(எம்.மனோசித்ரா)
நாட்டை வங்குரோத்தடையச் செய்தமை தொடர்பில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் குறித்து தெரிவித்த கருத்துக்களால் திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன உள்ளிட்ட அவரது குடும்பத்தாருக்கு ஏற்பட்டுள்ள உயிர் அச்சுறுத்தல் வன்மையாக கண்டிக்கதக்கது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
எனவே, இது தொடர்பில் இன்று திங்கட்கிழமை சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளுடன் இடம்பெறவுள்ள சந்திப்பில் தெரிவிக்கவுள்ளதாகவும், ஊழல், மோசடிகளை ஒழிப்பதில் இலங்கை அரசாங்கத்தின் மீது நாணய நிதியம் அழுத்தங்களை பிரயோகிக்காமை தொடர்பில் தமது அதிருப்தியை வெளிப்படுத்தவுள்ளதாகவும் கலாநிதி ஹர்ஷ டி சில்வா மேலும் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தனவுக்கும், அவரது பிள்ளைகள் உட்பட குடும்பத்தாருக்கு உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது போதும் அனுமதிக்கக் கூடிய செயற்பாடல்ல. நாட்டை வங்குரோத்து நிலைமைக்கு உள்ளாக்கிய முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ராலின் செயற்பாடுகள் தொடர்பில் தெரிவித்தமையால், திறைசேரியின் செயலாளருக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாம் இந்த சந்தர்ப்பத்தில் மஹிந்த சிறிவர்தனவுடன் இருப்போம். அரசியல்வாதிகளால் நாடு சீரழிக்கப்பட்டமையை மஹிந்த சிறிவர்தனவின் மீது சுமத்துவதை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். அரச உத்தியோகத்தர்கள் இருப்பது அரசியல் செய்வதற்கல்ல. இவை தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துக்கும் நாம் தெரியப்படுத்துவோம். இலங்கை ஏன் வங்குரோத்தடைந்தது என்பதை நாணய நிதியம் நன்கு அறியும்.
சர்வதேச நாணய நிதியம் உலகின் பல நாடுகளுடன் இணைந்து பணியாற்றியிருப்பதாகவும், எந்தவொரு நாட்டிலும் அந்நிய செலாவணி இருப்பு பூச்சிய நிலைமையை அடைந்ததை தாம் பார்க்கவில்லை என்றும், இவ்வாறானதொரு பொறுப்பற்ற அரசாங்கத்தை பார்க்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
அந்நிய செலாவணி இருப்பு 30 மில்லியன் டொலராகக் குறைவடையும் வரை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் எந்தவொரு பேச்சுவார்த்தையையும் முன்னெடுக்கவில்லை. இது தொடர்பில் ஒரு வருடத்துக்கு முன்னர் நாம் நாணய நிதியப் பிரதிநிதிகளை சந்தித்திருந்த போது அவர்கள் எம்மிடம் இதனைத் தெரிவித்தனர்.
நாடு வங்குரோத்தடையக் காரணமானவர்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்றக்குழு கடந்த அரசாங்கத்திலுள்ளவர்களை தூய்மையானவர்களாகக் காண்பிப்பதற்கான நடவடிக்கைகளையே முன்னெடுத்து வருகிறது. ஆனால் முழுமையாக வரியை நீக்கி, உரத்துக்கு தட்டுப்பாடு விதித்த கோட்டாபய ராஜபக்ஷ மீது இந்தக் குழு எந்தவொரு நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை.
ஊழல், மோசடிகளை முற்றாக ஒழிக்காவிட்டால் நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியாது என்பதே சர்வதேச நாணய நிதியத்தின் நிலைப்பாடாகவுள்ளது. ஆனால் இலங்கையில் என்ன நடக்கிறது? ஊழல், மோசடி தொடர்பான வழக்குகளில் 60 சதவீதமானவை வாபஸ் பெறப்படுகின்றன. விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட வழக்குகளில் 70 சதவீதமானவை தோல்வியடைந்துள்ளன. இதனையா நீங்கள் வலியுறுத்துகின்றீர்கள் என்று நாணய நிதியத்திடம் கேட்கின்றோம்.
ஊழல், மோசடிகளை ஒழிக்கும் விவகாரத்தில் இலங்கை அரசாங்கத்தின் மீது நாணய நிதியம் போதிய அழுத்தத்தினை பிரயோகிக்காமையை எண்ணி நாம் அதிருப்தியடைந்துள்ளோம். இலஞ்ச, ஊழல் ஒழிப்பு பிரிவில் 450க்கும் அதிகமான ஊழியர் பற்றாக்குறை நிலவுவதாக கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறிருக்கையில் எவ்வாறு ஊழல், மோசடியை ஒழிக்க முடியும்? சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று நாம் விரும்புகின்றோம். இது தொடர்பில் இன்று அவர்களுடன் இடம்பெறும் சந்திப்பிலும் தெளிவுபடுத்துவோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM