படத்தில் அமர்ந்திருப்பவர்கள் இடமிருந்து வலமாக: அசோக்குமார் திலக்ஷன், சின்னையா சுபாஸ்கரன் (தலைமைப் பயிற்றுநர்), சத்தியகுமாரி சிவகுமார் (அதிபர்), நவரட்னம் நிஷாந்த் (உதவிப் பயிற்றுநர்), சிவகணபதி கணாதீபன், பின்வரிசையில் நிற்பவர்கள்: செல்வராசா கிறிஸ்டிகா, பூமிபாலன் தர்ஷிகா, ஜெயரூபன் ரூபிகா, ரமேஸ்குமார் தனுஷாலினி, ஜீவேஸ்வரன் தமிழரசி.
(நெவில் அன்தனி)
கொழும்பு சுகததாச அரங்கில் அண்மையில் நடைபெற்ற ரிட்ஸ்பறி 91ஆவது சேர் ஜோன் டாபட் சிரேஷ்ட பாடசாலைகள் மெய்வல்லுநர் போட்டியில் வெளிமாவட்ட பெண்கள் பாடசாலைகளுக்கான தரவரிசையில் சுழிபுரம் விக்டோரியா கல்லூரி இணை 3ஆம் இடத்தைப் பெற்று அசத்தியது.
அப் போட்டியில் ஒரு தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்களை வென்றெடுத்து 37 புள்ளிகளுடன் வெளிமாவட்ட பெண்கள் பாடசாலைகளுக்கான தரவரிசையில் விக்டோரியா கல்லூரி 3ஆம் இடத்தைப் பகிர்ந்துகொண்டது.
வெளிமாவட்ட பெண்கள் பாடசாலைகள் பிரிவில் சுமனா பெண்கள் வித்தியலாயம் (51 புள்ளிகள்) சம்பியனானது.
கம்பளை விக்ரமபாகு மத்திய கல்லூரி (43 புள்ளிகள்) 2ஆம் இடத்தையும் விக்டோரியா கல்லூரி (37 புள்ளிகள்) மற்றும் தனமல்வில விஜயபுர கனிஷ்ட வித்தியாலயம் (37 புள்ளிகள்) ஆகியன இணை 3ஆம் இடத்தையும் பெற்றன.
சேர் ஜோன் டாபட் சிரேஷ்ட மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் 20 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கான 5000 மீற்றர் வேகநடைப் போட்டியில் ஜீவேஸ்வரன் தமிழரசி (34:40.03) தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.
அகில இலங்கை பாடசாலைகள் மட்டத்தில் விக்டோரியா கல்லூரிக்கு 9 வருடங்களின் பின்னர் கிடைத்த முதலாவது தங்கப் பதக்கம் இதுவாகும்.
இதற்கு முன்னர் அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில் விக்டோரியா கல்லூரி சார்பாக முதலாவது தங்கப் பதக்கத்தை 2014இல் பாலச்சந்திரன் ரஜிதா வென்றிருந்தார்.
இது இவ்வாறிருக்க இந்த வருடம் விக்டோரியா கல்லூரிக்கு மற்றைய 6 பதக்கங்களும் கோலூன்றிப் பாய்தலில் கிடைத்தது விசேட அம்சமாகும்.
16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் சிவகணபதி கணாதீபன் (3.40 மீற்றர்), 16 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கான கோலூன்றிப் பாய்தலில் ஜெயரூபன் ரூபிகா (2.20 மீற்றர்), 18 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கான கோலூன்றிப் பாய்தலில் ரமேஸ்குமார் தனுஷாலினி (2.30 மீற்றர்) ஆகியோர் வெள்ளிப் பதக்கங்களை வென்றனர்.
16 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கான கோலூன்றிப் பாய்தலில் பூமிபாலன் தர்சிகா (2.20 மீற்றர்), 20 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கான கோலூன்றிப் பாய்தலில் செல்வராசா கிறிஸ்டினா (2.40 மீற்றர்), 20 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் அசோக்குமார் திலக்ஷன் (3.70 மீற்றர்) ஆகியோர் வெண்கலப் பதக்கங்களை தமதாக்கிக்கொண்டனர்.
பதக்கங்கள் வென்றவர்களில் கிறிஸ்டினா ஒரு சிறந்த கிரிக்கெட் வீராங்கனை ஆவார். ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் நடத்தப்பட்ட பெண்களுக்கான மாகாண கிரிக்கெட் போட்டியில் தம்புள்ள அணியில் கிறிஸ்டினா இடம்பெற்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இந்த வருட சேர் ஜோன் டாபட் மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் பதக்கங்கள் வென்ற விக்டோரியா கல்லூரி மாணவர்கள் கோலூன்றிப் பாய்தலில் பங்குபற்றியது இதுவே முதல் தடவையாகும்.
சுழிபுரத்தில் குக்கிராமங்களில் வாழும் வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களே கோலூன்றிப் பாய்தலில் பங்குபற்றி பதக்கங்களை வென்றெடுத்தனர். அவர்கள் அனைவரும் பதக்கங்கள் வென்ற களிப்பில் பெரு மகிழ்ச்சியுடன் சுகததாச அரங்கில் காணப்பட்டனர்.
'மிகக் குறுகிய கால பயிற்சியுடன் சாதிக்க முடிந்ததையிட்டு மகிழ்ச்சியும் பெருமையும் அடைவதாகவும் எதிர்காலத்தில் சிறந்த பயிற்சிகளைப் பெற்று சாதனைகளைப் படைக்க முயற்சிப்பதாகவும் பதக்கங்கள் வென்ற விக்டோரியா கல்லூரி மாணவர்கள் தெரிவித்தனர்.
மேலும் தங்களது கல்லூரி அதிபர் சத்தியகுமாரி சிவகுமார், பயிற்றுநர் சுபாஷ்கரன், உதவிப் பயிற்றுநர் என். நிஷாந்த், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோர் அளித்துவரும் ஆக்கமும் ஊக்கமும் தங்களை இந்த நிலைக்கு உயர வைத்துள்ளதாக அவர்கள் கூறினர்.
யாழ். மாவட்டத்தில் பிரபல கோலூன்றிப் பாய்தல் பயிற்றுநர் சின்னையா சுபாஷ்கரன் இந்த கல்லூரிக்கு மாற்றலாகிச் சென்ற பின்னர் கோலூன்றிப் பாய்தல் பயிற்சிகளை பல மாணவர்கள் ஆரம்பித்தனர்.
இந்த மாணவர்கள் அனைவரும் கடந்த மார்ச் மாதத்திலேயே பயிற்சிகளை ஆரம்பித்ததாகவும் குறுகிய காலத்தில் அகில இலங்கை பாடசாலைகள் மட்டத்தில் பதக்கங்கள் வென்று விக்டோரியா கல்லூரிக்கு பெருமை சேர்த்துக் கொடுத்ததாகவும் பயிற்றுநர் சுபாஷ்கரன் தெரிவித்தார்.
'கல்லூரி பழைய மாணவர்கள் அன்பளிப்பு செய்த 2 கோ ல்களையும் மகாஜன கல்லூரி இரவலாக வழங்கிய கோலையும் கொண்டு மாணவர்கள் பயிற்சிகளில் ஈடுபட்டுவந்தனர். அத்துடன் பயிற்சிக்கு தேவையான மெத்தைகளை மாவட்ட விளையாட்டுத்துறை அதிகாரி வழங்கி உதவினார். லண்டன் கிளை பழைய மாணவர்கள் உலகத் தரம் வாய்ந்த கோல் ஒன்றை அன்பளிப்பு செய்வதாக உறுதி வழங்கியுள்ளனர்.. அந்தக் கோல் கிடைத்தால் எமது மாணவர்கள் இதனைவிட சாதிப்பார்கள் என நம்புகிறேன்' என சுபாஷ்கரன் தெரிவித்தார்.
போதிய வசதிகள் இல்லாத நிலையில் 7 மாத பயிற்சிகளுடன் ஒரு தங்கம் உட்பட 7 பதக்கங்களை வென்றெடுத்த இப் பாடசாலை மாணவர்களுக்கு தொடர்ச்சியான, நுட்பரீதியான பயிற்சிகள் அளிக்கப்பட்டால் அவர்கள் இதனை விட சிறந்த வெற்றிகளை ஈட்டுவர் என நம்பப்படுகிறது.
எனவே இத்தகைய மாணவர்களை ஊக்குவிப்பது பாடசாலை சமூகத்தினது மட்டுமல்லாமல் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வாழும் பழைய மாணவர்களினதும் கடமையாகும்.
அதேவேளை, பெரும்பான்மை இன விளையாட்டு வீர, வீராங்கனைகளுக்கு அரசியல் பிரமுகர்கள் எவ்வாறு வசதி வாய்ப்புகளை செய்துகொடுத்து நிதி உதவிகளையும் பெற்றுக்கொடுக்கிறார்களோ அதேபோன்று தமிழ் அரசியல் வாதிகளும் உதவினால் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் போன்ற சர்வதேச பதக்க வீரர்களை வட பகுதியிலிருந்து உருவாக்க முடியும் என விளையாட்டுத்துறை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM