குலதெய்வத்தின் அருளை முறையாக பெறுவது எப்படி..?

25 Sep, 2023 | 12:55 PM
image

பொதுவாக எம்மில் பலரும் தொழில் தொடங்கும் போதோ அல்லது வாழ்க்கையில் முக்கியமான முடிவுகளை எடுக்கும் போதோ தங்களின் கடும் உழைப்பையும், இதற்கு பின்னணியில் உள்ளவர்களின் ஆதரவையும் மட்டுமே மனதில் கொள்வர். மேலும் தொழிலில் ஈடுபடுபவர்கள் கடுமையாக உழைத்தாலும்... சாமர்த்தியமாக உழைத்தாலும்... புத்திசாலித்தனமாக உழைத்தாலும்... அவர்களின் வளர்ச்சி என்பது ஒரு எல்லைக்கு மேல் வளராமல் தேக்கமடைந்திருக்கும். மேலும் அவர்கள் எடுக்கும் முடிவுகள், பல தருணங்களில் தவறானவை என்பதையும் அவர்களின் அனுபவங்களின் மூலமாக உணர்ந்திருப்பர். இதற்கு பிரதான காரணமாக ஆன்மீக பெரியோர்கள் முன்மொழிவது அவர்கள் குலதெய்வத்தின் அருளை முறையாக பெற்றிருக்கவில்லை என்பதை தான்.

வேறு சிலர் நாங்கள் தொழில் தொடங்கும் போது குலதெய்வத்தை சென்று வணங்கி விட்டு தான் தொடங்கினோம். ஆனால் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது என்றுரைப்பர்.

வேறு சிலர் எம்முடைய திருமண வாழ்க்கையை தொடங்குவதற்கு முன் குலதெய்வ ஆலயத்திற்கு சென்று வணங்கிய பிறகுதான் தொடங்கினோம். ஆனால் இல்வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இல்லை என்றும் புலம்புவர்.

வேறு சிலர் எமக்கு எப்போதெல்லாம் நெருக்கடி மற்றும் மன அழுத்தம் ஏற்படுகிறதோ.... அப்போதெல்லாம் உடனடியாக எம்முடைய குலதெய்வ ஆலயத்திற்கு சென்று வணங்கி விட்டு வருகிறேன். ஆனாலும் பிரச்சனைகள் தீரவில்லை. தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது என்றும் சிலர் உரைப்பர்.

இதற்கு காரணம் குலதெய்வத்தின் அருள் முழுமையாக கிடைக்காதது தான். மேலும் குலதெய்வத்தை நீங்கள் முறையாக வணங்காததும் ஒரு காரணம் தான்.. என ஆன்மீக பெரியோர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

குலதெய்வத்தை வணங்குவதற்கு சில விதிமுறைகள் உள்ளன. அதனை நீங்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

உங்களது குலதெய்வம் ஆண் தெய்வமாக இருந்தால் அமாவாசை தினத்தன்று குலதெய்வ ஆலயத்திற்கு சென்று முறையாக வணங்க வேண்டும்.

உங்களது குலதெய்வம் பெண் தெய்வமாக இருந்தால் பௌர்ணமி தினத்தன்று அந்த ஆலயத்திற்கு சென்று முறையாக வணங்க வேண்டும்.‌

ஆண் தெய்வமாக இருந்தாலும் சரி பெண் தெய்வமாக இருந்தாலும் சரி நீங்கள் குலதெய்வ ஆலயத்திற்கு செல்லும் போது... ஒன்பது மூடி தேங்காய்களில் பசு நெய்யை நிரப்பி பருத்தி திரியை வைத்து ஒன்பது நெய் விளக்குகளை ஏற்ற வேண்டும். குலதெய்வத்திற்கு உரிய பூக்களில் மாலையை செய்து, மாலையாக அணிவிக்க வேண்டும். உங்கள் பொருளாதார நிலை ஏற்ற வகையில் புதிய வஸ்திரங்களை வாங்கி அணிவிக்க வேண்டும். அதனுடன் சர்க்கரை பொங்கலை நைவேத்தியமாக படைத்து, மனமுருக பிரார்த்திக்க வேண்டும் அதன் பிறகு அந்த சர்க்கரை பொங்கலை அங்குள்ள ஏழை எளிய மக்களுக்கு பிரசாதமாக வழங்க வேண்டும்.

வேலு மேலும் குலதெய்வத்திற்கு வெற்றிலை, பாக்கு, எலுமிச்சை பழம் ஆகியவற்றை சமர்ப்பித்து இரண்டு விளக்கு ஏற்ற வேண்டும். பூஜை முடிந்தவுடன் அங்குள்ள குருக்களிடம் சொல்லி எலுமிச்சை பழத்தை கேட்டு வாங்கிக்கொண்டு வீட்டிற்கு எடுத்து வரலாம். அது எம்முடைய வீட்டில் நேர் நிலையான ஆற்றலை பரவி குலதெய்வத்தின் அருளை கிடைக்கச் செய்யும்.

சிலருக்கு அமாவாசை மற்றும் பௌர்ணமி திகதிகளில் குலதெய்வத்தின் அருளை பெறுவதற்காக குலதெய்வ ஆலயத்திற்குச் செல்ல இயலாத சூழல் ஏற்பட்டால்.. அதற்கு மாற்று உபாயமாக வளர்பிறையில் வரும் திங்கட்கிழமை அன்று ஆண் குல தெய்வங்களையும், வளர்பிறையில் வரும் வியாழக்கிழமை அன்று பெண் குல தெய்வங்களையும் வணங்க வேண்டும். இதன் போதும் மேலே சொன்ன பூஜை விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும்.

உடனே எம்மில் சிலர் நீங்கள் குறிப்பிட்ட வளர்பிறை திங்கள் மற்றும் வளர்பிறை வியாழக்கிழமைகளில் அஷ்டமி வருகிறது. அன்று செல்லலாமா..? எனக் கேட்பர். அது உங்களுடைய விருப்பம் அல்லது உங்கள் ஜோதிட நிபுணரை அணுகி அவருடைய வழிகாட்டலை பெற்றுக் கொண்டு செல்லலாம்.

மேலும் சிலர், ''நாங்கள் எப்போதெல்லாம் குலதெய்வ ஆலயத்திற்கு சென்று விட்டு திரும்புகிறோமோ... அப்போதெல்லாம் எங்களுக்கு பிரச்சனைகள் பிரச்சனைகள் வந்து கொண்டிருக்கிறது. அதனால் நாங்கள் குலதெய்வ ஆலயத்திற்கு செல்வதை குறைத்து கொண்டிருக்கிறோம்'' என்றும் சிலர் சொல்வர். இவர்கள் ஒரு முறையேனும் தமிழகத்தில் உள்ள திருமீயச்சூர் லலிதாம்பிகை ஆலயத்திற்கு வருகை தந்து, அங்குள்ள ஸ்ரீ சக்கரத்தின் மைய ஆற்றலாக திகழ்ந்து அருள் பாலிக்கும் ஸ்ரீ லலிதாம்பிகையை மனமுருக பிரார்த்திக்க வேண்டும். அத்துடன் பதினோரு விளக்குகளை ஏற்றி, உங்களது கோரிக்கைகளை அம்மனின் முன் சமர்ப்பித்தால்... உங்களின் வளர்ச்சி உறுதி. அதன் பிறகு உங்களது குலதெய்வத்தின் அருளும் கிடைக்க பெறுவீர்கள்.‌

இதனிடையே நீங்கள் குலதெய்வத்திடம் ஏதேனும் கோரிக்கையை முன்வைத்து அது நிறைவேற்றாமல் இருந்தால்... முதலில் அதற்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுத்த வேண்டும். ஏனெனில் உங்களின் வாக்குறுதி பரிபூரணமாய் நிறைவேறினால் தான் குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல் : ஜோதிலிங்கம்

தொகுப்பு : சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right