என்.கண்ணன்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரண்டு முக்கியமான நாடுகளின் தலைவர்களை, இலங்கைக்கு வருமாறு அழைத்திருக்கிறார்.
ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமெரிக்காவுக்குச் செல்வதற்கு முன்னர், கியூபாவின் தலைநகர் ஹவானாவில் நடைபெற்ற ‘ஜி 77 பிளஸ் சீனா’ மாநாட்டில் பங்கேற்றிருந்தார்.
அவர் அந்தப் பயணத்தின் போது கியூபாவின் ஜனாதிபதி டயஸ் கனல் பேர்முடாஸை சந்தித்துப் பேச்சு நடத்தியிருக்கிறார்.
இந்தப் பேச்சுக்களின் போது, கியூப ஜனாதிபதியை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்திருக்கிறார். இந்த அழைப்பை டயஸ் கனல் பேர்முடாஸ் ஏற்றுக் கொண்டிருக்கிறார்.
அதுபோலவே, ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்க நியூயோர்க் வந்திருந்த ஈரானின் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியையும், ஜனாதிபதி ரணில் சந்தித்துப் பேசியிருக்கிறார்.
இதன்போது, ரணில் விக்கிரமசிங்கவை ஈரானுக்கு பயணம் மேற்கொள்ளுமாறு விடுக்கப்பட்ட அழைப்பை அவர் ஏற்றுக் கொண்டிருக்கிறார்.
அதுபோலவே, ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியை இலங்கைக்கு வருமாறும் ரணில் அழைத்திருக்கிறார். அந்த அழைப்பை அவர் ஏற்றுக் கொண்டிருக்கிறார்.
ஈரானின் உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள உமா ஓயா திட்டத்தின் கீழ் உள்ள, நீர்மின் உற்பத்தி நிலைய கட்டுமானப் பணிகள் தற்போது நிறைவடைந்திருக்கின்றன.
120 மெகாவாட் திறன் கொண்ட இந்த நீர்மின் உற்பத்தி நிலையத்தை திறந்து வைக்குமாறு ஈரானிய ஜனாதிபதியிடம் அழைப்பு விடுத்திருக்கிறார் ரணில் விக்கிரமசிங்க.
அடுத்த சில மாதங்களுக்குள் இந்த திறப்பு விழாவுக்கு நாள் குறிக்கப்படும். அதில் ஈரானிய ஜனாதிபதி பங்கேற்பார் என்று தெரிகிறது.
கியூபாவின் ஜனாதிபதிக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பும், ஈரானிய ஜனாதிபதிக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பும், அமெரிக்காவுக்கு இனிபான செய்திகளாக இருக்காது. பிடெல் கஸ்ட்ரோவின் காலத்தில் இருந்தே, கியூபாவை அமெரிக்கா விரோதியாக கருதி வந்திருக்கிறது.
கியூபாவில் கம்யூனிஸ ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவதற்கும், பிடெல் கஸ்ட்ரோவை கொலை செய்வதற்கும் சி.ஐ.ஏ. பலநூறு சதித் திட்டங்களை செயற்படுத்தி தோல்வி கண்டது.
அவரது காலத்தில் மாத்திரமன்றி அவரது தம்பி ரவுல் கஸ்ட்ரோவின் காலத்திலும் கூட கியூபாவை அமெரிக்காவினால் அசைக்க முடியவில்லை.
தனது தொண்டைக்குள் சிக்கியிருக்கும் முள் போலவே கியூபாவை அமெரிக்கா கருதி வந்திருக்கிறது.
கியூபாவில் இப்போது பல மறுசீரமைப்புகள் இடம்பெற்றிருந்தாலும், அமெரிக்காவின் அணுகுமுறையில் பெரிய மாற்றங்கள் இல்லை. அதேவேளை, அமெரிக்காவின் கவனம் இப்போது முழுவதும் சீனாவின் பக்கம் சென்றிருப்பதால், கியூபாவுடன் அதிகம் மோதிக் கொள்வதை தவிர்க்கிறது.
எவ்வாறாயினும் கியூபாவின் தலைவர் இலங்கைக்கு பயணம் மேற்கொள்வதை அமெரிக்கா எச்சரிக்கையுடன் தான் நோக்கும்.
சர்வதேச அரங்கில், இலங்கையை பொறுப்புக்கூற வைப்பதற்கு அமெரிக்கா மேற்கொண்ட நகர்வுகளை தோற்கடிக்கும் முயற்சிகளில் பாகிஸ்தானுடன் இணைந்து தீவிரமாகச் செயற்பட்ட நாடு கியூபா தான்.
சீனா, ரஷ்யாவை விடவும் இந்த நாடுகள், ஜெனிவாவில் இலங்கையைக் காப்பாற்றுகின்ற பிரசாரத்தை தீவிரமாக மேற்கொண்டிருந்தன.
அமெரிக்காவின் தடைகள், அழுத்தங்களையும் தாண்டி கியூபாவுடன் உறவுகளைப் பேணி வந்திருந்தது இலங்கை அரசாங்கம்.
இப்போது அந்த உறவுகளை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல அரசாங்கம் முயற்சிக்கிறது. இது அமெரிக்காவை எரிச்சலடையச் செய்யும் ஒரு நகர்வு.
அதுபோலத் தான், ஈரானிய ஜனாதிபதிக்கு விடுக்கப்பட்டிருக்கின்ற அழைப்பும், அமெரிக்காவுக்கு சீற்றத்தை ஏற்படுத்தக் கூடியது.
தற்போது அமெரிக்காவுக்கு சவாலாக இருக்கின்ற நான்கு நாடுகளில் சீனாவும், ஈரானும் முக்கியமானவை.
இந்த இரண்டும் அமெரிக்காவுக்கு கட்டுப்படாமல் எதிர் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. சீனா தனது பொருளாதார மற்றும் படைப் பெருக்கத்தின் மூலம், அமெரிக்காவை அச்சமடைய வைக்கிறது. ஆத்திரமூட்டிக் கொண்டிருக்கிறது.
ஈரான், அணுவாயுதங்களை தயாரிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதுடன், உலகளாவிய பயங்கரவாதத்துக்கும் துணை போவதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது.
இதனால் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் தொடர்ந்து உரசல்கள் நீடித்து வருகின்றன.
பாரசீக வளைகுடாவில் அமெரிக்க எண்ணெய்க் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்துவதும், ஐ.நா மற்றும், அமெரிக்காவின் தடையை மீறி எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபடும் ஈரானிய கப்பல்களை அமெரிக்கா சிறைபிடிப்பதும் என்று மத்திய கிழக்கில் ஒரு பனிப்போரே நடந்து கொண்டிருக்கிறது.
இன்னொரு பக்கத்தில் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகின் ஆதரவுடன் போரிடும் உக்ரேனுக்கு எதிராகப் பயன்படுத்துவதற்கு தனது ட்ரோன்களை ரஷ்யாவுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறது ஈரான்.
ஆக, அமெரிக்காவுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் முட்டி மோதிக் கொண்டிருக்கும் ஈரானுடன் இலங்கை நல்லுறவை ஏற்படுத்திக் கொள்ள எதிர்பார்க்கிறது.
ஈரானுடன் இலங்கை குறைந்த விலைக்கு எண்ணெயை வாங்கும் உடன்பாடு ஒன்றில் கையெழுத்திட்ட போதும், அமெரிக்காவின் தடைகளால், அதனை செயற்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது.
இவ்வாறான நிலையில் ஈரானிய தலைவரை நாட்டுக்கு அழைக்கும் இலங்கை அரசாங்கத்தின் முடிவும், அமெரிக்காவுக்கு சினமூட்டக் கூடிய விடயம் தான்.
ரணில் விக்கிரமசிங்க இலங்கையை ஒரு நடுநிலை நாடு என்றே அடையாளப்படுத்திக் கொண்டு இவற்றை கையாள முற்படுகிறார்.
அணிசேராக் கொள்கையை வைத்துக் கொண்டு அழுத்தங்களில் சிக்கிக் கொள்ளாமல் தப்பிக்கலாம் என்று எதிர்பார்க்கிறார்.
அதனால் தான் அவர் நியூயோர்க்கில் நான் சீனாவுக்கு சார்பானவனும் இல்லை, இந்தியாவுக்கு சார்பானவனும் இல்லை, இலங்கைக்கு சார்பானவன் என்று குறிப்பிட்டிருந்தார்.
சீனாவின் வழியிலும் இல்லை, இந்தியாவுடனும் கூட்டு இல்லை. எங்களின் வழி தனி வழி என்று அவர் நிரூபிக்க முற்பட்டிருக்கிறார். எல்லா தரப்புகளுடனும் இணக்கப்பாட்டுடன் நடந்து கொள்வது தான், அரசாங்கத்தின் இலக்கு என்று அவர் நடந்து கொள்ள முனைகிறார்.
சிங்கப்பூர் எவ்வாறு எல்லா தரப்புகளுடனும் இணங்கிச் செயற்படுகிறதோ அதேபோன்ற நிலையை அவர் திட்டமிடுகிறார்.
ஆனால் சிங்கப்பூரைப் போன்று இலங்கையினால் செயற்பட முடியுமா என்ற கேள்வி உள்ளது.
சிங்கப்பூர் இப்போது உலகின் முக்கியமான வர்த்தக கேந்திரமாக மாறியிருக்கிறது. சர்வதேச கப்பல் போக்குவரத்து மையங்களில் ஒன்றாக உருவெடுத்திருக்கிறது.
அதனால், சிங்கப்பூரைப் போல இலங்கையினால் செயற்பட முடியாது. பொருளாதார ரீதியாக செல்வாக்குப் பெற்ற நாடு ஒன்றின் தலைவர் ‘என் வழி தனி வழி’ என்று கூறினால் அதனை பிற நாடுகள் அங்கீகரிக்கும்.
ஆனால் இலங்கை அவ்வாறு கூறினால், தனிவழியிலேயே போய் காப்பாற்றிக் கொள் என்று கூறி விட்டு நகர்ந்து கொள்ளும். அவ்வாறான நிலை ஏற்பட்டால், பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையினால் என்ன செய்ய முடியும்?
இந்தியாவையும் பகைத்துக் கொள்ளாமல், சீனாவையும் பகைத்துக் கொள்ளாமல் இருக்கவே இலங்கை விரும்பும். அதற்காகத் தான் இந்த தனிவழிக் கதையை அமெரிக்காவில் போய் கூறியிருக்கிறார் ரணில்.
சீனாவின் ஆய்வுக் கப்பலுக்கு அனுமதி வழங்கும் விடயத்தில் இன்னமும் இழுத்தடித்துக் கொண்டிருக்கும் ரணில் விக்கிரமசிங்க, கடைசியில் அதற்கு அனுமதி அளிக்கப் போவது உறுதியாகியிருக்கிறது.
இந்தியாவின் எதிர்ப்புகளை அவர் பொருட்படுத்தாமல் இதனைச் செய்யப் போகிறார்.
அதற்காகவே அவர் இலங்கைக் கடல் எல்லைக்குள் எந்த உளவுக்கப்பலும் இருக்கவில்லை என்றும், ஆய்வுக் கப்பல்களுக்கு மாத்திரமே அனுமதி அளிக்கப்பட்டதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
தற்போது, வெளிநாட்டு கடற்படைக் கப்பல்களுக்கு அனுமதி அளிக்கும் பொதுவான நடைமுறைக் கொள்கை ஒன்றை அரசாங்கம் அறிவிக்கவுள்ளது. அதுவும், அமெரிக்காவுக்கோ, இந்தியாவுக்கோ சாதகமான ஒன்றாக இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
ரணில் விக்கிரமசிங்கவின் இந்த நகர்வுகள், மேற்குலகத்தினால் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. அவரது இந்த ஓட்டம் எதுவரை அனுமதிக்க கூடியது என்பதை மேற்குலகம் இப்போது, தீர்மானித்திருக்கும்.
அதற்கு அப்பால் ரணில் விக்கிரமசிங்க ஓடுவதற்கு முற்பட்டால், மஹிந்த ராஜ பக் ஷ அல்லது கோட்டாபய ராஜபக் ஷவுக்கு ஏற்பட்ட நிலை அவருக்கும் ஏற்படலாம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM