சதீஷ் கிருஷ்ணபிள்ளை
உலக இராஜதந்திரத்திற்கு ஒன்றுகூடல்கள் முக்கியமானவை. ஒன்றுகூடல்களில் அரசியல் பேசுவார்கள். அது கூட்டணி அரசியலாகவும் இருக்கும். இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகள் பற்றிய அரசியலாகவும் இருக்கலாம்.
ஒன்றுகூடல்கள் உலக அரசியல் போக்குகளை பிரதிபலிக்கும். சமீபத்தில் நடந்த ஜீ-20 உச்சிமாநாட்டைப் போல.
இங்கு உலக நாடுகளின் தலைவர்கள் இந்தியப் பிரதமருடன் கைகுலுக்கினார்கள். உத்தியோகபூர்வமாக பேசினார்கள். இதனை கனேடிய பிரதமர் மாத்திரம் தவிர்த்தார்.
மாநாட்டு மண்டபத்திற்கு வெளியே நரேந்திர மோடி, கனடாவையும், ஜஸ்டின் ட்ரூடோ, இந்தியாவையும் பரஸ்பரம் குற்றம் சுமத்தினார்கள். சற்று பாரதூரமான குற்றச்சாட்டுக்கள்.
இந்தியாவும், கனடாவும் நட்பு நாடுகள் தான். பெருமளவு இந்தியர்கள் கனடாவில் வசிப்பதாலும், இரு நாடுகளுக்கும் இடையில் அதிக வர்த்தகம் நடைபெறுவதாலும் உறவுகள் நன்றாகவே இருந்தன.
கடந்த காலமாக படிப்படியான மாற்றம். இப்போது இருதரப்பு உறவு ஆகவும் இறுக்கமான நிலையை எட்டியுள்ளன.
இதற்குப் பிரதான காரணம், கனடாவில் சீக்கிய சமுதாயம் பற்றிய பிரச்சினை.
சீக்கிய பிரிவினை இயக்கத்திற்கு கனடா துணை போகிறது என்பது இந்தியாவின் குற்றச்சாட்டு. பதிலுக்கு, புலம்பெயர்ந்த சீக்கியர்கள் விவகாரத்தில் இந்தியா அனாவசியமாக மூக்கை நுழைக்கிறது என கனடா குற்றம் சாட்டுகிறது.
இத்தகைய பின்னணியில், கனேடிய பிரதமர் தமது பாராளுமன்றத்தில் அரசியல் குண்டைத் தூக்கிப் போட்டார்.
இது கனடாவில் வாழும் சீக்கிய பிரிவினை இயக்கத்தின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் படுகொலை பற்றிய குற்றச்சாட்டு.
கடந்த ஜூன் மாத நடுப்பகுதியில் கனேடிய மண்ணில் நிஜ்ஜார் முகமூடியணிந்த ஆயுதபாணிகள் இருவரால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.
படுகொலையில் இந்திய அரசாங்கம் சம்பந்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடும் வலுவான ஆதாரங்கள் பற்றி ட்ரூடோ குறிப்பிட்டார். இந்த ஆதாரங்கள் பற்றி கனேடிய புலனாய்வு அமைப்புக்கள் விசாரிப்பதாகவும் அவர் கூறினார். கனேடிய மண்ணில் நிகழ்ந்த படுகொலைக்கு இந்திய அரசு காரணமாக இருக்கலாம் என்ற குற்றச்சாட்டு போன்றதொரு கருத்து. இது ராஜதந்திர அரங்கில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து, கனடாவில் வேலை செய்யும் சிரேஷ்ட இந்திய இராஜதந்திரி ஒருவர் வெளியேற்றப்பட்டார். இந்தியாவும் பதிலுக்கு கனேடிய இராஜதந்திரி ஒருவரை வெளியேற்றியதுடன், ட்ரூடோவின் கருத்துக்கு மறுப்பு அறிக்கை விடுத்தது.
இது நீண்டகாலமாக குமுறிக் கொண்டிருந்த பிரச்சினை. இன்று எரிமலையாக வெடித்துச் சிதறியிருக்கிறது என்பது தான் உண்மை.
கனடாவில் சீக்கிய சமூகத்தின் செயற்பாடுகள் தீவிரம் பெற்று வருகின்றமை இந்தியாவுக்கு பிடிக்கவில்லை. இதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய அரசு அழுத்தம் கொடுத்து வந்தது.
இந்தியாவின் அழுத்தங்களை கனடா பொருட்படுத்தவில்லை. இந்தியாவின் கவலை தீர்க்க பதில் நடவடிக்கை எடுக்கவும் இல்லை. இது தான் பிரச்சினையாக இருந்தது.
இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்து சென்ற சீக்கியர்கள் உலகின் பல நாடுகளில் வாழ்கிறார்கள். இவர்களில் கனடாவில் வாழ்பவர்களின் எண்ணிக்கை அதிகம். இது ஏழரை இலட்சத்தைத் தாண்டுகிறது. கனேடிய சனத்தொகையில் இரண்டு சதவீதத்தைத் தாண்டிய எண்ணிக்கை.
இந்த சீக்கியர்கள் மத்தியில் தனிநாட்டுக் கோரிக்கை உண்டு. தாம் அடைய விரும்பும் தேசத்திற்கு சீக்கியர்கள் சூட்டிய பெயர் காலிஸ்தான் என்பதாகும்.
கனேடிய சீக்கியர்கள் மத்தியில் காலிஸ்தான் இயக்கம் வலுவாக வேரூன்றியிருக்கிறது. இதனை இந்தியா பிரிவினைவாதமாகக் கருதுகிறது.
அதேபோல், காலிஸ்தான் இயக்கத்தைச் சேர்ந்த கனேடிய சீக்கியர்கள் இந்தியாவை பகையாளியாக கருதுகிறார்கள்.
காலிஸ்தான் இயக்கம் எவ்வளவு வலுவானதென்றால், இவர்கள் இந்தியாவில் சீக்கியர்களின் விடுதலையை தொனிப்பொருளாகக் கொண்ட கருத்துக் கணிப்பையும் கனடாவில் நடத்தியிருக்கிறார்கள்.
காலிஸ்தான் இயக்கத்தின் கடும்போக்காளர்கள் சிலர் கடந்த ஆண்டு கனடாவில் உள்ள இந்துக் கோயிலைத் தாக்கி, 'இந்தியா ஒழிக' என்று எழுதியும் இருக்கிறார்கள்.
கனேடிய மண்ணில் பன்முகத்தன்மையை ஆதரிப்பவராக தம்மைச் சித்தரித்துக் கொள்வதில் ட்ருடோவிற்கு ஆர்வம் அதிகம். அது அவரது அரசியலின் பிரதான பிரசார வாசகமாகவும் இருந்தது.
2015இல் தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராகத் தெரிவாகி அமைத்த முதல் அமைச்சரவையில் நான்கு சீக்கியர்கள் இடம்பெற்றார்கள். அதுவும் முக்கியமான பதவிகளை வகிக்கும் அமைச்சர்களாக.
இன்னொரு விஷயமும் உண்டு. 2018இல் ட்ரூடோ இந்தியா சென்றபோது, அவரது குழுவில் ஜஸ்பால் அத்வால் என்ற சீக்கியரும் இருந்தார்.
இது இந்தியாவை ஆத்திரப்படுத்தியது. ஏனெனில், இந்திய அமைச்சர் ஒருவரை படுகொலை செய்ய முனைந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டவரே இந்த ஜஸ்பால் அத்வால்.
இவை பாரதூரமான விடயங்கள் தான். ஆனாலும், சீனாவை ஓரங்கட்ட வேண்டும் என்பதற்காக, இந்தியாவும் கனடாவும் கருத்து முரண்பாடுகளைக் கிடப்பில் போட்டன. வர்ததகம் செய்தன.
கனடாவைப் பொறுத்தவரையில், இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் இந்தியாவை முக்கியமான பங்காளராக பார்த்தது. இதற்கு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஒரு காரணம். பூகோள ரீதியில் இந்தியாவின் முக்கியத்துவம் அதிகரித்து வருவது மற்றொரு காரணம்.
குறை மறந்து, அல்லது மறைத்து, இருதரப்பு உறவுகளை முன்னேற்ற கனடா முயன்றபோது, ஜூன் மாத முற்பகுதியில் இந்திய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சற்று காரசாரமாக பேசினார்.
ஜூன் 4ஆம் திகதி ஒன்டாரியோ நகரில் காலிஸ்தான் தாயகக் கோரிக்கையுடன் சிலர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தின் வீடியோ காட்சி சமூக ஊடகங்களில் வைரல் ஆனது.
இது பற்றி விமர்சித்த ஜெய்சங்கர், சீக்கிய பிரிவினைவாதிகளுக்கு கனடா வாய்ப்பளிப்பது இருதரப்பு உறவுகளுக்கு நல்லதல்ல என்றார். கனேடிய அரசியல்வாதிகள் சீக்கிய வாக்குகளுக்காகவே இதனைச் செய்கிறார்கள் என்ற தொனியில் பேசினார்.
இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டு பத்து நாட்களுக்கு பின்னரே, சீக்கிய ஆலயத்திற்கு வெளியே ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த சம்பவம் பற்றிய விசாரணையின் நீட்சியாக, இம்மாத முற்பகுதியில் இந்தியாவுடன் வர்த்தக உடன்படிக்கையை உருவாக்குவது தொடர்பான பேச்சுவார்த்தை ட்ரூடொவ் இடை நிறுத்தியிருந்தார்.
ட்ரூடோ சடுதியாக தீர்மானம் செய்ததாகத் தெரியவில்லை. மாறாக, புலனாய்வுத் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் ஐந்து நாடுகளுடன் இரகசிய பேச்சுவார்த்தை நடத்திய பின்னரே, இந்தியாவை பகிரங்கமாக குற்றம் சுமத்தியிருக்கிறார்.
ஆனால், ட்ரூடோவைத் தவிர வேறெந்த நாடும் இந்தியாவிற்கு எதிராக வாய் திறக்கவில்லை என்பதும் முக்கியமானது.
அமெரிக்கா போன்ற நாடுகளைப் பொறுத்தவரையில், இந்த விடயத்தில் எப்படிப் பேசினாலும் இந்தியாவை அல்லது கனடாவை பகைத்துக் கொள்ள வேண்டியிருக்கும்.
மறுபுறத்தில் பார்த்தால், இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் சீனாவுக்கு சவால் விடுக்கக்கூடிய சக்தியாகத் திகழும் இந்தியாவை பகைத்துக் கொள்வதையும் அமெரிக்கா போன்ற நாடுகள் விரும்பமாட்டா.
இப்போதுள்ள மோசமான நிலையில் இருந்து உறவுகளை மீளவும் சுமுகமாக்கிக் கொள்ளக் கூடிய நிலைக்கு இந்தியாவும், கனடாவும் தாமாகவே நடவடிக்கை எடுக்கப்படக் கூடிய நிலைக்கு தள்ளப்படக்கூடும்.
இருந்தபோதிலும், உறவுகள் பழைய நிலைக்குத் திரும்ப சற்று காலம் எடுக்கலாம் என்றே தோன்றுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM