என்.கண்ணன்
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் பின்னணியில் இருந்தவர்கள், தவறுகளை ஒப்புக்கொண்டு திருந்தி வந்தால், மன்னிக்கத் தயார் என்று, திடீரென அறிவித்திருக்கிறார் கத்தோலிக்கத் திருச்சபையின் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்.
சனல் 4 ஆவணப்படம் வெளியாகிய பின்னர், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச விசாரணையை நடத்த வேண்டும் என்று குரல் எழுப்பி பரவலான கவனத்தை ஈர்த்தவர் அவர்.
ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர், மைத்திரி-–ரணில் அரசாங்கத்தை வெளிப்படையாக விமர்சித்து, ராஜபக்ஷவினர் மீண்டும் அதிகாரத்துக்கு வருவதற்கும் அவர் ஆதரவளித்திருந்தார்.
ஆனால், இந்த தாக்குதலுக்குப் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், அவர் கோட்டா அரசாங்கத்துடன் முரண்படத் தொடங்கினார்.
ராஜபக்ஷவினருடன் நெருங்கிய நட்பில் இருந்த பேராயர் மல்கம் ரஞ்சித், ஒருகட்டத்தில் அவர்களுக்கு எதிராகவும் போராட்டங்களை முன்னெடுக்க ஆரம்பித்தார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை நடத்தியவர்கள், ஸஹ்ரான் ஹாஷிம் தலைமையிலான இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தான் என்பது அவருக்கும் தெரியும், முழு உலகத்துக்கும் தெரியும்.
ஆனால், அவர்கள் அந்த தாக்குதலை நடத்துவதற்கு தூண்டியவர்கள், ஒத்துழைத்தவர்கள், பின்புல ஆதரவு வழங்கியவர்கள் யார், என்று கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் என்பதில் பேராயர் உறுதியாக இருந்தார்.
யாரோ ஒருவர் பின்புலமாக இருந்திருக்கிறார் என்பதை மட்டும் அவர் அறிந்திருந்தார். அதனை வைத்து தான் அவர்களை பொறுப்புக்கூற வைக்க வேண்டும் என்று ராஜபக்ஷவினருடன் முரண்பட்டார்.
ஆனால், சனல் 4 ஆவணப்படமானது, இந்த தாக்குதல் ராஜபக்ஷவினரின் நலன் கருதி, கோட்டாபய ராஜபக்ஷவை அதிகாரத்துக்கு கொண்டு வரும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டது எனக் கூறிய பின்னர் தான், அவர் சர்வதேச விசாரணையை வலியுறுத்தினார்.
திடீரென அவர் இப்போது மன்னிப்பு வழங்குவது குறித்து பேசத் தொடங்கியிருக்கிறார்.
சர்வதேச விசாரணை தேவை என்று வலியுறுத்தினாலும், குற்றமிழைத்தவர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்று அவர் கோரவில்லை.
அதற்குப் பதிலாக குற்றமிழைத்தவர்களை மன்னிக்கத் தயார் என்கிறார். குற்றமிழைத்தவர்களை மன்னிப்பதா, இல்லையா என்று தீர்மானிக்க வேண்டிய கட்டம் இதுவல்ல. அதனை தீர்மானிக்கக்கூடிய நிலையில் பேராயர் இருக்கிறாரா என்ற கேள்வியும் உள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தனியே கத்தோலிக்கத் தேவாலயங்களின் மீது மாத்திரம் நடத்தப்பட்டிருந்தால், பேராயர் குற்றமிழைத்தவர்களை மன்னிக்கத் தயார் என்று கூறலாம். அதற்குக் கூட பாதிக்கப்பட்டவர்களின் ஒப்புதல் தேவை.
கத்தோலிக்க மதகுருவாக, கர்தினாலாக, பாவமன்னிப்புக் கோருபவரை அவர் மன்னித்து விடலாம். ஆனால், பாதிக்கப்பட்டவர்களின் கருத்து இங்கு முக்கியம்.
அதைவிட, ஈஸ்டர் ஞாயிறன்று மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திலும் தாக்குதல் நடத்தப்பட்டது. இரண்டு நட்சத்திர விடுதிகளிலும் தாக்குதல்கள் இடம்பெற்றன. அங்கு கொல்லப்பட்டவர்கள் பலர் கத்தோலிக்கர்கள் அல்லர்.
எனவே, ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுக்கு நீதியைக் கோரும் உரிமையைக் கொண்டவர்கள் யாருக்கும், குற்றமிழைத்தவர்களை மன்னித்து விடும் அதிகாரம் இல்லை.
குற்றம்சாட்டப்பட்டவர்கள் தமது தவறுகளை ஒப்புக்கொண்டால் மன்னித்துவிடலாம் என்று அவர் கூறியிருக்கிறார்.
மன்னிப்பு என்பது உயரிய பண்பு என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
தமிழ் அரசியல் கைதிகள் பலர் செய்த குற்றத்தை மாத்திரமன்றி, செய்யாத குற்றத்தைக் கூட செய்ததாக, நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டனர்.
15 இருபது ஆண்டுகள் விளக்கமறியலில் இருந்த அவர்களுக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் என்று பேராயரோ அல்லது வேறு மதத் தலைவர்களோ ஒருபோதும் வலியுறுத்தியதில்லை.
அவர்களுக்கு ஒன்றிரண்டு அல்ல, நூறு வருடங்கள் சிறைத்தண்டனை விதித்த போது கூட இவர்கள் அமைதியாகத்தான் இருந்தார்கள்.
தென் ஆபிரிக்காவில் உண்மை நல்லிணக்க ஆணைக்குழு முன்பாக, தவறிழைத்தவர்கள் உண்மையை ஒப்புக்கொண்ட போது, மன்னிப்பு வழங்கப்பட்டது என்று உதாரணம் காட்டியிருக்கிறார் பேராயர் மல்கம் ரஞ்சித்.
ஆனால், அந்த உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு தலைமை தாங்கிய பேராயர் டெஸ்மன் டுட்டு, வலிகளுடன் தான், கறுப்பின மக்கள் இணங்கி வாழுகின்றனர் என்று குறிப்பிட்டிருந்தார்.
பல குற்றவாளிகள் தங்களின் குற்றத்தை ஒப்புக் கொள்ள மறுத்தனர் என்றும், அவர்களை எதுவும் செய்ய முடியாமல், அந்த விவகாரத்தை கைவிட்டதாகவும் பேராயர் டெஸ்மன்ட் டுட்டு கூறியிருந்தார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள், முதலில், தங்களின் குற்றங்களை ஒப்புக்கொள்ள வேண்டும். தாங்கள் தவறு செய்து விட்டதாக மனம் வருந்தி, மனம் திருந்தி வர வேண்டும்.
அதற்குப் பின்னர் தான், அவர்களுக்கு மன்னிப்பு வழங்குவது குறித்து எவருமே தீர்மானிக்க முடியும்.
இது ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு மாத்திரமன்றி, போர்க்கால மீறல்களுக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்களுக்கும் கூட பொருத்தமானது தான்.
தேசிய ஒற்றுமைக்கான உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பதற்கு முற்படும் அரசாங்கம், குற்றவாளிகள் என இனங்காணுவோரை நீதியின் முன் நிறுத்தும் எந்த ஏற்பாட்டையும் முன்வைக்கவில்லை.
அவர்களை விசேட நீதிமன்றத்தில் நிறுத்தும் வகையில் அந்தப் பொறிமுறை அமைந்திருக்க வேண்டும் என, ஜெனிவா கூட்டத்தொடரில் கூட வலியுறுத்தப்பட்டிருக்கிறது.
உண்மை நல்லிணக்க ஆணைக்குழு வெறுமனே குற்றவாளிகளை காப்பாற்றும் பொறிமுறையாக இருக்கும் என்பதால் தான் பாதிக்கப்பட்டவர்களால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாதிருக்கிறது.
இவ்வாறான நிலையில், பேராயர் மல்கம் ரஞ்சித்தும், குற்றம்சாட்டப்படுபவர்களை காப்பாற்றவே மன்னிப்பு வழங்கத் தயார் என்று அறிவித்துள்ளாரா என்ற சந்தேகம் எழுவது இயல்பு தான்.
பேராயர் மல்கம் ரஞ்சித் இவ்வாறான கருத்தை வெளியிட்டுள்ள நிலையில், ஈபிஆர்எல்எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஊடகங்களால் முதன்மைப்படுத்தப்பட்பட ஒரு விடயம் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கிறது.
நீண்ட அறிக்கை ஒன்றில் அவர், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து சர்வதேச விசாரணையை நடத்தி, இலங்கை அரசாங்கம் தனது புனித தன்மையை நிரூபிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
இந்த இடத்தில், இலங்கை அரசாங்கம் எப்போது புனித தன்மையை கொண்டிருந்தது என்ற கேள்வி எழுகிறது.
தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள், இனக்கலவரங்கள், இனப்படுகொலைகள், நிகழ்ந்த போது, அதனை தூண்டி விட்ட அல்லது செயற்படுத்திய, அல்லது அதற்கு காரணமாக இருந்தது இலங்கை அரசாங்கம் தான். அவ்வாறான இலங்கை அரசாங்கத்துக்கு சுரேஸ் பிரேமச்சந்திரன் ஏன் புனிதர் பட்டம் கொடுக்க முனைகிறார்?
இலங்கை அரசாங்கம் எப்போதோ புனித தன்மையை இழந்து விட்டது. அது இனவாத சகதிக்குள் புரளும் ஒரு அரசாங்கம். அது புனிதத்தன்மையை ஒருபோதும் எட்ட முடியாது.
தமிழர்களுக்கு நீதியை வழங்காத அரசாங்கத்தினால் எப்படி புனிதத் தன்மையை நிரூபிக்க முடியும்?
அரசியல்வாதிகளும் சரி, மதத் தலைவர்களும் சரி. தாங்களும் இருக்கிறோம் என்பதற்காக வெளிப்படுத்தும் அறிக்கைகள் பல, இவ்வாறான சர்ச்சைகளைத் தான் உருவாக்குகின்றன.
ஆனால், மன்னிப்பையோ புனிதத்தன்மையையோ பெறக்கூடிய நிலையில் குற்றமிழைத்தவர்கள் இல்லை.
ஏனென்றால், கடந்த காலத்துக்காக வருந்தக் கூடிய நிலையில், கடந்தகால குற்றங்களை மனதார ஏற்றுக் கொள்ளக்கூடிய நிலையில் அவர்கள் இல்லை.
இன்றைக்கும் மறுத்துரைப்பதிலேயே கவனமாக இருக்கிறார்கள்.
இவ்வாறான நிலையில், மன்னிப்பு, புனிதத்தன்மை பற்றிய கருத்துக்களை வலியுறுத்துவது குற்றவாளிகளுக்கு வெள்ளையடிக்கும் செயலாகத் தான் இருக்கும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM