ஆர்.ராம்
2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21இல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் நடைபெற்று நான்கு வருடங்களுக்குப் பின்னர் உள்நாட்டில் பல்வேறு தருணங்களில், பல்வேறு தரப்பினராலும் சுட்டிக்காட்டிய 'அரசியல் ஆதாயத்துக்கான மிலேச்சத்தனம்' என்கின்ற விடயத்தினை அசாத் மௌலானா என்ற தனிநபரை மையப்படுத்தி சனல்-4 வெளியிட்ட காணொளி சர்வதேச ரீதியாக பேசுபொருளாகியிருக்கின்றது.
அதேநேரம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க், தனது எழுத்துமூலமான அறிக்கையில், 'உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும்' என்று கடந்த ஆண்டுகளில் குறிப்பிட்டதைப் போலவே வலியுறுத்தியிருப்பதோடு, 54ஆவது அமர்வுக்கான கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய பிரதி உயர்ஸ்தானிகர் நாடா அல்-நஷீஃப் “உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச பங்களிப்புடனான விசாரணை அவசியம்” என்று சுட்டிக்காட்டியுள்ளமையும் சர்வதேச கரிசனையை வெளிப்படுத்தியிருக்கின்றது.
உயிர்த்த ஞாயிறு சம்பவம் தொடர்பில் சனல்-4 வெளியிட்ட காணொளியும், ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் நீதிக்கான சர்வதேச விசாரணை வலியுறுத்தலும், உள்நாட்டில் மீண்டும் பாதிக்கப்பட்ட தரப்பின் மத்தியிலும், அரசியல், பாதுகாப்பு, இராஜதந்திர மட்டங்களிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றது.
குறிப்பாக, மக்கள் எழுச்சியால் தப்பியோடி மீண்டும் நாடு திரும்பி இருக்குமிடமே தெரியாதிருந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷவை ‘மௌனம்’ கலைத்து மறுதலிப்பு அறிக்கை வெளியிடுமளவிற்கு தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றிய சனல்-4 காணொளியும், ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் வலியுறுத்தலும் ஏககாலத்தில் நிகழ்ந்தமையால், ராஜபக் ஷக்கள், “நாம் மீண்டும் எழுச்சி அடைந்து வருகின்மையால் சர்வதேசத்திற்கு ஏற்பட்டுள்ள ஒவ்வாமை தான் காரணம்” என்று அர்த்தம் கற்பிக்க ஆரம்பித்துள்ளார்கள்.
ராஜபக் ஷக்களையும், ஆட்சி அதிகாரத் தரப்பினரையும் எந்நேரமும் சூழ்ந்துள்ள முப்படைகளின் முக்கியஸ்தர்களும், சிங்கள, பௌத்த தேசியவாதிகளும், ஏனைய கூட்டாளிகளும் “2018 உள்ளூராட்சி தேர்தலின்போதே கோட்டாவின் வெற்றி உறுதியாகிவிட்டது. 69இலட்சம் வாக்குகளைப் பெற்ற கோட்டபாயவுக்கு, வெறும் 6 சதவீதமாக உள்ள கிறிஸ்தவர்களின் வாக்குகளுக்காக வன்முறையை கையிலெடுக்க வேண்டியதில்லை” என்று தர்க்கம் புரிவதற்கு தொடங்கியிருக்கின்றார்கள்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும், எதிரணியில் உள்ள ஏனைய தரப்பினரும், சனல்-4 காணொளி மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ள ராஜபக் ஷக்கள் மற்றும் அவர்களது பங்காளிகளுக்கு எதிரான மனோநிலையை மையப்படுத்தி ‘சர்வதேச விசாரணையை' கோரி வருகின்றார்கள்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக இருக்கும் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையும், ஏனைய அருட்தந்தையர்களும், சிவில் அமைப்பினரும், 'சர்தேச விசாரணையை' வலியுறுத்தி வருகின்றார்கள்.
மேற்படி நிலைமைகளால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளைச் சமாளிப்பதற்காக நிறைவேற்று அதிகாரத்தை தன்னகத்தே கொண்டிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, “ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதியரசர் எஸ்.ஐ. இமாம் தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்படவுள்ளது” என்று தடாலடியான அறிவிப்பை வெளியிட்டிருக்கின்றார்.
இந்நிலையில் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உள்ள அனைத்துமட்டங்களிலும் அடுத்து என்ன நடைபெறப்போகின்றது என்பது தொடர்பில் பலத்த எதிர்பார்ப்புக்கள் வலுத்திருக்கின்றன. உண்மையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் விவகாரம் தற்போது பல்வேறு முரண்நகைகளை ஏற்படுத்தியிருக்கின்றது. அவற்றை அடையாளப்படுத்துவதன் ஊடாக பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு பொறுப்புக்கூறல், நீதியை வழங்கல் ஆகியவற்றுக்கான நிகழ்தகவு எவ்வாறிருக்கும் என்பதில் தெளிவடையலாம்.
ஆளும் தரப்பில் கடமை தவறியவர்களும் பொறுப்பாளிகளும்
இத்தாக்குதல் சம்பவம் நிகழ்ந்தபோது, ஜனாதிபதியாக இருந்தவர் மைத்திரி. பிரதமராக இருந்தவர் ரணில். பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக இருந்தவர் ருவான் விஜயவர்த்தன, சட்டம் ஒழுங்க அமைச்சராக இருந்தவர் சாகல ரத்நாயக்க.
இவர்களில், தற்போது ஜனாதிபதியாக ரணில் உள்ளார். அவர் பிரதமராக இருந்தபோது “விடயம் தனக்கு தெரியாது” என்று கூறி நழுவியவர் இப்போது பாதுகாப்பு அமைச்சராக சனல்-4 காணொளியை நிராகரித்துள்ளதோடு, ஜனாதிபதியாக விசாரணை குழுவை ஸ்தாபிக்கவுள்ளதாக இருவேறு நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கின்றார்.
அவரது வலது மற்றும் இடது கைகளாக, இருக்கும் சாகலவும், ருவானும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர்களாக பதவியில் உள்ளனர். அவர்களுக்கும் அரசாங்கத்தின் மீது குறிப்பிட்டளவு அதிகாரங்களை பிரயோகிப்பதற்கான இயலுமை உள்ளது.
மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தில் பங்கேற்காது விட்டாலும், அவரையும், கட்சியும் ஆட்டுவிக்கவல்லவர்கள் அமைச்சரவை அந்தஸ்துள்ளவர்களாகவே உள்ளதால் மைத்திரியும் 'பகுதியளவான' அரச தரப்பு பிரதிநிதியாகவே உள்ளார். அசாத் மௌலானாவின் வாக்குமூலத்தின் பிரகாரம் குற்றம் சுமத்தப்பட்ட, சிவநேசத்துரை சந்திரகாந்தனும் (பிள்ளையான்) இராஜாங்க அமைச்சராக உள்ளார்.
ஆகவே, தாக்குதல் நிகழ்வதை தடுக்காதிருந்தவர்களும், அதற்குப் பொறுப்புக்கூற வேண்டியவர்களும் தற்போதைய நிலையில் ஆளும் அணியிலேயே காணப்படுகின்ற நிலையில் உள்ளக விசாரணையின் சுயாதீனத் தன்மையும், அது நிறைவுக்கு வரும் காலத்தையும் உறுதிப்படுத்த முடியாது.
அதிகாரிகளின் மட்டத்திலும் நீடிக்கும் ஆதிக்கம்
சனல்-4 காணொளியால் சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தற்போது அரச புலனாய்வுப் பிரிவின் தலைவராக பதவியில் நீடிக்கின்றார்.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் அப்போதைய பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிரான வழக்கின் முக்கிய சாட்சியாளரான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன தற்போது பொலிஸ் நிருவாகப் பிரிவின் தலைவராக உள்ளார்.
தற்போதைய பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரட்னவும், முப்படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வாவும் ராஜபக் ஷ விசுவாசிகள் என்பதற்கு அப்பால் சாதாரண சிப்பாய் மீதே நடவடிக்கை எடுக்கப்படக்கூடாது என்பதில் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டவர்கள்.
மேற்படியான அதிகாரிகள், தமது அதிகாரத்தினை திடமாக பயன்படுத்தும் நிலைமைகள் காணப்படுகின்றபோது, விசாரணைகள் ஆழமாக முன்னெடுக்கப்படுதல், சாட்சியங்களை திரட்டுதல் உள்ளிட்ட நடைமுறை செயற்பாட்டு விடயங்கள் சாத்தியமாகுமா என்ற நியாயமான ஐயப்பாடுகள் எழுகின்றன.
தேர்தல் பிரசாரத்துக்கான பெரும் ஆயுதமாகும்
அடுத்து ஜனாதிபதி தேர்தலுக்கான காலமாக இருப்பதால் அனைத்துக் கட்சிகளின் அரசியல் மேடைகளிலும் சனல்-4 காணொளியும், சர்வதேச விசாரணையும், பிரதான பிரசார ஆயுதமாக மாறப்போகின்றது.
குறிப்பாக, ஜனாதிபதி ரணில் மீண்டும் களமிறங்கவுள்ள தீர்மானித்துள்ளதால், சர்வதேச விசாரணைக்கு பதிலாக உள்ளக விசாரணை முன்னிலைப்படுத்தி தென்னிலங்கை சக்திகளை தன்பக்கம் ஈர்க்க முனைவதோடு மைத்திரி, ராஜபக் ஷ தரப்புக்களை ஆதரவளிப்பதற்கு அல்லது அமைதி காப்பதற்கு வகுவகுப்பார். மேலும், சனல்-4 உள்ளிட்ட மேற்குல தரப்பினரின் குற்றச்சாட்டுக்களை நிராகரித்து, முப்படை அங்கத்தவர்களின் பாதுகாவலான தன்னை வரித்துக்கொள்ள முயல்வார்.
மறுபக்கத்தில், சஜித்தும், அநுரவும், ஜனாதிபதி ரணில் மற்றும் ராஜபக் ஷக்கள் உட்பட தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களையும், பொறுப்புக் கூறவேண்டியவர்களையும் ஒருநேர்கோட்டில் இணைத்து உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களையும், சர்வதேச விசாரணை மீது அழற்சியைக் கொண்டிருந்தாலும் அதனையும் தமது பிரசாரத்தின் பிரதான மையப்பொருட்களாக வைத்திருப்பார்கள். ராஜபக் ஷக்களோ அல்லது அவர்கள் சார்பு தரப்பினரே களமிறங்கினால், எதிரணி மற்றும் மேற்குலகத்தின் கூட்டில் 'தேசப்பற்றாளர்களான' தமது மீள் எழுச்சிக்கு எதிரான பொய் பிரசாரம் என்று வர்ணிப்பார்கள். ஏற்கனவே சனல்-4வையும், ஐ.நாவையும் 'ராஜபக் ஷக்களின் போர் வெற்றியால் வன்மத்தைக் கொண்டிருக்கும்' தரப்பு என்று தென்னிலங்கையில் முத்திரை குத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. .
ஆகவே ராஜபக் ஷக்களின் மேற்குல எதிர்ப்பு, தேசப்பற்றுவாத பிரசாரத்தினை ஏற்றுக்கொண்டு தேரர்களும், தேசியவாதிகளும் ராஜபக் ஷக்களின் பின்னால் திரண்டால் ஆகக்குறைந்தது எதிரணி அந்தஸ்தையாவது அவர்கள் தக்கவைத்துக் கொள்வார்கள்.
நீதிக்கான ஏக குரல் விக்கித் தவிக்கும்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களின் நீதிக்கான ஏக குரலாக தன்னை வரித்துக்கொண்டுள்ள பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை, சனல்-4இன் இறுதிப்போர் குறித்த காணொளியை நிராகரித்து, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காணொளியை ஏற்றுக்கொண்டு முரண்நகைக்குள் சிக்கியுள்ள சூழலில், தேர்தல் மேடைகளில் தீவிர பிரசாரங்களின் போது வெளியிடப்படும் கருத்துக்களால் யாரை நம்புவது, யாருக்கு ஆணை வழங்குவது என்று அவரை நம்பியிருக்கும் மக்களை வழிநடத்த முடியாது விக்கித் தவிக்கும் நிலைமையே உருவாகியுள்ளது. இவ்வாறான நிலைமைகளில் முள்ளிவாய்க்கால் உட்பட தமிழினத்துக்கு இழைக்கப்பட்ட எத்தனையோ அநீதிகளுக்கான விசாரணைகளும், ஆணைக்குழு அறிக்கைகளும் கிடப்பில் போடப்பட்டு பொறுப்புக்கூறலும், நீதி வழங்கலும் தொடர்ச்சியாக மறுதலிக்கப்பட்டு வருவதைப்போன்றதொரு துரதிஷ்டமான நிலையே உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலும் நிகழ்ந்தேறவுள்ளது.
ஈற்றில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க ஒரு தடவை பாராளுமன்றில் உரையாற்றும்போது, ஊழல், மோசடிகள் தொடர்பில் விசாரணைகள் நடைபெற்று தண்டனைகள் வழங்கப்படாதிருக்கின்றமை குறித்து விசனப்படும்போது கூறிய “அவர்கள் எல்லாம் ஒரே ஆட்கள் தம்பி” என்ற கூற்றைத்தான் நினைவுபடுத்த வேண்டியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM