வித்தியாசமாக உருவாகி இருக்கும் 'இறைவன்'

25 Sep, 2023 | 01:12 PM
image

ஜெயம் ரவி நடிப்பில் தயாராகி செப்டம்பர் 28 ஆம் திகதியன்று வெளியாக இருக்கும் 'இறைவன்' திரைப்படம், 'வித்தியாசமான ஜேனரில் உருவாகி இருக்கிறது' என அப்படத்தின் இயக்குநர் அகமது தெரிவித்திருக்கிறார்.

இயக்குநர் ஐ. அகமது இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'இறைவன்'. இதில் ஜெயம் ரவி, நயன்தாரா, பொலிவுட் நடிகர் ராகுல் போஸ், ஆஷிஷ் வித்யார்த்தி, நரேன், சார்லி, வினோத் கிஷன், விஜயலட்சுமி, அழகம் பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஹரி கே. வேதாந்தம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். கிரைம் திரில்லர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் சுதன் சுந்தரம் மற்றும் ஜி. ஜெயராம் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இப்படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் உள்ள நட்சத்திர ஹொட்டேலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் இயக்குநர் ஹெச். வினோத், 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா உள்ளிட்ட பலர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றினர். இவர்களுடன் ஜெயம் ரவி, மம்தா மோகன் தாஸ், நரேன், விஜயலட்சுமி, அழகம் பெருமாள் உள்ளிட்ட படக்குழுவினரும் பங்கு பற்றினர்.

இதன் போது பேசிய இயக்குநர் அகமத், '' ஜெயம் ரவி நடிப்பில் 'ஜன கன மன' எனும் படத்தினை தொடங்கினேன். கொரோனா தொற்று காரணமாக அப்படத்தினை பூர்த்தி செய்ய இயலாத நிலையில்.. மீண்டும் அவருடன் இணைந்து 'இறைவன்' எனும் இப்படத்தினை இயக்கத் தொடங்கினேன். இப்படத்தின் கதையை அவரிடம் முழுமையாக கூறாமல், கதையின் நாயகனின் பணி மற்றும் கதையின் கரு இதை மட்டுமே அவரிடம் தெரிவித்தேன். இதில் உள்ள அனைத்து விவரங்களையும் அவர் உணர்ந்து கொண்டு நடிக்க ஒப்புக்கொண்டார். நயன்தாராவிடமும் இரண்டு நிமிடத்தில் தொலைபேசி வழியாகவே அவரது கதாபாத்திரத்தை விவரித்தேன். அவரும் நடிக்க ஒப்புக்கொண்டார். 

திரைப்படம் என்பது அனைவரின் கூட்டு முயற்சி. இப்படம் தரமாக உருவானதற்கு தயாரிப்பாளர், நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட அனைவரின் அர்ப்பணிப்புடன் கூடிய ஒத்துழைப்பு தான் முக்கிய காரணம்.

இறைவன் திரைப்படம் ஒரு கமர்சியல் படம் தான். அதனை நேர்த்தியாக உருவாக்கியிருக்கிறேன். ஜெயம் ரவி நடிப்பில் வித்தியாசமான ஜேனரில் இந்த திரைப்படம் தயாராகி இருக்கிறது. அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து கண்டு ரசித்து ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right