கார்வண்ணன்
தற்போது ஜெனிவாவில் நடந்து கொண்டிருக்கும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது அமர்வில், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தினால் சமர்ப்பிக்கப்பட்டிருந்த அறிக்கையில், நினைவேந்தல் உரிமை பற்றிய குறிப்பு 45 ஆவது விடயமாக இடம்பெற்றிருக்கிறது.
“நல்லிணக்கத்துக்கான தனது உறுதிப்பாட்டை அரசாங்கம் உறுதிப்படுத்தும் அதேவேளையில், நினைவேந்தல் செய்யும் முயற்சிகளையும் தடுக்கிறது, அது பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கையை மேலும் சிதைக்கிறது.
உதாரணமாக, கடந்த ஜூலை 23 அன்று, 1983 கறுப்பு ஜூலை கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையிலான ஒரு சிவில் சமூக நினைவேந்தலை, பொலிஸார் வன்முறை மூலம் கலைத்தனர்.
பாதிக்கப்பட்டவர்களை நினைவு கூருவதற்கும் துக்கம் அனுசரிப்பதற்கும் பாதுகாப்பான இடங்களை அனுமதிப்பது நல்லிணக்கத்துக்கான ஒரு முக்கியமான சமிக்ஞை ” என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
2009இல் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர், கேள்விக்குள்ளாகிய பல விடயங்களில் நினைவேந்தல் உரிமையும் ஒன்று.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உயிருடன் திரும்பக் கிடைப்பார்களா என்பது எந்தளவுக்கு நிச்சயமற்றதாக இருந்ததோ, அதுபோன்று தான் நினைவேந்தல் உரிமையை மீளப் பெறுவதும் சந்தேகத்துக்குரியதாகவே காணப்பட்டது.
பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதிக்கு எந்தளவுக்கு உத்தரவாதமற்ற நிலை இன்றைக்கு இருக்கிறதோ, அதேபோன்று நினைவேந்தல் உரிமையும் உத்தரவாதம் அற்ற நிலை தான் காணப்பட்டது.
குறிப்பாக ராஜபக் ஷவினரின் ஆட்சிக்காலங்களில், நினைவேந்தல் என்பது ஒரு பயங்கரவாத குற்றமாகவே பார்க்கப்பட்டது.
நினைவேந்தல்களில் ஈடுபட்டவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, நீண்டகாலம் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
தமிழ் மக்கள் போர்க்காலத்தை மீள நினைவுபடுத்திக் கொள்ளக் கூடாது. தங்களுக்காக உயிர் நீத்தவர்களை, தங்களின் உறவுகளை நினைவேந்தக் கூடாது என்பதில், ராஜபக் ஷவினர் உறுதியாக இருந்தனர். அதனால் தான், போர் முடிந்த கையுடன், வடக்கு, கிழக்கில் காணப்பட்ட தமிழர்களின் அனைத்து போர் நினைவுச் சின்னங்களும், துயிலுமில்லங்களும் இடித்தழிக்கப்பட்டன. அவற்றின் மீது படைத்தளங்கள் அமைக்கப்பட்டன.
மைத்திரி - ரணில் கூட்டு அரசாங்கத்தின் காலத்தில், நினைவேந்தலுக்கான வெளி ஒன்று விடப்பட்டது. அது சர்வதேச சமூகத்தை கையாளுவதற்காகவும், சர்வதேச சமூகத்தின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்காகவும், விட்டுவைக்கப்பட்ட ஒரு நீக்கல் என்றே அதனைக் குறிப்பிடலாம்.
ரணில் விக்கிரமசிங்கவின் தற்போதைய அரசாங்கத்தின் கீழும், நினைவேந்தலுக்கான உரிமை கேள்விக்குட்படுத்தப்பட்ட ஒன்றாகத் தான் இருக்கிறது.
அதனைச் சுட்டிக்காட்டியே ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் தனது அறிக்கையைப் பதிவிட்டிருந்தார்.
கடந்த ஜூலை மாதம் கொழும்பில் கறுப்பு ஜூலை நினைவேந்தலை முன்னெடுக்க முயன்ற சிவில் சமூகத்தினர், அடித்து விரட்டப்பட்டனர்.
அதைவிட, வடக்கு கிழக்கில் நினைவேந்தல் உரிமையைப் பயன்படுத்துவதற்கான வெளி, தமிழர்களுக்கு திறந்து விடப்படவில்லை என்பதை உணர்த்தியிருக்கின்றன, திருகோணமலையில் கடந்த ஞாயிறன்று நடந்த சம்பவம்.
அம்பாறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணம் செய்து கொண்டிருந்த தியாக தீபம் திலீபன் உருவப்படம் தாங்கிய நினைவேந்தல் ஊர்தி, திருகோணமலை கப்பல்துறைப் பகுதியில், சிங்களக் காடையர்களின் தாக்குதலுக்கு உள்ளாகியது. கப்பல்துறை இராணுவ முகாமுக்கு அருகே, பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்கள் முன்னிலையில் இந்த தாக்குதல் இடம்பெற்றிருந்த போதும், அவர்கள் இதனைத் தடுக்க முற்படவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருக்கிறது.
புலனாய்வாளர்களே இந்த தாக்குதலின் பின்னால் இருந்தனர் என்றும், பிறகு எப்படி அவர்கள் இந்த தாக்குதலை தடுக்க முற்படுவார்கள் என்றும் கேள்வி எழுப்பியிருந்தார், பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன்.
தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் பல சந்தர்ப்பங்களில் இராணுவ, பொலிஸ் அழுத்தங்களுக்கு உள்ளாகியிருக்கிறது. யாழ்ப்பாணத்தில் அதனைத் தடுப்பதற்கு நீதிமன்ற உத்தரவுகளைக் கூட பொலிஸார் பயன்படுத்திப் பார்த்தனர்.
அவற்றையெல்லாம் மீறி இந்த நினைவேந்தல் இடம்பெற்று வந்திருக்கின்ற நிலையில், ஊர்தி பவனி மீதும் அதில் பயணம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.
இந்தச் சம்பவம், தமிழர்களின் நினைவேந்தல் உரிமை மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல். அதேவேளை இந்தச் சம்பவத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் தாக்கப்பட்ட விவகாரமே அரசியலில் பலரால் முன்னிறுத்தப்பட்டிருக்கிறது.
சுமந்திரன் வெளியிட்ட அறிக்கையிலும், வேறு பல அரசியல் பிரமுகர்கள் வெளியிட்ட அறிக்கைகளிலும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் தாக்கப்பட்டது பற்றியே குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழர்களின் நினைவேந்தல் உரிமை மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் அங்கு மறைக்கப்பட்டிருக்கிறது.
கொழும்பில் கறுப்பு ஜூலை நினைவேந்தலைத் தடுக்க முயன்ற சம்பவத்தை நினைவேந்தல் உரிமையாக அடையாளப்படுத்தியவர்கள், திலீபன் நினைவேந்தல் ஊர்தி தாக்கப்பட்டதை, ஏன் நினைவேந்தல் உரிமை மீதான தாக்குதலாக அடையாளப்படுத்தாமல் மறைத்தனர்?
இதனை பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் மீதான தாக்குதலாக மட்டும் அடையாளப்படுத்திக் கண்டித்தவர்கள், இன்னமும் புலிவெறுப்பு அரசியல் செய்யும் நிலையிலேயே இருக்கின்றனர்.
திலீபன் நினைவு ஊர்தி மீது தாக்குதல் நடத்தியவர்களிடம் இனவெறுப்பும், புலிவெறுப்பும், இனவாதமும் நிரம்பியிருந்தது. புலிகளை நினைவு கூரும் உரிமையை தமிழர்களுக்கு விட்டு வைக்க கூடாது என்ற சிந்தனையே அவர்களிடம் மேலோங்கியிருக்கிறது.
அதேவேளை, இவ்வாறான செயற்பாட்டைக் கண்டிக்காமல், வெறுமனே பாராளுமன்ற உறுப்பினர் மீதான தாக்குதலாக மட்டும் அடையாளப்படுத்தியது, அபத்தமான அரசியல்.
திலீபன் ஆயுதப் போராட்டம் நடத்திய உயிர் நீத்த ஒருவர் அல்ல. அவர் அகிம்சைப் போர் நடத்தி உயிர் துறந்தவர்.
இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக திலீபன் அந்த அகிம்சைப் போரை நடத்தவில்லை. இந்திய அரசிடம் தான் அவர் நீதியைக் கோரினார்.
அவரது ஐந்து அம்சக் கோரிக்கையை நிறைவேற்றாமல் இந்தியா, அவரைச் சாகும் நிலைக்குத் தள்ளியது.
இவ்வாறான நிலையில், திலீபன் நினைவேந்தல் ஊர்தி மீது நடத்தப்பட்டிருக்கின்ற தாக்குதல், கிழக்கில் இனப்பதற்றம் அதிகரித்து வருவதையே உணர்த்துகிறது.
தமிழர்களின் காணிகள் அபகரிக்கப்பட்டு, தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் விகாரைகள் அமைக்கப்படுவதும் அதனால் தோற்றம் பெறும் முரண்பாடுகளும் இனப்பதற்றத்தை உருவாக்குவதாக அண்மைக்காலங்களில் மனித உரிமை அமைப்புகளும், சிவில் சமூக அமைப்புகளும் சுட்டிக்காட்டியிருந்தன.
அரசாங்கம் அதனைக் கண்டு கொள்ளவில்லை. மாறாக அதனைத் தூண்டி விட்டது.
திலீபன் நினைவேந்தல் ஊர்தி மீது நடத்தப்பட்ட தாக்குதல், ஒரு திட்டமிட்ட சதி என்றும், நினைவேந்தல் உரிமையை தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒரு சூழ்ச்சி என்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி குற்றம்சாட்டியது.
அதனை நிரூபிக்கும் வகையில், திருகோணமலையில் நடத்தப்பட்ட தாக்குதலைச் சுட்டிக்காட்டி, திலீபன் நினைவேந்தல் ஊர்தி வவுனியா ஊடாக பயணம் செய்வதால், இனப்பதற்றம் ஏற்படும் என்று நீதிமன்றத்தில் தடை உத்தரவு கோரியிருந்தனர் வவுனியா பொலிஸார்.
எனினும், நீதிமன்றம் அதனை நிராகரித்ததுடன், அந்த ஊர்திக்குப் பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட்டது.
யாழ்ப்பாண நீதிமன்றமும் அவ்வாறே தடை உத்தரவு பிறப்பிக்க மறுத்தது.
இனப்பதற்றம் என்ற பெயரில் தமிழரின் நினைவேந்தல் உரிமையின் மீது கை வைக்க முற்படுகிறது சிங்கள பௌத்த பேரினவாதம்.
தற்போது, தவிர்க்க முடியாமல் விடப்பட்டுள்ள இந்த நீக்கலையும் அடைத்து விடுவது தான் அவர்களின் இலக்கு.
அதனைத் தான் நிரூபித்திருக்கிறது கப்பல்துறை தாக்குதல்.
இதனைப் புரிந்து கொள்ளாமல் அல்லது புரிந்து கொள்ள விரும்பாத அரசியல்வாதிகள், பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் குறிவைக்கப்பட்டதை மையப்படுத்துகின்றனர்.
கஜேந்திரன் தாக்கப்பட்டது உண்மையாயினும், தாக்கியவர்களின் நோக்கம் அதுவல்ல. கஜேந்திரனைத் தாக்குவதால் அவர்களுக்கு எந்த இலாபமும் கிட்டப் போவதும் இல்லை.
அவர்களின் இலக்கு நினைவேந்தல் உரிமை தான். அதனை புரிந்து கொள்ளாதவர்கள் அல்லது புரிந்து கொள்ள விரும்பாதவர்கள் தான், இந்த விவகாாரத்தை திசை திருப்ப முற்படுகிறார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM