நமது அரசியல் நிருபர்
ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டம் மற்றும் ஜி77 உச்சிமாநாடு ஆகியவற்றில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமெரிக்கா மற்றும் கியூபா ஆகிய நாடுகளுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை கடந்த வாரத்தில் மேற்கொண்டிருந்தார்.
ஜனாதிபதி என்ற ரீதியில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை கூட்டத்தில் ரணில் விக்கிரமசிங்க கடந்த வியாழக்கிழமை உரையாற்றிருந்த போதிலும் 2002ஆம் ஆண்டில் பிரதமராகவும் ஐ.நா. கூட்டத்தில் அவர் உரையாற்றிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இந்தோ-பசிபிக் பூகோள அரசியலில் இலங்கையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் பல்வேறு சம்பவங்கள் அமெரிக்காவில் அரங்கேறியிருந்தது. அவற்றில் மிகவும் முக்கியமான விடயமாக இந்திய – - சீன பிராந்திய போட்டியில் இலங்கை எந்தப் பக்கம் உள்ளது என்பது அனைவராலும் அவதானிக்கப்பட்ட விடயமாகும். ஏனெனில் சீனா மேலாதிக்கத்தை கொண்ட ஜி77 உச்சிமாநாட்டில் கலந்துகொண்ட ஜனாதிபதி ரணில், அமெரிக்காவில் இடம்பெற்ற ஐ.நா. பொதுச்சபை கூட்டத்திலும் பங்கேற்றிருந்தார்.
பிராந்தியத்தில் இந்திய –- சீன போட்டி காணப்பட்டாலும் உலக அரங்கில் அமெரிக்க –- சீன பனிப்போர் என்பது கடுமையான நிலையில் உள்ளது. இந்தப் பூகோள அரசியல் சூழலில் இலங்கையை சாதகமான தடத்தில் கொண்டு செல்வது என்பது ஜனாதிபதி ரணிலுக்கு உள்ள பெரும் சவால்களில் ஒன்றாகும். இதன் தாக்கம் ஜனாதிபதியின் அமெரிக்க விஜயத்தில் உணர முடிந்தது.
இதேவேளை உள்ளக அரசியலிலும் பல்வேறு கொந்தளிப்புகள் ஏற்படத் தொடங்கியுள்ளன. இதுவரை காலமும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அடுத்து வரும் ஜனாதிபதி தேர்தலில் தனித்து வேட்பாளரை நிறுத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. இதனை மையப்படுத்திய கலந்துரையாடல்களை பசில் ராஜபக் ஷ முன்னெடுத்துள்ளார். குறிப்பாக ஜனாதிபதி நாட்டில் இல்லாத கடந்த வாரத்தில் பல முக்கிய சந்திப்புகளை பசில் ராஜபக் ஷ முன்னெடுத்திருந்தமை குறித்து அரசியல் வட்டாரங்களின் அவதானத்தை பெற்றிருக்கின்றது.
ரணில் - பைடன் சந்திப்பு
எவ்வாறாயினும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அமெரிக்க விஜயத்தின் போது அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகளை இலங்கை தரப்பு முன்னெடுத்திருந்தது. அனைத்து இராஜதந்திர மையங்கள் ஊடாகவும் அமெரிக்க –- இலங்கை இருதரப்பு கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இந்த முயற்சிகளின் பிரகாரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஜனாதிபதி ஜோ பைடன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு சாத்தியமாக்கப்பட்ட போதிலும், அது வெறுமனே ஒரு புகைப்படத்திற்கான சந்திப்பாக மாத்திரமே இருந்துள்ளது.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78ஆவது கூட்டத்தொடரில் பங்குபற்றிய அனைத்து நாட்டுத் தலைவர்களுக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இரவு விருந்துபசாரம் ஒன்றை வழங்கியிருந்தார். இதன்போதே ஜனாதிபதி ரணில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை சந்தித்தார்.
இருதரப்பு பேச்சு இல்லை
ஆனால், ஏனைய நாட்டு தலைவர்கள் மற்றும் முக்கிய உலக அமைப்புகளின் தலைமைகளுடன் பிரத்தியேக சந்திப்புகளையும் இருதரப்பு கலந்துரையாடல்களையும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்திருந்தார். ஆனால் அவ்வாறானதொரு இருதரப்பு கலந்துரையாடல் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் ஜனாதிபதி ரணிலுக்கும் இடையில் இடம்பெற்றிருக்கவில்லை.
மாறாக அமெரிக்க சர்வதேச உதவித் திட்டத்தின் தலைமை அதிகாரியான சமந்த பவரை சந்தித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்துரையாடியிருந்தார்.
இராஜதந்திர விளக்கம்
இவ்வாறு அமெரிக்க மற்றும் இலங்கை தலைவர்களுக்கு இடையிலான இருதரப்பு கலந்துரையாடல் நடைபெறாமைக்கு பல்வேறு காரணங்களை இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்று ஒரு வருட காலம் கடந்துள்ள நிலையிலும் அமெரிக்க ஜனாதிபதியின் வாழ்த்து இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை என்ற ஒரு விடயமும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் அமைதி வழி போராட்டங்கள் மீதான தாக்குதல்கள் ஊடாக பொது மக்களின் ஜனநாயக உரிமைகள் கடுமையாக கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளதாக வொஷிங்டன் கருதுகின்றது. அதுவும் ஜனாதிபதியாக ரணில் பதவியேற்றதன் பின்னர், அமைதி வழிப் போராட்டங்கள் மீதான தாக்குதல்களை அமெரிக்கா கண்டித்துள்ளது.
இலங்கையின் மனித உரிமை மீறல்களை மையப்படுத்தி ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையிலும் அமெரிக்கா தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது. இவ்வாறானதொரு நிலையில் தொடர்ந்தும் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் போன்ற விடயங்களில் ஆர்வம் செலுத்தாது, அரசியல் நலன்களை மையப்படுத்தி இலங்கை அரசாங்கம் செயல்படுகின்றமையை அமெரிக்கா ஒருபோதும் விரும்பாது.
அடுத்தபடியான முக்கிய காரணி, பூகோள அரசியலுடன் தொடர்புபட்ட விடயமாகவே உள்ளது. அமெரிக்காவுக்கு செல்வதற்கு முன்னர் ஜி77 சீனத் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கியூபாவுக்கு சென்றிருந்தார். கியூபா மீது அமெரிக்கா பல்வேறு தடைகளை ஏற்கனவே விதித்திருந்த போதிலும், தனது ஆளுமையை அமெரிக்காவுக்கு வெளிப்படுத்தும் வகையிலேயே கியூபா ஜி77 மாநாட்டை நடத்தியது.
ஆனால் அமெரிக்காவை பகைத்துக்கொள்ள விரும்பாத சில நாடுகளின் தலைவர்கள் ஜி77 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக கியூபா செல்வதை தவிர்த்திருந்தனர்.
கியூபாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான நெருக்கத்தை அமெரிக்கா பெரும்பாலும் விரும்புவதில்லை. சீன உளவாளிகளுக்கு முகாமிட கியூபா வாய்ப்பளிப்பதாக கடந்த ஜூன் மாதம் அமெரிக்கா விசேட அறிக்கை மூலம் குறிப்பிட்டிருந்தது. இவ்வாறு இருநாடுகளுக்கு இடையிலும் கடுமையான மோதல்கள் காணப்படுகின்ற நிலையிலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜி77 சீனத் தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக கியூபாவுக்கு சென்றிருந்தார். எனவே இந்த விஜயமும் ரணில் –- பைடன் இருதரப்பு கலந்துரையாடல்கள் இடம்பெறாமைக்கு காரணமாக இருந்திருக்கலாம் என்று கூறப்படுகின்றது.
கியூபா செல்ல முன் பஷிலை சந்தித்த ரணில்
இவ்வாறு உலக வல்லரசுகளுக்கு இடையிலான மோதல்களுக்குள் இலங்கை சிக்கியுள்ள நிலையில் தேசிய அரசியலிலும் முக்கிய நகர்வுகளை அவதானிக்க முடிகின்றது. கியூபா விஜயத்திற்கு முன்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிழல் தலைவரான பஷில் ராஜபக் ஷவை அழைத்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்துரையாடியுள்ளார்.
பொதுவாகவே ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றதன் பின்னர் பல தடவைகள் பஷில் ராஜபக் ஷவுடன் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டன. அவை அனைத்துமே பஷில் ராஜபக் ஷவின் வேண்டுகோளுக்கு இணங்க முன்னெடுக்கப்பட்டவையாகும்.
ஆனால் இம்முறை ஜனாதிபதியின் அழைப்பின் பேரிலேயே பசில் ராஜபக் ஷ கலந்துரையாடலுக்கு வருகை தந்திருந்தார். இருதரப்பு சந்திப்பின் போது நடைமுறை அரசியல் சார்ந்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன. குறிப்பாக ஜனாதிபதியுடனான இந்த சந்திப்பின் போது ஆகஸ்ட் மாதத்தில் ஏற்படுத்தப்பட்ட இணக்கப்பாடுகள் குறித்தும் பஷில் ராஜபக் ஷ கேள்வியெழுப்பியுள்ளார்.
அதாவது அமைச்சரவை மாற்றம் மற்றும் உத்தேச தேர்தல்கள் குறித்து வினவியுள்ளார். அடுத்த வருடம் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல்கள் இடம்பெறவுள்ளன. இதில் எந்த தேர்தல் முதலில் நடத்தப்படும் என்று பஷில் ராஜபக் ஷ கேள்வியெழுப்பியுள்ளார். இவற்றுக்கு உரியவாறு பதிலளிக்காது பொதுவான விடயங்களுக்கே ஜனாதிபதி பதிலளித்துள்ளார்.
புதிய அமைச்சர்கள் பட்டியல்
அமைச்சரவை மாற்றத்தின் போது அமைச்சு பதவிகள் வழங்க வேண்டிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களின் பெயர்ப்பட்டியல் கடந்த ஆகஸ்ட் மாதம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டிருந்த போதிலும் இன்றளவில் அதற்கு எந்தவொரு பதிலும் கிடைக்கப்பெறவில்லை என்ற விடயத்தையும் பஷில் ராஜபக் ஷ சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் ஜனாதிபதிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினருக்கும் இடையிலான விரிசல்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளதாகவும் இதன் போது தெரிவிக்கப்பட்டது.
இவற்றுக்கு பதிலளித்த ஜனாதிபதி, 13 பேருக்கு அமைச்சு பதவிகளை வழங்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவற்றை யார் யாருக்கு வழங்குவது என்பது குறித்து தெளிவாக எதனையும் அவர் குறிப்பிடவில்லை.
தனித்து வேட்பாளரை நிறுத்தத் திட்டம்
இந்தக் கலந்துரையாடலின் பின்னர் ஜனாதிபதி நாட்டில் இல்லாத சந்தர்ப்பத்தில் பஷில் ராஜபக் ஷ பல்வேறு சந்திப்புகளை முன்னெடுத்திருந்தார். குறிப்பாக பிரதமருடனான சந்திப்பில் தெரிவித்த முக்கிய விடயங்களை கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளிப்படுத்திருந்தோம்.
அதேபோன்று பத்தரமுல்லை நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுவின் அலுவலகத்தில் ஆளும் கட்சியின் உறுப்பினர்களை அழைத்து முக்கிய கலந்துரையாடல்களை பஷில் முன்னெடுத்திருந்தார். இந்தக் கலந்துரையாடல்களின் போது அடுத்து வரக்கூடிய ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பதா அல்லது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளரை களமிறக்குவதா என்பது குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
நெலும் மாவத்தை அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல்களின் போது முதல் தடவையாக பொதுஜன பெரமுன சார்பில் தனித்து ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை களமிறக்குவது குறித்து பஷில் ராஜபக் ஷ கருத்து தெரிவித்துள்ளார்.
பஷிலின் அவசர அழைப்பு
அரசியல் ரீதியில் பல்வேறு முக்கிய நகர்வுகளை முன்னெடுத்து வரும் பஷில் ராஜபக் ஷ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர்கள் சிலரை நெலும் மாவத்தை அலுவலகத்திற்கு கடந்த வியாழக்கிழமை அழைத்திருந்தார்.
இந்த அழைப்பின் பிரகாரம் நாமல் ராஜ பக் ஷ, கெஹலிய ரம்புக்வெல்ல, ரஞ்சித் பண்டார, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, அருந்திக பெர்னாண்டோ, பியல் நிஷாந்த, இந்திக அநுருத்த மற்றும் காமினி லொக்குகே ஆகியோர் இந்தக் கலந்துரையாடலுக்கு சென்றிருந்தனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மறுசீரமைப்பை துரிதப்படுத்த முன்னெடுக்கப்படும் திட்டங்களில் தலைமைத்தாங்கி செயல்படுமாறு பஷில் ராஜபக் ஷவிடம் இதன்போது ஏனையவர்கள் கேட்டுக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
புதிய அரசியல் கூட்டணி
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அதிருப்தி குழுவினரால் உருவாக்கப்பட்டுள்ள புதிய அரசியல் கூட்டணியின் செயல்பாடுகள் மிகவும் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எதிர்வரும் ஜனவரி மாதத்தில் உத்தேச புதிய அரசியல் கூட்டணியின் கன்னி சம்மேளனம் இடம்பெறவுள்ள நிலையில், அதற்கான ஒழுங்குகளை கூட்டணியின் செயல்பாட்டு தலைவரான அநுர பிரியதர்ஷன யாப்பா தலைமையிலான குழு முன்னெடுத்து வருகின்றது.
எவ்வாறாயினும் புதிய கூட்டணியுடன் பல தரப்பையும் இணைக்கும் செயல்பாடுகளும் ராஜகிரிய அலுவலகத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பிரதான கட்சிகளுடனும் முக்கிய பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் நாட்களில் முக்கிய தொழிற்சங்கங்கள் பல புதிய அரசியல் கூட்டணிக்கு ஆதரவளிக்கும் வகையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் ராஜகிரிய அலுவலகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
அநுர பிரியதர்ஷன யாப்பாவின் இல்லத்தில் சந்திப்பு
புதிய கூட்டணியின் செயல்பாட்டு தலைவரான அநுர பிரியதர்ஷன யாப்பாவின் குளியாப்பிட்டிய இல்லத்தில் விசேட சந்திப்பு ஒன்று சனிக்கிழமை இடம்பெற்றது. அமைச்சர் நளின் பெர்னாண்டோ, நிமல் லான்சா, முன்னாள் பிரதி அமைச்சர் தாரநாத் பஸ்நாயக, முன்னாள் முதலமைச்சர் தர்மசிறி தசநாயக்க, மாகாண சபை முன்னாள் உறுப்பினர்களான நிலந்த ராஜபக் ஷ, சுமித் ராஜபக் ஷ, சந்தன யாப்பா மற்றும் ரணவிரு ஹேரத் உள்ளிட்ட பலரும் சந்திப்பில் கலந்துகொண்டனர்.
ராஜகிரிய அலுவலகத்தை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் அதன் பிரதானிகளான சுகீஷ்வர பண்டார மற்றும் சிறிபால அமரசிங்க ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர். இந்தச் சந்திப்பில் புதிய கூட்டணியின் எதிர்கால செயல்பாடுகள் மற்றும் நடைமுறை அரசியல் விவகாரங்கள் குறித்தும் கருத்துக்கள் பகிரப்பட்டன.
புதிய கூட்டணியின் செயல்பாடுகள் தொடர்பில் கிராமிய மக்கள் மத்தியில் நல்லதொரு அபிப்பிராயம் ஏற்பட்டுள்ளது. ராஜபக் ஷர்களின் அரசியலை வெறுத்தவர்களுக்கு மாற்று இடம் ஒன்று இருக்கவில்லை. சஜித் பிரேமதாசவுடன் இணையவும் அவர்கள் விரும்பவில்லை. எனவே இந்தக் கூட்டணி சிறந்த ஆரம்பமாக உள்ளது என்று வடமேல் மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் தர்மசிறி தசநாயக்க இதன் போது குறிப்பிட்டார்.
சிறந்த அரசியல் தலைமைத்துவம் இன்மையே பெரும்பாலானவர்களின் பிரச்சினையாக உள்ளது. உத்தேச புதிய அரசியல் கூட்டணி ஊடாக அந்தக் குறை நிவர்த்திக்கப்படுகின்றது என்று நிலந்த ராஜபக் ஷ கூற அனைவரும் அதனை ஆமோதித்தனர்.
புதிய அரசியல் கூட்டணியை எப்படியாவது தடுத்து விட வேண்டும் என்ற நிலைப்பாட்டுடன் பஷில் ராஜபக் ஷ ஓய்வின்றி செயல்படுகின்றார் என்று அநுர பிரியதர்ஷன யாப்பாவை நோக்கி முன்னாள் முதலமைச்சர் தர்மசிறி தசநாயக்க மீண்டும் கூறிய போது, அனைவரும் புன்னகைத்தனர்.
புதிய கூட்டணியில் அநாவசியமானவர்களை இணைத்துக் கொள்ள வேண்டாம் என்ற கோரிக்கையை முன்வைத்த சுமித் ராஜபக் ஷ,
பொது மக்கள் எம் மீது வைத்துள்ள நம்பிக்கையை தொடர்ந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் நளின் பெர்னாண்டோ, இல்லை. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மக்கள் வெறுக்கின்ற, பிரச்சினைக்கு உரியவர்களை புதிய கூட்டணியில் இணைத்துக் கொள்ளப் போவதில்லை என்று கூறினார்.
எமது நிலைப்பாட்டில் எவ்விதமான மாற்றமும் இல்லை. ஆனால் அரசியல் ரீதியில் எம்மை விமர்சிப்பவர்கள் நேருக்கு நேர் விவாதத்திற்கு வர விரும்புவதில்லை என்று நிமல் லான்சா இதன் போது கூறினார்.
கலந்துரையாடலை வேறு திசைக்கு கொண்டு செல்லும் வகையில், எமது இந்த புதிய கூட்டணி பஷில் ராஜபக் ஷவின் திட்டமென்றும் பலரும் கூறுகின்றனர் என்று ரணவிரு ஹேரத் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் நளின் பெர்னாண்டோ, அவ்வாறெனில் பஷில் ராஜபக் ஷ
ஏன் எமக்கு எதிராகவும் கூட்டணிக்கு எதிராக
வும் செயல்பட வேண்டும். தனது விசுவாசிகளை கொண்டு புதிய கூட்டணிக்கு எதிராக விமர்சனங்கள் செய்ய வேண்டும்? புதிய அரசியல் கூட்டணியுடன் இணைபவர்களை தடுப்பதே இவ்வாறான பிரசாரங்களின் நோக்கம் என்று சற்று கோபத்துடன் கூறினார்.
பகலுணவு வரை தொடர்ந்த இந்த கலந்துரையாடலில் புதிய தொழிற்சங்கங்களின் இணைவு குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து செயல்பட்ட பல தொழிற்சங்கங்கள் புதிய கூட்டணியுடன் இணைவதற்கு விருப்பத்தை தெரிவித்துள்ளதாக நிமல் லான்சா கூறினார்.
ரணிலுடன் நியூயோர்க் சென்றிருந்த எம்.பி.க்கள்
ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நியூயோர்க் சென்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவில் அமைச்சர்களுடன் எம்.பி.க்களும் சென்றுள்ளனர்.
பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே, ரோகித அபேகுணவர்தன மற்றும் பிரேம்நாத் தொலவத்த ஆகியோரும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான வடிவேல் சுரேஷ், முஷாரப் ஆகியோரே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நியூயோர்க் சென்றிருந்த எம்.பி.க்களாவர்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உலகத் தலைவர்கள் பலரை சந்தித்த போது, அந்தச் சந்திப்பில் இந்த எம்.பி.க்களும் பங்கேற்றிருந்தனர். ஜனாதிபதி பங்கேற்ற கூட்டங்களிலும் இவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இந்த விடயமானது உள்நாட்டில் எதிர்க்கட்சியினர் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பொதுஜன பெரமுனவின் எம்.பி.க்களை ஜனாதிபதி நியூயோர்க் அழைத்துச் சென்றமை தொடர்பில் கடும் விசனத்தை பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். இதேபோன்றே ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்காரும் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியிருந்தார்.
நாட்டை வங்குரோத்து நிலைக்கு இட்டுச் சென்ற பொதுஜன பெரமுன எம்.பி.க்க ளை ஜனாதிபதி இவ்வாறு அழைத்துச்சென்றமை மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் செயல் என்று எதிர்க்கட்சித் தலைவர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
பாராளுமன்ற உறுப்பினர்களான வடிவேல்
சுரேஷ் மற்றும் முஷாரப் ஆகியோர் அரசாங்க த்தை ஆதரித்து வருகின்றனர். அதற்கு பரிகார மாகவே நியூயோர்க் விஜயத்தில் அவர்களும் இணைத்துக்கொள்ளப்பட்டிருப்பதாக அரசியல் வட்டாரங்களில் கருத்து தெரிவிக்கப் படுகின்றது.
ஹக்கீம், பிள்ளையான் வாக்குவாதம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில்
கடந்த 21, 22ஆம் திகதிகளில் பாராளுமன்ற த்தில் விசேட விவாதம் நடத்தப்பட்டது. இந்த விவாதத்துக்கு முன்னர் கடந்த செவ்வாய்க் கிழமை பாராளுமன்ற குழு அறையில் பொது
மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்
தலைமையில் பாதுகாப்பு அமைப்பினரின் பங்கேற்புடன் இந்த தாக்குதல் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த விளக்கத்தின்போது முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் , இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) ஆகியோருக்கிடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.
பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் பிரதானியான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரசன்ன அல்விஸ் தாக்குதல் குறித்து விளக்கிக் கூறிய போது, ஸஹ்ரானின் தம்பி ரில்வான் வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற போது ரவூப் ஹக்கீம் அவரைச் சென்று பார்வையிட்டிருந்தார்.
இது குறித்து விசாரணை நடத்தப்பட்டதா என இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் கேள்வியெழுப்பியிருந்தார். இதனையடுத்தே ஹக்கீமுக்கும் சந்திரகாந்தனுக்குமிடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM