சிவலிங்கம் சிவகுமாரன்
2019 ஆம் ஆண்டில் இறுதி வரை நுவரெலியா மாவட்டத்தில் மதுபான உரிமங்கள் பெற்ற மதுபானசாலைகளின் எண்ணிக்கை 234 ஆகும். (தகவல் அறியும் சட்டமூலம் ஊடாக பெறப்பட்டது) அதன் பிறகு கொரோனா தொற்று, நாடு முடக்கப்பட்டமை, அரசியல் நெருக்கடிகளால் புதிய மதுபான உரிமங்கள் எதுவும் கலால் திணைக்களத்தினால் விநியோகிக்கப்படவில்லை. எனினும், இவ்வாண்டின் ஆரம்பத்திலிருந்து இலங்கையின் பல பாகங்களிலும் புதிது புதிதாக மேலதிகமாக மதுபான நிலையங்கள் திறக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தின் பல தோட்டப்புறங்களை அண்டிய பிரதேசங்களில் புதிய மதுபானசாலைகளை திறப்பதற்காக அறிவித்தல்கள் காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றன. டயகம, சென்கிளயர் ஆகிய இடங்களில் இவ்வாறு மதுபானசாலைகள் திறக்கப்படுவதை எதிர்த்து பிரதேச மக்களும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர். இதன் காரணமாக குறித்த இடங்களில் மதுபானசாலைகள் திறக்கப்படுவது நிறுத்தப்பட்டது.
கடந்த வாரம் அட்டன் – கினிகத்தேனை மார்க்கத்தில் குயில்வத்தை எனும் இடத்தில் மதுபானசாலை ஒன்றை திறப்பதற்கான அறிவித்தல் நோர்வூட் பிரதேச செயலகத்தினால் ஒட்டப்பட்டிருந்தது. இதை ஆட்சேபித்து பிரதேச மக்கள், இளைஞர்கள் கையெழுத்திட்டு மனு ஒன்றை கையளித்திருந்தனர். அதேபோன்று கடந்த திங்கட்கிழமை இப்பிரதேசத்தின் பாடசாலை மாணவர்கள், இளைஞர் யுவதிகள், பெற்றோர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றையும் முன்னெடுத்திருந்தனர்.
நுவரெலியா மாவட்டத்தில் புதிதாக முளைத்து வரும் மதுபானசாலைகள் குறித்து இதுவரை மாவட்ட அரசியல்வாதிகள் எவரும் வாய் திறக்கவில்லை. மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வே.இராதாகிருஷ்ணன் மாத்திரமே பாராளுமன்றில் அது குறித்து எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
மேலும், பெருந்தோட்டப்பகுதிகளை அண்மித்து இவ்வாறு மதுபானசாலைகள் திறக்கப்படுவதை கண்டும் காணாதது போன்று கடந்து சென்று கொண்டிருக்கின்றனர் மாவட்ட பிரதிநிதிகள். சில வருடங்களுக்கு முன்பு கொட்டகலை கொமர்சல் பகுதியில் உள்ள ஒரு தொழில் நிறுவனத்தில் இராணுவத்தினர் அத்துமீறி உட்பிரவேசித்து முகாம் அமைத்தனர். இது குறித்து ஒரு தமிழ் எம்.பி இவ்வாறு கூறியிருந்தார். ‘இலங்கையின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக எங்கேயும் எப்போதும் இராணுவ முகாம்களையும் சோதனை சாவடிகளையும் அமைக்க அரசாங்கத்துக்கு உரிமை உள்ளது… அது குறித்து எல்லாம் கேள்வி எழுப்ப முடியாது’.
அப்படியானால் மதுபானசாலைகளும் அப்படியா என்ற கேள்வி எழுகின்றது. குறித்த ஒரு மாவட்டத்தில் அரச நிறுவனங்களின் உயர் அதிகாரிகள், திணைக்கள தலைவர்கள் ஆகியோரின் நியமனங்களின் பின்னணியில் அரசியல் தலையீடு நிச்சயம் இருக்கும். அதாவது ஆளுங்கட்சி சார்ந்த அமைச்சர்கள், எம்.பிக்களின் சம்மதம் இன்றி இது நடக்காது. அப்படியிருக்கும் போது புதிய மதுபானசாலைகள் விவகாரத்திலும் நிச்சயமாக அரசியல் செல்வாக்கு இருக்கின்றது என்பதை சிறு பிள்ளையும் அறியும். ஏற்கனவே நுவரெலியா மாவட்டத்தில் இருக்கும் மதுபானசாலைகள் மிக அதிகமாகும். இந்நிலையில் மேலதிகமாக தோட்டப்பிரதேசங்களில் ஏன் இவை அமைக்கப்படுகின்றன என்பது குறித்து அரசியல்வாதிகளுக்கு தெரியாமலில்லை.
பசும்பால் நிலையம்
குயில்வத்தையின் புதிய மதுபானசாலை திறக்கவுள்ள இடத்திலிருந்து சுமார் மூன்றரை கிலோ மீற்றர் தூரத்தில் சந்திரசேகர் என்ற இளைஞர் ஒருவர் ஒரு வருடத்துக்கு முன்பு வீதி ஓரத்தில் தூய பசும்பால் நிலையமொன்றை ஆரம்பித்தார். சுய தொழில் ஒன்றை ஆரம்பிக்கும் முகமாக பசுமாடுகளை வாங்கி வளர்த்து, வீட்டிலிருந்து காலை வேளையில் இவ்விடத்துக்கு பசும்பாலை கொண்டு வந்து விற்பனை செய்வது இவரது வழக்கம். இந்த செயற்பாடுகளுக்கு அருகிலிருந்த கரோலினா தோட்ட நிர்வாகம் நெருக்கடிகளை கொடுத்து வந்தது. கடந்த ஓகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி தோட்ட நிர்வாகமானது இந்த பசும்பால் விற்பனை நிலையத்தை சேதப்படுத்தி அருகில் தூண்களை நட்டு இது தோட்டத்துக்குரியது என முற்கம்பிகளை அடித்து விட்டு சென்றது.
இது குறித்து இ.தொ.கா உறுப்பினர்களுக்கு அறியப்படுத்தப்பட்டது. அன்றைய தினம் மாலை சம்பவ இடத்துக்கு வருகை தந்த அமைச்சர் ஜீவன் தொண்டமான் தோட்ட நிர்வாகத்திடம் கதைத்து இவ்விடத்தை அந்த இளைஞருக்கு வழங்குவதில் என்ன பிரச்சினைகள் உள்ளன? எனக் கேள்வி எழுப்பி, அந்த இளைஞர் தமது சிறிய வியாபாரத்தை முன்னெடுக்க அனுமதி அளிக்கும்படி கூறினார். ஆனால் பிரச்சினைகள் முடிந்தபாடில்லை. இம்மாதம் 5 ஆம் திகதி இரவு இனந்தெரியாதோரால் குறித்த பசும்பால் விற்பனை நிலையம் மறுபடி சேதமாக்கப்பட்டு தரையில் வீழ்த்தப்பட்டுள்ளது.
இங்கு சுய முயற்சியால் நேர்மையாக மற்றையவருக்கு பயன்தரும் தொழில் முயற்சிகளை முன்னெடுப்பதற்கு அரசியல் ரீதியாகவோ அல்லது வேறு எந்த வழிகளிலோ எவரும் எந்த ஆதரவையும் வழங்க முன்வருவதில்லை. எத்தனையோ தொழில் முயற்சிகளை மேற்கொள்ள மலையக இளைஞர் யுவதிகள் நெருக்கடிகளுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் போது அதற்கு ஆதரவு வழங்காது ஒரு சமூகத்தை போதையில் தள்ளி அவர்களை மேலும் வறுமைக் கோட்டுக்குள் கொண்டு வருவதற்கு தான் ஆதரவு வழங்கப்படுகின்றது.
2019 ஆம் ஆண்டு பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களின் அடிப்படையில், இலங்கையில் மொத்தமாக வெளிநாட்டு மதுமொத்த விற்பனை நிலையங்கள், சில்லறை விற்பனை நிலையங்கள், மதுபான உரிமம் உள்ள ஹோட்டல்கள், ஹோட்டல்பார், சிற்றுண்டிச்சாலை, வாடி வீடு, மதுபான தவறணைகள் என மொத்தமாக 3,413 மதுபான உரித்துகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இதில் முதலிடத்தில் மேல் மாகாணம் உள்ளது. இங்குள்ள மூன்று மாவட்டங்களில் கொழும்பில்- 804, கம்பஹாவில் 526, களுத்துறையில் 198 என மொத்தமாக 1,528 மதுபானசாலைகள் உள்ளன.
இரண்டாவது இடத்தில் மத்திய மாகாணம்
அதிக மதுபானசாலைகள் உள்ள இரண்டாவது மாகாணமாக மத்திய மாகாணம் விளங்குகிறது. இம்மாகாணத்தின் கண்டி மாவட்டத்தில் 289, நுவரெலியா மாவட்டத்தில் 234, மாத்தளை மாவட்டத்தில் 137 என மொத்தமாக 660 மதுபானநிலையங்கள் உள்ளன. ஆனால் இந்த சமூகத்துக்கு புதிதாக பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், தொழிலாளர்களுக்கு குடியிருப்புகளை அமைப்பதற்கு மாத்திரம் அரசாங்கம் பின்னடிக்கின்றது. இதிலுள்ள அரசியலை பிரதிநிதிகள் நன்கு அறிந்தே மெளனம் காக்கின்றனர். ஆனால் பிரதேச இளைஞர் யுவதிகள் மற்றும் வாக்களிக்கும் மக்கள், கல்வி சமூகத்தினர் இது குறித்து கேள்வி எழுப்ப வேண்டியவர்களாக உள்ளனர். சுயமாக அவர்கள் முன்வந்து மதுபானசாலைகளுக்கு எதிராக முன்னெடுத்து வரும் போராட்டங்கள் கவனிக்கத்தக்கன. இது தொடர வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் விருப்பாக உள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM