தளபதி விஜயின் 'லியோ'- தமிழுக்கான பதாகை வெளியீடு

21 Sep, 2023 | 03:38 PM
image

தளபதி விஜய் நடிப்பில் வெளியாகவிருக்கும் 'லியோ' படத்தின் தமிழுக்கான பதாகையை படக்குழு வெளியிட்டிருக்கிறது.

கடந்த சில தினங்களாக இணையத்தில் தளபதி விஜயின் 'லியோ' படத்தின் புதிய தகவல்கள் ஆக்கிரமித்து, வைரலாகி வருகிறது.

'லியோ' படத்தின் தெலுங்கு பதிப்பிற்கான போஸ்டர் மற்றும் கன்னட பதிப்பிற்கான போஸ்டர் வெளியானது. தொடர்ந்து தற்போது தமிழுக்கான போஸ்டரை படக் குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள்.

தெலுங்கு பதிப்பிற்கான போஸ்டரில் ஒரு வாசகமும், கன்னட பதிப்பிற்கான போஸ்டரில் வேறொரு வாசகமும், தமிழ் பதிப்பிற்கான போஸ்டரில் புதியதொரு வாசகமும் இடம்பெற்றிருக்கிறது.

இவை அனைத்தும் விஜய் ரசிகர்களை படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்திருக்கிறது. குறிப்பாக இந்த மூன்று மொழியில் வெளியாகி இருக்கும் வாசகத்தை மையப்படுத்தி பார்க்கையில் 'அமைதியாக இருக்கவும். தப்பிக்க திட்டமிடவும் முடியாத சூழலில், எதிர்த்து நின்று போரிடவும்'  என்பதை வலியுறுத்துகிறது.

இதனூடாக 'லியோ' படத்தின் கதையின் நாயகன் தனக்கு ஏற்பட்ட பிரச்சனைகளிலிருந்து முதலில் தப்பிக்க நினைக்கிறான். பிறகு தப்பிக்க முடியாத சூழல் உருவாகும் போது.. எதிர்த்து திருப்பி அடிப்பதாக போஸ்டர்கள் மூலம் பட குழுவினர் உணர்த்துவதால் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அனைத்து தரப்பு ரசிகர்களிடத்திலும் எகிற வைத்திருக்கிறது.

நட்சத்திர இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் 'லியோ' திரைப்படத்தில் தளபதி விஜய், திரிஷா, பொலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், மிஷ்கின், மேத்யூ தாமஸ், பிரியா ஆனந்த், அபிராமி வெங்கடாசலம், மடோனா செபாஸ்டியன், அனுராக் காஷ்யப், ராமகிருஷ்ணன், கிரண் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மனோஜ் பரஹாம்சா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.

எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். லலித் குமார் தயாரித்திருக்கிறார். ஜெகதீஷ் பழனிச்சாமி இணை தயாரிப்பாளராக பணியாற்றியிருக்கிறார். இந்த திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 19 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் படமாளிகைகளில் வெளியாகிறது.‌

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்