ஹரிகரன்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமெரிக்கப் பயணத்தின் போது, நியூயோர்க்கில் உள்ள சர்வதேச அமைதிக்கான கார்னகி என்டோவ்மன்ட் நிகழ்வில் தெரிவித்த கருத்துக்கள் பலத்த விவாதங்களைத் தோற்றுவித்திருக்கிறது.
இந்த நிகழ்வில் அவர் ஆக்கஸ் (AUKUS) கூட்டணியைப் பற்றி செய்திருக்கின்ற விமர்சனங்களும், இந்தோ- பசுபிக் தொடர்பான தெரிவித்திருக்கின்ற கருத்துக்களும், நிச்சயமாக மேற்குலகினால் ரசிக்கத்தக்கவையாக இருந்திருக்காது.
அமெரிக்காவில் இருந்து கொண்டே, அமெரிக்கா தலைமையிலான இராணுவக் கூட்டை அவர் விமர்சனம் செய்திருக்கிறார். அமெரிக்காவின் நீண்டகால பாதுகாப்பு மூலோபாயமாகிய இந்தோ- பசுபிக் கோட்பாட்டையும் அவர் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறார்.
இந்த இரண்டு விடயங்களையும் சுட்டிக்காட்டும் போது, ஜனாதிபதி ரணில் தீவிரமாக எடுத்துக் கொள்ளாமல் இருந்தாரா அல்லது, சபையில் ஆரவாரத்தை எதிர்பார்த்து செய்தாரா என்ற சந்தேகம் இன்னமும் பலருக்கு இருக்கிறது.
2021 செப்டெம்பரில் தான் ஆக்கஸ் கூட்டணி உருவாக்கப்பட்டது. அது அமெரிக்கா, அவுஸ்ரேலியா, பிரித்தானியா ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து உருவாக்கிய அமைப்பு.
இந்தக் கூட்டு உருவாக்கப்பட்ட போது அதனை மேற்குலக நாடுகள் பலவும் எதிர்பார்க்கவில்லை.
அதற்கு முக்கியமான காரணம், பிரான்ஸுடன் செய்து கொண்டிருந்த- 56 பில்லியன் யூரோ அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களை தயாரிக்கும் ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டே, அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவுடன் அவுஸ்ரேலியா இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டிருந்தது.
இந்தோ- பசுபிக் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக, அவுஸ்ரேலியா அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களைப் பெற்றுக் கொள்வதற்கு, அமெரிக்காவும் பிரித்தானியாவும் உதவும் வகையில் தான் இந்த உடன்பாடு செய்து கொள்ளப்பட்டது.
மேம்படுத்தப்பட்ட இணைய பொறிமுறை, செயற்கை நுண்ணறிவு மற்றும் தன்னாட்சி, குவாண்டம் தொழில்நுட்பங்கள், கடலுக்கடியிலான திறன்கள், ஹைப்பர்சோனிக் மற்றும் எதிர்-ஹைப்பர்சோனிக், மின்னணு போர்முறை, கண்டுபிடிப்பு மற்றும் தகவல் பகிர்வு போன்ற விடயங்களிலும் ஒத்துழைப்பை உறுதிப்படுத்தும் வகையில் தான் இந்த ஆக்கஸ் கூட்டணி உருவாக்கப்பட்டது.
இந்த ஆக்கஸ் கூட்டணியை ஒரு இராணுவக் கூட்டு என்றும், இது தேவையற்றது, இதனால் எதிர்விளைவுகள் ஏற்படலாம் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியிருக்கிறார்.
இந்தக் கூட்டு உருவாக்கப்பட்டது ஒரு மூலோபாயத் தவறு என்றும், இந்தக் கூட்டணி ஒரே ஒரு நாட்டை இலக்கு வைத்தது என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
ஆனால், குறிவைக்கப்பட்டுள்ள நாடு எது என்பதை வெளிப்படையாக ரணில் விக்கிரமசிங்க குறிப்பிடாவிட்டாலும், அது சீனா தான் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
தென் சீனக்கடலில் சீனாவின் சண்டித்தனம், சொலமன் தீவுகளில் தளம் அமைப்பதற்கான அதன் முஸ்தீபுகள், இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் தனது கடல்சார் பாதுகாப்பு பலத்தை தொடர்ந்து பெருக்கிக் கொண்டிருப்பது போன்ற காரணங்கள் தான் இந்த முத்தரப்பு கூட்டுக்கான அடிப்படைக் காரணம் ஆகும்.
ஆயினும் இதனை ஒரு தொழில்நுட்ப பகிர்வுக்கான கூட்டாகவே அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்ரேலியா ஆகிய நாடுகள் கூறிக் கொள்கின்றன.
அவ்வாறான நிலையில் ரணில் விக்கிரமசிங்க அதனை தவறான இராணுவக் கூட்டு என்று வர்ணித்திருக்கிறார்.
இந்தியப் பெருங்கடலிலும் பசுபிக் பிராந்தியத்திலும் சீனா தனது வல்லமையை பெருக்குவது மாத்திரம் பிரச்சினையல்ல.
அது ஏனைய நாடுகளின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் அச்சுறுத்தலாக மாறுகின்ற போது, அதனை உலக நாடுகள் கண்டுகொள்ளாமல் இருக்காது.
அதைவிட அமெரிக்காவும் பிரித்தானியாவும், கோலோச்சிய இந்தப் பிராந்தியத்தில் சீனா மிகப் பெரிய சக்தியாக வளருவதையோ, அவுஸ்ரேலியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதையோ அந்த நாடுகள் விரும்பாது.
இந்த நிலைமை சீனாவுக்கு மாத்திரமல்ல. எல்லா நாடுகளுக்கும் பொருந்தும். இவ்வாறானதொரு பின்னணியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆக்கஸ் கூட்டணி தொடர்பாக கருத்தை வெளியிட்டிருப்பது, பக்கசார்பற்ற கருத்தாக கொள்ளப்படாது.
இந்தக் கூட்டினால், இலங்கைக்குப் பாதிப்பு ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் குறைவு. ஆனாலும் ஆக்கஸ் கூட்டணி குறித்து ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ள கருத்து சீனாவின் பக்கம் அவர் சாய முற்படுகிறாரா என்ற சந்தேகத்தையே எழுப்பியிருக்கிறது.
இதே நிகழ்வில் இன்னொரு சந்தர்ப்பத்தில் ரணில் விக்கிரமசிங்க, இந்தியாவுக்கோ, சீனாவுக்கோ சார்பானவர் இல்லை என்று குறிப்பிட்டிருக்கிறார்.
தாம் இலங்கையின் சார்பானவர் என்பதை அவர் அழுத்தமாக குறிப்பிட்டிருக்கிறார்.
இந்தக் கருத்து மாத்திரம் அவரது நம்பிக்கையை காப்பாற்றிக் கொள்வதற்குப் போதுமானதல்ல. அவர் சீனாவுடன் நெருங்கிச் செல்வதற்கான வாய்ப்புகளை மறுக்கத் தயாராக இல்லை.
அடுத்த மாதம் ரணில் விக்கிரமசிங்க சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், அவர் மேற்குலகின் மீது விமர்சனங்களை முன்வைக்கத் தலைப்பட்டிருக்கிறார்.
இது சீனாவின் கவனத்தை ஈர்க்கும் செயலாக மாத்திரம் கவனிக்கப்படவில்லை. மேற்குலகத்தை ஏன் அவர் சீண்ட முற்படுகிறார் என்ற கேள்வியையும் எழுப்பியிருக்கிறது.
ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக்கு வந்த பின்னர் மேற்குலகம் சாதகமாகவே அணுகியது.
சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைத்ததுடன், அதற்கு தேவையான புறச் சூழலை ஏற்படுத்திக் கொடுத்ததும் மேற்குலகம் தான்.
ஆனாலும் சீனாவிடம் பெறப்பட்டிருக்கின்ற கடன்கள் அரசாங்கத்துக்கு இன்னமும் அச்சுறுத்தலாகவே இருக்கிறது.
அந்தக் கடனை மறுசீரமைப்புச் செய்வதற்கு, சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனைப்படி செயற்படுவதற்கு சீனா மறுத்து வருகிறது. ஒரு வருடத்துக்கு மாத்திரமே சீனா கடனை மீளப் பெறுவதை இடைநிறுத்த இணங்கியது.
அடுத்த ஆண்டில் இருந்து கடனுக்கான வட்டி மற்றும் கடனை திருப்பிச் செலுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்.
இவ்வாறான நிலையில், சீனாவை பகைத்துக் கொள்வதை தவிர்க்கவே ரணில் விக்கிரமசிங்க முற்படுகிறார்.
சீனா தொடர்புடைய சர்வதேச விவகாரங்கள், சர்ச்சைகளில், சீனாவின் மனதை நோகடிக்கும் எந்த காரியத்தையும் செய்வதற்கு அரசாங்கம் தயாராக இல்லை.
ஒரே சீனா என்ற கொள்கையை அரசாங்கம் அவ்வப்போது அழுத்திக் கூறி வருவதன் மூலம், தாய்வான் மீதான சீனாவின் ஆக்கிரமிப்பு முயற்சிகளுக்கு கொழும்பு எப்போதும் பச்சைக் கொடி காண்பித்துக் கொண்டிருக்கிறது.
தென் சீனக் கடல் பிராந்தியத்தில் சீனாவின் அத்துமீறல்களையும் இலங்கை கண்டுகொள்வதில்லை.
இவையெல்லாம் சீனாவுடன் முரண்பாட்டை ஏற்படுத்திக் கொண்டு விடக் கூடாது என்பதற்காக ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் கையாளுகின்ற தந்திரங்கள்.
இத்தகைய நிலையில் தான் இப்போது ரணில் இன்னும் சற்று முன்னே போய் சீனாவை காப்பாற்ற முற்பட்டிருக்கிறார். அவர் வலிந்து சென்று ஆக்கஸ் கூட்டணியை விமர்சித்து, சீனாவின் செயற்பாடுகளை நியாயப்படுத்த முற்பட்டிருக்கிறார். அது மாத்திரமன்றி, அவர் அமெரிக்காவின் இந்தோ- பசுபிக் கொள்கையையும் நகைப்புக்கிடமாக சித்திரித்திருக்கிறார்.
அமெரிக்கா தனது எதிர்காலப் பாதுகாப்புக்கென தூரநோக்குத் திட்டங்களை வகுத்துக் கொள்ளும் நாடு.
அடுத்த 500 ஆண்டுகளுக்கான பாதுகாப்புக் கொள்கையை அமெரிக்கா வகுத்திருப்பதாக சொல்லப்படுவதுண்டு.
அமெரிக்கா முன்னர் பசுபிக் கட்டளைப்பீடம் என்ற பெயரிலேயே தனது பாதுகாப்புக் கட்டமைப்பை வைத்திருந்தது.
2018இல் தான், அதற்கு இந்தோ- பசுபிக் கட்டளைப் பீடம் என்று மறுபெயரிட்டது. அதனைத் தொடர்ந்து தான் அமெரிக்காவின் இந்தோ- பசுபிக் மூலோபாயக் கொள்கை வெளியிடப்பட்டது.
பசுபிக் மற்றும் இந்து சமுத்திரங்களை இணைத்த அந்தப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் அமெரிக்கா தனது ஆதிக்கத்தை பாதுகாத்துக் கொள்வதற்கு முற்படுகிறது.
இவ்வாறான நிலையில் ரணில் விக்கிரமசிங்க இந்தோ- பசுபிக் என்பதை கேலி செய்யும் விதத்தில் கருத்து வெளியிட்டிருக்கிறார்.
அவ்வாறான ஒரு கட்டமைப்பு இல்லை என்றும் கற்பனையான எல்லைக்கோடு என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
“இந்தோ-பசுபிக் என்றால் என்னவென்று யாருக்கும் தெரியாது. சிலர், அது இந்தியாவின் மேற்கு எல்லையில் முடிவடைகிறது என்கிறார்கள், மற்றவர்கள் அது ஆபிரிக்கா வரை இருப்பதாக கூறுகிறார்கள். சிலர் மேற்கு பசுபிக் உடன் முடிவடைவதாக சொல்கிறார்கள், இன்னும் சிலர் தெற்கு பசுபிக் பகுதிக்குச் செல்கிறார்கள்." என்று அதனை எள்ளி நகையாடும் வகையில் கருத்து வெளியிட்டிருக்கிறார் ரணில் விக்கிரமசிங்க.
அவரது இந்தக் கருத்து அமெரிக்காவில் இருந்தே வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதனை வொஷிங்டன் எவ்வாறு எடுத்துக் கொள்ளும் என்பது போகப் போகத் தான் தெரியவரும்.
எது எவ்வாறாயினும், ரணில் விக்கிரமசிங்கவின் இந்தச் சீண்டல் கருத்துக்கள், இலங்கையை நம்ப முடியாத நண்பர்களின் பட்டியலிலேயே அமெரிக்கா வைத்திருக்கும் நிலையை ஏற்படுத்தும்.
ராஜபக் ஷவினராக இருந்தாலும், ரணில் விக்கிரமசிங்கவாக இருந்தாலும் நிலைமை ஒன்று தான் என்ற கணிப்பையும் அமெரிக்காவிடம் ஏற்படுத்தியிருக்கும்.
பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளுவதற்கு முற்படும் நாடு ஒன்றின் தலைவரின் அதிகப் பிரசங்கித்தனமான கருத்தாகவே இது எடுத்துக் கொள்ளப்படும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM