(ஆர்.ராம்)
அமுலில் உள்ள பயங்கரவாத தடுப்புச் சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும் என்பதோடு சர்வதேச பயங்கரவாதத்தினை காரணம் காண்பித்து கொண்டுவரப்படும் எந்தவொரு மாற்றுச் சட்டங்களையும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று தமிழ்த் தலைவர்கள் மீண்டும் கூட்டாக அறிவித்துள்ளனர்.
அத்துடன், இறுதியாக வெளியிடப்பட்ட உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தில் நிறைவேற்று அதிகாரத்தினை பலப்படுத்தும் வகையிலும் கடுமையான அடக்குமுறைகளை பிரயோகப்படுத்தும் வகையிலும் உள்ளடக்கம் காணப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவின் பணிப்புரைக்கு அமைவாக, கடந்த 15 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் ஊடாக உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் வெளியிடப்பட்டுள்ள நிலையிலேயே தமிழ்த் தலைவர்களான, இலங்கை தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தருமலிங்கம் சித்தார்த்தன், ரெலோ தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், ஈ.பி.ஆர்.எல்.எப்.தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கருத்து வெளியிடும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தனர். அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு,
சுமந்திரன்
பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கையில், உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் இரண்டாவது தடவையாக வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதில் பெரிய மாற்றங்கள் எவற்றையும் காணவில்லை. குறிப்பாக, தடுத்துவைப்பதற்கான அனுமதியை வழங்கும் அதிகாரம் பாதுகாப்பு அமைச்சரிடமிருந்து பாதுகாப்புச் செயலாளருக்கு சென்றுள்ளது. பொலிஸ் நிலையத்தில் மூன்று மாதங்கள் தடுத்து வைக்கும் நிலைமையானது இரண்டாக்கப்பட்டுள்ளது. நீதிபதியின் அனுமதியுடன் 18 மாதங்கள் தடுத்து வைக்கப்படும் நிலைமையானது 12ஆக குறைக்கப்பட்டுள்ளது.
ஆனால், அதன் உள்ளடக்கத்தில் மாற்றங்கள் எவையும் ஏற்படுத்தப்படவில்லை. குறிப்பாக, பயங்கரவாதம் என்பது தொடர்பான வரைவிலக்கணம் பரந்து பட்டதாகவே நீடிக்கின்றது. நிறைவேற்று அதிகாரம் நீக்கப்பட வேண்டும் என்ற வலியுறுத்தல்கள் காணப்படுகையில் உத்தேச சட்டமூலத்தில் நிறைவேற்று அதிகாரத்துறைக்கு மேலும் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதன்மூலம், ஜனாதிபதி, தொழிற்சங்க நடவடிக்கைகள் மற்றும் சிவில் அமைப்புக்களின் செயற்பாடுகளை நேரடியாக கட்டுப்படுத்த முடியும். அத்துடன் தடை செய்வதற்கும் முடியும்.
அத்தோடு, பயங்கரவாத தடைச்சட்டத்தில் காணப்பட்ட மீளாய்வுக்குழு என்ற விடயம் நீக்கப்பட்டுள்ளமையும் பின்னடைவாகும். நீதிவான் பயங்கரவாதத்துடன் தொடர்புடையவரில்லை என விடுவித்தாலும் விளக்கமறியலில் வைக்கும் நிலைமைகள் காணப்பட்டுள்ளதால் நீதிமன்றத்தின் அடிப்படைத் தத்துவமும் மீறப்படுவதாகவே உத்தேச சட்டமூலம் உள்ளது.
எது, எவ்வாறாக இருந்தாலும் எம்மைப்பொறுத்தவரையில் புதிதாக ஒரு சட்டம் தேவையில்லை என்பதோடு, பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும் எமது முடிவில் மாற்றமில்லை என்றார்.
சித்தார்த்தன்
பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் கூறுகையில், உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அல்ல பயங்கரவாத தடை சம்பந்தமாக எந்தவொரு சட்டமும் தற்போதைய சூழலில் நாட்டுக்குத் தேவையில்லை.
கடந்த காலத்தில் தற்போது அமுல்படுத்தப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டத்தினால் தமிழ் மக்கள் சொல்லொண்ணாத் துன்பங்களை அனுபவத்தினர் பகிரங்கமானதொரு விடயமாகும் என்பதோடு, அது ஒரு இனத்தினை மையப்படுத்தி பிரயோக ரீதியாக நடைமுறைப்படுத்தப்படுத்தப்பட்டதும் முக்கியமான விடயமாகின்றது.
நாட்டில் காணப்படுகின்ற குற்றவியல் சட்டங்களுக்கு அமைவாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் ஊடாக பயங்கரவாதத்தினை கட்டுப்படுத்துவதற்கான இயலுமைகள் காணப்படுகையில் பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.
அவ்வாறிருக்கையில் தற்போது சர்வதேசத்தினை திருப்திப்படுத்துவது போன்று ஒப்பனைக்காக திருத்தங்களை மேற்கொள்வது போன்றதொரு செயற்பாடு காண்பிக்கப்பட்டு உத்தேச சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளது என்றார்.
செல்வம் அடைக்கலநாதன்
செல்வம் அடைக்கலநாதன் எம்.பி.கூறுகையில், பயங்கரவாதத் சட்டத்தினால் எமது இளைஞர், யுவதிகள் உட்பட பலதரப்பட்டவர்களும் இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளார்கள்.
இந்நிலையில், போர் நிறைவுக்கு வந்து 14 ஆண்டுகளாகின்ற நிலையில் பயங்கரவாத தடைச்சட்டம் அவசியமற்றதொன்றாக காணப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் சபை உட்பட, சர்வதேச நாடுகள் அனைத்தும் பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குவது குறித்து தொடர்ச்சியான வலியுறுத்தல்களைச் செய்து வருகின்றபோதும் இலங்கை அரசாங்கம் அதனை முன்னெடுக்கவில்லை.
தொடர்ச்சியாக புதிய பெயர்களுடன் புதிய வடிவில் பழைய உள்ளடக்கங்களைக் கொண்ட சட்டமூலத்தினையே தயாரித்துக்கொண்டு காலத்தினைக் கடத்தும் செயற்பாட்டையே முன்னெடுத்து வருகின்றது. ஆகவே, தொடர்ந்தும் இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுப்பதைத் தவிர்த்து முழுமையாக பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்டு அடிப்படை உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றார்.
சுரேஷ் பிரேமச்சந்திரன்
சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறுகையில்,
தற்காலிக ஏற்பாடுகளாக கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டம் தற்போது மூன்று தசாப்தங்களுக்கு மேலாக நீடித்து வருகின்றது. ஆயுதம் தாங்கிய போராட்டம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் ஐக்கிய இலங்கைக்குள் தீர்வினை அடைவதற்கு தமிழ்த் தரப்புக்கள் அனைத்தும் தயார் என்ற அறிவிப்பு விடுக்கப்பட்டதன் பின்னரும் பயங்கரவாத தடைச்சட்டம் அமுலில் இருப்பதும், அதனைப் பிரயோகித்து சாதாரண மக்களுக்கு காணப்படுகின்ற அடிப்படை உரிமைகளை மீறுவதும் துர்ப்பாக்கிய நிலையாகும்.
எம்மைப்பொறுத்தவரையில் ஆயுதப்போராட்டம் முடிவுக்கு வந்த நிலையில் பயங்கரவாத தடைச்சட்டமும் முழுமையாக நீக்கப்பட வேண்டும். மாறாக அந்தச் சட்டத்தினை அமுலில் வைத்துக்கொண்டு ஆயுதப்போராட்டத்திற்கு அடிப்படையான காரணங்களை மீண்டும் ஏற்படுத்துவதற்கு முனைவது பொருத்தமற்ற செயற்பாடாகும்.
இந்நிலையில் தான் தற்போது பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பதிலாக மூன்றாவது தடவையாக புதியதொரு மாற்றுச்சட்டத்தினை கொண்டுவருவதாக அரசாங்கம் கூறுகின்றது. அதற்காக இரண்டாவது தடவையாக உத்தேச சட்டமொன்று வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிவித்தலின் பிரகாரம், பல்வேறு விடயங்கள் அடிப்படை உரிமைகளையும், சுதந்திரங்களையும் பறிப்பவையாகவே உள்ளன. விசேடமாக, உரிமைகளுக்காக முன்னெடுக்கப்படும் போராட்டங்கள், தொழிற்சங்க நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கான இலக்கு வைக்கப்பட்ட ஏற்பாடுகள் உள்ளன.
இதனைவிடவும், நிறைவேற்று அதிகாரத்தினைக் கொண்டுள்ள ஜனாதிபதிக்கு மேலும் அதிகாரங்களை வழங்குவதோடு, அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள அடிப்படை உரித்துக்களுக்கான ஏற்பாடுகளை மீறிச் செயற்படுவதற்கான அதிகாரங்களை வழங்கும் விடயங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
ஆகவே, இவ்விதமான சட்டத்தினை மீண்டும் ஒருவாக்கி நடைமுறைப்படுத்துவதன் ஊடாக, இனவிடுதலைச் செயற்பாடுகளை முடக்கி அடக்குமுறையை அரசாங்கம் பிரயோகிப்பதற்கு முனைகின்றதா என்ற கேள்வி எமக்கு உள்ளது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM