(நெவில் அன்தனி)
இந்தூர், ஹோல்கார் கிரிக்கெட் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (24) நடைபெற்ற அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டக்வேர்த் லூயிஸ் முறைமையின் பிரகாரம் 99 ஓட்டங்களால் இந்தியா அமோக வெற்றியீட்டியது.
ஷுப்மான் கில், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் குவித்த அபார சதங்களும் அவர்களிடையே 2ஆவது விக்கெட்டில் பகிரப்பட்ட இரட்டைச் சத இணைப்பாட்டமும் இந்தியாவை இலகுவாக வெற்றிபெறச் செய்தன.
ராகுல், சூரியகுமார் யாதவ் ஆகியோரும் அரைச் சதங்களைப் பெற்று தங்களாலான அதிகப்பட்ச பங்களிப்பை வழங்கியதுடன் சுழல்பந்துவீச்சாளர்களான ரவிச்சந்திரன் அஷ்வின், ரவிந்த்ர ஜடேஜா ஆகியோர் 6 விக்கெட்களைத் தம்மிடையே பகிர்ந்தனர்.
இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஒரு போட்டி மீதம் இருக்க தொடரை இப்போதைக்கு 2 - 0 என்ற ஆட்டக் கணக்கில் இந்தியா தனதாக்கிக்கொண்டுள்ளது.
உலகக் கிண்ணப் போட்டிக்கு முன்னர் ஈட்டப்பட்ட இந்தத் தொடர் வெற்றி இந்தியாவுக்கு பெரும் உற்சாகத்தைக் கொடுத்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இந்தியா 50 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 399 ஓட்டங்களைக் குவித்தது.
மொத்த எண்ணிக்கை 16 ஓட்டங்களாக இருந்தபோது இந்தியா ஆரம்ப வீரர் ருத்துராஜ் கய்க்வாடை 8 ஓட்டங்களுக்கு இழந்தது.
இரண்டாவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த ஷுப்மான் கில், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரும் நிதானம் கலந்த வேகத்துடன் துடுப்பெடுத்தாடி சதங்களைக் குவித்ததுடன் 200 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலமான நிலையில் இட்டனர்.
அவர்களில் முதலில் ஆட்டம் இழந்த ஐயர் 90 பந்துகளை எதிர்கொண்டு 11 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 105 ஓட்டங்களைக் குவித்தார். இது அவரது 2ஆவது சர்வதேச ஒருநாள் சதமாகும்.
97 பந்துகளை எதிர்கொண்ட கில் 6 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 104 ஓட்டங்களைப் பெற்றார். இது அவர் பெற்ற 6ஆவது சர்வதேச ஒருநாள் சதமாகும்.
தொடர்ந்து கே. எல். ராகுல் (52), இஷான் கிஷான் (32) ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 59 ஓட்டங்களையும் ராகுல், சூரியகுமார் யாதவ் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 53 ஓட்டங்களையும் பகிர்ந்தனர்.
கடைசியாக சூரியகுமார் யாதவும் ரவிந்த்ர ஜடேஜாவும் பிரிக்கப்படாத 6ஆவது விக்கெட்டில் 24 பந்துகளில் 44 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சூரியகுமார் யாதவ் 37 பந்துகளில் 6 சிக்ஸ், 6 பவுண்டறிகள் அடங்கலாக 72 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். ஜடேஜா ஆட்டம் இழக்காமல் 13 ஓட்டங்களைப் பெற்றார்.
400 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 9 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்களை இழந்து 56 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
அப்போது மழை பெய்ததால் ஆட்டம் ஒரு மணித்தியாலம் தடைப்பட்டது.
ஆட்டம் மீண்டும் தொடர்ந்தபோது அவுஸ்திரேலியாவின் வெற்றி இலக்கு டக்வேர்த் லூயிஸ் முறைமைப் பிரகாரம் 33 ஓவர்களில் 317 ஓட்டங்கள் என திருத்தி அமைக்கப்பட்டது.
ஆனால், அவுஸ்திரேலியா 28.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 217 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வி அடைந்தது.
ஆரம்ப வீரர் டேவிட் வோர்னர் 53 ஓட்டங்களையும் மத்திய வரிசை வீரர் சோன் அபொட்54 ஓட்டங்களையும் பெற்று துடுப்பாட்டத்தில் பிரகாசித்தனர்.
அவர்களை விட மார்னுஸ் லபுஸ்சான் (27), ஜொஷ் ஹேஸல்வூட் (23) ஆகிய இருவர் 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.
பந்துவீச்சில் ரவிச்சந்திரன் அஷ்வின் 41 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ரவிந்த்ர ஜடேஜா 42 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ப்ராசித் கிரிஷ்ணா 56 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM