கபில்
தியாக தீபம் திலீபன் நினைவேந்தலை கொழும்பில் நடத்துவதற்கு நீதிமன்றங்களின் ஊடாக பொலிசார் தடை உத்தரவைப் பெற்றிருக்கின்றனர்.
கொழும்பில் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு எதுவும் இதற்கு முன்னர் நடைபெற்றதில்லை.
கிறிஸ்தவ ஒத்துழைப்பு இயக்கம் முதல் முறையாக அதற்கான ஏற்பாடுகளை கடந்த செவ்வாய்க்கிழமை மேற்கொண்டிருந்தது. ஆனால், கோட்டை மற்றும் மாளிகாகந்தை நீதிமன்றங்கள் இந்த நினைவேந்தல்களுக்கு தடைவிதித்தன.
இந்த நிகழ்வு குறித்த அறிவிப்பு வெளியாகியதும், “முதுகெலும்பு உள்ளவர்கள் தயாராகுங்கள், கொழும்புக்கு வரும் புலிகள் மீது தாக்குதல் நடத்துவோம்” என அழைப்பு விடுக்கும் பதிவுகள் சமூக ஊடகங்களில் வெளியாகின.
இந்த அச்சுறுத்தல்களை அடுத்து, மக்களின் பாதுகாப்பு மற்றும் அநாவசியமான குழப்பத்தை தவிர்க்க குறித்த நினைவேந்தல் நிகழ்வை ரத்துச் செய்வதாக கிறிஸ்தவ ஒத்துழைப்பு இயக்கம் அறிவித்திருந்தது. அதற்குப் பின்னரே, கோட்டை நீதிவான் நீதிமன்றம் நிகழ்வுக்கான தடைஉத்தரவைப் பிறப்பித்தது.
திலீபன் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெறுவதால் இனங்களுக்கிடையிலான நல்லுறவு பாதிக்கப்படும், நல்லணக்கச் சூழலுக்கு ஆபத்து நேரிடும் என பொலிஸார் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியிருந்தனர். இதேபோன்ற விண்ணப்பம் வவுனியா, யாழ்ப்பாணம் நீதிமன்றங்களிலும் பொலிஸாரால் முன்வைக்கப்பட்டது.
ஆனால், அந்த நீதிமன்றங்கள் அதனை நிராகரித்து விட்டன. நினைவேந்தல் உரிமையை மறுக்க முடியாது என்றும், இன நல்லுறவு குலையாமல் பாதுகாப்பு வழங்குமாறும் பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது,
அதேவேளை, திருகோணமலையில் தியாக தீபம் திலீபன் நினைவு ஊர்தி மீது நடத்தப்பட்ட தாக்குதலை சாட்டாக வைத்துக் கொண்டே, இந்த நீதிமன்ற தடை உத்தரவுகள் பெறப்பட்டன அல்லது தடை உத்தரவைப் பெற்றுக் கொள்ளும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
திருகோணமலை கப்பல்துறை இராணுவ முகாமுக்கு அருகே, திலீபன் நினைவு ஊர்தி தாக்கப்பட்டமை குறித்து விடயத்தை திசை திருப்புவதற்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.
கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான், சிங்களப் பிரதேசங்களை ஊடுருவிச் சென்றது நல்லிணக்கத்தை குழப்பும் செயல் என்று விமர்சித்திருக்கிறார். அனுமதியின்றி அந்த ஊர்தி சிங்களப் பிரதேசத்துக்குள் சென்றதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
இன்னும் பலர் சிங்கள பிரதேசத்துக்குள் திலீபன் நினைவு ஊர்தி பிரவேசித்தது தான் தாக்குதலுக்கு காரணம் என்று நியாயம் கற்பிக்க முனைகின்றனர்.
வடக்கும் கிழக்கும் தமிழரின் தாயகம் என்பதை வலியுறுத்தி- சிங்களக் குடியேற்றங்களை தடுக்க கோரி, ஊர்காவற்படையினரின் ஆயுதங்களைக் களையக் கோரி அமைதி வழியில் போராடி உயிர் துறந்தவர் தான் திலீபன்.
திலீபன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், யாழ்ப்பாணத்திலேயே அவர் உயிர் துறந்திருந்தாலும், அவரது சாவுக்கு முக்கியமான காரணம் கிழக்குத் தான்.
வடக்கும் கிழக்கும் இணைந்தது தான் தமிழர் தாயகம் என்பதில் உறுதியாக இருந்தவர் அவர். கிழக்கில் சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியவர் அவர்.
சிங்கள ஊர்காவல்படையினரிடம் இருந்து ஆயுதங்களைக் களைய வேண்டும் என்று வலியுறுத்தியவர் அவர்.
இத்தகைய செயற்பாடுகளினால் தமிழர் தாயகம் சிங்கள மயப்படுத்தப்படும் ஆபத்தை அவர் உணர்ந்திருந்தார். தமிழர் தாயகப் பிரதேசம் பறிபோகும் என்பதை உணர்ந்திருந்தார். தமிழர் தாயகம் துண்டாடப்படும் என்று உணர்ந்திருந்தார்.
திலீபனின் அந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவும் இல்லை. தமிழர்களின் நிலங்கள் அபகரிக்கப்படுவதில் இருந்தும் சிங்களக் குடியேற்றங்கள் நிறுவப்படுவதில் இருந்தும் பாதுகாக்கப்படவும் இல்லை. வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம் என்ற நிலையில், அதனை இந்திய -- - -இலங்கை ஒப்பந்தததில் இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ள நிலையில், சிங்களப் பகுதி என்பது எங்கிருந்து வந்தது?
நினைவேந்தல் ஊர்தி சிங்களப் பகுதி ஊடாகச் சென்றது தான் தவறு என்று வைத்துக் கொண்டாலும், இதனை இனக்கலவரத்தை தூண்டுகின்ற முயற்சி என்று குற்றம்சாட்டுவது பொருத்தமானதா?
அத்தகைய குற்றச்சாட்டின் அடிப்படையில் இன முரண்பாடு ஏற்படும் என்று பொலிஸார் நீதிமன்றத்திடம் தடை உத்தரவு பெற முடியுமா?
முற்றிலும் தமிழர் வாழுகின்ற பிரதேசங்களுக்குள் நுழைந்து, பௌத்த பிக்குகள் விகாரைகளை அமைக்கும் போது, தமிழர்கள் எதிர்ப்பை வெளியிட்டனரே தவிர தாக்குதல் நடத்தவில்லை.
தையிட்டி விகாரை, குருந்தூர்மலை விகாரை போன்றவற்றுக்கு எதிராக தமிழர்கள் அமைதியாக போராட்டங்களைத் தான் நடத்தியிருக்கிறார்கள்.
தங்களின் பகுதிக்குள் நுழைந்தனர், தங்களின் நிலங்களை அபகரித்து விகாரைகளை அமைத்துள்ளனர் என்று அவர்கள், தாக்குதல் நடத்தி விரட்டவில்லை.
பௌர்ணமி தினங்களில் தமிழர்களின் பிரதேசங்களை ஊடறுத்து எத்தனை பௌத்த ஊர்வலங்கள் வடக்கு கிழக்கில் நடக்கின்றன.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்குள் கூட, புத்தரை எடுத்துச் சென்று வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன. அதனை எதிர்த்து தமிழர்கள் யாரும், வன்முறைகளில் ஈடுபடவில்லை.
ஆனால், தமிழர்கள் தங்களின் நினைவேந்தல் ஊர்தியில் பயணம் செய்தால், மட்டும் சிங்களவர்கள் தாக்குதல் நடத்துகின்றனர்.
இலங்கை ஒரு சிங்கள பௌத்த பூமி என்றும் எங்கேயும், புத்தர் சிலையை வைத்து வழிபடும் உரிமை தங்களுக்கு இருப்பதாகவும் முன்னர் சரத் வீரசேகர கூறியிருந்தார்.
இந்த நாடு சிங்களவர்களுக்கு மட்டும் உரித்தானதல்ல. தமிழர்களுக்கும் உரியது.
இலங்கை தமிழர்களின் பூர்வீக தேசம். இங்கு நடமாடும் சுதந்திரமும், நினைவேந்தும் சுதந்திரமும் தமிழர்களுக்கு உள்ளது.
அதனை சிங்கள ஆட்சியாளர்களோ, அல்லது அதிகார வர்க்கமோ நிராகரிக்க முடியாது.
இந்த நாட்டில் பிறந்த அனைவருக்கும் எங்கேயும் நடமாடுகின்ற உரிமை வழங்கப்பட்டுள்ளது. அது அடிப்படை உரிமைகளாக அரசியலமைப்பில் இடம்பெற்றிருக்கிறது.
அப்படியிருக்க சிங்களப் பகுதியின் ஊடாகச் சென்றதால் தான் தாக்குதல் நடத்தப்பட்டதாக நியாயப்படுத்துவது தவறு.
அவ்வாறு நியாயப்படுத்துபவர்கள், நாட்டின் அடிப்படை உரிமைக் கோட்பாடுகளை மறுக்கிறார்கள். அல்லது அது பறிக்கப்படுவதை ஏற்றுக் கொள்கிறார்கள் என்று தான் அர்த்தம்.
வடக்கு, கிழக்கில் தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் பௌத்த விகாரைகளை அமைப்பது சரியானதே என்றால், சிங்களப் பகுதிகளின் ஊடாக திலீபன் நினைவேந்தல் ஊர்தி பயணம் செய்ததும் சரியானது தான். இந்த இடத்தில் அதற்கு வேறு கணக்கு, இதற்கு வேறு கணக்கு கிடையாது.
தமிழர் பகுதிகளில் விகாரைகள் கட்டப்படுவதை எதிர்த்து தமிழர்கள் போராடிய போது, மௌனம் காத்தவர்கள் இப்போது, சிங்களப் பகுதி ஊடாக சென்றதால் தான் தாக்குதல் நடத்தப்பட்டது என்று நியாயம் கூற வந்திருக்கிறார்கள்.
சிங்கள ஆட்சியாளர்களும் சிங்கள மக்களும் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழர்கள் தங்களின் நியாயமான உரிமைகளுடன் வாழுகின்ற நிலை உருவாக்கப்படாது போனால், எதிர்காலத்தில் இவ்வாறான உரசல்களும் முரண்பாடுகளும் தான் மேலோங்கும்.
அத்தகையதொரு நிலையைத் தான் திருகோணமலையில் தாக்குதல் நடத்தியவர்கள் உருவாக்க முனைகிறார்கள்.
தமிழர்களுடன் இணைந்து வாழ விரும்பினால் தமிழர்களின் விருப்பு வெறுப்புகளையும் வாழ்வியல் நடத்தைகளையும் புரிந்து கொள்வதுடன் அதற்கு இணங்கி நடக்கவும் தயாராக இருக்கவேண்டும்.
அது தான் நல்லுறவுக்கு - நல்லிணக்கத்துக்கு வழிகோலும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM