கார்வண்ணன்
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் பின்னணியில் இருந்தவர்கள் தொடர்பாக தகவல்களை சனல் 4 ஆவணப்படம் வெளிப்படுத்திய பின்னர், இந்த விவகாரத்தை இருவேறு முறைகளில் அணுக முற்பட்டிருக்கிறது இலங்கை அரசாங்கம். இது தொடர்பாக இரு வேறு விசாரணைக் குழுக்களை நியமித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
பாராளுமன்றத் தெரிவுக்குழுவை நியமித்து விசாரணை நடத்துவது முதலாவது அணுகுமுறை.
சனல் 4 ஆவணப்படத்தின் முன்னோட்டம் வெளியானவுடனேயே, அமைச்சரவையில் இது குறித்து கலந்துரையாடப்பட்டதாகவும், பாராளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றை அமைத்து விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும், அமைச்சர் மனுஷ நாணயக்கார அறிவித்திருந்தார்.
ஆனால், அமைச்சரவையில் அதுபற்றிக் கலந்துரையாடவில்லை என்று ஏனைய அமைச்சர்கள் சிலர் கூறியிருந்தனர்.
அதேவேளை, பாராளுமன்றத்திலும் தெரிவுக்குழுவை அமைத்து விசாரணை நடத்தும் யோசனை முன்வைக்கப்பட்ட போது, எதிர்க்கட்சியினர் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.
கடந்த காலங்களில் பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் விசாரணைகள் எதுவும் நியாயமான சூழலில் நடக்கவில்லை என்று அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
அதனால் தான் சர்வதேச விசாரணையை கோரினர். இந்தச் சூழலில் சனல் 4 குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் எஸ்.ஐ. இமாம் தலைமையில் ஜனாதிபதி விசாரணைக் குழுவை நியமித்துள்ளார்.
அதாவது, ஒருபக்கம் தெரிவுக்குழு விசாரணை, இன்னொரு பக்கம் ஜனாதிபதி விசாரணைக்குழு- இந்தக் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவை அரசதரப்பினால் அதிகாரபூர்வமாக செயற்படுத்தப்படும் விடயங்கள்.
ஓய்வுபெற்ற, உயர்நீதிமன்ற நீதியரசர் தலைமையிலான விசாரணைக்குழுவை அமைக்க ஜனாதிபதி தீர்மானித்திருப்பதான அறிவிப்பு வெளியாகிய அன்று பாதுகாப்பு அமைச்சினால் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது.
சனல் 4 வெளியிட்டுள்ள பொய்யான குற்றச்சாட்டுகளை அரசாங்கத்தின் சார்பாக பாதுகாப்பு அமைச்சு திட்டவட்டமாக நிராகரிப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
ஜனாதிபதி என்ற முறையில், ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் தலைமையில் விசாரணைக்குழுவொன்றை நியமிக்க முடிவு செய்திருந்த நிலையில், அதே ஜனாதிபதியின் கீழ் உள்ள பாதுகாப்பு அமைச்சு, அரசாங்கத்தின் சார்பில் சனல் 4 குற்றச்சாட்டுகளை மறுத்திருக்கிறது. இது முரண்பாடானதாக உள்ளது.
சனல் 4 குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க வேண்டிய கடப்பாடு அரசாங்கத்துக்கு உள்ளது. எந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்படும் போதும், அதனை நிராகரிப்பது அரசாங்கத்தினதும், பாதுகாப்பு அமைச்சினதும் வழக்கம் என்பதால், பாதுகாப்பு அமைச்சின் இந்த மறுப்பு அறிக்கையை எவரும் கவனத்தில் கொள்ளவில்லை.
ஆனால், மறுப்பறிக்கை வெளியிட்ட பாதுகாப்பு அமைச்சும், குற்றச்சாட்டை விசாரிக்க ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் தலைமையிலான விசாரணைக்குழுவை நியமிக்க ஜனாதிபதி முடிவு செய்திருப்பதாக அறிவித்த ஜனாதிபதி ஊடகப் பிரிவும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் இயங்குகின்ற இருவேறு கட்டமைப்புகளாகும்.
குற்றச்சாட்டை விசாரிப்பதாயின், அதனை மறுக்க வேண்டியதில்லை.
பாதுகாப்பு அமைச்சு ஜனாதிபதியின் முழுக் கட்டுப்பாட்டில் இருந்திருந்தால், அரசாங்கத்தின் சார்பில் அந்த மறுப்பு வெளியிடப்பட்டிருக்காது.
பாதுகாப்புத் திட்ட மறுசீரமைப்பு குறித்து பேசப்படுகின்ற இந்த தருணத்தில் இவ்வாறான முரண்பாடான செயற்பாடுகள் வெளிப்பட்டிருப்பது ஆச்சரியம். பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள மறுப்பில், மூன்று முக்கியமான விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பாக உள்ளூர் மற்றும் சர்வதேச அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், ஸஹ்ரான் ஹாஷிம் தலைமையிலான ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதக் குழுவே இந்த அனர்த்தங்களின் காரண கர்த்தாக்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது என்பது முதல் விடயம்.
சனல் 4 ராஜபக்ஷக்களின் தேவைக்காக, கோட்டாபய ராஜபக் ஷவை ஜனாதிபதியாக்குவதற்காக நடத்தப்பட்ட தாக்குதல் என்ற குற்றச்சாட்டை முன்வைத்திருந்ததே தவிர, ஸஹ்ரான் ஹாஷிம் குழு அதில் சம்பந்தப்படவில்லை என்றோ, அவர்களால் தாக்குதல் முன்னெடுக்கப்படவில்லை என்றே குறிப்பிடப்படவில்லை.
ஸஹ்ரான் குழுவினரின் இலக்கும், ராஜபக் ஷவினரின் தேவையும் ஒரே புள்ளியில் சந்தித்தது, அவ்வாறு அவற்றை சந்திக்க வைத்தது பிள்ளையானும், இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளராக இருந்த மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவும் தான் என்பது சனல் 4 முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டாகும்.
ஸஹ்ரான் தலைமையிலான குழுவினர் பாதுகாப்பு அமைச்சின் சம்பளப் பட்டியலில் இருக்கவில்லை என்பது பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ள இரண்டாவது முக்கிய விடயம்.
ஸஹ்ரான் குழுவினருக்கு தங்களின் ஊடாக நிதி வழங்கப்பட்டது என்று அசாத் மௌலானா கூறியிருக்கிறார்.
அதேவேளை, பிள்ளையான் குழுவுக்கு மாதம் தோறும் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் ஊடாக 35 இலட்சம் ரூபா தரப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
எனினும், ஸஹ்ரான் குழு தங்களின் சம்பளப் பட்டியலில் இருக்கவில்லை என்று கூறியுள்ள பாதுகாப்பு அமைச்சு, பிள்ளையான் குழுவுக்கு பாதுகாப்பு அமைச்சு மாதம் தோறும் சம்பளம் வழங்கியதா என்பது தொடர்பான எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை. இது சனல் 4 குற்றச்சாட்டை பாதுகாப்பு அமைச்சு ஏற்றுக் கொள்வதாக கருதப்படக் கூடியதா?
பிள்ளையான் குழு ஒரு துணை இராணுவப் படையாகவே செயற்பட்டது.
அவர்களுக்கு எந்த அடிப்படையில் 35 இலட்சம் ரூபா மாதம் தோறும் வழங்கப்பட்டது என்று ஜே.வி.பி. தலைவர் அனுரகுமார திசநாயக்க கேள்வி எழுப்பியிருக்கிறார்.
பாதுகாப்பு அமைச்சுக்குத் தெரியாமல், இராணுவப் புலனாய்வுப் பிரிவு அவர்களுக்கு நிதியை வழங்கியதா அல்லது சம்பளப் பட்டியலில் வைத்திருந்ததா என்ற கேள்வியும் இதனால் எழுகிறது.
பாதுகாப்பு அமைச்சின் சம்பளத்தைப் பெற்றுக் கொள்ளும் குழுவினர், தவறுகளை செய்திருந்தால், அதற்கு பாதுகாப்பு அமைச்சும் பதிலளிக்கக் கடமைப்பட்டுள்ளது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை கடந்து சென்றிருக்கிறது பாதுகாப்பு அமைச்சு. பிள்ளையான் தரப்பின் மீதான குற்றச்சாட்டுகளை மறுக்க முயன்றால், ஆதாரங்கள் பல வெளிவரக் கூடும் என்பதால் இந்த விடயத்தில் அரசாங்கம் அடக்கி வாசிக்க முடிவு செய்திருக்க கூடும்.
அடுத்து, பாதுகாப்பு அமைச்சின் மறுப்பறிக்கையில், முக்கியமாக குறிப்பிடப்பட்டுள்ள மூன்றாவது விடயம், மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயை பாதுகாப்பதாகும்.
36 ஆண்டுகளாக தேசத்துக்கு சேவையாற்றிய அர்ப்பணிப்புள்ள சிரேஷ்ட இராணுவ அதிகாரிக்கு எதிராக, தாக்குதலைத் திட்டமிட்டு குண்டுதாரிகளுக்கு உதவியதாக தொடுக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை பாதுகாப்பு அமைச்சு வன்மையாக கண்டிப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.
சனல் 4 குற்றச்சாட்டை முன்வைத்துள்ள காலப்பகுதியில்- அதாவது 2016 டிசம்பர் தொடக்கம், 2019 நவம்பர் வரைக்கும்- மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே இலங்கையில் இருக்கவில்லை, குறித்த காலப்பகுதியில் பாதுகாப்பு அல்லது புலனாய்வு துறைகளில் பணியில் அமர்த்தப்படவோ, குறித்த துறைகளில் அதிகாரபூர்வமாக பொறுப்புகள் எதுவும் வழங்கப்பட்டிருக்கவே இல்லை என்றும் பாதுகாப்பு அமைச்சு வாதத்தை முன்வைத்திருக்கிறது. குற்றச்சாட்டை முன்வைப்பதற்கு உள்ள உரிமையைப் போலவே, மறுப்பதற்கும் உரிமை உள்ளது.
ஆனால், சனல் 4 ஆவணப்படத்தில், குறித்த காலத்தில் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே சதித் திட்டத்தில் பங்கெடுத்தார் என்று சாட்சியம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த சாட்சியத்தை வெறும் அறிக்கைகளால் நிராகரித்து விட முடியாது. அதற்கு அப்பால், அவர் குறித்த காலப்பகுதியில் ஒருபோதும் இலங்கைக்கு உத்தியோகபூர்வமாகவோ, தனிப்பட்ட முறையில் வேறு பெயரிலோ அல்லது வேறு கடவுச்சீட்டிலோ நாட்டுக்கு வந்து செல்லவில்லை என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும். அதற்கான சான்றுகளையும் சமர்ப்பிக்க வேண்டும். ஏனென்றால், சுரேஷ் சலே அதிகாரபூர்வமாகத் தான் இந்த நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தார் என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்படவில்லை.
அதனை அவர் அதிகாரபூர்வமற்ற முறையில், தனக்கிருந்த தனிப்பட்ட தொடர்புகளின் அடிப்படையில், தனிப்பட்ட செல்வாக்கு மற்றும் தேவைகளின் அடிப்படையில் கூட முன்னெடுத்திருக்கலாம்.
அவ்வாறு நடந்திருப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன. பாரிய சதித் திட்டத்தை முன்னெடுக்கும் ஒருவர், அதனை அதிகாரப்பூர்வமான வழிமுறைகளின் ஊடாக முன்னெடுத்திருப்பார் என்று எதிர்பார்க்க முடியாது.
2015 ஜனாதிபதி தேர்தலில் இந்தியப் புலனாய்வு அமைப்பான றோ தன்னைத் தோற்கடித்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றம்சாட்டியமை நினைவிருக்கலாம். அந்த இடத்தில் றோ மீது குற்றச்சாட்டை முன்வைத்தாலும், இந்திய அரசாங்கத்தின் மீது அவர் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கவில்லை.
ஏனென்றால் அது இந்தியாவின் உத்தியோகப்பூர்வ நிகழ்ச்சி நிரலா என்பதை உறுதி செய்யாமல், மஹிந்த ராஜபக்ஷ இந்திய அரசுக்கு எதிராக குற்றச்சாட்டை முன்வைத்தால், தவறாகி விடும் என்பதாலேயே றோவின் மீது பழியைப்போட்டார்.
புலனாய்வுப் பிரிவுகள் பல சமயங்களில் தன்னிச்சையாக செயற்படுவதுண்டு. சில வேளைகளில் அவ்வாறான செயற்பாடுகள் தனிநபர்களின் தேவைகளை அடிப்படையாக கொண்டிருந்த வரலாறும் உள்ளது.
எனவே, மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே விடயத்தில் அவரைப் பாதுகாக்க பாதுகாப்பு அமைச்சு முற்பட்டிருந்தாலும், அவர் உத்தியோ
கப்பூர்வமற்ற வகையில் சம்பந்தப்பட்டிருக்க வில்லை என்பது நிரூபிக்கப்பட வேண்டும். அதற்கான சான்றுகளை அவர் முன்வைப்பது முக்கியம். இந்தியா மற்றும் மலேசிய அதிகாரிகளின் உதவி அதற்குத் தேவைப்படும்.
அதைவிட அவ்வாறான சான்றுகளை முன்வைக்க முற்படும் போது-வேறு இரகசிய செயற்பாடுகளும் கிணறு வெட்ட பூதம் கிளம்பியது போல வெளிவரலாம்.
எவ்வாறாயினும், சனல் 4 விவகாரத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாடு தெளிவானதாக இல்லை. குற்றச்சாட்டை விசாரித்து விட்டு மறுப்பதற்குப் பதிலாக உடனடியாக மறுப்பை வெளியிட்டது குற்றம்சாட்டப்பட்டவர்களை பாதுகாக்கும் நோக்கத்துடன் தான் என்ற கருத்தே இதன் மூலம் உருவாகியிருக்கிறது.
இவ்வாறான நிலையில் ஜனாதிபதி நியமித்துள்ள விசாரணைக் குழுவோ, பாராளுமன்றத் தெரிவுக்குழுவோ மக்களினதும் சர்வதேசத்தினதும் நம்பிக்கையைப் பெறுவதற்கு வாய்ப்புகள் குறைவு.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM