ஊழியர் சேமலாப நிதிய அங்கத்தவர்களின் பண மீதிக்கு என்ன நடக்கும்? 

Published By: Vishnu

24 Sep, 2023 | 07:48 PM
image

ரொபட் அன்டனி 

  • ஊழியர் சேமலாப நிதியத்துக்கு குறைவான வட்டி கிடைத்தாலும் அங்கத்தவர்களுக்கு 9 வீத வட்டி கிடைப்பதை  திறைசேரி உறுதிப்படுத்தலாம்  - நந்தலால் வீரசிங்க 
  • ஊழியர் சேமலாப நிதியத்தின் அங்கத்தவர்களுக்கு 9 வீத வட்டி  கிடைக்கின்றதா 10 வீதம் கிடைக்கின்றதா என்பது இங்கு முக்கியமல்ல.  மாறாக அவர்களுக்கு அந்த வட்டி கிடைக்கும்போது நாட்டின் பணவீக்கம் எந்தளவு  இருக்கின்றது என்பதே முக்கியமாகும் - அட்வகாட்டாவின் தனனாத்  
  • கடன் மறுசீரமைப்பு காரணமாக எதிர்காலத்தில் ஊழியர் சேமலாப நிதிய அங்கத்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா என்பதை தற்போது கூற முடியாது - கலாநிதி கணேசமூர்த்தி 
  • ஊழியர் சேமபலாபத்தில்  மட்டும்   கடன் மறுசீரமைப்பு செய்வதால் அதன் முழு சுமையும் தொழிலாளர் வர்க்கத்தை சென்றடைகின்றது - பொருளாதார நிபுணர் பிரபு ராஜ்குலேந்திரன் 

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பில் என்ன நடக்கப் போகின்றது?  ஊழியர் சேமலாப நிதியத்தின் அங்கத்தவர்களுக்கு தமது பணத்தை பெறுவதில்  சிக்கல் ஏற்படுமா? 9  வீத வட்டி உத்தரவாதப்படுத்தப்படுமா?  என்பன குறித்தே  தற்போது பல மட்டங்களிலும் பேசப்படுகின்றது. 2.4 மில்லியன் ஊழியர் சேமலாப நிதிய அங்கத்தவர்கள் இந்த விடயத்தில் அங்கலாய்ப்பில் இருக்கின்றனர். இந்த விடயத்தில் என்ன நடந்தது?   என்ன நடக்கப்போகிறது?  ஊழியர் சேமலாப நிதியத்தின் வட்டிக்கு என்ன நடக்கும்?  எவ்வாறு மறுசீரமைப்பு  செய்யப்படும் என்பது  தொடர்பாக விரிவாக இங்கே பார்க்க வேண்டியிருக்கிறது. 

கடந்த 2022 ஆம் ஆண்டு இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்தது.  இதன் காரணமாக இலங்கை வெளிநாட்டு கடன்களை செலுத்த முடியாத வங்குரோத்து நாடாக அறிவிக்கப்பட்டது.  இதனையடுத்து இலங்கை சர்வதேச நாணய நிதியத்தை  நாடியதுடன்  பல பேச்சுக்களின் பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின்  பிணைவழங்கும் திட்டத்துக்குள் இலங்கை   சென்றிருக்கின்றது. அந்த திட்டம் தொடர வேண்டுமானால்   இலங்கை சர்வதேச ரீதியில் பெற்றுக்கொண்ட கடன்களுக்கும்  உள்நாட்டில் பெற்றுக்கொண்ட கடன்களுக்கும் மறுசீரமைப்பு செய்துகொள்ள வேண்டியுள்ளது. 

கடன் மறுசீரமைப்பு என்றால்… 

கடன் மறுசீரமைப்பு என்பது வங்குரோத்து அடைந்த நாடு தான் கடன் பெற்ற தரப்புக்களுடன் பேச்சு நடத்தி கடன்களுக்கு நிவாரணங்களை பெற்று எவ்வாறு மீள் செலுத்துவது என்ற ஒப்பந்தத்தை செய்வதாகும்.    வெளிநாட்டு கடன் தொடர்பாக மறுசீரமைப்பு பேச்சுக்கள்   நடத்தப்படுகின்றன.  ஆனால் தற்போது உள்நாட்டிலும் இந்த கடன் மறுசீரமைப்பு  செய்யப்பட வேண்டும்.   

திறைசேரியின் கடன்கள் 

அதன்படி மத்திய வங்கியானது உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டத்தை கடந்த ஜூலை மாதம் வெளியிட்டது.   உள்நாட்டில் அரச மற்றும் தனியார் வங்கி கட்டமைப்பு மற்றும் ஊழியர் சேமலாப நிதியம்   உள்ளிட்ட நிறுவனங்களிடம்  திறைசேரி கடன்களை பெற்றிருக்கின்றது. அவை கிட்டத்தட்ட 16 ட்ரில்லியன் ரூபா என தெரிவிக்கப்படுகின்றது.   எனினும் மத்திய வங்கியானது உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் வங்கி கட்டமைப்புடன் மறுசீரமைப்பு செய்யவில்லை. காரணம் வங்கி கட்டமைப்பு ஏற்கனவே 30 வீத வரியை அரசாங்கத்துக்கு செலுத்துகிறது. மேலும்  வங்கி  கட்டமைப்பிடம்  திறைசேரி பெற்ற கடன்களுக்கு  மறுசீரமைப்பு செய்யும் பட்சத்தில் வங்கி கட்டமைப்பு செயலிழக்கும் அபாயம் இருக்கின்றது.    அதன்காரணமாக வங்கி கட்டமைப்பு வழங்கியுள்ள கடன்களுக்கு மறுசீரமைப்பு செய்யவில்லை என்று மத்திய வங்கி அறிவித்துள்ளது.  

ஊழியர் சேமலாப நிதியத்துடன் மட்டுமே கடன் மறுசீரமைப்பு

மாறாக ஊழியர்  சேமலாப நிதியத்திடம் திறைசேரி பெற்ற கடன்களுக்கு மட்டுமே கடன் மறுசீரமைப்பு செய்யப்படுகின்றது.   கடந்த ஜூலை மாதம் மத்திய வங்கி எவ்வாறு ஊழியர் சேமலாப நிதியத்திடம்  பெற்ற கடன்களுக்கு மறுசீரமைப்பு செய்யப்படும் என்ற திட்டத்தை வெளியிட்டது. 

மத்திய வங்கி வழங்கிய இரண்டு தெரிவுகள் 

அதன்படி ஊழியர் சேமலாப நிதியத்திடம்  திறைசேரி பெற்றிருக்கின்ற கடன்களில் 2023 ஆம் ஆண்டு முதிர்ச்சி அடைகின்ற பிணை முறிகளில் 50 வீதமானவற்றையும் 2032 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் முதிர்ச்சியடைகின்ற பிணைமுறிகள் அனைத்தையும் மீளப்பெற்றுக்கொண்டு அவற்றுக்கு பதிலாக புதிய பிணைமுறிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.  அதாவது சேமலாப நிதியம் திறைசேரிக்கு வழங்கிய பழைய கடன்கள் எல்லாவற்றையும் மீளப்பெற்று  புதிய கடன்களை திறைசேரிக்கு வழங்கும்.   அந்தகடன்களுக்கு 2025 ஆம் ஆண்டுவரை  12 வீத வட்டி வழங்கப்படும்.  அதன் பின்னர் 2038 ஆம் ஆண்டுவரை 9 வட்டி வழங்கப்படும்.  இதுதான் மத்திய வங்கியின் திட்டமாக இருக்கின்றது. மேலும் இரண்டாவது தெரிவையும் மத்திய வங்கி வழங்கியது.  அதாவது   ஊழியர் சேமபலாப நிதியம் தான் முதலீடு செய்கின்ற பணத்தில் கிடைக்கின்ற வட்டி வருமானத்தில் 14 வீதத்தை அரசாங்கத்துக்கு வரியாக செலுத்துகின்றது.  அந்த 14 வீதத்தை 30 வீதமாக அதிகரித்து செலுத்தலாம் என்ற மற்றொரு தெரிவையும் மத்திய வங்கி வழங்கியது.    இந்த இரண்டு தெரிவுகளில் ஒன்றை சேமலாப நிதியம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.  இதனூடாக அங்கத்தவர்களுக்கு 9 வீத வட்டி கிடைக்கும் என்று மத்திய வங்கி அறிவித்தது.  

என்ன சர்ச்சை ?

இங்குதான் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.  இந்த இரண்டு தெரிவுகளில் ஊழியர் சேமலாப நிதியம் எதனை தெரிவு செய்தாலும் அதில் இதன் அங்கத்தவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதே முன்வைக்கப்படுகின்றது. இறுதியில் தற்போது ஊழியர் சேமலாப நிதியம்  மத்திய வங்கி முன்வைத்திருக்கின்ற முதலாவது தெரிவுக்கு உடன்பட்டிருக்கின்றது.  அதாவது ஏற்கனவே திறைசேரிக்கு  சேமலாப நிதியம் வழங்கிய கடன்களை   மீளபெற்றுவிட்டு புதிய கடன்களை வழங்கும். அதாவது சேமலாப நிதியம் திறைசேரிக்கு வழங்கிய கடன்களில் 2023 ஆம் ஆண்டில் முதிர்ச்சியடையும் பிணைமுறி கடன்களில் 50 வீதமும்  2032 ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் முதிர்ச்சியடையும் சகல பிணைமுறி கடன்களும் மீளப்பெறப்பட்டு புதிய பிணைமுறி கடன்கள் விநியோகிக்கப்படும்.      அவற்றுக்கு 2025 ஆம் ஆண்டுவரை  12 வீத வட்டியும்     2038 ஆம் ஆண்டு வரை 9 வீத வட்டியும்  கிடைக்கும். 

என்ன உத்தரவாதம்? 

இதனூடாக ஊழியர் சேமலாப நிதிய அங்கத்தவர்களுக்கு 9 வீத வட்டி வருடாந்தம்  கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  ஆனால்  அங்கத்தவர்களுக்கு தொடர்ந்து 9 வீத வட்டி கிடைக்குமா என்பதை உத்தரவாதப்படுத்தாமல் இருக்கின்றது என்பதே இங்கு சர்ச்சையாகும்.  இதற்கு எந்தவிதமான உத்தரவாதமும் இல்லை. இதற்கு சட்டரீதியான உத்தரவாதம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.  ஆனால் இன்னும் அது நடைபெறவில்லை.     

கடன் மறுசீரமைப்பு செய்வதில் பிரச்சனையில்லை. ஆனால் அது எவ்வாறு முன்னெடுக்கப்படும் என்பதே  இங்கு முக்கியமானது.   அதுமட்டுமின்றி ஊழியர் சேமலாப நிதியம் திறைசேரிக்கு மட்டுமின்றி பங்குச்சந்தையில் முதலீடு செய்யும். அதில் கிடைக்கும் இலாபம் கூடலாம். குறையலாம்.     

இதுதொடர்பில் பாராளுமன்றத்திலும்  ஹர்ஷ டி, சில்வா தலைமையிலான  நிதி தொடர்பான குழு  மத்திய வங்கியின் பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது.  அதிலும் 9  வீத வட்டியை ஊழியர் சேமலாப நிதிய அங்கத்தவர்களுக்கு வழங்க முடியுமா என்பது உத்தரவாதப்படுத்த முடியாத ஒரு விடயம் என்றே வெளிப்படுத்தப்பட்டது.  ஆனால் அரச தரப்பில் இந்த உத்தரவாதம் வாய்மொழி ஊடாக வழங்கப்படுகின்றது.  

எவ்வளவு கடன்கள்? 

2.4 மில்லியன் தொழிலாளர் வர்க்கத்தின் கிட்டத்தட்ட மூன்று ட்ரில்லியன் ரூபா  பணம் ஊழியர் சேமலாப  நிதியத்தில் உள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.    ஆனால்  திறைசேரியானது ஊழியர்  சேமலாப நிதியத்திடம் எவ்வளவு கடன்களை பெற்றிருக்கின்றது?  அதற்கான வட்டி விகிதம் என்ன?    அவற்றை மீண்டும்  மறுசீரமைப்பதால் எந்தளவு நட்டம் ஏற்படுகிறது என்பது தொடர்பான விபரங்கள் இதுவரை முழுமையாக வெளியிடப்படவில்லை. 

பதில் தெரியாத கேள்வி 

எனவே சேமலாப நிதியத்தின் அங்கத்தவர்களுக்கு 9 வீத வட்டி தொடர்ந்து கிடைக்குமா என்பது பதில் தெரியாத ஒரு கேள்வியாகவே தொடர்ந்து நீடிக்கின்றது. 

இது தொடர்பில் முக்கியமான விடயங்களை குறிப்பிட்டுள்ள  தொழில்  அமைச்சர் மனுஷ நாணயக்கார ஊழியர் சேமலாப நிதிய அங்கத்தவர்களுக்கான 9 வீத வட்டி உறுப்பினர்களுக்கு தொடர்ந்தும் வழங்கப்படும். ஒருவருக்குச் சொந்தமான பணத்தில்  9  வீத வருடாந்த பலன்  தொடர்ச்சியாக வழங்கப்படும்.  2.4 மில்லியன் தொழிலாளர்களில், ஒருவருக்கு இன்று வங்கியில் 10 

இலட்சம் ரூபா வைப்பிலிருந்தால், அந்தத் தொகைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. அவர் தமது பணத்தைப் பெறும்போது, அவருக்கு அதற்காக ஆண்டு தோறும்  09   வீத வட்டி கிடைக்கும் என்கிறார். 

அதன்படி 2026 ஆம் ஆண்டிலிருந்து ஊழியர் சேமலாப நிதியத்தின் அங்கத்தவர்களுக்கு 9 வீத வட்டி கிடக்குமா என்பது உறுதிப்படுத்தப்பட முடியாது.  ஒருவேளை  அதனைவிட அதிகமும் கிடைக்கலாம். குறைவாகவும் கிடைக்கலாம். இந்த யதார்த்தத்தை சகலரும் புரிந்துகொள்ளவேண்டியுள்ளது. காரணம் சந்தையில் நிலவுகின்ற வட்டி வீதங்கள் மற்றும் பணவீக்கத்தின் அடிப்படையிலேயே  இவை தீர்மானிக்கப்படும். 

ஓய்வின் பின்னரான எதிர்பார்ப்பு 

ஊழியர் சேமலாப நிதியம் என்பது தனியார் துறை ஊழியர்களை பொறுத்தவரையில் மிக முக்கியமானது.    தனியார்துறை,   அரச கூட்டுத்தாபன  ஊழியர்கள் 55 மற்றும் 60 வயதுவரை உழைக்கின்ற பணத்தில் ஒரு தொகை ஊழியர் சேமலாப நிதியத்தில் சேமிக்கப்பட்டு அதற்கான வட்டியுடன்  ஓய்வுபெற்ற பின்னர் கிடைக்கும்.  அதுவே  அவர்களின் ஓய்வு காலத்தை வாழ்வதற்கான ஒரு முதலீட்டு திட்டமாகவும் உள்ளது.   பிள்ளைகளுக்கான திருமணங்கள்,    சொந்த வீட்டை கட்டிக்கொள்தல்,  தொழில் முயற்சியை மேற்கொள்தல்  போன்றவற்றுக்கு இந்த பணம் பயன்படுத்தப்படுகிறது.  

எனவே எதிர்காலத்தில் வட்டி வீதங்கள் குறைந்து ஊழியர் சேமலாப நிதியத்துக்கு குறைவான வட்டி கிடைத்தாலும் அங்கத்தவர்களுக்கு 9 வீத வட்டி கிடைப்பதை  திறைசேரி உறுதிப்படுத்தவேண்டியுள்ளது. இதனையே  மத்திய வங்கியின் ஆளுநரும் வலியுறுத்துகிறார். 2025 ஆம் ஆண்டுக்கு பின்னர் 9 வீத வட்டியை  வழங்க முடியுமா என்பதனை தன்னால் உறுதிப்படுத்த முடியாது என்பதே அவரது கருத்தாக அமைந்துள்ளது. 

அட்வகாட்டா என்ன கூறுகிறது? 

இந்த விவகாரம் குறித்து    அட்வகாட்டா பொருளாதார ஆய்வு நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் தனனாத் பெர்னாண்டோ இவ்வாறு கூறுகிறார். 

‘’  ஊழியர் சேமலாப நிதியத்தின் அங்கத்தவர்களுக்கு 9 வீத வட்டி  கிடைக்கின்றதா 10 வீதம் கிடைக்கின்றதா என்பது இங்கு முக்கியமல்ல.  மாறாக அவர்களுக்கு அந்த வட்டி கிடைக்கும்போது நாட்டின் பணவீக்கம் எந்தளவு  இருக்கின்றது என்பதே முக்கியமாகும்.  பணவீக்கம் ஐந்து வீதமாக இருக்கும்போது 9 வீத வட்டி கிடைத்தால் அது மக்களுக்கு பயனுடையதாக இருக்கும்.  ஆனால் பணவீக்கம் 15 வீதமாக இருந்து   அங்கத்தவர்களுக்கு 12 வீத வட்டி கிடைத்தாலும் அதில் அர்த்தமில்லை.   எனவே வட்டி வீதம் எந்தளவு என்பதைவிட பணவீக்கம் எப்படி இருக்கின்றது என்பதை இங்கு முக்கியமாகும்’’ இவ்வாறு கூறுகிறார் தனனாத்.   

தொழிலாளர் வர்க்கம் பாதிக்கப்படக்கூடாது எனவே கடன்மறுசீரமைப்பு செய்யப்படும்போது அதனால்  தொழிலாளர் வர்க்கத்தினர் எந்தவகையிலும் பாதிக்கப்படக்கூடாது.  அதேநேரம் கடன் மறுசீரமைப்பு என்பதும் இலங்கையை பொறுத்தவரையில் மிக முக்கியமானதாக இருக்கிறது.  கடந்த வருடம்   டொலர் நெருக்கடி காரணமாக இலங்கை எந்தளவுக்கு  நெருக்கடிகளை சந்தித்தது என்பது  சகலருக்கும் தெரியும்.   

வெரிட்டே ரீசேர்ச்சின் மதிப்பீடு

இந்த இது தொடர்பாக வெரிட்டே ரிசர்ச் அமைப்பின் பொருளாதார நிபுணர், தலைமைப் பொருளியலாளர்  பிரபு ராஜகுலேந்திரன் இவ்வாறு கூறுகிறார். 

‘’ ஊழியர் சேமலாப நிதியத்தில் செய்யப்படுகின்ற கடன் மறுசீரமைப்பின்    ஊடாக அங்கத்தவர்களுக்கு ஒரு பாதிப்பு ஏற்படுகின்றது என்பதை யாரும் மறுக்க முடியாது.      9 வீத வட்டி  தொடர்ந்து   கிடைக்குமா என்பதை இங்கு எந்தவகையிலும் உத்தரவாதப்படுத்த முடியாத  நிலைமை காணப்படுகிறது.    ஊழியர் சேமபலாபத்தில்  மட்டும்   கடன் மறுசீரமைப்பு செய்வதால் அதன் முழு சுமையும் தொழிலாளர் வர்க்கத்தை சென்றடைகின்றது.  மாறாக வங்கி கட்டமைப்பிலும் மறுசீரமைப்பு செய்திருந்தால் சுமை சகலரிடையேயும் பகிரப்பட்டிருக்கும். சர்வதேச நாணய நிதியத்தின் தகவல்களின்படி உலகத்தில் இதுவரை 14 நாடுகளில் இவ்வாறு உள்நாட்டு, வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செய்யப்பட்டிருக்கின்றது.   அதில் அனைத்து தரப்பினரும் இந் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பில் வங்கி கட்டமைப்பு உள்ளிட்ட தொழிலாளர்  நிதியில் மறுசீரமைப்பு செய்துள்ளனர்.   ஆனால் இலங்கை மட்டுமே வங்கி கட்டமைப்பை தவிர்த்துவிட்டு மறுசீரமைப்பு செய்கின்றது ’’     என்று அவர் குறிப்பிடுகிறார்

மறுசீரமைப்பை கோரும் சர்வதேச நாணய நிதியம்   

நெருக்கடியில் இருந்து இலங்கை மீண்டு வருவதற்கு மறுசீரமைப்புக்கள்  மிக முக்கியமானவை.  அதில் கடன் மறுசீரமைப்பு  முக்கியமானது.  ஆனால் இவை எந்த காரணம் கொண்டும் தொழிலாளர் வர்க்கத்தை பாதிக்க கூடாது.

இது தொடர்பில் குறிப்பிட்டுள்ள சர்வதேச நாணய நிதியம் ‘’எம்மை பொறுத்தவரையில் இலங்கையில் கடன் மறுசீரமைப்பு இடம்பெறவேண்டும்.   அதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இலங்கையேயை தீர்மானிக்க வேண்டும்.  அதில் நாம் தலையிடமாட்டோம்.  செய்யும் முறை  தொடர்பில் நாம் அக்கறை கொள்ளமாட்டோம்’’  என்று வலியுறுத்துகிறது.  

ஊழியர் சேமலாப நிதியம் மத்திய வங்கியின் பிணைமுறி பரிமாற்ற  திட்டத்தை ஏற்றுக்கொண்டிருக்கின்றது.  அதனூடாக  எதிர்காலத்தில் ஊழியர் சேமலாப நிதிய அங்கத்தவர்களுக்கு  தொடர்ந்து ஒன்பது வீத வட்டி வழங்கப்படுமா என்ற உத்தரவாதமே அவசியமாகின்றது.  இதனை அரசாங்கம் உறுதிப்படுத்தவேண்டும்.  மேலும் பணவீக்கம் ஐந்து அல்லது 6 வீதங்களில் தொடரவேண்டும்.    முக்கியமாக சகல தரப்பு மத்தியிலும் இந்த சுமை பகிரப்பட்டிருந்தால் அது நியாயமாக இருந்திருக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.  

‘’ பாதிப்பு குறித்து  கூற முடியாது “” 

‘’ கடன் மறுசீரமைப்பு காரணமாக எதிர்காலத்தில் ஊழியர் சேமலாப நிதிய அங்கத்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா என்பதை தற்போது கூற முடியாது.  ஆனால் ஒன்பது வீத வட்டிக்கு உத்தரவாதம் இல்லை.  எனினும் என்ன நடக்கும் என்பதை கூறமுடியாது.  ஒருவேளை வட்டி வீதம் கூடலாம்.   குறையலாம்.  எதிர்கால பணவீக்கம் மற்றும் வட்டி வீத நிலைமைகளே அதனை தீர்மானிக்கும்’’   இவ்வாறு  பொருளியல்துறை நிபுணர் கலாநிதி கணேசமூர்த்தி கூறுகிறார். 

எப்படியிருப்பினும் தற்போதைய நிலையில் பொருளாதார ரீதியான மறுசீரமைப்புக்களும்  தவிர்க்க முடியாதவையாகும்.  அதேநேரம்  தொழிலாளர் வர்க்கமும் பாதிக்கப்படக்கூடாது. இதனை சமாந்தரமான முறையில் சகலரும் ஏற்றுக்கொள்ளும் வகையில்  முன்னெடுக்க வேண்டும்    என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிதைவுகளைத் தோண்டி பிள்ளைகளைத் தேடும் அவலம்...

2023-12-06 14:24:15
news-image

தாங்க முடியாத பெருஞ்சுமை

2023-12-05 20:17:16
news-image

தேசிய நல்லிணக்கத்துக்கு பாதகமான முறையில் அதிகரிக்கும்...

2023-12-04 22:09:45
news-image

பௌத்தத்தின் பெயரால் தமிழர் தாயகத்தில் ஆக்கிரமிக்கப்படும்...

2023-12-04 13:35:03
news-image

FATF சாம்பல் பட்டியலில் இடம்பெறுவதை தவிர்ப்பதற்கு...

2023-12-04 11:34:43
news-image

தேயிலைத் தோட்டங்களில் இனி கள மேற்பார்வையாளர்களாக ...

2023-12-04 11:52:54
news-image

தமிழ்த் தரப்பின் டெல்லி விஜ­யத்தின் உள்­நோக்கம்

2023-12-03 18:45:09
news-image

திரு­டர்­களின் சொர்க்­கமா?

2023-12-03 18:40:10
news-image

இந்­தி­யா­வுக்­கான  சவால்

2023-12-03 18:38:49
news-image

பேச்சு சுதந்­திரம் : அமெ­ரிக்­காவில் பலஸ்­தீன...

2023-12-03 18:37:03
news-image

பொரு­ளா­தார மைய யுகம்

2023-12-03 18:34:40
news-image

அரசியல் தீர்வை எதிர்பார்க்கலாமா?

2023-12-03 18:31:54