ஏ.எல்.நிப்றாஸ்
அரைக் கால்சட்டைப் போட்ட பராயமடையாப் பிள்ளைகள் சண்டை பிடித்து, அச்சண்டை பெரிய விபரீதங்களை ஏற்படுத்திய பிறகு, கடைசியாக அவர்களது பெற்றோர் கூப்பிட்டு விசாரித்தால் அவன், 'இவனை' குறை சொல்வான், இவன், 'அவனை' குறை சொல்வான். கடைசியாக இரண்டுபேரும் அழுவார்கள். விசாரிக்க வந்தவர்கள் குழப்பிப்போவார்கள் அத்தோடு விசாரணை முடிந்துவிடும்.
இலங்கையில் அரசியல், பொருளாதார, சமூக, மனிதகுல ரீதியான பெரும் அழிவுகளையும், பின்னடைவுகளையும் ஏற்படுத்திய பல சம்பவங்கள் தொடர்பான பொறுப்புக்கூறல் என்பது காலங்காலமாக இப்படித்தான் உள்ளது.
யுத்தத்துக்கு முன்னரும், யுத்த காலத்திலும் அதற்குப் பின்னரும் பல தரப்பாலும் நாட்டிலுள்ள அனைத்து இனங்கள் மீதும் மேற்கொள்ளப்பட்ட உரிமை மீறல்கள், அட்டூழியங்கள், இந்த நாட்டை சீரழித்த ஆட்சியாளர்களின் மோசடிகள், மத்திய வங்கி ஊழல் என நீண்டு செல்கின்ற ஒவ்வொரு விவகாரத்திலும் இலங்கையரின் அனுபவம் இதுவன்றி வேறொன்றுமில்லை.
இலங்கைச் சூழலில் சூடுபிடிக்கின்ற, பேசப்படுகின்ற மிக முக்கியத்துவமான விவகாரங்களும் அந்தத்த காலத்தில் மட்டுமே விவாதிக்கப்பட்டு பிறகு, கண்டுகொள்ளாமல் விடப்பட்டு விடுகின்றன. பேசுபொருளாக, வாய்க்கு அவலாக வேறு ஒரு விவகாரம் கிடைத்ததும் மக்களும் இதனை மறந்து, கடந்து போய்விடுகின்றனர்.
ஆகவேதான் எந்தப் பிரச்சினைக்கும் முழுமையான தீர்வு காணப்படவில்லை. இதுகாலவரை நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் நடுநிலையானதா என்பது ஒருபுறமிருக்க, அவ்வாறான அறிக்கைகளில் கண்டறியப்பட்ட விடயங்களின் அடிப்படையில் குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்ட வரலாறும் இல்லை என்றே கூற வேண்டும்.
பொறுப்புவாய்ந்தவர்கள் பொறுப்பின்றி செயற்படுகின்றார்கள். பிறகு பொறுப்புக்கூறலை தட்டிக் கழிக்கின்றனர். இதில் ஆட்சியாளர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் முக்கிய பங்கு வகிக்கின்றார்கள்.
இந்தப் பட்டியலில் கடைசியாக இணைந்துள்ள விவகாரம்தான் 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலாகும். மிக முக்கியமான இந்த விவகாரம் பற்றிய உண்மையைக் கண்டறியாமல் வெறுமனே வாயால் வடை சுடுகின்ற வேலை மட்டும் நான்கு வருடங்களுக்கு மேலாக நடந்து கொண்டிருப்பதாகவே கருத வேண்டியள்ளது.
கதைத்து கதைத்தே காலத்தை கடத்துவதில் இலங்கை ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் கைதேர்ந்தவர்கள். அதுதான் இப்போதும் தொடர்கின்றது. இன்னும் சில வாரங்களில் வேறு ஒரு புதினம், பரபரப்பான செய்தி வந்தால் மக்கள் அதற்குப் பின்னால் போய்விடுவார்கள், உயிர்த்த ஞாயிறு விவகாரம் பேசுபொருள் என்ற நிலையில் இருக்காது என்பதே யதார்த்தமாகும்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் உறவுகளை இழந்த கிறிஸ்தவ மக்களும், நெருக்குவாரப்படுத்தப்பட்ட முஸ்லிம் சமூகமும் மட்டுமன்றி, சிங்கள, தமிழ் மக்களும் நீதி நிலைநாட்டப்பட வேண்டுமென 4 வருடங்களுக்கு மேலாக அவாவி நிற்கின்றனர்.
ஆனால், தெருவில் நண்பனைத் தாக்கிய சிறுவன் கூறுகின்ற வியாக்கியானம் போல சில அரசியல்வாதிகளின் கதைகள் உள்ளன. இரவில் படுக்கையில் சிறுநீர் கழித்த குழந்தை காலையில் அசடுவழிய கதை விடுவது போல சில பொறுப்பு வாய்ந்தவர்கள் விளக்கமளிப்பதையும் காண முடிகின்றது.
பெரும் அழிவையும் உலகெங்கும் கடுமையான அதிர்வலைகளையும் ஏற்படுத்திய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை நடத்த வேண்டிய நிர்ப்பந்தம் சனல் 4 ஆவணப்படத்திற்கு பிறகு இலங்கை அரசுக்கு மீள ஏற்பட்டிருக்கின்றது. இருந்தாலும், அது எந்தளவுக்கு விரைவாக, வெளிப்படையாக, முழுமையாக, திருப்திப்படும் விதத்தில் நடந்தேறும் என்பதில் ஐயப்பாடுகள் உள்ளன.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக அரச தரப்பில் இருந்து இரு வேறுபட்ட நிலைப்பாடுகள் வெளிப்பட்டுள்ளன. சனல் 4 காணொளி வெளியான பிற்பாடு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இது தொடர்பாக இரு விசாரணைக் குழுக்களை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளார். ஆனால், பாதுகாப்பு அமைச்சு இக் குற்றச்சாட்டுக்களை நிராகரித்திருக்கின்றது.
சனல் 4 தொலைக்காட்சி என்பது சமூக நலனை நோக்காகக் கொண்டு இதனை ஒளிபரப்பியது என்று உறுதியாகச் சொல்ல முடியாது. மிக முக்கியமாக, இதில் சாட்சியமளித்துள்ள அசாத் மௌலானா எனும் மொஹமட் ஹன்சிர் ஒரு சமூக சிந்தனையாளரோ, மனித உரிமைச் செயற்பாட்டாளரோ அல்ல. இன நல்லிணக்கத்திற்காக போராடியவரும் அல்லர். அவர் கூறுவதெல்லாம் உண்மையாக மட்டுமே இருக்க வேண்டும் என்பதும் இல்லை.
மருதமுனையைச் சேர்ந்த இவரது தந்தை மிஹ்லார், ஈ.பி.ஆர்.எல்.எப் பத்மநாபா அணியைச் சேர்ந்தவர். ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்க உறுப்பினர்கள் சிலரோடு சேர்ந்து இந்தியாவில் வைத்து மிஹ்லார் சுட்டுக் கொல்லப்பட்டார். அதன் பிறகு, சில தமிழ் இயக்கச் செயற்பாட்டாளர்கள், அரசியல்வாதிகளோடு இவருக்கு தொடர்புகள் ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.
பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனுடன் நெருக்கமாக செயற்பட்டார் என்பது மறுக்க, மறைக்க முடியாத நிதர்சமனமாகும். இப்படி அவருக்குப் பின்னாலும் ஒரு பின்புலக் கதை உள்ளது.
மிக முக்கியமான விடயம் என்னவென்றால், இப்படி ஒரு பாரிய தாக்குதல் நடக்கப் போகின்றது என்றும், அந்தப் பழி முஸ்லிம் சமூகத்தின் மீது விழும் என்பதும் முன்னமே தெரிந்திருந்தும் அதை தடுக்க இவர் முனையவில்லை. ஆகவே, இவர் கூறுவது உண்மையென்றால், இந்த தாக்குதலில் சம்பந்தப்பட்ட மற்ற எல்லோருடனும் சேர்த்து இவரும் குற்றவாளியே என்பதை மறுக்க முடியாது.
இப்போது அசாத் மௌலானாவுக்கு ஒரு தேவை அல்லது காரணம் வந்த போது வாயைத் திறந்திருக்கின்றார் என்பதே உண்மையாகும். எனவே, புகலிடம் கோரியுள்ள அவர் கூறுகின்ற தகவல் நூறு வீதம் உண்மையாக இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால், அவரது வாக்குமூலம் தட்டிக்கழிக்கப்பட முடியாதது. அதில் ஒரு வீதமேனும் உண்மை இருக்கின்றதா? என்பதை கண்டறிய வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது. எனவே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து முன்னர் வெளியான தகவல்கள் மற்றும் சனல் 4 இன் புதிய காணொளி மட்டுமன்றி, மேலும் பல புதிய ஆதாரங்களைப் பெற்று உண்மையை வெளிக் கொணர வேண்டும். கூட்டுக் களவாணிகளை அம்பலப்படுத்த வேண்டும்.
இதற்கு திட்டம் தீட்டியவர்கள், அதற்கு ஆசீர்வாதம் வழங்கியவர்கள், தாக்குதலை நடத்தியவர்கள் மட்டுமன்றி சந்தேகத்திற்கிடமான அரசியல் தரப்பினரும் கூறுவது எல்லாம் உண்மை என்றோ பொய் என்றோ எடுத்த எடுப்பில் முடிவெடுக்க முடியாது. நீதியான விசாரணை மூலம் உண்மையை கண்டறிய வேண்டும். மன்னிப்பு வழங்குவதை பற்றி பிறகு பார்க்கலாம்.
நடந்தது நடந்துபோயிற்று என்று இதனை இப்படியே கண்டும் காணாததுபோல கடந்து செல்ல முடியாது என்பதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நன்கு அறிவார். எனவேதான் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் புதிய ஆதாரங்களையும் உள்ளடக்கியதாக விசாரணைகளை நடத்துவதற்காக உயர்மட்டக் குழுக்களை நியமித்துள்ளார்.
இவ்விசாரணைக் குழுக்கள் உண்மையை கண்டறிந்து, உரியவர்களை தண்டிக்குமா அல்லது முன்னைய குழுக்கள் போல 'அறிக்கை சமர்ப்பிப்பதோடு' முடங்கிப் போகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனாலும், ஜனாதிபதியின் இந்நடவடிக்கை வரவேற்கத்தக்கது.
இருப்பினும் மறுபுறத்தில், சனல் 4 குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என்று பாதுகாப்பு அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அதற்கான விளக்கங்களும் அளிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலும் பாதுகாப்பு அமைச்சுடன் தொடர்புடையதான குற்றச்சாட்டுக்களை மறுப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறலாம்.
அதாவது, விசாரணைக் குழுக்கள் நியமிக்கப்படுவது பற்றி ஜனாதிபதி செயலகம் அறிவித்திருக்கின்ற நிலையில், ஜனாதிபதியின் கீழுள்ள பாதுகாப்பு அமைச்சு இதனை மறுத்துரைக்கின்றது. இது ஒரு முரண்நகையாகும். இது ஏன் என்பது தான் தெரியவில்லை.
அரசாங்கத்திற்குள்ளேயே இவ் விவகாரத்தில் இரட்டை நிலைப்பாடுகள் உள்ளனவா என்ற நியாயமான சந்தேகத்தை இது ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமன்றி, மேலும் பல சந்தேகங்களுக்கும் இது வித்திடுகின்றது. இப்படியான ஒரு சூழலில், அரசியல்வாதிகள், அதிகாரிகள், அரச இயந்திரம், மக்கள் என அனைத்து தரப்பினரினதும் ஒத்துழைப்பைப் பெற்று, முறையான விசாரணை ஒன்றை மேற்கொண்டு, உண்மையை கண்டறிவதும், குற்றவாளிகளைத் தண்டிப்பதும் எப்போது சாத்தியமாகும் என்பது நிச்சயமில்லை.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் என்பது மிகவும் காட்டுமிராண்டித்தனமான பலியெடுப்பாகும். உயிர்ப்பலி எடுத்ததற்கு அப்பால் நாட்டில் இன முரண்பாட்டையும் பெரும் பிரளயத்தையும் உண்டுபண்ணியது. அது அரசியல் அதிகாரத்திற்காக நடந்திருந்தால் அது மிகப் பெரிய குற்றமும், பிழையான முன்மாதிரியுமாகும்.
எனவே, அதனை கண்டுகொள்ளாமல் பத்தோடு பதினொன்றாக கடந்து செல்ல முடியாது. அரச இயந்திரம் எந்தக் காரணத்திற்காகவும் உண்மையைக் கண்டறிந்து, குற்றவாளிகளை தண்டிப்பதில் தவறு இழைக்குமாயின், விசாரணை நடத்தப்படாமலேயே மக்கள் 'உண்மையை' ஊகித்து உணர்ந்து கொள்வது அவ்வளவு சிரமமாக இருக்காது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM