திருமணத் தடையை நீக்கும் எளிய பரிகாரங்கள்...!

23 Sep, 2023 | 04:20 PM
image

இன்றைய திகதியில் இளைய தலைமுறையினரிடத்தில் திருமணம் குறித்த பிம்பமும், கட்டமைப்பும் வேறொரு வடிவில் உருவெடுத்திருக்கிறது. திருமணம் என்பதனை 'குடும்பச் சுமை' என்றே பலரும் கருதுகிறார்கள். ஆனால் திருமண பந்தம் என்பது ஒவ்வொருவருக்கும் உண்டான சமுதாயக் கடமையாகும்.‌ பிறந்து, வளர்ந்து, பதின்ம வயதை கடந்து, கல்வி கற்று, வேலை வாய்ப்பை பெற்று, வருவாய் ஈட்டத் தொடங்கிய பிறகு... ஆணாக இருந்தாலும்.. பெண்ணாக இருந்தாலும்... மாற்று பாலினத்தின் துணை தேவை. அன்பை பகிரவும் சலனப்படும் மனதிற்கு அரண் அமைக்கவும் துணை தேவை. இதனால் எம்முடைய பெரியோர்கள் திருமணம் என்பது மறைந்த எம்முடைய முன்னோர்களின் கர்மாக்களுக்கு விடுதலை அளிக்கவும், அவர்களின் ஆன்மா சாந்தி அடையவும் பயன்படும் ஒரு உன்னதமான உறவு என குறிப்பிட்டனர்.

அதனால் திருமணத்தை நாற்பது வயதிற்கு பிறகு செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் தவறு என்பதனை இன்றைய தலைமுறையினர் உணர்ந்து கொள்ள வேண்டும். 'காலத்தே பயிர் செய்' என்பது போல் திருமண வயதை எட்டியவுடன் திருமணம் செய்து கொள்ள வேண்டும்.‌

இன்றைய திகதியில் இளைய தலைமுறையினர் திருமணம் செய்து கொள்ளாமல்.. உறவில் தொடர்வதும், வரையறுத்த உறவில் நீடித்திருப்பதும் தவறு என்பதனையும் புரிந்து கொள்ள வேண்டும்.

சிலர் காதலித்து திருமணம் செய்து கொள்வர். திருமணத்திற்கு பிறகு இவர்களின் காதலில் முதிர்ச்சி தன்மை இல்லாததால் பிரிந்து விடுகிறார்கள்.‌

ஆனால் இவர்களைப் போல் அல்லாமல் பெற்றோர்களின் சொல்பேச்சை கேட்டு.., அவர்களின் வரன் தேடும் முயற்சிக்கு ஆதரவளித்து வரும் இளம் பெண்களையும், இளம் ஆண்களையும் இந்த சமூகமும், அவர்களின் முன்னோர்களும் மனதார  வாழ்த்துகிறார்கள். இந்நிலையில் திருமண முயற்சியில் ஈடுபட்டு இருந்த காலகட்டத்தில் காரணம் தெரியாமல் பல்வேறு தடைகளை எதிர் கொண்டிருக்கும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் எம்முடைய ஆன்மீக பெரியோர்கள் பின்வரும் பரிகாரங்களை முன்மொழிந்திருக்கிறார்கள். இந்த பரிகாரங்களை தொடர்ச்சியாகவும், உள்ளன்போடும் மேற்கொள்ளும் போது ஆயுள் முழுவதும் இன்பத்தை அள்ளித் தரும் திருமண பந்தம் ஏற்படுவது உறுதி.‌

ஒவ்வொரு வியாழக்கிழமைகளில் காலையில் நீங்கள் நீராடும் போது உங்களுடைய நீரில் சிறிதளவு மஞ்சள் தூளை அல்லது மஞ்சளை கலந்து, அந்த நீரில் நீராடவும். இதனால் குரு அருள் கிடைக்க பெற்று உங்கள் திருமணம் நல்லபடியாக நடந்தேறும். அத்துடன் இல்லாமல் வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் மஞ்சள் வண்ணம் அல்லது மஞ்சள் வண்ணம் கலந்த ஆடைகளை உடுத்துங்கள். மேலும் சிலருக்கு உங்களுக்கு பாடசாலையில் பாடங்களை கற்பித்த ஆசிரியர் அல்லது ஆசிரியை அவர்களை சந்தித்தால்.... அவர்கள் விருப்பத்திற்குரிய பரிசையோ அல்லது உணவையோ வழங்கினாலும் உங்களுக்கு குருவின் ஆசி கிடைக்கப்பெற்று திருமண பந்தம் உறுதியாகும்.

‌காதல் திருமணமாக இல்லாமல் பெற்றோர் நிச்சயித்த திருமணமாகத்தான் இருக்க வேண்டும் என்று பெற்றோரின் விருப்பத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்கள் ஊடாக கிடைக்கும் பெண்ணைத்தான் மணப்பேன் என காத்திருக்கும் ஆண்கள் உங்களுக்கு உரிய மணப்பெண் விரைவில் கிடைக்க அரச மரத்தடி விநாயகரை திங்கட்கிழமைகளில் வணங்க வேண்டும்.

அதேபோல் காதலித்து திருமணம் செய்து கொள்வதை விட பெற்றோர்கள் பார்த்து வைக்கும் மணமகனை தான் மணப்பேன் என உறுதியுடன் தவமிருக்கும் பெண்கள்... திங்கட்கிழமைகளில் சிவனை தரிசித்து 21 முறை வலம் வந்தால் உங்கள் மணாளன் விரைவில் கிடைப்பார். திருமணம் நல்லபடியாக நடந்தேறும். அதன் போது சிவனுக்கு பால் அபிஷேகம் செய்வதற்கான பாலை சுத்தமான பசும்பாலை வாங்கித் தாருங்கள். அதனுடன் சிவனுக்கு பாலாபிஷேகம் நடைபெறும் தருணத்தை கணக்கிட்டு அதன் போது மனதில் 'ஓம் பார்வதி பதயே நமஹ' என்ற மந்திரத்தை மனதில் 108 முறை உச்சரிக்க வேண்டும்.‌ அதேபோல் இந்த பரிகாரத்தை தொடர்ந்து ஒன்பது வாரங்களுக்கு செய்ய வேண்டும். அப்போதுதான் முழுமையான பலன் கிடைக்கும்.

அதேபோல் திருமணத்திற்காக காத்திருக்கும் ஆண்களும், பெண்களும் தங்களுடைய செல்போன்களில் முகப்பு படமாக சிவன் பார்வதி இணைந்திருக்கும் புகைப்படத்தையோ அல்லது அர்த்தநாரீஸ்வரர் புகைப்படத்தையோ வைத்துக் கொள்ளுங்கள். இதனை நாளாந்தம் அடிக்கடி பார்ப்பதன் மூலம் இந்த பிரபஞ்சம் உங்களுக்கான துணையை... பொருத்தமான துணையே தேடித் தரும்.

அதேபோல் ஆணாக இருந்தாலும் அல்லது பெண்ணாக இருந்தாலும் உங்களுடைய ஜென்ம நட்சத்திரத்திற்கு பலனளிக்கும் நட்சத்திர தாரை தினத்தன்று உங்கள் வீட்டுக்கு அருகே இருக்கும் வாழை தோப்பிற்குள் சென்று அங்குள்ளவர்களிடம் சொல்லி வாழை மரத்தின் அடி வேரை அதனை சிறிதளவு வெட்டி எடுத்து, நீங்கள் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். இதுவும் உங்களுக்கு உரிய மங்கையையோ அல்லது மணாளனையோ வசப்படுத்தி அழைத்து வரும்.‌

இந்தப் பரிகாரங்கள் மூலம் மன வாழ்க்கையில் இணையும் மணமக்கள் திருமணத்தின் உன்னதமான பின்னணியை உணர்வால் உணர்ந்து ஆயுள் முழுவதும் பரஸ்பர அன்பு செலுத்தி மகிழ்ச்சியோடு இல்லறம் நடத்தி தங்களின் கர்மாவை ஆனந்தத்துடன் கழிப்பதுடன் தங்களது முன்னோர்களின் கர்மாவையும் அளித்து அவர்களையும் மோட்சத்திற்கு அனுப்பி வைப்பர்.

தொகுப்பு சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right