பேறு காலத்தின் போது பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுமா..?

21 Sep, 2023 | 01:49 PM
image

இன்றைய தேதியில் கருவுற்றிருக்கும் இளம் தாய்மார்களில் பலருக்கு தங்களின் பேறுகாலத்தின் போது மார்பக புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளது என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்களே.. அது உண்மையா? என வினா எழுப்புகிறார்கள்.

இது தொடர்பாக மருத்துவ நிபுணர்கள் விளக்கமளிக்கையில், ''இத்தகைய பாதிப்பு பெண்களுக்கு கருவுற்றிருக்கும் காலத்தில் மிக அரிதாகவே ஏற்படுகிறது.

குறிப்பாக மூவாயிரம் கருவுற்றிருக்கும் பெண்மணிகளில் ஒருவருக்கோ அல்லது இருவருக்கோ இத்தகைய பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு உண்டு. ஆனால் இதனை தொடக்க நிலையில் கண்டறிந்து சிகிச்சை பெற்றால், முழுமையாக நிவாரணத்தை பெற இயலும்'' என அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

திருமணத்திற்குப் பிறகு பெண்கள் கருவுற்றிருக்கும் காலகட்டத்தில் அவர்களுடைய மார்பகங்களில் பாரிய மாற்றங்கள் இயல்பாக நடைபெறுகின்றன.‌

குறிப்பாக கருவுற்றிருக்கும் முதல் மூன்று மாதத்திற்குள் மார்பக பகுதிகளில் இருக்கும் பால் சுரக்கும் குழாய்கள் விரிவடைந்து செயல்பட தொடங்குகின்றன. மேலும் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரொஜோஸ்டிரான் எனும் இரண்டு ஹோர்மோன்கள் மார்பகத்தின் வளர்ச்சியை உறுதிப்படுத்துகின்றன. இதனால் இத்தகைய தருணத்தில் மார்பகங்கள் வளர்ச்சி அடைகின்றன. இது கடினமானதாகவும் எடை கூடுதலாகவும் உணர வைக்கும். மூன்று மாதங்களுக்குப் பிறகு இவற்றின் மாறுபட்ட தன்மை இயல்பாகிவிடும். சில பெண்மணிகளுக்கு நான்கு அல்லது ஐந்தாவது மாதத்தில் இவை இயல்பாகக்கூடும்.

இந்த தருணத்தில் நீங்கள் அணியும் உள்ளாடைகள் இறுக்கமானதாக இல்லாமல் வளர்ச்சியடைந்த மார்பகத்திற்கு ஏற்ற வகையில் சற்று தளர்வானதாக இருப்பதை பயன்படுத்த வேண்டும். இறுக்கமான உள்ளாடைகளை தொடர்ந்து பயன்படுத்தினால் அதன் காரணமாகவும் பாதிப்பு ஏற்படக்கூடும். தற்போது சந்தையில் இதற்காக பிரத்யேக உள்ளாடைகள் கிடைக்கின்றன.

மார்பக பகுதியுடன் இணைந்திருக்கும் மார்பக காம்பு மற்றும் அதனை சுற்றியுள்ள அடர் வண்ண பகுதிகளும் மாற்றம் பெறும். மேலும் இதன் போது தோல் பகுதியிலும் மாற்றங்கள் நடைபெறுகிறது. இதன்போது சில பெண்களுக்கு குறிப்பிட்ட அந்தப் பகுதியில் அரிப்பு ஏற்படக்கூடும். இதனை மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையின் படி பராமரிக்க வேண்டும்.

மேலும் கருவுற்றிருக்கும் சமயத்தில் குழந்தை பிறப்பதற்கும் முன்னரே மார்பகப் பகுதியிலிருந்து தாய்ப்பால் கசிவு ஏற்பட தொடங்கும். இதனை எதிர்கொள்வதற்கு உங்களுடைய மகப்பேறு மருத்துவர் நிபுணரின் மேலான ஆலோசனையை முறையாக பின்பற்ற வேண்டும்.

சில பெண்களுக்கு மட்டும் இதன் போது மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான அறிகுறி உண்டாகலாம். இதனை துல்லியமாக அவதானிப்பது கடினம் என்றாலும், இதற்கான பிரத்யேக அறிகுறிகள் உண்டாகும். மார்பகப் பகுதியில் தோலின் நிறத்தில் பாரிய மாற்றங்கள் ஏற்படுவது, மார்பகப் பகுதி அல்லது அக்குள் பகுதியில் கட்டிகள் தோன்றி அவை விரைவாக வளர்ச்சி அடைவது, மார்பக காம்பு உள் பக்கமாக திரும்பி இருப்பது... போன்ற அறிகுறிகளை வைத்து உங்களுக்கு மார்பக புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருக்க கூடும் என அவதானிக்கலாம்.

இத்தகைய அறிகுறிகளை மருத்துவரிடம் எடுத்துரைத்து அவர்கள் பரிந்துரைக்கும் பிரத்யேக பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். அதன் முடிவின் அடிப்படையில் மார்பக புற்றுநோய்க்கான சிகிச்சையை பெண்கள் பெறலாம்.

டொக்டர் கீர்த்தி

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right