திலீபனின் நினைவு ஊர்தி மீது திருகோணமலையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பிலும் அந்த ஊர்தியுடன் பயணித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் மீதான கொலைவெறி தாக்குதல் குறித்தும் பெரும் கண்டங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல்வேறு தரப்பினரும் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் தமது விசனத்தினை தெரிவித்திருந்தனர்.
தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஆறுபேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை முன்னிட்டு பொத்துவிலில் இருந்து யாழ்ப்பாணம் வரையில் அவரது உருவப்படத்தை தாங்கிய நினைவு ஊர்தி பவனி மேற்கொள்ளப்பட்டிருந்தது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஊர்தி பவனி மீது திருகோணமலையில் வைத்து குழுவொன்றினால் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
இந்த ஊர்தி பயணத்தின்போது அக்கறைப்பற்று வைத்தியசாலைக்கு முன்பாகவும் ஒரு குழுவினரால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டிருந்தது. இதனைவிட மற்றுமொரு பகுதியில் இந்த ஊர்தி மீது தாக்குதல் நடத்த முயற்சிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்திருந்தன. தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பல்வேறு பகுதிகளிலும் கடந்த 15ஆம் திகதி ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றன.
ஆனாலும் பொத்துவிலில் இருந்து யாழ்ப்பாணம் வரையில் நினைவு ஊர்தி பயணம் மேற்கொண்டதன் விளைவாகவே இத்தகைய தாக்குதல் சம்பவங்களும் எதிர்ப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இத்தகைய ஊர்தி பவனியை தவிர்த்திருக்கலாம் என்றும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்த விடயம் தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்த கருத்துக்கள் இதனை ஒத்ததாகவே காணப்படுகின்றன. பொலிஸாரிடம் அனுமதி பெறாமல் திலீபனின் நினைவு ஊர்தி சிங்கள கிராமங்கள் வழியாக பயணித்தது தவறான செயற்பாடு என்றும் இத்தகைய செயற்பாடுகளை தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், கஜேந்திரன் ஒரு பொறுப்புவாய்ந்த பாராளுமன்ற உறுப்பினர். மாவட்டம் விட்டு இன்னொரு மாவட்டத்திற்கு ஊர்தியை கொண்டு வரும் போது பொலிஸாரின் அனுமதியை பெற்று வந்திருக்கவேண்டும். இன்றைய சூழ்நிலையில் திலீபனின் ஊர்தியை சிங்கள கிராமங்களின் ஊடாக கொண்டு வர முற்பட்ட போது உரிய அனுமதி பெறப்படவில்லை. இதன் காரணமாகவே இனந்தெரியாதவர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் சம்பந்தப்பட்ட மாவட்டத்தில் மட்டுமல்ல இலங்கை பூராகவும் இனக்கலவரத்தைஏற்படுத்தும் நிலைமையை உருவாக்கியிருக்கும். இது தவிர்க்கப்பட்டிருக்கவேண்டும் என சுட்டிக்காட்டியிருந்தார்.
திலீபனின் நினைவு ஊர்தி மீது தாக்குதல் நடத்தப்பட்டதுடன் செல்வராஜா கஜேந்திரன் எம்.பி. மீதும் கொலைவெறித்தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. இந்த தாக்குதலில் உயிரிழப்புக்கள் ஏற்பட்டிருந்தால் அது பெரும் இனமுறுகலை ஏற்படுத்தியிருக்கும். இவ்வாறான ஆபத்தான செயற்பாடுகள் தவிர்க்கப்பட வேண்டும் என்ற தொனிப்படவே கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் இந்த கருத்து அமைந்திருக்கின்றது.
உண்மையிலேயே யுத்தத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் போராட்ட வரலாற்றில் உயிர்நீத்தவர்கள் போன்றோரை நினைவுகூரவேண்டியது அவசியமானதாகும். அவ்வாறு நினைவு கூர்வதென்பது மக்களின் அடிப்படை உரிமையாகும். இறுதி யுத்தத்தின்போது முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். அவ்வாறு கொன்று குவிக்கப்பட்ட மக்களை மே மாதம் 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஷ்டிப்பதன் மூலம் தமிழ் மக்கள் நினைவுகூர்ந்து வருகின்றனர்.
இதேபோன்றே தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் ,அன்னை பூபதியின் நினைவேந்தல், மற்றும் மாவீரர் வார நினைவேந்தல் என்பன வருடம்தோறும் மக்களால் நினைவுகூரப்பட்டு வருகின்றன . இவ்வாறான நினைவேந்தல்கள் உரியவகையில் அரசியல் மயப்படுத்தப்படாத நிலையில் பொதுக்கட்டமைப்பின் அடிப்படையில் மேற்கொள்ளப்படவேண்டியதன் அவசியம் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகின்றது.
2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர் யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவேந்தல் செய்வதற்கு கூட முடியாத நிலைமை நீடித்து வந்தது. அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜ பக் ஷ தலைமையிலான அரசாங்கம் இதற்கு அனுமதி வழங்கவில்லை. யுத்தத்தில் உயிரிழந்த மக்களை நினைவுகூர்வதற்காக முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைக்கூட நடத்துவதற்கு அனுமதிக்காத அரசாங்கம் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலையோ, மாவீரர் வார நினைவேந்தலையோ மேற்கொள்வதற்கு அனுமதிக்கும் என்று யாருமே எதிர்பார்க்க முடியாது.
இவ்வாறான அடக்குமுறையான நிலைமை அன்றைய ஆட்சிக்காலத்தில் நீடித்திருந்தது. உயிரிழந்த உறவுகளை நினைவு கூர அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றும் அது அந்த மக்களின் அடிப்படை உரிமையாகும் எனவும் சர்வதேச சமூகம் வலியுறுத்தி வந்தது. ஐ.நா. மனித உரிமை பேரவையிலும் இந்த விடயம் வலியுறுத்தப்பட்டது. ஆனால் அன்றைய அரசாங்கமானது அதற்கெல்லாம் செவிசாய்க்கவில்லை.
2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் பதவியேற்றதையடுத்தே மே மாதம் 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை மேற்கொள்வதற்கான சூழ்நிலை ஏற்பட்டிருந்தது. முள்ளிவாய்க்கால் நினைவுமுற்றத்தில் மக்கள் ஒன்றுகூடி தமது உறவுகளை நினைவேந்தல் செய்து வந்தனர். இந்த ஆட்சிகாலத்தில் திலீபனின் நினைவேந்தல் மற்றும் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இந்த நினைவேந்தல்களை அனுஷ்டிக்கும் விடயத்தில் அரசியல் கட்சிகளின் தலையீடுகள் நினைவேந்தல் நிகழ்வுகளை உரிய வகையில் நடத்துவதற்கான சூழலை குழப்பும் வகையில் அமைந்திருந்தன. இதனால் நினைவேந்தல்களை பொதுக்கட்டமைப்பொன்றின் அடிப்படையில் முன்னெடுக்கவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதன் பின்னர் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை பொதுக்கட்டமைப்பொன்றின் அடிப்படையில் நடத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதேபோன்றே தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் விவகாரத்திலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் தலையீடு செய்ததையடுத்து கடந்த சில வருடங்களுக்கு முன்னர் குழப்பமான நிலைமை ஏற்பட்டிருந்தது. ஜனநாயக போராளிகள் கட்சியினருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினருக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டிருந்தது.
இந்த நிலையில் சிவில் சமூக அமைப்பினர், மதத்தலைவர்கள் உட்பட்டோர் ஒன்றிணைந்து பொதுக்கட்டமைப்பொன்றை ஏற்படுத்தி இத்தகைய நினைவேந்தல்களை ஒழங்கு செய்யவேண்டும் என்று கோரப்பட்டது. இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும் அந்த செயற்பாடு பூரண வெற்றியளிக்கவில்லை. 2019ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக் ஷ தலைமையிலான பொதுஜன பெரமுன அரசாங்கம் பதவியேற்றதையடுத்து மீண்டும் நினைவேந்தல்களை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டிருந்தது. பெரும் கெடுபிடிகள் மேற்கொள்ளப்பட்டன. முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைக்கூட பெரும் கொடுபிடிகளுக்கு மத்தியிலேயே நடத்தவேண்டிய நிலைமை ஏற்பட்டிருந்தது.
திலீபனின் நினைவேந்தலை மேற்கொள்வதற்கு பல்வேறு தடைகள் ஏற்படுத்தப்பட்டன. நீதிமன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. தற்போது ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவி வகிக்கும் நிலையில் நினைவேந்தல்களை நடத்துவதற்காக சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கின்றது. ஆனால் திருகோணமலையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தின் பின்னர் நீதிமன்றத் தடை உத்தரவுகளை பெறுவதற்கான முயற்சிகள் பொலிஸாரினால் எடுக்கப்பட்டு வருகின்றன.
கொழும்பில் கடந்த செவ்வாய்க்கிழமை திலீபனின் நினைவேந்தலை மேற்கொள்வதற்கு கிறிஸ்தவ ஒத்துழைப்பு இயக்கம் நடவடிக்கை எடுத்திருந்தபோது அதற்கு எதிராக கோட்டை மற்றும் மாளிகாகந்த நீதிமன்றங்களில் தடை உத்தரவு பெறப்பட்டிருந்தது. இதேபோன்றே திலீபனின் வாகன ஊர்தி பயணத்துக்கும் வவுனியா நீதிமன்றத்தில் பொலிஸாரினால் தடை உத்தரவு கோரப்பட்டிருந்தது. ஆனாலும் அதற்கான உத்தரவு வழங்கப்படவில்லை. யாழ்ப்பாணத்திலும் நினைவேந்தலுக்கு தடை உத்தரவு கோரி மனுக்கள் பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
திலீபனின் நினைவேந்தலை உரிய வகையில் உரிய இடத்தில் உணர்வுபூர்வமாக நடத்தியிருந்தால் இத்தகைய தடை உத்தரவு கோரும் நிலைமைகள் ஏற்பட்டிருக்கமாட்டாது. அதேபோலவே பொதுகட்டமைப்பொன்றின் அடிப்படையில், பொது நிகழ்ச்சி நிரலின் கீழ் திலீபனின் நினைவேந்தலுக்கான திட்டங்கள் வகுக்கப்பட்டிருந்தால் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து உணர்வுபூர்வமாக அதனை மேற்கொண்டிருக்க முடியும்.
எனவே எதிர்காலத்தில் எத்தகைய நினைவேந்தல்களாயினும் பொதுக்கட்டமைப்பின் கீழ் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த விடயம் தொடர்பில் சகல தரப்பும் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்த விரும்புகின்றோம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM