது பற்றி?

சிறுவயதில் இருந்தே மருத்துவராக வரவேண்டும் என்று விருப்பம் உங்களுக்கு இருந்ததா என்று கேட்டால் கண்டிப்பாக இருந்தது. மருத்துவத்துறைக்கு இருந்த கெளரவம், தேவை மற்றும் உபாதைகளுக்கான சிகிச்சை முறைகளை யாழ்நகரில் பாடசாலையில் கல்விகற்கும் காலத்தில் இருந்தே பார்த்து உணர்ந்து மருத்துவசேவை செய்ய விருப்பம் ஏற்பட்டது.

எனது உயர்தர பெறுபேற்றில் சிறிய புள்ளிகள் வித்தியாசத்தில் ஆங்கில மருத்துவதுறை அனுமதி கிட்டவில்லை. கொழும்பு பல்கலைக்கழக‌ம் மற்றும் பேராதனை‌ பல்கலைக்கழக மருத்துவபீடங்களில் இயன் மருத்துவம் ஒரு பட்டப்படிப்பாக காணப்பட்டது.

நான் கொழும்பு‌ பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இளமானி‌‌ பட்டப்படிப்பை நிறைவு செய்தேன். ஆரம்பத்தில் எனக்கு இதில் பெரிய விருப்பம் உண்மையில் இருக்கவில்லை சிறிது காலத்தின் பின்னர் கள செயன்முறை கற்றலில் ஈடுபடும்போதுதான் இதன் மகத்துவம் புரிந்தது.

நோயுற்றவர்களுடன் நேரடியாக பேசும்போது, மருத்துவம் செய்யும்போது இதன் மேலுள்ள விருப்பம் அதிகரித்தது. தற்போது நான் கொழும்பில் சேவைசெய்தாலும் நாட்டின் பலபாகங்களில் இருந்தும் நோயாளர்கள் வருகைதந்து சிகிச்சை பெறுவது ஏன் இந்தியாவின் மத்தியபிரதேஷ் பகுதியில் இருந்து கூட ஒருவர்வந்து சிகிச்சை பெற்று சிறப்பாக உள்ளது என கூறியமை சேவையில் திருப்தியினை தருகிறது. தற்போது இயன்மருத்துவராக இருப்பதில் மிகுந்த சந்தோஷமடைகின்றேன்.

3) இயன்மருத்துவம் எவ்வாறு விளையாட்டு துறையினருக்கு பயனளிக்கிறது?

விளையாட்டுத்துறையை பொறுத்தவரையில் இந்த இயன்மருத்துவம் என்பது ஒரு தவிர்க்க முடியாத ஒன்று. விளையாட்டு துறையினருக்கு இயக்கம்  என்பது ‌முக்கியமானது. விளையாட்டு வீரரை பொருத்தவரையில் தொடர்ந்து பயிற்சி செய்யவேண்டும், தொடர்ந்து போட்டிகளில் ஈடுபடவேண்டும். இந்த சந்தர்ப்பத்தில் ஏற்படக்கூடிய வலியை‌ அவர்கள் எப்படியாயினும் கட்டுப்படுத்திக்கொண்டுதான் விளையாட வேண்டும்.

உதாரணமாக பார்த்தால் முட்டியில் (முழங்கால்) ஏற்படக்கூடிய வலிக்கான‌ சிலகாரணங்கள் அவர்களது முழங்கால் சவ்வு ஒரு நிலையாக இல்லாமை, ஊறு ஏற்பட்டிருத்தல் அல்லது நிலையாக இல்லாமையை குறிப்பிடலாம். இந்த நிலையில் ஓர் காற்பந்தாட்ட வீரரை எடுத்துக்கொண்டால் அவருக்கு ஓட வேண்டி ஏற்படும், பந்தினை‌ தடுக்க, உதைக்க வேண்டி ஏற்படும். ஆகவே ஆரம்ப கட்டத்திலேயே முழங்காலிற்குரிய பலப்படுத்தும் பயிற்சிகளை இயன்மருத்துவ முறை மூலம் ஆரம்பத்திலே செய்வது சிறப்பானது.

அதேசமயம் வலி கூடுதலாக இருந்தால் ஓர் சிறிய ஓய்வு எடுத்து மறு வாழ்விற்கு காலம் கொடுக்க வேண்டும். இதனடிப்படையில் இயன்மருத்துவம் விளையாட்டு துறையினருக்கு ஓர் வரப்பிரசாதம் எனினும் மிகையாகாது. அதேசமயம் உபாதையை  தடுப்பதற்கும் இது உதவும்.  மேலும் இயன்மருத்துவத்தில் டேப்பிங் (Taping) உபயோகித்தல் முறை விளையாடும்போது முழங்கால் மற்றும் மூட்டுகளில் ஏற்படும் விலகலை , உபாதைகளை குறைத்துக்கொள்வதற்கு உதவும்.

4)இயன்மருத்துவராக‌‌ பணியாற்றும் உங்களின் ஓர் மறக்கமுடியாத அனுபவம்?

கடந்த 6 வருடங்களாக இயன்மருத்துவராக பணியாற்றுகின்றேன். இதில் மறக்க முடியாத அனுபவங்கள் பல உண்டு. கோவிட் இற்கு பின்பு 45வயதான பெண்மணி‌ 3 MRI தரவுகளுடன் அறிக்கையாளர்கள் சிகிச்சைக்காக வந்திருந்தார். கடுமையான நாரிவலி அதாவது முள்ளந்தண்டு இடைத்தட்டு விலகி அதிலுள்ள நரம்பு நசுக்கப்படுவதனால் ஏறபடும் அந்த வலி கால்களிற்கு ஊடறுத்து செல்வதுபோல உணரப்படும். சில மருத்துவர்களின் ஆலோசனையின் பிரகாரம் வலிநிவாரணிகளையும் உபயோகித்துள்ளார் ஆனால் அவை குறுகிய காலத்திற்கே பயனளித்துள்ளது. ஊசி மருந்தின் மூலமாகவும் 3மாதத்திற்கான வலிநிவாரணம் கிடைத்திருந்தது.

இறுதியாக சத்திரசிகிச்சை என்ற நிலைவந்ததும் அந்த பெண்மணி ஒருவாறு கண்டறிந்து இயன்மருத்துவத்தையும் பார்ப்போம் என்ற முடிவுக்கு வந்திருந்தார். நான் பரிசோதித்து பார்த்தபோது முள்ளந்தண்டு மாத்திரமல்ல நாரிப்பகுதியை சுற்றியுள்ள தசைகளிலும், இனணப்புகளிலும் வலி இருப்பதை காணமுடிந்தது.

அதனடிப்படையில் நான் சிகிச்சை வழங்கி 2 வாரத்தில் அவரது வலி வெகுவாக குறைவடைந்தது. அவரது அன்றாட வேலைகளை செய்யும் நிலைவந்ததும் அவர் மிகவும் சந்தோஷமும், நம்பிக்கையும் அடைந்தார்.  மேலும் 3வாரங்கள் சிகிச்சை பெற்று சிறப்பான பெறுபேற்றினை அடைந்தார். அந்த பெண்மணி கேக் செய்வதை பகுதிநேர தொழிலாக உடையவர். தனது கையால் நன்றி என குறிப்பிட்டு அழகிய கேக் உம், கையால் செய்த நன்றி என்ற மடலினை‌யும் எனக்கு பரிசளித்தமை இன்றும் ஒரு விருதாகவே கருதுகிறேன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right