தேசிய அரசாங்கத்துடனான ஒப்பந்தத்தை நீடிப்பதா இல்லையான என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் விரைவில் தீர்மானிக்கப்படும் என போக்குவரத்து ராஜாங்க அமைச்சரும் கட்சியின் ஊடகப் பேச்சாளருமான டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து ஆட்சியமைத்த தேசிய அரசாங்கத்துடன் கடந்த 2015 ஆம் ஆண்டு செப்படம் மாதம் மேற்கொண்ட இரண்டு வருட ஒப்பந்தம் இந்த ஆண்டு மூன்றாம் காலாண்டில் நிறைவடைய உள்ளது.

2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21 ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாசீம் மற்றும் சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க ஆகியோர் தேசிய அரசாங்கம் அமைக்கும்  உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருந்தனர். இந்த உடன்படிக்கை இவ்வருடம் ஆகஸ்ட் 21 ஆம் திகதியுடன் முடிவடைகின்றது.

இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த உடன்படிக்கை தொடர்பில் எதுவும் இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.

எனினும் கட்சியின் யாப்பு பிரகாரம் இவ்வாறான விடயங்கள் தொடர்பான தீர்மானங்கள் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்க வேண்டும் என தெரிவித்தார்.