கபில்
இந்திய பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திப்பதற்கு, தமிழ்க் கட்சிகள் தரப்பில் ஒரு பிரயத்தனம் முன்னெடுக்கப்படுவதாக தெரிகிறது.
இந்தியப் பிரதமருடன் சந்திப்பு ஒன்றை ஒழுங்கு செய்து தருமாறு ஒன்றுபட்டுக் கோருவோமா என, தமிழ்த் தேசிய கட்சிகளின் தலைவர்களுக்கு, தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் கடிதம் எழுதியிருக்கிறார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலை வர் இரா.சம்பந்தன், ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் சிறிகாந்தா, ஈ.பி.ஆர்.எல்.எவ். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோருடன் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கும் இதுதொடர்பாக சி.வி.விக்னேஸ்வரன் கடிதம் அனுப்பியிருக்கிறார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திப்பதற்காக விரைவில் புதுடெல்லிக்குச் செல்வோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்ட காலத்தில் இருந்து, தமிழ்க்கட்சிகள் கூறி வந்தன.
பின்னர், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி இந்தியப் பிரதமரைச் சந்திக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியிடப்பட்டன.
இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கைக்கு வந்திருந்த போதும், இந்தியப் பிரதமரைச் சந்திப்பதற்கான ஒழுங்குகள் குறித்து பேசப்பட்டன.
அப்போது, இந்தியப் பிரதமரைச் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே மேற்கொள்வார் என்றும் கூறப்பட்டது.
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் யாழ்ப்பாண பயணத்தின் போதும், மத்திய இணை அமைச்சர் எல்.முருகனின் யாழ்ப்பாண பயணத்தின் போதும் கூட, இந்தியப் பிரதமரைச் சந்தித்து தமிழ் மக்களின் பிரச்சினைகளை எடுத்துரைக்க தமிழ்க் கட்சிகளுக்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும் என்று உறுதியளித்திருந்தனர்.
ஆனால், தமிழ்க் கட்சிகளுக்கான புதுடெல்லியின் கதவுகள் இன்னமும் திறக்கப்படாமலேயே இருக்கிறது.
இவ்வாறான நிலையில் தான், இந்தியப் பிரதமரைச் சந்தித்து தமிழ் மக்களின் பிரச்சினைகளை எடுத்துக் கூறவும், 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தவும், வாய்ப்பு ஒன்றைக் கோருவதற்கான முன்னெடுப்புகளில் சி.வி.விக்னேஸ்வரன் இறங்கியிருக்கிறார்.
அத்துடன், இந்தியப் பிரதமருக்கு அனுப்புவதற்கான கடிதம் ஒன்றை தமிழ்க் கட்சிகளின் சார்பில் வரைவதற்கும் அவர் ஒப்புதலைக் கோரியிருக்கிறார்.
இந்தியப் பிரதமரைத் தமிழ்க் கட்சிகள் சந்திப்பது முக்கியமான ஒரு விடயமாகவே இருக்கும். கடந்த காலங்களில் இந்தியப் பிரதமர் மோடியை, தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள், கொழும்பிலும், புதுடெல்லியிலும் சந்தித்துப் பேசியிருந்தார்கள்.
ஆனால், அண்மைக்காலங்களில் அத்தகைய சந்திப்புகள் ஏதும் நடக்கவில்லை. அதற்கு தமிழர் தரப்பில் இரண்டு முக்கியமான காரணங்களைக் குறிப்பிடலாம்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திப்பதற்கான நேரம் ஒழுங்குபடுத்தப்பட்டு அழைப்பு விடுக்கப்பட்ட போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அந்தச் சந்திப்பை பிற்போடுமாறு கோரியிருந்தார்.
உலக அரங்கில் இந்தியா ஒரு முக்கியமான நாடு. அந்த நாட்டின் தலைவரைச் சந்திப்பதற்கு பல உலகத் தலைவர்களே காத்திருக்கிறார்கள். அவ்வாறான நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அந்தச் சந்திப்பை எந்த தடைகள், சிரமங்களையும் தாண்டி முன்னெடுத்திருக்க வேண்டும்.
அவரால் அதில் பங்கேற்க முடியாது போயிருப்பினும், ஏனைய தலைவர்களையாவது அனுப்பி வைத்திருக்க வேண்டும்.
சந்திப்பை பிற்போடுமாறு இந்திய தலைவரிடம், தமிழர் தரப்பில் கோரப்பட்டதை புதுடெல்லி விரும்பவில்லை.
அடுத்து, இலங்கையில் சீனாவைக் கையாளுவதற்கான ஒரு துருப்புச் சீட்டாகவே தமிழர் தரப்பை இந்தியா பயன்படுத்தி வருகிறது.
கோட்டாபய ராஜபக் ஷ ஆட்சியில் இருந்த போது, இலங்கை அரசாங்கத்தைக் கையாளுவதில் இந்தியாவுக்கு அதிக சிரமங்கள் காணப்பட்டன.
சீனாவின் தலையீடுகள், செல்வாக்குகள் அதிகரிப்பதை தடுப்பதில் இந்தியாவுக்கு நெருக்கடிகள் இருந்தன. அத்தகைய தருணத்தில் தமிழ்க் கட்சிகளை புதுடெல்லிக்கு அழைத்து, அழுத்தங்களைக் கொடுக்க முனைந்தது புதுடெல்லி.
ஆனால், அதற்குப் பின்னர் நிலைமை கள் மாறி விட்டன. கோட்டா அரசு பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கிக் கொண்ட வாய்ப்பை, இந்திய அரசு தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டது.
வரலாற்றில் முன்னொருபோதும் இல்லாத வகையில் மிகக் குறுகிய காலத்துக்குள் 4 பில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்கி, தனது பிராந்திய மற்றும் பூகோள அரசியல் செல்வாக்கை உறுதிப்படுத்திக் கொண்டது.
கோட்டா அரசாங்கத்தை கட்டுக்குக் கொண்டு வந்ததுடன், ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தையும், ஓரளவுக்கு கட்டுப்படுத்தக்கூடிய நிலையை அடைந்திருக்கிறது. இவ்வாறான நிலையில், தமிழ்க் கட்சிகளை வைத்து சீனத் தலையீடுகளை தடுக்கவோ, கொழும்பு அரசை கையாளவோ வேண்டிய அவசியம் இப்போது இந்தியாவுக்கு இல்லை.
எனவே, தமிழ்க் கட்சிகளை சந்திப்புக்கு அழைப்பதற்கு புதுடெல்லி அவசரம் காண்பிக்கவில்லை. ஆனால், தமிழ்க் கட்சிகள் இப்போது இந்தியப் பிரதமருடனான சந்திப்புக்காக அலையும் நிலை உருவாகியிருக்கிறது.
கோட்டா அரசாங்கத்தைவிட மோசமாக, ரணில் அரசாங்கத்தில் மௌத்தமயமாக்கல் தீவிரமாக இடம்பெறுகிறது. காணிகள் அபகரிப்பு தொடர்கிறது.
13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதாக கூறிய ரணில் இப்போது, பொலிஸ், காணி அதிகாரங்கள் இல்லை என்கிறார்.
இவ்வாறான நிலையில், 13ஐ முழுமையாக அமுல்படுத்துவதற்கு இந்தியா அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும் என்று தமிழ்க் கட்சிகள் கருதுகின்றன.
ஆனால், 13ஐ நடைமுறைப்படுத்தும் விடயத்தில் தமிழ்க் கட்சிகளுக்குள் ஒருமித்த நிலைப்பாடு இல்லை.
அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் 13ஆவது திருத்தச் சட்டத்தை ஏற்கவில்லை. அதனை நடைமுறைப்படுத்துமாறு கோருவதற்கும் தயாராக இல்லை.
அதேவேளை, தமிழ் அரசுக் கட்சியும் 13ஆவது திருத்தச் சட்ட அமுலாக்கத்தை மட்டும் வலியுறுத்த தயாராக இல்லை. அது சமஷ்டி தீர்வுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது.
ஏற்கனவே ரணில் விக்ரமசிங்கவின் இந்தியப் பயணத்துக்கு முன்னர், இந்தியப் பிரதமருக்கு கடிதம் அனுப்பும் விடயத்தில் இதனால் முரண்பாடு ஏற்பட்டது.
இதையடுத்து, பல முனைகளில் இருந்து கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இந்தச் சூழலில் தான், இந்தியப் பிரதமரைச் சந்திப்பதற்கான ஒழுங்குகளை மேற்கொள்ளும் முயற்சியில் சி.வி.விக்னேஸ்வரன் இறங்கியிருக்கிறார்.
ஏனைய கட்சிகள் மற்றும் தலைவர்களுடன் ஒப்பிடுகையில், அவர் அரசியலில் இளவல். அவர், இந்த முன்முயற்சியில் இறங்குவதை, அவரை விட அரசியலில் மூத்தவர்கள், விரும்புவார்களா, அதனை அங்கீகரிப்பார்களா என்பது முதல் பிரச்சினை.
அவ்வாறு அங்கீகரித்தாலும், எல்லா தமிழ்க் கட்சிகளும் அதற்கு இணங்கும் என எதிர்பார்க்க முடியாது.
அதேவேளை, புதுடெல்லிக்குச் சென்று தான் சந்திக்க வேண்டும் என்பதில்லை, இந்திய தேர்தல் பிரசாரத்துக்காக அவர் தமிழகம் அல்லது தென் மாநிலங்களுக்கு வரும் போது சந்திக்கலாம் என்ற யோசனையும் சி.வி.விக்னேஸ்வரனால் முன்வைக்கப்பட்டிருக்கிறது. இதுவும் சர்ச்சைக்குரிய ஒரு விடயமாக உள்ளது.
அண்மைக் காலத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சினையை பா.ஜ.க. தனது அரசியல் தேவைக்காக பயன்படுத்த முனைகிறது.
அண்ணாமலை மற்றும் எல்.முருகன் ஆகியோரின் இலங்கைப் பயணம் மற்றும் அதனை தொடர்ந்து வெளியிட்ட கருத்துக்கள், தமிழர்கள் நரசங்காரம் செய்யப்பட்டனர் என்ற உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்து, கச்சதீவு விவகாரம் போன்றவற்றில் வெளியிடப்படும் கருத்துக்கள் என்பன தமிழர் விவகாரத்தை பா.ஜ.க. தனது அரசியலுக்காக கையில் எடுக்கிறதா என்ற கேள்வியை எழுப்பியிருந்தது.
தமிழகத்தில் காலூன்றுவதை இலக்காக கொண்டுள்ள பா.ஜ.க, இந்தியப் பிரதமரை தமிழகத்தில் சந்திப்பதற்கு, ஒழுங்குகளை செய்து தருவதாக தூது விட்டதா என்ற சந்தேகங்களும் உலாவுகின்றன.
இந்தியாவில் தேர்தல் நடக்கப் போகின்ற நிலையில் மத்திய அரசாங்கம் கொள்கை ரீதியான முடிவுகளை எடுப்பதை தவிர்க்கும். அதைவிட அவ்வாறான முடிவுகள் எடுக்கப்பட்டாலும் அது நடைமுறைப்படுத்தப்படுமா, அதற்கான சூழல் தேர்தலுக்குப் பின்னர் இருக்குமா என்ற கேள்விகளும் உள்ளன.
தமிழ் மக்களின் அவசரத் தேவையை பயன்படுத்திக் கொள்வதற்கு இந்திய அரசியல் தரப்புகள் முற்பட்டால் அதனை தடுக்கக் கூடிய நிலையில் தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் இல்லை. அவ்வாறு அவர்களால் மறுக்கவும் முடியாது.
இவ்வாறான நிலையில், இந்தியப் பிரதமரைச் சந்திப்பது பிரச்சினைகளை தீர்க்கும் என்ற உத்தரவாதம் இருந்தால், மட்டுமே இந்தப் பயணம் தமிழர்களுக்குச் சாதகமாக அமையும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM