லத்தீப் பாரூக்
ஒஸ்லோ உடன்படிக்கை ஒப்பமிடப்பட்டு 30 ஆண்டுகள் கழிந்துள்ள நிலையில் இஸ்ரேல் அதன் அட்டகாசங்களை இன்னமும் தொடர்கின்றது. சட்டவிரோத குடியேற்றங்கள், இணைப்புக்கள், அட்டூழியங்களும் சட்ட சீர்குலைவுகளும் என இவை தொடருகின்றன. இதேவேளை, பலஸ்தீன மக்கள் சுதந்திரத்துக்கான தமது போராட்டம் உட்பட எல்லாவற்றையும் இழந்து நிற்கின்றனர்.
1993 செப்டம்பரில் பி.எல்.ஓ. என அழைக்கப்பட்ட பலஸ்தீன விடுதலை அமைப்பும் இஸ்ரேலும் ஒஸ்லோ உடன்படிக்கையில் ஒப்பமிட்டன. ஒஸ்லோவை தலைநகராகக் கொண்டுள்ள நோர்வே, இஸ்ரேலின் மிக நெருங்கிய நட்பு நாடாகும். பலஸ்தீன மக்களை பிரதிநிதித்துவம் செய்து பி.எல்.ஓ.வும் இஸ்ரேலும் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.
இது இடம்பெற்று 30 ஆண்டுகள் கழிந்துள்ள நிலையில் டெய்லி ஜெரூஸலம் போஸ்ட் என்ற இஸ்ரேலிய தினசரி வெளியிட்டுள்ள கருத்தில் 'ஒஸ்லோ உடன்படிக்கை மரணித்து விட்டது. இனி பலஸ்தீன நாடு என்ற பேச்சுக்கே இடமில்லை' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரத்தக்கறையில்; ஊறிப்போன சியோனிஸ யூத வரலாற்றில், கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக அவர்கள் குறிப்பாக பலஸ்தீன மக்கள் மீதும் பொதுவாக அரபுலகம் மீதும் புரிந்துள்ள குற்றங்களோடு ஒப்பிடுகையில் இந்தக் கருத்தானது எதிர்ப்பார்க்கப்படாத ஒரு விடயமும் அல்ல.
1980களின் பின்பகுதியில் பலஸ்தீன மக்களின் இன்திபாதா போராட்டம் (இஸ்ரேலுக்கு எதிரான மக்கள் எழுச்சி) வெடித்ததை தொடர்ந்து தான் இந்த சமாதான நாடகமும் அரங்கேறத் தொடங்கியது. 1988இல் அன்றைய பலஸ்தீன விடுதலை அமைப்பின் தலைவர் யஸிர் அரபாத் ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்ட 242 மற்றும் 338 தீர்மானங்களை ஏற்றுக் கொள்வதாக அறிவித்தார். 'இஸ்ரேலின் எல்லைகளை அங்கீகரித்து அதனைப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமையை இஸ்ரேலுக்கு வழங்குவதே' இந்தத் தீர்மானங்களின் சாராம்சமாகும்.
ஆனால், அந்தக் காலப்பகுதியானது அமைதியான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வந்த பலஸ்தீன மக்களை இஸ்ரேல் மிகக் கொடூரமாக நசுக்கி வந்ததால் உலகம் முழுவதும் பெரும் கண்டனத்துக்கு ஆளாகியிருந்த காலமாகும். பலஸ்தீனர்களுடன் சமாதான பேச்சுக்களைத் தொடங்குமாறு இஸ்ரேலுக்கு சர்வதேச ரீதியாக பெரும் அழுத்தங்கள் விடுக்கப்பட்டதால் இஸ்ரேல், பலஸ்தீன விடுதலை அமைப்புடன் 1993ல் நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் இரகசிய சமாதான பேச்சுக்களைத் தொடங்கியது.
அன்றைய ஈராக்கின் அதிபர் சதாம் ஹுஸைன் குவைத் மீது ஆக்கிரமிப்பு நடத்திய போது பிஎல்ஓ தலைவர் யஸிர் அரபாத், சதாம் ஹுஸைனின் நிலைப்பாட்டை ஆதரித்தார். இதனால் குவைத்தில் அப்போது பணியாற்றி வந்த சுமார் ஐந்து லட்சம் பலஸ்தீன மக்கள் குவைத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
அதன் பிறகு இந்த விடயத்தில் அமெரிக்கா தலையிட்டதால் சதாம் ஹுஸைன் தோல்வியைத் தழுவினார். இதனைத் தொடர்ந்து பலஸ்தீன விடுதலை அமைப்பும் பலவீனம் அடைந்தது. அதனால் அரபாத்தின் நிலையும் பலவீனம் அடைந்தது. இவ்வாறு செல்வாக்கு இழந்த ஒரு நிலையிலேயே அரபாத் இஸ்ரேலுடன் இரகசிய சமாதான பேச்சுக்களில் கலந்து கொண்டார்.
இதனால் இந்த உடன்படிக்கையின் போது மிகவும் பலம் பொருந்திய சக்தியாக இருந்த இஸ்ரேலின் கரங்களே ஓங்கி இருந்தன. அதனால் இந்த உடன்படிக்கை மூலம் ஒட்டு மொத்த பலஸ்தீனத்துக்கும் விலை நிர்ணயிக்கப்பட்டது என்றே குறிப்பிட வேண்டும்.
நோர்வேயின் வரலாற்றியலாளர் ஹைட் ஹென்றிக்ஸன் வேஜ் இது பற்றி தெரிவிக்கையில் பாதுகாப்பு, அகதிகள் திரும்பிச் செல்லல், ஜெரூஸலம், எல்லைகள் என எல்லாமே பிரதான கலந்துரையாடலில் இருந்து அகற்றப்பட்டிருந்தன என்று குறிப்பிட்டுள்ளார்.
பலஸ்தீன புத்திஜீவி முஸ்தபா பர்கொதி இதுபற்றிக் கூறுகையில் 'இஸ்ரேலிடம் அன்றிருந்த மிகப் பெரிய திட்டம் ஒஸ்லோவாகத் தான் இருந்தது. அது இழப்புக்கள் பற்றிய எந்தக் கரிசனையும் இன்றி தொடர்ந்து ஆக்கிரமிப்புக்கு வழியமைத்தது. ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரைப் பகுதியில் ஒட்டு மொத்தமாக இஸ்ரேலின் கரங்களை அது ஓங்க வைத்தது. இதனால் பலஸ்தீனர்கள் தொடர்ந்து குடிநீர் தட்டுப்பாட்டையும் எதிர்கொள்ள வேண்டி உள்ளது' என்று தெரிவித்துள்ளார்.
அன்றைய இஸ்ரேல் பிரதமர் இட்ஷாக் ராபின், பி.எல்.ஓ. தலைவர் யஸிர் அரபாத் ஆகிய இருவரும் வொஷிங்டனின் வெள்ளை மாளிகையில் அதிதிகளின் ஆரவாரக் கை தட்டலோடு கை குலுக்கி கொண்டனர்.
இந்த உடன்படிக்கை பிரகாரம், காஸா பள்ளத்தாக்கில் இருந்தும் மேற்குக் கரை பிரதேசத்தில் இருந்தும் 1994 ஏப்ரலில் இஸ்ரேல் தனது படைகளை வாபஸ் வாங்க இணங்கியது. பலஸ்தீனர்களுக்கு ஏதோ ஒரு வகையிலான சுயாட்சி அரசை நிறுவிக் கொள்ளும் வகையில் இந்தப் பகுதிகளில் தேர்தல் நடத்தவும் இணக்கம் ஏற்பட்டது.
எவ்வாறாயினும் இஸ்ரேல் இன்று வரை இந்த உடன்படிக்கையை 1967ல் தான் ஆக்கிரமித்த பகுதிகளில் தனது சட்டவிரோத விரிவாக்கத்தையும், குடியேற்றத் திட்டங்களை அமுல் செய்யவுமே பயன்படுத்தி வருகின்றது. இஸ்ரேலுக்கு தேவையானது எல்லாம் இதன் மூலம் கிடைத்தது. மறுபுறம் பலஸ்தீனம் இருந்ததை எல்லாம் இழந்தது.
இந்த உடன்படிக்கை குறைந்த பட்சம் ஐந்து வருட இடைக்காலப் பகுதிக்கு அமுலில் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. இதற்கிடையில் 1996 மே மாதம் அளவில் நிரந்தர உடன்படிக்கைக்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெறலாம் எனவும், எஞ்சியுள்ள பிரச்சினைகளான ஜெரூஸலேம் விடயம், பலஸ்தீன அகதிகள் பிரச்சினை, இஸ்ரேல் குடியிருப்புக்கள், பாதுகாப்பு மற்றும் எல்லைகள் என்பனவற்றை உள்ளடக்கியதாக இந்த நிரந்தர பேச்சுக்கள் அமையும் எனவும் எதிர்ப்பார்க்கப்பட்டது.
பலஸ்தீன அமைச்சர் யஸிர் அப்த றப்பூ இதுபற்றிக் குறிப்பிடுகையில் 'எதை செய்யுமாறு நாங்கள் வேண்டப்பட்டோமோ அதை நாங்கள் செய்தோம். அது பரஸ்பர அங்கீகாரமும் பாதுகாப்பு ஒத்துழைப்புமாகும். எமது வாக்குறுதிகளை நாம் பாதுகாத்துள்ளோம். ஆனால், இஸ்ரேல் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை' என்று தெரிவித்துள்ளார்.
உண்மையில் அரபாத்தின் தலைமையின் கீழ் பி.எல்.ஓ. ஒரு தனிநபர் அமைப்பாகவே அன்றிருந்தது. ஊழலும் உறவு முறைகளும் தான் அங்கு மலிந்து காணப்பட்டன. பலஸ்தீனத்தில் ஊழலின் ஞானத் தந்தையாக பார்க்கப்பட்டவர்தான் அரபாத். அவர் தனது குடும்பத்தவர்களையும் நண்பர்களையும் கொண்ட 11 பேர் அடங்கிய அரசியல் ஆலோசனை சபையை ஏற்படுத்தினார். மக்கள் சேவைக்காக அமர்த்தப்பட்ட அவர்களுக்கு அபிரிமிதமான சம்பளங்கள் வழங்கப்பட்டன. உண்மையான பலஸ்தீன சுதந்திரப் போராளிகளுக்கு பெரும் ஏமாற்றமே மிஞ்சியது.
இந்த விடயத்தில் அரபாத் தனது இஸ்ரேல் மற்றும் அரபுலக சர்வாதிகார சகாக்களுக்கு ஈடானவராக காணப்பட்டார்.
இந்த வெட்கக்கேடான மரபுகளை பேணிக் கொண்டு தான் பலஸ்தீன அதிகார சபையும் கூட மிக விரைவாக ஊழலையும் உறவுமுறை கலாசாரத்தையும் தழுவிக் கொண்டது.
சவ்ஸான் றமாஹி எனும் இணைய சேவை வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில் பலஸ்தீன மக்களுக்கு உதவுவதற்காக வழங்கப்பட்ட பணம் எவ்வாறு சூறையாடப்பட்டது என்ற விரிவான வெட்கக் கேடான தகவல்கள் வெளியாகி உள்ளன. பலஸ்தீன அதிகார சபைக்குள் ஊழல் என்பது தீவிரமாகப் பரவி உள்ளது. அது பலஸ்தீன சமூகத்தின் எல்லா பிரிவுகளுக்குள்ளும் ஊடுறுவி உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் தயாரித்த ஓர் அறிக்கையில் பலஸ்தீன அதிகார சபையின் நிதி மோசடிகள் காரணமாக அவர்களுக்கு கிடைத்த உதவிகளில் சுமார் இரண்டு பில்லியன் யூரோ காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2008 க்கும் 2012க்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் மேற்கு கரை மற்றும் காஸா பகுதிகளுக்கு அனுப்பப்ட்ட உதவித் தொகையே இவ்வாறு காணாமல் போயுள்ளது. பலஸ்தீனர்களுக்கான ஒரு நாட்டை உருவாக்க அனுப்பப்பட்ட இந்தப் பணம் தனிநபர்களின் சுவிஸ் வங்கிக் கணக்கு மீதிகளாகக் காணப்பட்டது. அண்டைய நாடுகளில் தனியார் திட்டங்களிலும் இஸ்ரேலிய கம்பனிகளிலும் அவை முதலீடு செய்யப்பட்டுள்ளன.
பலஸ்தீன அதிகார சபை மற்றும் அல்பத்தாஹ் இயக்கம் என்பனவற்றின் சிரேஷ்ட அதிகாரிகளைக் கொண்ட ஒரு குழுவாக இந்த ஊழல் வட்டம் அமைந்துள்ளது. பலஸ்தீன அதிகார சபையின் தலைவர் அப்பாஸுக்கு நெருக்கமானவர்களும் இன்னும் பல சிரேஷ்ட தலைவர்களும் இந்த வட்டத்துக்குள் அடங்குவர். இவர்களின் ஊழல், இலஞ்சம், கடத்தல், திருட்டு என பல மோசடிகள் இதுவரை அம்பலமாகி உள்ளன.
இந்த நிலைமையை பயன்படுத்தி பலஸ்தீனத்தின் உண்மையான சுதந்திர போராளிகளை நசுக்கும் இலக்கையும் இஸ்ரேல் பலஸ்தீன அதிகார சபையிடம் ஒப்படைத்தது. பலஸ்தீன அதிகார சபை இஸ்ரேலுக்கு பதிலாக தனது காட்டுமிராண்டித் தனத்தை தனது சொந்த மக்கள் மீதே கட்டவிழ்த்துவிட்டது. பாரபட்சமான கைதுகள், நீண்ட கால தடுத்து வைப்புக்கள், சித்திரவதைகள், கொலைகள் என பலஸ்தீன அதிகார சபையின் அட்டூழியங்கள் தொடர்ந்தன.
அவர்களது சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பலர் கொல்லப்பட்டுள்ளனர். இன்னும் பலர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். தமது சகா இஸ்ரேலுக்காக ஈவு இரக்கமின்றி அவர்கள் இந்தக் காரியங்களில் ஈடுபட்டனர். முஹ்மூத் அப்பாஸும் அவரது பலஸ்தீன அதிகார சபையும் தமது இஸ்ரேலிய சகாக்களுடன் குற்றங்களில் கைகோர்த்தனர். உண்மையான பலஸ்தீன சுதந்திர போராளிகளை நசுக்கி கொன்று குவித்து அதில் அவர்கள் இலாபம் ஈட்டினர்.
இதனால் பலஸ்தீன மக்கள் இஸ்ரேலின் பிடியில் இருந்து தங்களை விடுவிப்பதற்கு பதிலாக பலஸ்தீன அதிகார சபையின் அடக்குமுறையில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ள வேண்டிய துரதிஷ்டவசமான நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
இந்த கொடிய நிலைமைகளின் விளைவாக பலஸ்தீன மக்கள் எல்லாவற்றையும் இழந்தனர். அரபுலக கொடுங்கோல் சர்வாதிகார ஆட்சியாளர்கள் உட்பட முழு உலகமும் அவர்களைக் கைவிட்டது. இந்த ஒட்டு மொத்த பிராந்தியத்திலும் வாழும் உரிமைக் குரலை இழந்த மக்கள் வேறு வழியின்றி மௌனமானர்கள் அல்லது மௌனமாக்கப்பட்டனர்.
அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் அரபுலக சர்வாதிகாரிகளின் கண்மூடித்தனமான ஆதரவுடன் நடத்தப்படும் இஸ்ரேலிய கொடுங்கோல் ஆட்சிக்குள் சிக்குண்ட பலஸ்தீன மக்கள் தங்களது சுதந்திரத்துக்காக, உரிமைகளுக்காக, சுயமரியாதைக்காக, சொத்துக்களுக்காக அன்றாடம் உயிரைக் கொடுத்து தனித்து நின்று போராடும் நிலைக்கு வந்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM