இராணுவம் கையகப்படுத்தியுள்ள தமது சொந்த நிலங்களை விடுவிக்கவேண்டுமென தெரிவித்து முல்லைத்தீவு கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு மக்கள் முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 11 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை சந்தித்து தமது ஆதரவினை  தெரிவிக்கும்   நோக்கில் முல்லைத்தீவு அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினை சேர்ந்த 40 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கேப்பாபுலவு  பிலக்குடியிருப்பு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடத்திற்கு வருகைத்தந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை சந்தித்த மாணவர்கள் தொடர்ந்து  வெற்றி கிட்டும் வரை போராடுமாறும் தெரிவித்துள்ளனர்.

அதுமாத்திரமின்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்காக நாம் எப்போது குரல் கொடுப்போம் எனவும், இனிவரும் நாட்களில் இந்த மக்களின் காணிகள் விடுவிக்கப்படவில்லை எனில் தொடர் போராட்டங்களில் மக்களோடு இணைந்து நாமும் முன்னெடுப்போம் எனவும் தெரிவித்தனர்.