தேசியன்
கிழக்கு மாகாணம் பெரும்பான்மையாக தமிழ் பேசும் மக்களை கொண்ட பிரதேசமாகும். ஆனால் இங்குள்ள மக்கள் ஆளுநர்கள் விடயத்தில் ஆரம்ப காலந்தொட்டே குழப்பகரமான சிந்தனைகளை கொண்டவர்களாக விளங்குகின்றனர். 2019 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண ஆளுநராக எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டபோது இதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் தமிழ்ப் பேசும் இரண்டு தரப்பினருமாவர்.
அவருக்குப் பின்னர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்ட அனுராதா யஹம்பத் தமிழர்களையும் முஸ்லிம்களையும் கசக்கி பிழிந்த போது, அனைவரும் வாய் மூடி மெளனம் காத்தனர். தற்போதைய கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமானும் தற்போது இதில் சிக்கியுள்ளார். இவரை ஆரம்பத்திலிருந்து எதிர்த்து வந்தவர்கள் சிறிய எண்ணிக்கையான முஸ்லிம்களாவர். இதில் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய சுற்றாடல் துறை அமைச்சருமான ஹாபிஸ் நசீர் அஹமட் பிரதானமாக விளங்குகிறார்.
இவர் ஆளுநர் செந்திலை பகிரங்கமாகவே விமர்சித்திருந்தார். மலையகத்தில் போட்ட ஆட்டங்களை இங்கு போட முடியாது என முழங்கினார். உத்தியோகபூர்வ நிகழ்வுகளில் அவரை உரையாற்ற விடாது தடுத்தார். ஆனால், ஆளுநர் செந்தில் தொண்டமானின் பின்புலத்தையும் அவரது அதிரடி நடவடிக்கைகளையும் அமைச்சர் நசீர் அறிந்திருக்கவில்லையென்றே தெரிகின்றது.
ஒரு கட்டத்தில் தனது பாணியில் பதில் கூறத் தொடங்கினார் கிழக்கு ஆளுநர். காத்தான்குடி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தன்னைப் பற்றி பொய்யான கருத்துக்களை அமைச்சர் நசீர் கூறியதாக 250 மில்லியன் ரூபா நட்ட ஈடு கோரி தனது சட்டத்தரணி மூலம் ஆளுநர் செந்தில் கடிதம் அனுப்பினார். இந்த சம்பவம் ஆகஸ்ட் 3 ஆம் திகதி இடம்பெற்றது. அதன் பிறகு இதுவரை அமைச்சர் நசீர் வாய் திறந்து கிழக்கு ஆளுநரைப்பற்றி ஒன்றும் பேசியதாகத் தெரியவில்லை.
கிழக்கு மாகாணத்தின் நிர்வாக பதவிகளில் முஸ்லிம்களை ஆளுநர் நியமிக்கவில்லையென்பது அமைச்சர் நசீரின் முக்கிய குற்றச்சாட்டுகளிலொன்று. ஆனால் ஜூன் மாதம் 19 ஆம் திகதி கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தலைவராக சம்மாந்துறையைச் சேர்ந்த றனூஸ் நியமிக்கப்பட்டிருந்தார். இவர் கிழக்கை பிரதிநிதித்துவம் செய்யும் பாராளுமன்ற உறுப்பினர் முஸாரப்பின் சிபாரிசின் பேரில் நியமிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தான் அமைச்சர் நசீருக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.
மலையகத்தைச் சேர்ந்த பழம்பெரும் தொழிற்சங்கம் மற்றும் கட்சியொன்றின் தலைவராக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் விளங்குகின்றார். கட்சியின் அதி கூடிய செல்வாக்கு பிரதேசமாக மத்திய மாகாணத்தின் நுவரெலியா மாவட்டம் விளங்கினாலும் இவர் ஊவா மாகாணத்தை கட்டியெழுப்ப கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமானால் அங்கு அனுப்பி வைக்கப்பட்டார். தனக்கு வழங்கப்பட்ட பொறுப்பை சிறப்பாக செய்த ஆளுநர் செந்தில் தொண்டமான், மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெற்று ஊவா மாகாண தமிழ்க் கல்வி அமைச்சராகவும் பின்னொரு சந்தர்ப்பத்தில் பதில் முதலமைச்சராகவும் விளங்கினார்.
கிழக்கு வாழ் முஸ்லிம்களுக்கு நிர்வாக ரீதியான பதவிகள் கிடைப்பதற்கு தடையாகவே செயற்பட்ட ஒருவர் என்றால் அவர் முன்னாள் ஆளுநர் அனுராதா யஹம்பத்தாகத் தான் இருக்க முடியும்.
தனது பதவிக் காலத்தில் அவர் கிழக்கு மாகாணத்தின் போக்குவரத்து அதிகாரசபை, பொதுச் சேவைகள் ஆணைக்குழு, வீடமைப்பு அதிகார சபை, முன்பள்ளி மற்றும் சுற்றுலா பணியகம் ஆகியவற்றுக்கு முஸ்லிம்களையும் தமிழர்களையும் நியமிக்கவில்லை.
தென்மாகாணத்தைப் பிறப்பிடமாகக்கொண்டுள்ள அவர் கடும்போக்காளராகவும் விளங்கினார். ஏறாவூர் பொதுச்சந்தையை ஒரு சந்தர்ப்பத்தில் அவர் ‘ஏறாவூர் சிங்கள சந்தை’ என குறிப்பிட்டு நகர சபைக்கு கடிதம் எழுதியிருந்தார். அது மிகவும் விமர்சனங்களுக்குள்ளானது. அதே போன்று நூற்றுக்கு நூறு வீதம் முஸ்லிம் மக்கள் வாழ்ந்து வரும் ஏறாவூர் நகரிலிருந்து சில கிலோ மீற்றர்கள் தூரம் அமைந்துள்ள கரையோர பிரதேசமான புன்னக்குடா பகுதியை அறிவிக்கும் புன்னக்குடா வீதி என்ற பெயர்ப்பலகையை ‘எல்மிஸ் வல்கம’ என சிங்களப் பெயராக மாற்றுவதற்கு முடிவெடுத்தார். இப்படி பெயரை மாற்றுவதற்கு அவருக்கு கடிதம் எழுதியவர்கள் அப்பிரதேசத்தை சேர்ந்த பத்துக்கும் குறைவான நபர்களே என்பது தான் இதிலுள்ள வேடிக்கை.
சிங்களப் பெயரை சூட்டுவதற்காக தமிழ்ப் பெயர்ப்பலகை அகற்றப்பட்டவுடன் அப்பிரதேச மக்கள் கொதித்துப்போயினர். பின்பு அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் அவ்விடம் வந்து மீண்டும் பழைய தமிழ்ப் பெயர் கொண்ட பெயர்ப்பலகையை நாட்டியதுடன் ஆளுநரின் இனவாத செயற்பாட்டை வன்மையாகக் கண்டித்திருந்தார். முன்னாள் ஆளுநர் அனுராதா தனது பதவி காலத்தில் இறுதிப்பகுதியில் மேற்கொண்ட செயற்பாடுகள் இவை. இந்த சம்பவங்களையெல்லாம் அறிந்தவர்கள் தற்போதைய ஆளுநர் செந்தில் தொண்டமான் எவ்வளவோ பரவாயில்லை என்ற மனநிலையை இன்னும் எட்டாமலிருப்பது ஆச்சரியமே.
அதைவிட பெளத்த பேரினவாத நெருக்கடிகளில் கிழக்கு ஆளுநர் தற்போது சிக்கிக்கொண்டிருக்கின்றார். அவரை பதவி விலக்குமாறு கோரி ஒரு இலட்சம் கையெழுத்துக்களை திரட்டிக்கொண்டிருக்கின்றனர் ஐக்கிய சங்கத்தினர். இந்த நடவடிக்கை கடந்த 19 ஆம் திகதி திருகோணமலை மணிக்கூட்டு கோபுரத்துக்கு அருகில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை நிலாவெளி பெரியகுளம் பகுதியில் நிர்மாணிக்கப்படவிருந்த விகாரையின் நிர்மாணப்பணிகளை நிறுத்தி வைத்ததுமட்டுமல்லாது இது இனங்களுக்கு மத்தியில் முரண்களை ஏற்படுத்தும் என பெளத்த பிக்குகளை அழைத்து பேச்சு வார்த்தைகளையும் நடத்தியிருந்தார் ஆளுநர்.
ஆளுநருக்கு எதிராக கடந்த மாதம் 28 ஆம் திகதி குறித்த பிக்குகள் ஆர்ப்பாட்டமொன்றையும் முன்னெடுத்திருந்தனர். குறித்த பகுதியில் ஐந்நூறுக்கும் மேற்பட்ட தமிழ்க் குடும்பங்கள் வசித்து வர, இரண்டே இரண்டு சிங்கள குடும்பங்களுக்கு ஒரு விகாரை அமைத்தால் அது நியாயமானதில்லை என்பதே ஆளுநரின் விளக்கம். அது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய விடயமாகும். ஆனால், இந்நாட்டில் பெளத்த பிக்குகள் வைத்ததே சட்டம் என்றபடியால் இவ்விடயத்தில் ஆளுநரின் விளக்கங்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
இது இப்படி இருக்கவே தியாகி திலீபன் நினைவேந்தல் விவகாரம் தற்போது சர்ச்சைக்குரியதாகியுள்ளது. கஜேந்திரன் எம் பி. தலைமையிலான குழுவினர் தியாகி திலீபனின் நினைவு தின ஊர்வலத்தை திருகோணமலைப் பகுதியில் மேற்கொண்ட போது அங்கு வந்த சிங்களவர்கள் கஜேந்திரன் மீது தாக்குதல் மேற்கொண்டதோடு திலீபனின் உருவப்படம் தாங்கிய ஊர்தியையும் சேதப்படுத்தியிருந்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போது, ‘சிங்கள மக்கள் வாழும் பகுதிகளில் இவ்வாறு நினைவேந்தல் ஊர்வலத்தை முன்னெடுத்தமை தேவையில்லாத இனக்கலவரத்தை தூண்டுவதற்கான முயற்சி என்பதுடன் இதுபோன்ற ஊர்வலங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். ‘ஏனைய இனத்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படாதவகையில் பொறுப்புடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் நடந்துகொள்ள வேண்டும். இதுபோன்ற சம்பவங்களுக்கு எதிராக பொலிஸாரினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’ என்றும் கூறியுள்ளார்.
இது கிழக்கு வாழ் தமிழ்த் தேசியவாதிகளுக்கு கோபத்தை கிளறி விட்டுள்ளது. ஆரம்பத்தில் பிரதேச வாழ் முஸ்லிம் அரசியல்வாதிகள் மற்றும் பிரமுகர்கள் ஆளுநரை வசைபாடினர். பின்பு பிரதேசத்தின் பிக்குகள் உட்பட பெளத்த சிங்கள மக்கள் அவரை பதவி விலக்க கையெழுத்துகளை சேகரிக்க ஆரம்பித்துள்ளனர்.
இப்போது அதே பிரதேசத்தின் தமிழ்த் தேசியவாதிகள் அவரின் உரைக்கு போர்க்கொடியை தூக்கியுள்ளனர். கையெழுத்து சேகரிப்பின் பின்னணியில் பெளத்த பேரினவாதிகள் இருப்பதை அறியலாம். கிழக்கு மாகாணத்துக்கு தற்போது கிடைத்திருக்கும் ஒரு தமிழ் ஆளுநரைக்கொண்டு கிழக்கின் முஸ்லிம்கள் மற்றும் தமிழர்கள் இரண்டு தரப்பினரும் எந்தளவுக்கு பயன்களையும் உரிமைகளையும் பெற்றுக்கொள்ளலாம் என்று சிந்திப்பதை ஆரம்பத்திலேயே தவிர்த்து விட்டுள்ளனர். இதன் பாதிப்பு அடுத்ததாக ஒரு கடும்போக்கு சிங்கள ஆளுநர் நியமிக்கப்படும் போது அவர்களுக்கு விளங்கும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM