எம்.எஸ்.தீன்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப்பின் 23ஆவது வருட நினைவு தினம் கடந்த 16ஆம் திகதி பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் சாய்ந்தமருதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஏற்பாட்டில் நடைபெற்றது. இதே வேளை, தேசிய காங்கிரஸின் ஏற்பாட்டில் மூதூரிலும் நினைவு தின வைபவம் நடைபெற்றது. இன்னும் பல இடங்களிலும் வைபவங்கள் நடைபெற்றன.
இவ்வாறு பல இடங்களில் நினைவு தின நிகழ்வுகள் நடைபெற்றாலும், அவை அரசியல் தேவைக்காகவே மேற்கொள்ளப்பட்டதே அல்லாமல், அவரின் கொள்கைளை வாழ வைக்க வேண்டும், அவரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை முடித்து வைக்க வேண்டுமென்ற எண்ணத்தை அஷ்ரப்பின் பாசறையில் வளர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் எவரிடத்திலும் காண முடியாதிருந்தது. வருடத்திற்கு ஒரு தடவை மாத்திரம் நினைவு கூறப்படுகின்ற ஒருவராகவே அஷ்ரப்பை பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.
முஸ்லிம் காங்கிரஸின் நினைவு தினக் கூட்டம் சாய்ந்தமருதில் நடைபெற்ற போதிலும் சாய்ந்தமருதில் எங்கு நடைபெறும் என்பதில் இறுதி நேரம் வரை பலத்த இழுபறிகள் இருந்தன. ஏற்கனவே அறிவித்திருந்த மண்டபத்தில் நடைபெறவில்லை. 15ஆம் திகதி மாலையில் தான் சாய்ந்தமருது கடற்கரை பிரதேசத்தில் உள்ள பௌஸி மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த மைதானத்தில் நடைபெற்ற நினைவு தின ஏற்பாடுகளை அவதானித்த போது ஒரு நினைவு தினத்திற்குரிய சாயல் எதுவும் தென்படவில்லை. கவிதை வாசித்தல் மற்றும் களிகம்பு அடித்தல் (பொல்லடி) ஆகிய நிகழ்வுகள் இடம்பெற்றன. கவிதை வாசிப்பதற்கு 3 பேர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தனர்.
கட்சியின் தவிசாளர் எம்.ஏ.அப்துல் மஜீட், கட்சியின் செயலாளர் சட்டத்தரணி நிஸாம் காரியப்பர், தமிழகத்திலிருந்து வருகை தந்திருந்த பேராசிரியர் மு.அப்துல் காதர், பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ், பாராளுமன்ற உறுப்பினரும், கட்சியின் தலைவருமான ரவூப் ஹக்கீம் ஆகியோர் உரையாற்றினார்கள்.
இந்த நினைவு தினக் கூட்டம் சுமார் 2 மணித்தியாலங்களே நடைபெற்றது. இதனால்தான் கவிஞர் சோலைக்கிளிக்கு போதிய நேரம் வழங்கப்படவில்லை. அவர் இடையிலேயே மேடையை விட்டு கீழே இறக்கப்பட்டார். இதனிடையே பேச்சாளர்களுக்கும், கவிதை வாசிப்போருக்கும் ஒரு குறுகிய நேரமே வழங்கப்பட்டது. அதனை மீறும் போது சிவப்பு லைட் எரியும். அதாவது சிவப்பு லைட் எரிந்தால் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் முடிவடைந்து விட்டது என்று அர்த்தமாம்.
இதனிடையே நினைவு தினக் கூட்டத்தை ரவூப் ஹக்கீம் சாய்ந்தமருதில் நடத்தக் கூடாதென்று 15ஆம் திகதி வெள்ளிக்கிழமை சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலுக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் அஷ்ரப்பின் நினைவு தினக் கூட்டத்தை தடுத்து நிறுத்துவதற்கு பல நடவடிக்கைகளை எடுத்தார்கள். ஈற்றில் அரசாங்கத்தின் உயர்மட்டத்தினருடன் தொடர்பு கொண்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நினைவு தினக் கூட்டத்தை நடத்த வேண்டிய நிலைக்கு முஸ்லிம் காங்கிரஸ் தள்ளப்பட்டது.
முஸ்லிம்களினால் பெரிதும் மதிக்கப்படுகின்ற பெருந்தலைவர் அஷ்ரப்பின் நினைவு தினக் கூட்டம் அமைதியான முறையிலும், பாதுகாப்பு கெடுபிடிகள் இல்லாத வகையிலும் நடத்தப்பட வேண்டும். அதுவே அஷ்ரப்புக்கான மரியாதையாகும். ஆனால், அஷ்ரப்பை போற்றுகின்ற ஒரு தரப்பினர் சாய்ந்தமருதுக்கு உள்ளூராட்சி சபை வழங்கப்படவில்லை.
இதற்கு முஸ்லிம் காங்கிரஸ் தடையாக இருக்கின்றது என்று தெரிவித்துக் கொண்டு நினைவு தினக் கூட்டத்தை தடுப்பதற்கு முயற்சிகளை எடுத்துக் கொண்டிருந்த வேளையில், என்ன விலை கொடுத்தாவது நினைவு தினக் கூட்டத்தை நடத்த வேண்டுமென்று முஸ்லிம் காங்கிரஸினர் செயற்பட்டு அதில் வெற்றியும் கண்டார்கள். இந்த இரண்டு தரப்பினரும் அரசியல் நோக்கத்தைக் கொண்டவர்கள்.
இதில் யார் வெற்றி பெற்றார், யார் தோல்வியடைந்தார் என்பது இங்கு முக்கியமல்ல. முஸ்லிம் அரசியலில் தடம்பதித்துள்ளவர்களில் அதிகம் பேர் அஷ்ரப்பினால் அரசியலுக்கு அறிமுகம் செய்யப்பட்டவர்கள். இவர்கள் தமக்கு அரசியல் அரிச்சுவடி சொல்லித் தந்த தலைவனின் நினைவு தினம் என்பதை மறந்து தங்களின் அரசியல் செல்வாக்கை நிரூபித்துக் காட்டுவதற்குரிய ஒரு நிகழ்வாகவே பெருந்தலைவர் அஷ்ரப்பின் நினைவு தினத்தை மாற்றிக் கொண்டார்கள்.
அஷ்ரப்பின் 22 ஆவது நினைவு தினம் கடந்த ஆண்டு அக்கரைப்பற்றில் நடைபெற்றது. இங்கு தென்னிந்திய நடிகர் கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் சிறப்புரையாற்றுவதற்கு அழைக்கப்பட்டிருந்தார். 23 ஆவது நினைவு தினக் கூட்டத்திற்கு தமிழகத்தை சேர்ந்த பேராசிரியர் மு.அப்துல் காதர் சிறப்புரையாற்றுவதற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
ஆனால் 22ஆவது நினைவு தினத்தைப் போலவே 23ஆவது நினைவு தினமும் இழுபறி நிலையில் நடந்து முடிந்துள்ளது. கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் 11 நிமிடங்கள் பேசும் வகையிலே நேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது. அந்தளவுக்கு மிகவும் மட்டுப்படுத்தப்பட நேர ஒதுக்கீட்டிலேயே கூட்டம் நடைபெற்றது. இதற்கு 15ஆம் திகதி நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டமும் ஒரு காரணமாகும். மொத்தத்தில் ஒரு அவசரக் கூட்டம் போலவே கூடிக் கலைந்தது எனலாம்.
முஸ்லிம் காங்கிரஸ் மட்டுமன்றி அஷ்ரப்பின் பாசறையில் வளர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கும் தேசிய காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியவற்றின் முக்கிய உறுப்பினர்கள் இன்னும் அஷ்ரப்பின் புகழையே போற்றிக் கொண்டிருக்கின்றார்கள். அவரது கொள்கைகளைப் பின்பற்றுவதாகவும் கூறுகின்றனர். ஆனால், இவர்களில் பெரும்பாலானோர் அஷ்ரப்பின் கொள்கைகளுக்கு முற்றிலும் முரணாகவே பெரும்பாலும் நடந்து கொள்கின்றனர்.
அஷ்ரப் தென்கிழக்கு பல்கலைக்கழகம் உட்பட பல நிலையான அபிவிருத்திகளை மேற்கொண்டார். சுமார் 5 ஆயிரம் தமிழ், முஸ்லிம், சிங்கள இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்கியுள்ளார். இத்தனைக்கும் அவர் சுமார் 11 வருடங்கள் தான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். சுமார் 5 வருடங்கள் அமைச்சராக இருந்துள்ளார்.
ஆனால் அவரின் பாசறையில் வளர்ந்த சீடர்கள் சுமார் இருபது வருடங்களுக்கு மேலாக பாராளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சர்களாகவும் உள்ளனர். இந்த காலப்பகுதியில் எந்தவொரு நிலையான, போற்றத்தகும் அபிவிருத்தி சாதனைகளை செய்யவில்லை. ஆனால் அஷ்ரப் எனும் மாலுமியின் பெயரில் கப்பலை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
மேலும் 23 ஆவது நினைவு தினத்தை வழக்கம் போல தமது அரசியல் செல்வாக்கை பரிசோதித்து பார்க்கும் களமாகவே பயன்படுத்திக் கொண்டுள்ளார்கள். இன்று மர்ஹூம் அஷ்ரப்பின் சீடர்கள் முஸ்லிம்களின் கொள்கை ரீதியான அரசியலை வெறுமனே அதிகாரத்தை மாத்திரம் பெற்றுக் கொள்ளும் அரசியலாக மாற்றி வைத்துள்ளவர்கள்.
முஸ்லிம்களின் அரசியல் பலம் சிதைக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் காங்கிரஸ் என்னும் குடையின் கீழ் திரண்டு இருந்த முஸ்லிம் வாக்காளர்கள் தேசிய காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எனப் பல கட்சிகளிலும் கூறு போடப்பட்டுள்ளனர். இதற்கு அஷ்ரப்பின் சீடர்களுக்கு ஏற்பட்ட தலைவர் பதவி ஆசையும், அமைச்சர் பதவிகளில் உள்ள போதையுமே காரணமாகும்.
அஷ்ரப்பின் காலத்தில் முஸ்லிம்களின் அரசியல் மிகவும் பலம் வாய்ந்ததாக இருந்தது. அவர் முஸ்லிம்களின் அரசியலை இன்னும் பலப்படுத்தும் நோக்கில் தேசிய ஐக்கிய முன்னணி எனும் கட்சியையும் ஆரம்பித்தார். தேசிய கட்சியில் உள்ள முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.எம்.மன்சூர் போன்றவர்களுக்கு இக்கட்சியில் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை பலரும் ஏற்றுக் கொண்டு அவரோடு இணைந்து செயற்பட்டனர்.
ஆனால், அவரது மரணத்தின் பின்னர் முஸ்லிம் காங்கிரஸ் பல கூறுகளாக சுயநலம் எனும் ஆயுதத்தினால் வெட்டி கூறுபோடப்பட்டது. பல கட்சிகள் முளைத்தன. இன்று முஸ்லிம்களுக்கு பல அரசியல் தலைவர்கள் உள்ளனர்.ஆனால் எவரிடமும் சமூக சிந்தனை கிடையாது. தனிக்கட்சியை வைத்துக் கொண்டாலும் தேசிய கட்சிகளின் ஒரு அங்கமாகவே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
இவர்களின் இத்தகைய செயற்பாடுகளினால் முஸ்லிம் காங்கிரஸிலிருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சிக்குள் இணைத்துக் கொள்வதற்கு வீடு வீடாகச் செல்ல வேண்டிய திட்டத்தை வகுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு வீடுவீடாகச் சென்று அவர்களை கட்சியுடன் இணைத்துக் கொள்வதுதான் பெருந் தலைவர் அஷ்ரப்புக்கு செய்யும் மிகப் பெரிய அஞ்சலியாகும் என்று முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் 23ஆவது நினைவு தின நிகழ்வில் ஆற்றிய உரையின் போது தெரிவித்தார்.
முஸ்லிம் காங்கிரஸில் பிரிவினை என்பது மூன்று வகையில் ஏற்பட்டுள்ளது. ஒன்று சிலர் தனிப்பட்ட காரணங்களுக்காகக் கட்சியை விட்டு பிரிந்து சென்றார்கள். சிலர் கட்சி நிர்வாகத்தினரால் திட்டமிடப்பட்டு துரத்தப்பட்டார்கள். இன்னும் ஒரு பிரிவினர் அஷ்ரப்பின் கொள்கைகள் பாழாக்கப்பட்டுள்ளன என்ற விரக்தியில் அரசியலில் இருந்தே ஒதுங்கியுள்ளார்கள்.
பல்வேறு தனிப்பட்ட தேவைக்களுக்காக கட்சியை சின்னாபின்னமாக்கி விட்டு இன்று அவர்களை மீண்டும் இணைத்துக் கொள்வதற்கு திட்டமிட்டுள்ளோம் என்று சொல்லிக் கொள்வதெல்லாம் அப்படி ஒரு விடயம் நடந்தால்தான் உண்மை என்று ஏற்றுக்கொள்ளலாம். இது போன்று பல தடவைகள் கூறியுள்ளனர். ஆனால் அப்படி எதுவும் இதுவரை நடக்கவில்லை என்பது தான் கவலைக்குரிய விடயமாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM