வளர்ச்சியை நோக்கி நாட்டை வழிநடத்துவதே நோக்கம் : இலங்கையர்களிடமும் சர்வதேசத்திடமும் ஆதரவு இருக்குமென எதிர்பார்க்கின்றேன் - ஐ.நா. கூட்டத்தொடரில் ஜனாதிபதி

22 Sep, 2023 | 06:04 AM
image

தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தின் வளமான எதிர்காலத்தை உறுதிசெய்து, நாட்டின் அனைத்து பிரிவினருக்கும் பயனளிக்கும் நிலைபேறான மற்றும் நிலையான வளர்ச்சியை நோக்கி நாட்டை இட்டுச் செல்வதே தனது நோக்கமாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உலகத் தலைவர்கள் முன்னிலையில் வலியுறுத்தினார்.

அந்த இலக்கை அடைவதற்கு இலங்கை மக்கள் மற்றும் சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையும் ஆதரவும் தமக்கு கிடைக்கும் என நம்புவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் வியாழக்கிழமை  (21) இடம்பெற்ற ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத்தொடரில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கூட்டத்தொடர் வியாழக்கிழமை (21) இலங்கை நேரப்படி இரவு 10.00 மணியளவில் ஆரம்பமானது. இதில் பங்கேற்க வந்த அரச தலைவர்களை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் (Antonio Guterres) அன்புடன் வரவேற்றார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத்தொடரில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆற்றிய முழுமையான உரை வருமாறு:

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத் தொடரின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள டிரினிடேட் மற்றும் டொபாகோவின் மாண்புமிகு டென்னிஸ் பிரான்சிஸ் அவர்களுக்கு முதலில் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

அண்மைய நாட்களில் மொரோக்கோ மற்றும் லிபியாவைத் தாக்கிய இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கடினமான நேரத்தில் எங்கள் மொரோக்கோ மற்றும் லிபிய நண்பர்களுடன் நாங்கள் கைகோர்த்து நிற்கிறோம்.

நம்பிக்கையை மீளக் கட்டியெழுப்புதல் மற்றும் ஒற்றுமையை நிலைநாட்டுதல் என்பது இன்றைய பலதரப்புக்கு முன்னால் உள்ள சவால்களைப் பற்றி சிந்தித்துப் பார்ப்பதற்கு மட்டுமல்ல, கடந்த வருடத்தில் எனது நாடான இலங்கையில் ஏற்பட்ட விடயங்களை மறுபரிசீலனை செய்வதற்கும் சரியான பிரவேசம் ஆகும்.

கடந்த ஆண்டு இந்த நேரத்தில், பல உலகளாவிய நெருக்கடிகளுக்கு மத்தியில், இலங்கை சமூக, பொருளாதார மற்றும் அரசியல் ரீதியாக அண்மைக் காலங்களில் மிகவும் சவாலான காலகட்டத்தை அனுபவித்து வந்தது, இது மக்களின் வாழ்க்கையில் பேரழிவுகரமான தாக்கத்தை ஏற்படுத்தியது.

நமது பாராளுமன்றத்தை ஆக்கிரமிக்கும் முயற்சிகளால் நமது ஜனநாயக மரபுகள் கூட அச்சுறுத்தலுக்கு உள்ளாகின. இருந்தபோதிலும், ஆழமாக வேரூன்றிய மற்றும் உறுதியான ஜனநாயக மரபுகள் காரணமாக, ஜனநாயக அரசியல் அதிகார மாற்றத்தை ஏற்படுத்துவதில் நாங்கள் வெற்றி பெற்றோம்.

ஐக்கிய அமெரிக்க அரசாங்கம் இலங்கைக்கு வழங்கிய உர நன்கொடை பொருளாதாரம் மீட்சிக்கும் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கு எமக்கு உதவியது.

பொருளாதாரம், நிதி, நிறுவன மற்றும் நல்லிணக்கம் ஆகிய துறைகளில் நான் தொடங்கிய சீர்திருத்தங்கள் ஒருபுறம் மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையே நம்பிக்கை மற்றும் நம்பிக்கையை மீளக் கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்டவை. மறுபுறம், பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் மீட்சிக்கான அடித்தளத்தை உருவாக்குவதாக அமைகின்றது.

இலங்கையர்கள் தங்கள் அன்றாட வாழ்வில் இந்த நடவடிக்கைகள் சாதகமான விளைவுகளையும் ஏற்படுத்தியுள்ளதோடு, நாட்டின் முன்னேற்றம் குறித்து உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நம்பிக்கையின் மறுமலர்ச்சியையும் உருவாக்கியுள்ளது.

தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததிக்கு சமாதானம், சுபீட்சம் மற்றும் நல்லிணக்கத்தின் எதிர்காலத்தை உறுதிசெய்து, நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள இலங்கை சமூகத்தின் அனைத்து பிரிவுகளுக்கும் பயனளிக்கும் நிலைபேறான மற்றும் நிலையான மீட்சி மற்றும் வளர்ச்சியை நோக்கி நாட்டை வழிநடத்துவதே எனது நோக்கமாகும். இந்த இலக்கை அடைவதில், எங்களுடைய சொந்த மக்கள் மற்றும் சர்வதேச சமூகத்தின் ஆதரவு, நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பு கிடைக்குமென்பது எனது நம்பிக்கையாகும்.

ஐ.நா.வின் 80 ஆவது ஆண்டு நிறைவை நோக்கி, 2024ல் எதிர்கால உச்சிமாநாட்டிற்குத் தயாராகும் போது, பிளவுபட்ட அரசியல் புவிசார் கருத்தியலொன்றை காண்கிறோம். புதிய பூகோள அதிகார மையமொன்று தோன்றி வருவதையும் நாம் காண்கிறோம்.

இந்த மாற்றத்துடன், ஒருபுறம் மக்கள் வறுமையிலிருந்து சுபீட்சத்தை நோக்கிச் செல்வதோடு அதன்படி அபிவிருத்தி மற்றும் மானிட முன்னேற்றம் குறித்த பெரும் எதிர்பார்ப்புகள் உருவாகியுள்ளன.

மறுபுறம், தரைமார்க்கமாகவும் சமுத்திர ரீதியாகவும் தோன்றியுள்ள பாரிய சக்திகளின் போட்டிகளும் புவிசார் அரசியல் பதட்டங்களும் வெளிப்படையான போர் சூழலை உருவாக்கியுள்ளது.

தொழில்நுட்ப மற்றும் விஞ்ஞான முன்னேற்றங்கள் மனித நல்வாழ்வை மேம்படுத்தும் பல பயன்பாடுகளுக்கான சாத்தியக்கூறுகளுடன் அறிவு மற்றும் செல்வத்தை உருவாக்குவதில் எல்லையற்ற புதிய எல்லைகளை வழங்குகின்றன.

ஆரம்ப காலங்களை விடவும் தற்போது உலகிலுள்ள பாதுகாப்புக் கூட்டணிகள் தற்போது விரிவடைந்துள்ளதுடன், அவற்றுக்கு முகம்கொடுக்க பழைய மற்றும் புதிய சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப மூலோபாயங்கள் உருவாகிவருகின்றன.

டிஜிட்டல் பிளவு, நிதி மற்றும் கடன் நெருக்கடி மற்றும் வலுசக்தி மூலங்களின் மாற்றங்கள் ஆகியவற்றுடன் வடக்கு-தெற்கில் நிலவும் பிரிவுகள் விரிவடைகின்றன.

2030 இன் வாக்குறுதிக்கு மாறாக, பல தசாப்தங்களாக காணப்படாத வறுமை மற்றும் பசியின் நிலைமைகளை இன்று நாம் காண்கிறோம்.

இலங்கை போன்ற உலகளாவிய தெற்கின் நடுநிலையான, அணிசேரா நாடுகள் புதிய உலகளாவிய செல்வந்த நாடுகளின் முன்னிலையில் மீண்டும் வரையறைகளுக்கு முகம்கொடுக்க வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது.

டெல்லியில் இடம்பெற்ற G20, பிரிட்டோரியாவில் இடம்பெற்ற BRICS மற்றும் ஹிரோஷிமாவில் இடம்பெற்ற G7 உட்பட ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அதற்கு மேலதிகமான நடந்த அண்மைய பிரகடனங்களில், நாம் முகம்கொடுக்க வேண்டிய சவால்கள், நாட்டின் எல்லைகள் மற்றும் பிற அனைத்து பிளவுகளும் அதிகரித்து வருகின்றமையை காண முடியும்.

எதிர்கால சந்ததியினரை உள்ளடக்கிய எதிர்காலத்தை கட்டியெழுப்ப நாம் ஒன்றிணைவதற்கான வாய்ப்பை உருவாக்கிக்கொள்ள வேண்டும். இந்த ஆண்டு பொதுச் சபை விவாதத்தின் கருப்பொருளான நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புதல் மற்றும் உலகளாவிய ஒற்றுமையை மீண்டும் உருவாக்குதல் தற்போதைய உலகளாவிய நெருக்கடிகளுக்கான எடுத்துக்காட்டாகும்.

இந்த ஆண்டு, ஐ.நா சபை கூட்டத்தொடருக்கு இணையாக நடைபெற்ற, நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை விரைவுபடுத்துதல், அபிவிருத்திக்கான நிதியியல் மற்றும் காலநிலை மாநாடு உள்ளிட்ட 3 மாநாடுகளில் இலங்கை பங்கேற்றுள்ளது. அங்கு இதற்கு இணையாக செயற்பட சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் கூட்டு நடவடிக்கை தேவை என்பதை நாங்கள் ஒப்புக்கொண்டோம்.

எல்லை தாண்டிய நிதித் அழுத்தங்கள், காலநிலை மாற்றம் மற்றும் தொற்றுநோய் போன்ற எமது நெருக்கடிகள் மூலம், எமது நாட்டைப் போன்ற சிறிய கடன்நெருக்கடிக்கு ஆளாகியுள்ள நாடுகளின் திறனை நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் மற்றும் காலநிலை தழுவல் மற்றும் தணிப்பு ஆகியவற்றில் முன்னேற்றம் அடைய தடையாக உள்ளது. 

உலக வல்லரசுகளுக்கிடையிலான மோதல்கள் மற்றும் பதட்டங்கள் பொருளாதார மற்றும் நிதி ஸ்திரத்தன்மைக்கு நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தல் விநியோகச் சங்கிலிகளை சீர்குலைத்து பணவீக்கம் மற்றும் உணவு, வலுசக்தி பாதுகாப்பின்மையை ஏற்படுத்தல் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் கொள்கைகளை தயாரிக்க கூடிய சூழ்நிலைகளை மேலும் சிக்கலாக்குகிறது.

நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளுக்கு நீண்ட காலத்திற்கு முன்பே இலங்கை ஏனைய நடுத்தர-வருமான நாடுகளை விட உயர் தரவரிசைப்படுத்தக்கூடிய உயர்ந்த மானிட மற்றும் சமூக வளர்ச்சிக் குறிகாட்டிகளை அடைந்துள்ளோம்.

பூகோளத்தின் மீதான தனது பொறுப்பை இலங்கை தட்டிக்கழிக்கவில்லை. கடந்த ஆண்டு COP27 இல் எங்கள் காலநிலை இலட்சியத் திட்டத்தை கோடிட்டுக் காட்டினோம். 2030 ஆம் ஆண்டுக்குள் மின்சார உற்பத்தியில் 70% புதுப்பிக்கத்தக்க வலுசக்தியடாகப் பெறுவோம், வனப் பரப்பை 32% அதிகரிப்போம், பசுமை வாயு வெளியேற்றத்தை 14.5% குறைப்போம் என்று கூறினோம். 2040 இல் நிலக்கரிப் பயன்பாட்டைப் படிப்படியாகக் குறைத்து, 2050 இல் காபன் நிகர பூஜ்ஜியத்தை அடைய எதிர்பார்த்துள்ளோம்.

எங்களின் குறைந்த கார்பன் வளர்ச்சிப் பாதை, குறைந்த நடுத்தர வருமான நாடுகள், நாட்டிற்கான தனிநபர் கார்பன் உமிழ்வு விகிதங்களில் மிகக்குறைந்த ஒன்றாகும். இந்த வருடம், முகம்கொடுக்க வேண்டி ஏற்பட்ட பொருளாதார சவால்கள் மற்றும் கடன்களின் விளைவாக, ஒரு நாடு என்ற வகையில் நாம் அடைய எதிர்பார்த்த அபிவிருத்தி வளர்ச்சி வேகத்தை எம்மால் அடைய முடியவில்லை.

உணவுப் பற்றாக்குறை, பாதிக்கப்படக்கூடிய சமூகங்கள் மத்தியில் உணவுப் பாதுகாப்பில் குறிப்பிடத்தக்க அழுத்தத்தை ஏற்படுத்தி வருகின்றது. அதே நேரத்தில் தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக குழந்தைகளின் கல்வி மற்றும் போசாக்கு நிலைமை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இலங்கையில் கடந்த சில வருடங்களாக்க் காணப்பட்ட மிக வறண்ட காலநிலை காண முடிந்தது. சீரற்ற காலநிலையின் விளைவாக, சுத்தமான வலுசக்தி, உணவுப் பாதுகாப்பு, குடிநீரைப் பெற்றுக்கொள்ளல் மற்றும் நமது விவசாயிகளின் வாழ்வாதாரம் ஆகியவற்றுக்கான நமது உறுதிப்பாட்டில் பாதகமான விளைவுகள் ஏற்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு பொருளாதார நெருக்கடியில் இருந்து நாம் மீள ஆரம்பிக்கும்போது, இந்த நிலைமை எமது நிதி தேவைகளை அதிகரித்துள்ளது. காலநிலையால் பாதிக்கப்படக்கூடிய அபிவிருத்தி அடைந்து வரும் நாடு என்ற வகையிலும், கடன் நெருக்கடியில் இருப்பதாலும், காலநிலை நிதியைத் திரட்டுவதற்கான அவசரம் முன்பை விட இன்று அதிகமாக உள்ளது.

காலநிலை நிதியியலை செல்வந்த நாடுகள் வாக்குறுதிகளை வழங்கியிருந்த போதிலும் அதனை தற்போதுவரையில் பூர்த்தி செய்யப்படவில்லை. பொதுவான பங்களிப்பாக கருதக் கூடிய மற்றும் இழப்பீடு வழங்குதல் போன்றவற்றுக்கு அபிவிருத்தி அடைந்த நாடுகள் அவர்களின் பங்களிப்புகளை வழங்கி அவர்கள் ஒப்புக்கொண்டதை நிறைவேற்ற வேண்டும்.

நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளின் வெற்றியை உறுதி செய்வதற்கும், காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளை மாற்றியமைப்பதற்கும் தேசிய முயற்சிகள் மாத்திரம் போதாது. சர்வதேச நிதிக் கட்டமைப்பை மீள்கட்டமைக்க உலகளாவிய ஒற்றுமையின் தேவை மிக முக்கியமானது.

G7, G20 மற்றும் BRICS உட்பட பல உலகளாவிய சபைகளில் இது உறுதியாகவும் தெளிவாகவும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

பொதுச்செயலாளரினால் பரிந்துரைக்கப்பட்ட நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை துரிதப்படுத்தும் வேலைத்திட்டத்தின் மூலம், நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்ளல், காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுதல் மற்றும் கடனாளிகள் இறையாண்மை மற்றும் தனிப்பட்ட கடன் நெருக்கடியைத் தணிப்பது உட்பட சர்வதேச நிதி நிறுவனங்கள் மூலம் நிறைவேற்ற வேண்டிய உறுதியான தலையீடுகளுக்கு இடையே உள்ள தொடர்புகளை எடுத்துக்காட்டுகிறது.

2008 நிதி நெருக்கடி அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு 4 டிரில்லியன் அமெரிக்க டொலர்கள் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட மதிப்பீடாகும். 2020 முதல் 2024 வரை அமெரிக்கப் பொருளாதாரத்தில் தொற்றுநோயின் தாக்கம், 14 டிரில்லியன் டொலர்களை எட்டும் என்று அமெரிக்காவின் அண்மைய ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

உலகப் பொருளாதாரத்தின் ஏனைய பகுதிகளையும் சேர்த்தால் இந்த எண்ணிக்கை இருமடங்காக அதிகரிக்கும். நமது நவீன வரலாற்றில் இதற்கு முன் இந்த அளவு பொருளாதார நெருக்கடியை நாம் சந்தித்ததில்லை.

இன்றைய அமெரிக்க டொலர் பெறுமதியில் கூறப்போனால் இரண்டாம் உலகப் போரின் பாதிப்பு 04 டிரில்லியன்களாகும். ஐரோப்பிய மீட்புத் திட்டத்தின் பெறுமதி (Marshall Plan) 150 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும் ஆகும்.

உலகளாவிய நிதி ஒழுங்கை மறுசீரமைக்க முடியாவிட்டால், காலநிலை மாற்றத்தை மாற்றியமைக்கும் முயற்சியிலும் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான போராட்டத்திலும் நிச்சயமாக நாம் தோல்வியடைவோம். நெருக்கடி உச்சத்தை எட்டாததால் இந்த விடயங்கைளை மறுசீரமைக்க இன்னும் கால அவகாசம் உள்ளது.

புதிய உலகளாவிய நிதி ஒப்பந்தத்திற்கான பாரிஸ் உச்சி மாநாட்டின் மூலம் இதற்கு அவசியமான நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்படும். எனவே, எதிர்கால உச்சி மாநாடு புதிய திட்டங்களை உருவாக்காமல், காலநிலை மாற்றம் மற்றும் நிலையான வளர்ச்சியின் தேவைகளுக்கு ஏற்ப தற்போதைய நிதி கட்டமைப்பை மறுசீரமைக்க வேண்டும்.

அதன்படி இந்த நெருக்கடிகளை எதிர்கொள்ள மேல்குறிப்பிட்ட விடயங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். எமது இலக்குகளை அடைவதற்கு நிலவுகின்ற பிளவுகளை தடையாக எடுத்துக்கொள்ள கூடாது.

“பிரிட்ஜ்டவுன் முயற்சி (Bridgetown Initiative)” மற்றும் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளின் கடனைத் தீர்க்க வேண்டியதன் அவசியம் போன்ற முக்கிய பிரச்சினைகள் இந்தச் சபையில் விவாதிக்கப்பட்டாலும், அதற்கு உரிய கவனம் செலுத்தப்படுவதில்லை.

துரதிர்ஷ்டவசமாக, காலநிலை மாற்றம், கடன் நிவாரணம் மற்றும் நிலையான வளர்ச்சி ஆகிய இந்த இணைக்கப்பட்ட பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுக்க பாதுகாப்பு சபையும் தவறிவிட்டது. இது மனிதகுலத்தின் எதிர்காலத்தை பாதிக்கிறது.

பூமியை பாதுகாப்பதே எமது முன்னுரிமையாக இருக்க வேண்டும், பிளவுகளுடன் போருக்கு  நாம் செல்ல முடியாது. இந்த நெருக்கடிகளை நிறைவு செய்துகொள்ளும் வரை ஒவ்வொருவருக்கும் இடையில் நிலவுகின்ற போட்டிகளை ஒதுக்கி வைக்கும் இயலுமையிலேயே உலகின் அனைத்து உயிரினங்களின் எதிர்காலமும் தங்கியுள்ளது.

கடந்த நூற்றாண்டின் உலகத்தைப் பிரதிபலிக்கும் பலதரப்பு பொறிமுறைகள், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தின் சவால்களைச் சந்திக்க சீர்திருத்தப்பட வேண்டும், இது நீண்டகால பலஸ்தீன பிரச்சினைக்கு தீர்வு காணத் தவறிய பொறிமுறையாகும்.

தற்போதைய உலகளாவிய பன்முகத்தன்மை மற்றும் முடிவெடுக்கும் பிரதிநிதிகளாக பாதுகாப்பு சபையின் கட்டமைப்பு விரிவாக்கப்பட வேண்டும். இதற்கு இணையாக, ஐ.நா பொதுச்சபையின் வகிபாகம் பலமாக இருக்க வேண்டும்.

பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பினர்கள் என்ற வகையில் நம்பகமான உரையாடலில் ஈடுபட வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். இது அடுத்த அமர்வுகளுக்கு முன்னதாக இந்த அச்சுறுத்தல்களை எதிர்த்து ஒரு ஒருங்கிணைந்த அணுகுமுறைக்கு வழிவகுக்கும். 

வறுமை மற்றும் காலநிலை சவால்களைப் போக்க நாம் ஒற்றுமை மற்றும் நிதியுதவியை நாடும் அதே வேளையில், உலகளாவிய இராணுவச் செலவுகள் இன்று 2.24 டிரில்லியன் டொலர்களை எட்டியுள்ளது.

கடந்த காலத்தில் கட்டமைப்பில் ஸ்திரத்தன்மையை பராமரிப்பதில் கருவியாக இருந்த  சக்திவாய்ந்த, முக்கிய ஆயுதக் கட்டுப்பாட்டு கட்டமைப்பு சரிவடைந்துள்ளதால், அதனால் அணுசக்தி மோதல்கள் தொடர்பிலான திறந்த விவாதத்தில் எழுந்துள்ளன. இந்த நிலைமை தற்போதைய உலக அதிகாரம் மிக்கவர்களுக்கிடையில் மூலோபாய ரீதியாகவும் தமக்கிடையில் நம்பிக்கையின்மையையும் எடுத்துக்காட்டுகிறது. இத்தகைய மோதலை அதிகரிக்க வழிவகுக்கும் இராணுவ செலவினங்களை அதிகரிப்பதை கட்டுப்படுத்துமாறு நாங்கள் வலியுறுத்துகிறோம்.

அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் பல தசாப்தங்களாக இந்த விடயத்தில் நல்லறிவு மற்றும் பகுத்தறிவின் குரலாக இருந்து வருகின்றன. பேரழிவு (WMD) ஆயுதங்கள் மற்றும் அணு ஆயுதங்களை நிராயுதபாணியாக்குவதை ஆதரிக்கும் இலங்கையின் நீண்டகால நிலைப்பாட்டிற்கு இணங்க, இந்த ஆண்டு இலங்கை விரிவான சோதனை தடை ஒப்பந்தத்தை அங்கீகரித்துள்ளது. நேற்று, அணு ஆயுதங்களை தடை செய்வதற்கான ஒப்பந்தத்தை நாங்கள் ஏற்றுக்கொண்டோம்.

சர்வதேச வர்த்தகம் முதல் சமுத்திர நிர்வாகம் வரை பல தசாப்தங்களாக பலதரப்பு பேச்சுவார்த்தைகளில் உருவாக்கப்பட்ட சர்வதேச விதிகள் அடிப்படையிலான ஒத்துழைப்பின் ஊடாக நிறுவப்பட்ட பகுதிகளுக்கு பாரிய பலமான பதட்டங்களும் பரவும் வேகத்தை நாம் நிறுத்த வேண்டும்.

சர்வதேசம் இன்று பாரிய மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளது. அதே சமயம், வரலாறு காணாத சவால்களை எதிர்கொண்டுள்ளது. அதனால் முன்னெப்போதும் இல்லாத சவால்களுக்கு முகம்கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

பொதுவான தீர்வுகளை அடைவதில் ஒற்றுமையை வெளிப்படுத்த ஐக்கிய நாடுகள் சபைக்கு வருகிறோம். ஆபத்தில் இருப்பது நமது பூமியின் மொத்த எதிர்காலமே அன்றி, ஐக்கிய நாடுகள் சபையின் எதிர்காலம் அல்ல, சர்வதேச உறவுகளில் ஊடுருவியுள்ள அவநம்பிக்கை, அதிகரித்துள்ள போதிலும் உறுப்பு நாடுகள் ஒன்றிணைந்து செயல்படுவதற்கான புதிய வழிகளைக் கண்டறிய வேண்டும்.

அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுடன் ஒற்றுமையுடன் இணைந்து பணியாற்றுவதற்கான நிரந்தர உறுப்பினர்களின் விருப்பத்தின் மூலம் இதை எட்டமுடியும்.எனத் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பயணிகளிடம் அதிக வரவேற்பு உள்ளதால் நாகை...

2024-11-03 09:22:20
news-image

ஜே.வி.பிக்கு இலங்கைத் தமிழரசுக்கட்சி தேர்தல் விஞ்ஞாபனம்...

2024-11-03 08:53:11
news-image

அடுத்த 10 வருடங்களில் குடும்பமொன்று கார்...

2024-11-03 08:29:55
news-image

தமிழரசுக் கட்சியின் தேர்தல் விஞ்ஞானபத்தில் திருத்தம்

2024-11-03 08:24:23
news-image

கன்னி வரவு - செலவு திட்டத்தை...

2024-11-03 08:14:16
news-image

இன்றைய வானிலை 

2024-11-03 06:22:50
news-image

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விசேட விநியோகம்...

2024-11-02 18:29:51
news-image

யாழில் வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறி கோடிக்கணக்கான...

2024-11-02 18:39:36
news-image

இல்லாத ஒன்றுக்கு கனவு காண்பதை விட...

2024-11-02 18:36:33
news-image

இவ்வருடத்தில் வீதி விபத்துக்களால் 1,898 பேர்...

2024-11-02 18:31:13
news-image

பிரதமர் ஹரினி அமரசூரியவுக்கும் ஜேர்மன் தூதுவர்...

2024-11-02 18:35:49
news-image

கேகாலையில் கேரள கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்...

2024-11-02 18:07:18