-நமது அரசியல் நிருபர்-
இலங்கையின் தேசிய அரசியல் நகர்வுகள் நாளுக்கு நாள் பரபரப்படைந்து வருகின்றன. இதன் தாக்கத்தை கட்சி மட்ட அரசியலில் அதிகமாக உணர முடிகிறது. பிரதான கட்சிகள் மாற்று அரசியல் கூட்டணிகள் மீது ஆர்வம் செலுத்த தொடங்கியுள்ளன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நிகழ்கால உறுப்பினர்களை தவிர்த்து ஆளும் கட்சிக்குள் உருவாகியுள்ள மாற்று அரசியல் கூட்டணியுடன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை ஒன்றிணைப்பது குறித்து பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மறுபுறம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டணிக்குள் இருந்த பங்காளிக் கட்சிகளை தக்கவைத்துக்கொள்ளும் முயற்சிகளை பஷில் ராஜபக்ஷ முன்னெடுத்து வருவதை அவதானிக்க முடிகிறது.
ஜனாதிபதி நாட்டில் இல்லாதவொரு சந்தர்ப்பத்தில் சில முக்கிய சந்திப்புகளையும் நகர்வுகளையும் பஷில் ராஜபக்ஷ முன்னெடுத்துள்ளார். அடுத்த வருடம் முதலாவது காலாண்டில் நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி தேர்தலில் தாக்கம் செலுத்தக் கூடிய வகையில் எதிர்வரும் நவம்பர் மாதம் சமர்பிக்கப்படவுள்ள வரவு – செலவுத் திட்டம் பொதுஜன பெரமுனவின் தேர்தல் வெற்றிக்கு சாதகமானதாக அமைய வேண்டும் என்பது பஷிலின் முதலாவது இலக்காக உள்ளது.
இதனூடாக ஆளும் கட்சிக்குள் உருவாகியுள்ள மாற்று அரசியல் கூட்டணியை நேரடியாக எதிர்ப்பதும், பொதுஜன பெரமுனவின் அரசியல் செயல்பாடுகளை மீண்டும் தீவிரப்படுத்துவதுமே அவரின் நோக்கமாக உள்ளது. இவ்வாறு பல்வேறு அரசியல் நகர்வுகளில் நாட்டின் முக்கிய அரசியல் புள்ளிகள் செயல்படத்தொடங்கியுள்ளனர். இதற்கிடையே ஜனாதிபதியின் ஆலோசகர் சாகல ரத்நாயக்க நல்லூர் தேர்த் திருவிழாவின் போது தனது நேர்த்திக்கடனையும் நிறைவேற்றியுள்ளார்.
புதிய அரசியல் கூட்டணி
ஆளும் கட்சிக்குள் உருவாகியுள்ள புதிய மாற்று அரசியல் கூட்டணியின் குருநாகல் மாவட்ட குழுக் கூட்டம் கடந்த வாரம் இடம்பெற்றது. குளியாப்பிட்டி, ஈரியாகொல்ல பகுதியில் அமைந்துள்ள புதிய கூட்டணியின் செயல்பாட்டு தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள அநுர பிரியதர்ஷன யாப்பாவின் இல்லத்திலேயே இந்த கூட்டம் இடம்பெற்றது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மீதும் ராஜபக்ஷர்கள் மீதும் கடும் அதிருப்தி அடைந்திருந்த வடமேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள் 8 பேர், பிரதேச சபை தவிசாளர்கள் 7 பேர், உப தவிசாளர்கள் 8 பேர், பிரதேச சபை மற்றும் நகர சபை முன்னாள் உறுப்பினர்கள் 34 பேர், அநுர பிரியதர்ஷன யாப்பாவின் இல்லத்தில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
2024ஆம் ஆண்டில் எதிர்கொள்ள உள்ள தேசிய தேர்தல்களை மையப்படுத்தி கூட்டணியை வலுப்படுத்துதல் மற்றும் மக்கள் மயப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டுக்கான வரவு – செலவு திட்டத்துக்கு வழங்கப்படவுள்ள யோசனைகள் குறித்தும் கூடுதல் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
அதேபோன்று 2024ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் புதிய அரசியல் கூட்டணியின் யோசனைகளை உள்ளடக்கும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா, சுகீஷ்வர பண்டார மற்றும் எஸ். அமரசிங்க செயற்பட்டு வருவதுடன், வரவு – செலவுத் திட்டத்திற்கான புதிய அரசியல் கூட்டணியின் யோசனைத் திட்டத்தை ஜனாதிபதியிடம் கையளிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மஹிந்த அமரவீர வீட்டில் சந்திப்பு
இதேவேளை, புதிய அரசியல் கூட்டணியின் செயல்பாடுகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது குறித்து தீர்மானிக்கும் வகையில், அமைச்சர் மஹிந்த அமரவீரவின் கொழும்பு இல்லத்தில் விசேட சந்திப்பு ஒன்று கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றது.
புதிய அரசியல் கூட்டணியின் செயல்பாட்டுத் தலைவர் அநுர பிரியதர்ஷன யாப்பா, நிமல் லான்சா, நளின் பெர்னாண்டோ உட்பட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில், லசந்த அழகியவண்ண, ஜகத் புஸ்பகுமார, துமிந்த திசாநாயக்க, மியுரு பாஷித லியனகே மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.
புதிய கூட்டணிக்கு சுதந்திரக் கட்சியின் முழுமையான ஆதரவை பெறுவது குறித்து இதன் போது பரந்துப்பட்ட பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், தயாசிறி ஜயசேகரவின் பதவி நீக்கம் தொடர்பாகவும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.
சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்தை விமர்சிக்கும் வகையில் தயாசிறி ஜயசேகர பல்வேறு சந்தர்ப்பங்களில் கருத்துக்களை தெரிவித்திருந்தார். இதனை அறிந்த பின்னரே தயாசிறியை கட்சியை விட்டு நீக்குவதற்கு மைத்திரிபால சிறிசேன தீர்மானித்தார். தன்னை விமர்சிப்பவர்களை அருகில் வைத்துக்கொள்ள எந்தவொரு தலைவரும் விரும்புவதில்லை என்று நிமல் லான்சா இதன்போது கூறியுள்ளார்.
ஒரு இடத்தில் அல்ல, பல இடங்களுக்கும் சென்று மைத்திரிபால சிறிசேனவை கடுமையாக தயாசிறி விமர்சித்துள்ளார். அது போதாதென்று ஜப்பானுக்கு சென்றபோதும் கூட மைத்திரிபால சிறிசேனவை கடுமையாக தயாசிறி விமர்சித்திருந்தார். இதுவே பதவி நீக்கத்திற்கு காரணமாகியது என்று மியுரு பாஷிதவும் குறிப்பிட்டார்.
தலைவருக்கு எதிராக செயல்பட்டால் யாராக இருந்தாலும் நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும். தலைமைத்துவம் பிடிக்காவிடின் விலகிச் செல்ல வேண்டும். மாறாக, அங்கிருந்து கொண்டே விமர்சிப்பது முறையல்ல. அவ்வாறு செய்தால் கௌரவத்தை இழக்க நேரிடும் என்று கூறி நளின் பெர்னாண்டோ கலந்துரையாடலை தொடர்ந்தார்.
இதற்கு மறுமொழியளித்த அமைச்சர் மஹிந்த அமரவீர, 'தயாசிறி தற்போது எம்மை கடுமையாக சாடி வருகிறார். ஊடகங்களும் இது குறித்து என்னிடம் கேட்கின்றன. நான் எதனையும் கூறவில்லை. ஏனெனில், அவரின் விமர்சனங்களுக்கு பதிலளிக்கச் சென்று நாம் தேவையில்லாத நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடலாம்' என்று சுட்டிக்காட்டினார்.
எதுவாக இருந்தாலும் தலைமைத்துவத்தின் மீது கௌரவத்துடன் செயல்பட வேண்டும். அவ்வாறு செய்யாவிடின் பிரச்சினை ஏற்படுவதை தவிர்க்க இயலாது என்று மைத்திரிபால சிறிசேனவை நியாயப்படுத்தும் வகையில் நிமல் லான்சா இங்கு கருத்து தெரிவித்தார்.
'50 இலட்சம் ரூபா பந்தயம் குறித்தும் பேசுகின்றனர். கம்பஹா மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்யும் இராஜாங்க அமைச்சர் என்று கூறுகின்றனர். நான் என்றால் யாருடனும் பந்தயத்திற்கு செல்லவில்லை' என்று லசந்த அழகியவண்ண இதன்போது கூறியுள்ளார்.
சுதந்திரக் கட்சி - ஐ.தே.க இணைப்பு
'ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைக்கும் வகையிலேயே நாம் செயல்படுவதாக தயாசிறி ஜயசேகர பிரசாரம் செய்து வருகிறார்' என உரத்த குரலில் துமிந்த திசாநாயக்க இங்கு தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த லசந்த அழகியவண்ண, அவ்வாறு எதுவும் நடக்காது. இது தயாசிறி ஜயசேகரவுக்கும் தெரியும். குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே தயாசிறி போலியாக கூறிவருகின்றார் என்றார்.
புதிய அரசியல் கூட்டணிக்கு ஏனைய அரசியல் கட்சிகளின் ஆதரவை பெற்றுக்கொள்வது தொடர்பாகவும் நீண்டநேர உரையாடல் மஹிந்த அமரவீரவின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி சுட்டிக்காட்டிய பிளவுகள்
நாட்டின் விவசாயத்துறையை மேம்படுத்துவது குறித்து ஜனாதிபதி தலைமையில் விசேட சந்திப்பு ஒன்று கடந்த வாரம் இடம்பெற்றது. இதில் ஜனாதிபதி அலுவலகப் பிரதானி சாகல ரத்நாயக்க மற்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர உட்பட அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
சர்வதேச மற்றும் தனியார் துறையினரின் ஒத்துழைப்புகளை பெற்று, விவசாயத்துறையை மேம்படுத்துவது தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டது. நாட்டின் விவசாயத்துறையானது தேசிய மற்றும் மாகாண ரீதியில் பிளவுபட்டுள்ளதாக இந்த சந்திப்பில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தேசிய கொள்கைகளை தயாரிக்கும் போது அரசியலமைப்புக்கு உட்பட்ட வகையில் புதிய சட்டங்கள் மற்றும் கொள்கைகளை உருவாக்குமாறு பணிப்புரை விடுத்தார்.
மேலும் காணி மற்றும் காணி உரிமைகள் தொடர்பிலான புதிய கொள்கைகள் உருவாக்கம் குறித்தும் இதன்போது ஜனாதிபதி அதிகாரிகளிடம் கேள்விகளை எழுப்பினார். நாட்டில் காணப்படுகின்ற காணி பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகாணும் வகையில் புதிய கொள்கைள் உருவாக்கும் பணிகளை துரிதப்படுத்துமாறும் இதன் போது ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.
இராஜதந்திரிகளை சந்தித்த ஜனாதிபதி
கியூபாவுக்கு செல்வதற்கு முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கொழும்பில் இராஜதந்திரிகள் சிலரை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். ‘அண்மைக்கால உயர்மட்ட விஜயங்களும் அவர்களின் இந்து சமுத்திர பிராந்தியம் சார்ந்த கோணங்களும்’ என்ற தலைப்பில் பூகோள அரசியல் வழிகாட்டி என்ற அமைப்பினால் கடந்த செவ்வாய்க்கிழமை கலந்துரையாடலொன்று கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தக் கலந்துரையாடலின் முடிவில் ஜப்பான், இந்தியா, சீனா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களை சந்தித்த ஜனாதிபதி, நாட்டின் தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நிலைவரங்கள் குறித்து விளக்கமளித்தார்.
முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் ஜனாதிபதி அலுவலக பிரதானி சாகல ரத்நாயக்க ஆகிய இருவரும் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்தனர்.
நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கும் அரசியல் ஸ்திரத்தன்மைக்காக அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளுக்கும் தொடர்ந்தும் ஒத்துழைப்புகளை இதன் போது கோரிய ஜனாதிபதி, சர்வதேச நாணய நிதியம் உட்பட சர்வதேச அரங்குகளில் இலங்கையின் நலன்களுக்காக வழங்கப்படும் ஒத்துழைப்புகளுக்கும் நன்றி தெரிவித்தார்.
பிரதமரை சந்தித்த பஷில் ராஜபக்ஷ
பஷில் ராஜபக்ஷ தலைமையிலான ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர் பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இந்த சந்திப்பு கடந்த புதன்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. நாட்டின் நடைமுறை அரசியல் மற்றும் எதிர்கால தேர்தல்கள் குறித்து இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
குறிப்பாக, அரசாங்கத்தின் தீர்மானங்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஏகோபித்த இணக்கப்பாடு காணப்பட வேண்டும் என்ற விடயத்தை பஷில் ராஜபக்ஷ பிரதமரிடம் எடுத்துரைத்துள்ளார். குறிப்பாக மக்கள் நலத்திட்டங்கள், வாழ்க்கை செலவு அதிகரிப்பால் மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்கள், அரச நிறுவங்களின் தீர்மானங்களில் தொழிற்சங்கங்களின் இணக்கப்பாடு, அரச நிறுவனங்கள் மீதான மறுசீரமைப்புகள், அஸ்வெசும போன்ற திட்டங்கள், சுகாதார துறைசார் பிரச்சினைகள், தேர்தல் முறைமை மற்றும் உத்தேச புதிய சட்டங்கள் ஆகியவற்றில் ஆளும் கட்சி என்ற வகையில் முழுமையான ஈடுபாட்டிற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்ற விடயத்தை பஷில் ராஜபக் ஷ தலைமையிலான குழு பிரதமரிடத்தில் வலியுறுத்தியுள்ளது.
2024 ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் திட்டமாகவே அமையப்பெறும். எனவே பொருளாதார நெருக்கடிகளினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் இந்த வரவு – செலவுத் திட்டம் அமையப்பெற வேண்டும். முன்னாள் நிதி அமைச்சர் என்ற வகையில் எமது இந்த யோசனையை ஜனாதிபதியிடம் முன்வைக்க எதிர்பார்த்துள்ளதாகவும் இதன்போது பிரதமரிடம் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற அரசியல் கூட்டணியை தொடர்ந்தும் முன்னோக்கி கொண்டு செல்லும் தீர்மானத்தையும் இதன் போது பஷில் ராஜபக்ஷ தெரியப்படுத்தினார்.
சாகர காரியவசம், நாமல் ராஜபக்ஷ, காமினி லொக்குகே, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, எஸ்.எம். சந்திரசேன மற்றும் சஞ்சீவ எதிரிமான ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.
லான்சாவின் புதிய கட்சி
லிபரல் கட்சி அல்லது லிபரல் ஜனநாயக (டெமோக்ரட்டிக்) கட்சியை பாராளுமன்றத்தில் தற்போது சுயாதீனமாக செயற்படும் நிமல் லான்சா குழுவினர் கையகப்படுத்தியுள்ளனர். லிபரல் கட்சி நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் 1981இல் ஐக்கிய தேசியக் கட்சியின் நீண்டகால உறுப்பினரான கலாநிதி சானக அமரதுங்கவினால் நிறுவப்பட்டது.
1982ஆம் ஆண்டு லிபரல் கட்சி ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பிரிந்தது. இலங்கையில் தாராளமய கொள்கையை மேம்படுத்துவதற்கான நான்கு வருட முயற்சிகளுக்குப் பிறகு, குறிப்பாக அதிகாரப் பரவலாக்கத்தை ஊக்குவிக்கும் அரசியலமைப்பு சீர்திருத்தங்களை மையப்படுத்தி 1987ஆம் ஆண்டு கலாநிதி அமரதுங்கவினால் தனிக்கட்சியாக இது பதிவு செய்யப்பட்டது.
1996ஆம் ஆண்டில் கலாநிதி அமரதுங்க கார் விபத்தில் மரணமடைந்ததைத் தொடர்ந்து, பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க லிபரல் கட்சியின் அரசியல் தலைவராக செயல்பட்டார். கடந்த ஆண்டில் (2022) லிபரல் கட்சி அதன் பெயரை லிபரல் ஜனநாயகக் கட்சி என்று மாற்றியது.
கட்சியின் தற்போதைய தலைவராக கமல் நிஷங்கவும், பொதுச் செயலாளராக அமல் ரந்தெனியவும் உள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தற்போது லிபரல் கட்சியை கையகப்படுத்தியுள்ள நிலையில், புதிய நிர்வாகக் குழு நியமிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நல்லூர் தேர்த் திருவிழாவில் நேர்த்திக்கடன் செலுத்திய சாகல
ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாமின் பிரதானியுமான சாகல ரத்நாயக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் தனது நேர்த்திக்கடனை நிறைவேற்றியிருக்கின்றார்.
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த தேர்த் திருவிழா கடந்த 13ஆம் திகதி புதன்கிழமை வெகுவிமரிசையாக இடம்பெற்றிருந்தது.
தேர்த்திருவிழாவன்று அதிகாலை நல்லூர் ஆலயத்துக்கு சென்ற சாகல ரட்நாயக்க அங்கு இரண்டரை மணி நேரம் காத்திருந்து கந்தனின் வசந்தமண்டப பூஜையில் கலந்துகொண்டதுடன் தேர் வீதியுலாவிலும் பங்கேற்றிருந்தார்.12ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை கொழும்பிலிருந்து தனியார் ஹெலிகொப்டரில் தனிப்பட்ட முறையிலான விஜயமொன்றை மேற்கொண்டு இவர் யாழ்ப்பாணம் சென்றிருந்தார்.
பலாலி விமான நிலையத்தில் ஹெலிகொப்டர் இரவு 7.30 மணயளவில் தரையிறங்கியுள்ளது. அங்கிருந்து யாழ்ப்பாணத்திலுள்ள ஹோட்டலொன்றுக்கு சென்ற அவர், பின்னர் அங்கிருந்து நல்லூர் ஆலயத்துக்கு அருகிலுள்ள அவரது நண்பர் ஒருவரின் வீட்டுக்குச் சென்று இரவு விருந்துபசாரத்தில் கலந்துகொண்டிருந்தார்.
அதன் பின்னர் தான் தங்கியிருந்த ஹோட்டலுக்குச் சென்ற அவர் மறுநாள் தேர்த் திருவிழாவன்று அதிகாலை 3 மணியளவில் நல்லூர் ஆலய வளாகத்திற்கு சென்றுள்ளார். நல்லூர் ஆலயத்தைப் பொறுத்த வரையில் அங்கு சகலரும் சமம் என்ற கொள்கையே பின்பற்றப்படுகின்றது. இதனால் முக்கியஸ்தர்களுக்கு அங்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லை.
தேர்த் திருவிழாவன்று 6 மணிக்கு வசந்த மண்டப பூஜை ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நேரகாலத்துடன் ஆலயத்துக்குள் செல்லாவிடின் வசந்தமண்டப பூஜையை பார்வையிட முடியாது போகும்.
இதன் காரணமாகவே வேட்டி அணிந்து அதிகாலை 3 மணியளவில் ஆலய வளவுக்குள் வந்த சாகல ரத்நாயக்க குழுவினர் மூன்றரை மணியளவில் ஆலயத்துக்குள் சென்று அமர்ந்துள்ளனர். இரண்டரை மணி நேரம் காத்திருந்து இவர்கள் வசந்த மண்டப பூஜையை பார்வையிட்டு வழிபட்டுள்ளனர்.
சாகல ரத்நாயக்கவின் பாதுகாப்புக்கு சில அமைச்சரவை பாதுகாப்புப் பிரிவினர் ஆலயத்துக்குள் அவருடன் வந்திருந்த போதும் அவர்களும் வேட்டி அணிந்து சைவ பாரம்பரியங்களை பேணியிருந்தனர்.
இவ்வாறு பெரும் பக்தர்கள் கூட்டத்துக்கு மத்தியில் கந்தனின் பூஜையில் கலந்து கொண்டு தனது நேர்த்திக்கடனை நிறைவேற்றிய சாகல ரத்நாயக்க தேர் வீதியுலா வந்தபோது அதிலும் பங்கேற்றிருந்தார்.
தேர் வீதியுலா நிறைவடைந்ததையடுத்து ஆலயத்துக்குள் சென்று அவர், விசேட அர்ச்சனையையும் செய்திருந்தார். இதன் போது முன்னாள் இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளருமான விஜயகலா மகேஸ்வரனும் பங்கேற்றிருந்தார்.
இதன்பின்னர் நல்லூர் வீதியிலுள்ள மறைந்த முன்னாள் அமைச்சர் மகேஸ்வரனின் மடத்துக்கும் சென்று சாகல ரத்நாயக்க மக்களுடன் கலந்துரையாடியிருந்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM