சத்ரியன்
அடுத்த ஆண்டில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படக் கூடாது, பொருளாதார நெருக்கடியால், தேர்தல் நடத்துவதற்கு போதிய நிதி இல்லை, அதனால் ஜனாதிபதி தேர்தல் ஒத்திவைக்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன வெளியிட்ட கருத்து, அரசியல் அரங்கில் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.
ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைப்பது சாத்தியமோ அவ்வளவு இலகுவான காரியமோ அல்ல என்பது அனைவருக்கும் தெரியும்.
ஆனாலும், வஜிர அபேவர்தனவின் இந்தக் கருத்தை யாரும் புறக்கணித்து ஒதுக்கும் நிலையில் இல்லை என்பதையே, உடனடியாக பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் நடத்திய செய்தியாளர் சந்திப்பு உறுதிப்படுத்தியிருக்கிறது.
வஜிர அபேவர்தன அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஒருவர் அல்ல. ஆனால் அரசாங்கத்தின் தலைவரான ஜனாதிபதியின் குரலாக அவர் அவ்வப்போது ஒலிக்கிறார்.
சிலவேளைகளில் அரசாங்கம் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட முன்னரே அரசாங்கத்தின் தீர்மானத்தை வெளியிடுகிறார்.
க.பொ.த. உயர்தரப் பரீட்சையை பிற்போட அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக கடந்த திங்கட்கிழமை அவர் தான் முதலில் செய்தியை வெளியிட்டார்.
கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கடந்த வியாழக்கிழமை தான் அதுபற்றி பாராளுமன்றத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் முதல் நிலை விசுவாசிகளின் வரிசையில் இப்போது இருப்பவர்களில் சாகல ரத்நாயக்க, வஜிர அபேவர்தன, பாலித ரங்கே பண்டார போன்றவர்கள் முக்கியமானவர்கள்.
பாராளுமன்றத்தில் ஐ.தே.க.வின் ஒற்றை உறுப்பினராக ரணில் விக்கிரமசிங்க அங்கம் வகித்துக் கொண்டிருந்த போதே, அவர் விரைவில் அதிகாரத்துக்கு வருவார் என்று கூறியவர் வஜிர அபேவர்தன.
அவர் அதனைக் கூறிய போது, யாரும் நம்பவில்லை. அதனை நம்பக் கூடிய சூழ்நிலையும் அப்போது இருக்கவில்லை.
பலம்வாய்ந்த ஜனாதிபதியாக கோட்டாவும், அசைக்க முடியாத பிரதமராக மஹிந்தவும் அதிகாரத்தில் இருந்த சூழல் அது.
அப்போது, ரணில் ஜனாதிபதியாக விரைவில் பொறுப்பேற்பார் என யாராவது நம்பக் கூடிய சூழல் இருந்திருக்கவில்லை.
அரகலய போராட்டம் எல்லாவற்றையும் மாற்றியது, வஜிர அபேவர்தன கூறியது போல, ரணில் விக்கிரமசிங்கவையும் அதிகாரத்துக்கு கொண்டு வந்தது.
பிரதமராக இருந்த ரணில், கோட்டாவின் பதவி விலகலை அடுத்து இடைக்கால ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின்னர், பாராளுமன்றத்தில் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இடம்பெற்றது.
வாக்கெடுப்புக்கு முன்னரே, ரணில் விக்ரமசிங்க 140இற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார் என எதிர்வு கூறியிருந்தார் வஜிர அபேவர்தன.
அவரது அந்தக் கணிப்பும் பொய்யாகவில்லை.
இதனால் தான், ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என அவர் கூறிய கருத்தை யாரும் இலகுவாக எடுத்துக் கொள்ளவில்லை.
நடைமுறைச் சாத்தியம், சாத்தியமற்ற நிலைமைகளுக்கு அப்பாலும் சில விடயங்கள் இருக்கின்றன.
ரணில் விக்கிரமசிங்க அதிகாரத்துக்கு வந்ததும் அவ்வாறான ஒரு விபத்தினால் தான்.
அவ்வாறான விபத்து தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் என்றோ, அதுவே ஒருவருக்கு சாதகமாக இருக்கும் என்றோ எதிர்பார்க்க முடியாது.
ஆனாலும், ஜீ.எல். பீரிஸ் போன்றவர்கள் வஜிர அபேவர்தனவின் கூற்றை சாதாரணமாக எடுத்துக் கொள்ளத் தயாராக இல்லை.
அதனால் தான், ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்க முடியாது, 2024 ஒக்டோபருக்குப் பின்னர், ரணில் விக்கிரமசிங்கவினால் ஜனாதிபதி பதவியில் இருக்க முடியாது என்று கூறியிருக்கிறார்.
2024 ஒக்டோபருக்குள் தேர்தல் நடத்தப்படாது போனால், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டின் தலைவராக சட்டரீதியாகப் பதவியில் இருக்க முடியாது.
அவ்வாறான நிலையில், 2024 ஒக்டோபரில் அவர் பதவி விலக வேண்டும். தேர்தல் நடத்தப்படாது போனால் ஜனநாயகத்துக்கு சாவு ஏற்படும். ஜனாதிபதியின் எல்லா கடமைகளும் முடிவுக்கு வந்து விடும்.
அது உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் பல்வேறு சவால்களை ஏற்படுத்தும் என்று எச்சரித்திருக்கிறார் பீரிஸ்.
ரணில் விக்கிரமசிங்க ஜனநாயக வழியில் நடப்பதாக காண்பித்துக் கொள்பவர். ஆனாலும், தேர்தல்களை நடத்தும் விடயத்தில், அவருக்கு ஆர்வம் இருக்கிறது எனக் கருத முடியாது.
அவர் பிரதமராக பதவியில் இருந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் தான், மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்பட முடியாத நிலை உருவாக்கப்பட்டது.
அவர் ஜனாதிபதியாக பதவிக்கு வந்த பின்னர் தான், உள்ளூராட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டு, அதனை நடத்த முடியாத நிலை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு ஏற்படுத்தப்பட்டது.
இந்த இரண்டு விடயங்களும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை, தேர்தலுக்கு அஞ்சும் நபராகவே அடையாளப்படுத்தியிருக்கிறது. தான் ஆட்சியில் இருந்தபோது, உரிய நேரத்தில் தேர்தல்களை நடத்தியதாக மஹிந்த ராஜபக் ஷ எப்போதும் பெருமையாக கூறிக் கொள்வார்.
அவரது ஆட்சியில் ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டதை மறைப்பதற்காக, தேர்தல்களை ஒழுங்காக நடத்தினார்.
ஆனால், ரணில் விக்கிரமசிங்க அதற்கு நேர்மாறான நிலையில் இருக்கிறார்.
அவர் ஜனநாயகத்தின் ஏனைய விடயங்களை நிறைவேற்றுவதாக காண்பித்துக் கொண்டு மக்களின் வாக்குரிமையை பறிக்கின்ற வேலையை செய்பவர்.
மாகாண சபைகள், உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை அவர் இதுவரை நடத்தவில்லை.
அதனைப் போலவே அடுத்த ஆண்டில் ஜனாதிபதி தேர்தலையும் நடத்தாமல் விடப் பார்கிறார் என்ற அச்சம் பலருக்கு ஏற்பட்டிருக்கிறது.
ஆனால் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் குறிப்பிடுவது போல உள்ளூராட்சித் தேர்தல் அல்லது மாகாண சபைத் தேர்தலைப் போல, ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைப்பது அவ்வளவு இலகுவான காரியம் அல்ல.
அது பாரிய அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தும். அரசியலமைப்பு நெருக்கடியையும் உருவாக்கும். அத்தகையதொரு சவாலை எதிர்கொள்வதற்கு ரணில் விக்கிரமசிங்க துணிவாரா என்பது தான் பலரதும் கேள்வி.
ரணில் விக்கிரமசிங்க அதிகாரத்தின் உச்சத்தை தொடுவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலைகள், அவரை ஜனாதிபதி ஆசனத்துக்கு கொண்டு வந்து விட்டது.
அதுவும் அவர் யாரை எதிர்த்து அரசியல் செய்தாரோ அவர்களே ஆட்சியில் அமர வைக்கும் நிலையை ஏற்படுத்தியது.
ராஜபக் ஷவினருக்கு எதிராக தோன்றிய மக்கள் அலை, அவருக்கு அதீத நம்பிக்கையை கொடுத்தது.
அடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் தன்னையே வேட்பாளராக நிறுத்துவார்கள் என்ற அசட்டுத் துணிவை அவருக்கு ஏற்படுத்தியது. அரசியல் நிலைமைகளும் அவ்வாறு தான் காணப்பட்டன.இப்போது நிலைமைகள் அப்படியில்லை.
தங்களின் பினாமியாக ஒருவர் இருப்பதை விட தங்களில் ஒருவர் அதிகாரத்தில் இருப்பதே பாதுகாப்பானது என்று அவர்கள் நினைக்கத் தொடங்கி விட்டார்கள்.
அவர்கள் ராஜபக் ஷவினரில் இருந்து அடுத்த ஜனாதிபதியை தெரிவு செய்யும் முயற்சியில் இறங்கி விட்டனர்.
இந்தநிலையில் ரணில் விக்கிரமசிங்க அதிகாரத்தில் நீடித்திருக்க விரும்புகிறார். அவர் தேர்தலை சந்திப்பதானால், மொட்டின் ஆதரவு கட்டாயம் தேவை.அது கிடைக்காது என்றால், தேர்தல் நடத்தப்படக் கூடாது. அதனை ஒத்திவைக்க அவர் வழி தேடக் கூடும்.
உள்ளூராட்சித் தேர்தலுக்கான நாள் குறிக்கப்பட்ட போதும், அதனை நடத்த முடியாமல் செய்தவர் ரணில். அவ்வாறான ஒருவர் ஜனாதிபதி தேர்தலை பிற்போடும் நிலைக்கு கொண்டு செல்ல முடியாது என்று உறுதியாக கூறமுடியாது.
ஆனால், அது அவருக்கும் நாட்டுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
தேர்தலை நடத்தக் கோரி யாாராவது உயர்நீதிமன்றில் முறையிடலாம். அதன் தீர்ப்பு, ரணில் விக்கிரமசிங்கவுக்கு பாதகமாக வரலாம். அது அரசியல்சாசன நெருக்கடியை ஏற்படுத்தும்.
அதேவேளை சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்தடுத்த கட்ட நிதியுதவிகள் தடைப்படலாம். வெளிநாடுகள் தங்களின் நிதியுதவிகளை நிறுத்தலாம்.
அரசியல் குழப்பங்கள் ஏற்பட்டு நாடு மீண்டும் வங்குரோத்து நிலைக்கு கூட செல்லலாம். இவையெல்லாம், ரணில் எடுக்கப் போகும் முடிவில் தான் தங்கியிருக்கிறது. இவ்வாறான பாரிய விளைவுகளுக்கு நாட்டை மீண்டும் தள்ளிச் செல்ல ரணில் விரும்பமாட்டார்.
ஆனால், அதிகார ஆசை யாரையும் எந்த முடிவையும் எடுக்கத் தூண்டும் என்பதை மட்டும் யாரும் மறந்து விடக் கூடாது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM