போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை கோரப்படக்கூடாது என்பதற்காகவே உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான சர்வதேச விசாரணையை எதிர்க்கின்றனர் - தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் 

24 Sep, 2023 | 07:52 PM
image

(நா.தனுஜா)

தமிழ் மக்களுக்கு எதிரான போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை கோரப்படக்கூடாது என்பதற்காகவே உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான சர்வதேச விசாரணையைப் பலரும் எதிர்க்கின்றனர். 

ஆனால் இவ்விடயத்தில் சர்வதேச சமூகம் தலையிட்டு, போர்க்குற்றங்கள் மற்றும் உயிர்த்த ஞாயிறுதினக் குண்டுத்தாக்குதல்கள் ஆகிய இரு சம்பவங்கள் தொடர்பாகவும் சர்வதேச விசாரணையை மேற்கொள்வதற்குத் தாமாகவே முன்வரவேண்டும் என்று தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.

2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுதினக் குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் பிரிட்டனைத் தளமாகக்கொண்டியங்கிவரும் சனல்-4 செய்திச்சேவையினால் அண்மையில் வெளியிடப்பட்ட ஆவணப்படத்தை அடுத்து, இக்குண்டுத்தாக்குல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையை மேற்கொள்ளுமாறு பெரும்பான்மையின அரசியல் தலைவர்கள் உள்ளடங்கலாகப் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்திவருகின்றனர்.

இருப்பினும் இதுபற்றி கடந்த வெள்ளிக்கிழமை (22) பாராளுமன்றத்தில் உரையாற்றிய பதில் வெளிவிவகார அமைச்சர் தாரக பாலசூரிய, 'சர்வதேச விசாரணையைக் கோருவதற்கு முன்னர் சனல்-4 போன்ற ஊடகங்களுக்குப் பின்னால் இருப்பது யார் என்று பார்க்கவேண்டும். 

இதுபோன்ற செய்திச்சேவைகளுக்கு தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க அனுதாபிகளே நிதியளிக்கின்றனர். எனவே தற்போது உயிர்த்த ஞாயிறுதினக் குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்படும் பட்சத்தில், சனல்-4இனால் ஏற்கனவே வெளியிடப்பட்ட ஆவணப்படத்திலுள்ள போர்க்குற்றங்கள் தொடர்பிலும் சர்வதேச விசாரணையை மேற்கொள்ளுமாறு வலியுறுத்துவதே அவர்களது தேவைப்பாடாக இருக்கின்றது. 

ஆகவே இவ்விடயம் தொடர்பில் சர்வதேச விசாரணையைக் கோருவதை விடுத்து, நம்பத்தகுந்த உள்ளகப் பொறிமுறையின் ஊடாக விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும்' என்று தெரிவித்தார்.

இதுபற்றிக் கருத்து வெளியிட்ட ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் பேச்சாளருமான சுரேஷ் பிரேமசந்திரன், 'உயிர்த்த ஞாயிறுதினக் குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான சனல்-4இன் காணொளி வெளிவரும் வரை நாட்டிலுள்ள சிங்கள அரசியல் கட்சிகள் சர்வதேச விசாரணைக்குத் தொடர்ந்தும் எதிர்ப்பையே வெளிப்படுத்தி வந்திருக்கின்றன. இருப்பினும், அக்காணொளி வெளியானதன் பின்னரேயே சர்வதேச விசாரணை தேவை என்ற கோஷம் சிங்கள அரசியல்வாதிகள் மத்தியிலிருந்து எழுந்தது. 

ஆனால் தற்போது சரத் வீரசேகர, உதய கம்மன்பில, மைத்திரிபால சிறிசேன போன்றோர் அதற்கு எதிர்ப்பை வெளிக்காட்டியுள்ளனர். அதற்குக் காரணம் தமிழ்மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் முன்னெடுக்கப்படக்கூடாது என்பதேயாகும். 

போர்க்குற்றங்கள் தொடர்பில் ஏற்கனவே பல்வேறு ஆதாரங்கள் காணப்படுவதுடன், ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகமும் இதுபற்றிய ஆதாரங்களைத் திரட்டிவருகின்றது. எனவே அதுகுறித்து சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஏற்படக்கூடிய நிர்பந்தத்திலிருந்து விடுபடுவதற்காகவே இவ்வாறான எதிர்க்கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றன. பதில் அமைச்சர் தாரக பாலசூரியவின் வெளிப்படையான கருத்து உண்மைகளை மூடிமறைப்பதையே பிரதான நோக்கமாகக் கொண்டிருக்கின்றது' என்று சுட்டிக்காட்டினார்.

மேலும் என்ன நேர்ந்தாலும் ஜனாதிபதி சர்வதேச விசாரணையொன்றுக்குச் செல்லமாட்டார் என்றும், உயிர்த்த ஞாயிறுதினக் குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை வேண்டுமென வலியுறுத்தும் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் அது நன்றாகத் தெரியும் என்றும் குறிப்பிட்ட சுரேஷ் பிரேமசந்திரன், எனவே வெளிநாட்டவர்கள் பலரையும் காவு வாங்கிய உயிர்த்த ஞாயிறுதினக் குண்டுத்தாக்குதல்கள் மற்றும் இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச சமூகம் தாமாகவே முன்வந்து விசாரணைகளை மேற்கொள்ளவேண்டியது அவசியம் என வலியுறுத்தினார்.

அதேவேளை தனிப்பட்ட ரீதியில் தானறிந்தவரையில் நிதானமான மனிதராக நடந்துகொள்ளும் தாரக பாலசூரிய இத்தகைய கருத்தை வெளியிட்டிருப்பதானது, அரச தரப்பில் இடம்பெற்ற தவறுகளை மூடிமறைப்பதற்கு அவரைப்போன்ற நபர்கள்கூட எதைவேண்டுமானாலும் பேசுவதற்குத் துணிந்துவிட்டதைக் காண்பிப்பதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

'இவ்விவகாரத்தில் அரசாங்கம் தவறிழைத்திருப்பதனால்தான் உள்ளக விசாரணையை மேற்கொள்வதாகக்கூறி இவ்விடயத்தை மட்டுப்படுத்த முயல்கின்றது. இதனை சர்வதேச சமூகம் புரிந்துகொள்ளவேண்டும். அதேபோன்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் இணக்கப்பாடின்றி இலங்கை தொடர்பில் எந்தவொரு நடவடிக்கையையும் முன்னெடுக்கமுடியாத சூழ்நிலையில், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குக் கொண்டுசெல்வதன் ஊடாக மாத்திரமே போர்க்குற்றங்கள் மற்றும் உயிர்த்த ஞாயிறுதினக் குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தமுடியும்' என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதேபோன்று பதில் அமைச்சர் தாரக பாலசூரியவின் பாராளுமன்ற உரை தொடர்பில் கருத்து வெளியிட்ட புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், 'இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் சனல்-4 செய்திச்சேவை ஆவணப்படமொன்றை வெளியிட்டபோது, உரிய தரப்பினர் அதன் உண்மைத்தன்மை குறித்து ஆராயாமல் அதனை 'பொய்' என்று கூறி நிராகரித்துவிட்டார்கள். 

தற்போதும் தமிழ்மக்கள் சர்வதேச விசாரணையைக் கோரக்கூடும் என்ற சந்தேகத்தில் உயிர்த்த ஞாயிறுதினக் குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான சர்வதேச விசாரணை நிராகரிக்கப்படுகின்றது. 

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் குறித்து சனல்-4இனால் வெளியிடப்பட்டுள்ள காணொளி தனியொரு நபரின் வாக்குமூலத்தை மையப்படுத்தியதாக அமைந்திருக்கின்றது. ஆனால் இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் பெரும் எண்ணிக்கையான கண்கண்ட சாட்சிகளும், ஆதாரங்களும் உள்ளன. 

ஆகவே இவ்விரு சம்பவங்களினதும் உண்மைத்தன்மை குறித்து எவ்வித பக்கச்சார்புமற்ற சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்படவேண்டியது அவசியம். இவ்விடயத்தில் குற்றம் இழைக்காதவர்கள் சர்வதேச விசாரணையைக் கண்டு அஞ்சத் தேவையில்லை' என்று தெரிவித்தார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மலையக ரயில் சேவைகள் தாமதம்

2023-12-06 16:57:59
news-image

வாள் உற்பத்தியாளர்களை  கைது செய்து சட்ட...

2023-12-06 16:46:21
news-image

சர்வதேச எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு மன்னாரில்...

2023-12-06 16:24:13
news-image

மூவரின் உயிரிழப்புக் காரணமான தனியார் பஸ்...

2023-12-06 16:17:51
news-image

தமிழர்களிற்கு சுயநிர்ணய உரிமை அவசியம் -...

2023-12-06 16:15:49
news-image

பரிசுப் பொருட்கள் மற்றும் கடன் வழங்குவதாக...

2023-12-06 16:42:40
news-image

ஹரக்கட்டாவின் மனுவை தள்ளுபடி செய்த மேன்முறையீட்டு...

2023-12-06 15:44:54
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2023-12-06 15:35:11
news-image

எட்கா குறித்த பேச்சுவார்த்தைகளை மார்ச்சில் நிறைவு...

2023-12-06 16:49:08
news-image

கடுகண்ணாவ வைத்தியசாலையில் சுவரொன்று வீழ்ந்து பணியாளர்...

2023-12-06 15:18:09
news-image

கொழும்பு பாதுகாப்பு பேரவை உடன்படிக்கையில் கையெழுத்திட...

2023-12-06 15:09:10
news-image

நாணய நிதியத்திடமிருந்து இரண்டாம் கட்ட கடன்...

2023-12-06 16:48:26