(கலாபூஷணம் சு.இராஜசேகரன்)
இக்காலத்தில் நாம் அனுபவிக்கும் தொலைக்காட்சிகளோ, வானொலிகளோ, திரைப்பட மாளிகைகளோ இல்லாத இருண்ட காலப்பகுதியில், தோட்டத்து பெரிய கங்காணிகளின் வீட்டின் வராண்டாவில் தீப்பந்தம் அல்லது லாந்தர் விளக்கு வெளிச்சத்திலேயே பல காவியங்கள், இதிகாச கதைகள் அரங்கேறியுள்ளன. கங்காணியின் வீட்டின் வெளியே குளிரில் கம்பளி சாக்கு போத்தியபடி கீழே அமர்ந்திருக்கும் தொழிலாளர்கள் அனைவரும் இரசித்து கேட்கும்படி ‘ஆரவல்லி - சூரவல்லி’, மதனகாமராசன், விக்கிரமாதித்தன் போன்ற கதைகள் விடிய விடிய கூறப்பட்டு வந்தன.
பின்னர் தென்னிந்தியாவிலிருந்து பெரிய கங்காணிமாரால் இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட கலைஞர்கள் “காமன் கூத்து, பொன்னர் சங்கர், அருச்சுணன் தபசு, மதுரை வீரன். நல்ல தங்காள்” போன்ற கூத்துகளையும் ஆடிக் காட்டியுள்ளார்கள். அவர்களோடு இணைந்த தோட்டத்து இளைஞர்களும் இக்கலைகளை பழகிக் கொண்டதால் இன்றும் அக்கலைகள் அழியாது பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
நாளடைவில் தமிழகத்திலிருந்து வந்த நடிகர்களால் நகர்புறங்களில் நாடகங்கள் நடத்தப்பட்டன. இந்நாடகங்களை பார்ப்பதற்காக பல மைல் தூரம் நள்ளிரவு வேளையில் நடந்து சென்றும் வந்துள்ளார்கள். பின்னர், படிப்படியாக தோட்டங்களில் பிரட்டுகளத்திலும் பிள்ளைமடுவத்திலும் இரவில் நாடகங்கள் நடத்தப்பட்டன.
1930ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் இந்தியாவிலிருந்து வந்த கலைஞர்களால் மலையகம் எங்கும் நாடகங்கள் நடாத்தப்பட்டுள்ளன.வேல்நாயக்கர் டிராமசெட், செந்தில் தேசிகர் டிராமா, சிக்கந்தர் சாய்பு டிராமா, ராஜகோபால் டிராமா என்பன இந்த நாடகக்கம்பனிகளின் பெயர்களாகும்.
பசறை, பண்டாரவளை, நாவலப்பிட்டி, பூண்டுலோயா,லிந்துல போன்ற தோட்டப் புறங்கள் சார்ந்த நகரப்பகுதிகளில் தமது நாடக சபாக்களை இந்த கம்பனிகள் நடத்தியுள்ளன. இந்த டிராமா செட்டுகளில் சிக்கந்தர் சாய்பு கம்பனியின் செட்டுகள் பார்வையாளர்களை வியப்பூட்டுவது போல் அமைந்திருக்கும். அவர்களால் நடத்தப்பட்ட லங்காதகனம், ஹரிச்சந்திரா, கிருஸ்ணலீலா, சத்தியவான் சாவித்திரி, குலேபகவாலி போன்றவை மக்களால் தொடர்ந்து சென்று பார்த்து இரசிக்கப்பட்ட நாடகங்கள். சில சமயங்களில் சில நாடகங்களை பல தடவைகள் மேடையேற்ற வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.
மலையக தொழிற்சங்கத்தின் தந்தை எனப் போற்றப்படும்.கோ. நடேசையர் காலத்தில் தான் நாடகங்கள் மலையகப் பிரதான நகரங்களிலும், ஏனை இடங்களிலும் இடம்பெற ஆரம்பித்துள்ளன. இதில், அக்காலப்பகுதியில் வெளிவந்த ஜனமித்திரன், லங்காமித்திரன், தேசத்தொண்டன் போன்ற பல பத்திரிகைகள் மூலமாக கிடைத்த தகவலின்படி 1917ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற நாடகங்களில் கொம்பனித் தெரு ‘பார்ஸி’ நாடகக் குழுவினரால் 10.12.1918. அன்று ‘குலேபகவாலி’ நாடகம் நடத்தப்பட்டது என அறிய முடிந்தது.
அட்டனில் நாடக சபாக்கள்– ‘மஹாவிஷ்ணு ஹோல்’
இங்கு ஹெரோல்ட் தோட்டத்துக்கு செல்லும் நாலுபீலி எனும் இடத்தில்தான் ‘மஹாவிஷ்ணு ஹோல்’ இருந்தது. இங்கு பல நாடகங்கள் நடத்தப்பட்டுள்ளன. அத்தோடு, அப்போது வெளிவந்த ஊமைப்படங்களும் இங்கு காட்டப்பட்டுள்ளன. இதனை ‘சின்ன டம்பாரை’ பெரிய கங்காணியும், மல்லியப்பு தோட்ட பெரிய கங்காணியுமே நிர்வாகித்தவர்களாவர். இதன் வளர் ச்சிக்கு பெரிதும் உதவியாக இருந்தவர் டம்பாரை தோட்டத்து பெரியண்ணன் பெரியகங்காணியாராகும். இந்த நாடகக் கம்பனியின் பாதுகாப்புக்காக ‘சிங்காப்பு எனும் சண்டியரை வைத்திருந்தனர். இந்த சிங்காப்பு தான் பிற்பகுதியில் அட்டனில் பல கடைகளுக்கு சொந்தக்காரரான ‘சிங்காப்பு முதலாளி ஆவார்.
இந்த மஹாவிஷ்ணு ஹோலில் பல நாடகங்களை ‘மதுரை மீனலோசினி’ நாடகக் கம்பனி நடத்தியுள்ளது. இந்தக் குழுவில் பெண்களே இல்லை. அதனால், பெண் வேடத்தை ஆண்களே புனைந்தார்கள். இக்குழுவில் பிரதான பெண்வேடத்தில் ஜொலித்தவர் ‘ராவுத்தர்’ என்ற இஸ்லாமியராகும்.
மானா மதுரை நாடக சபா
இப்போது அட்டனில் மார்க்கட் (பழைய சந்தை) இருக்கும் இடத்தில் தான் ‘ஸ்ரீ சங்கரதாஸ் சுவாமிகளின்’ நாடகக் கம்பனி இருந்தது இதுவும் ஒரு காலத்தில் இப்பகுதி மக்களின் சிறந்த நாடக சபாவாக இருந்தது. இங்கு இராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு பல பெயர்களைக் கொண்ட நாடகங்கள் நடாத்தப்பட்டுள்ளன. இச் சபாவிலும் தபேலா வாசித்தவர் ஒரு இஸ்லாமியர்.
தலவாக்கலை பகுதியில் நாடக சபா
தலவாக்கலை நகரிலிருந்து சுமார் மூன்ற மைல்களுக்கு அப்பால் அமைந்துள்ள ‘லிந்துல’ என்ற சிறிய நகரில் ‘லோடன் சபா’ என அழைக்கப்பட்ட தகரக் கொட்டகையில் தான் தமிழ்நாட்டிலிருந்து வந்த சபாக்களால் நாடகங்கள் போடப்பட்டன. இந்த கொட் டகையில் ‘ஸ்ரீ சங்கரதாஸ் சுவாமிகளின்’ நாடகக் கம்பனியும் நாடகம் நடத்தியது. இந்த நாடகக்குழுவில் காட்டப்படுகின்ற காட்சிகள் அனைத்தையுமே தத்ரூபமாக அமைத்து காட்டுவார்கள். கானகத்தில் ஸ்ரீ ராமன், சீதாதேவியுடனும் இலக்குமணனுடனும் குகனின் படகில் போகும் காட்சியானது உண்மையில் ஆற்றில் படகில் செல்வது போல் அமைந்திருக்கும். இத்தகைய காட்சிகளை கொண்டய்யாராஜு என்பவர் அமைத்திருந்தார்.அவருக்கு உறுதுணையாகவும், நடிகர்களது மேக்கப் மேனாக (அரிதாரம் இடும்) பையனாக மலே இனத்தைச் சேர்ந்த ‘சரூக்’ எனும் இஸ்லாமிய இளைஞர் ஒருவர் கடமையாற்றியுள்ளார்.
ஸ்டேசன் வட்டகொடையில் நாடக சபா
ஸ்டேசன் வட்டகொடையில் ‘கமலா டாக்கீஸ்’ என்ற நாடகக் குழுவினர் அந்த தோட்டத்து கொழுந்து மடுவத்தில் தமது நாடகங்களை போடுவார்கள். மாதத்தின் இறுதிப்பகுதியில் நாடகம் பார்க்க கூட்டமே வராது. அக்காலப்பகுதியில் அவர்கள் சாப்பாட்டுக்கே வழியற்று தவித்ததை நேரடியாகவே பார்த்துள்ளேன். இந்த நாடகசபாவில் ‘சரீபா’ எனும் ஒரு இஸ்லாமிய பெண்ணும் நடித்தார்.காலம் செல்லச்செல்ல போதிய வருமானங்கள் இல்லாத நிலையில் அந்த நாடக சபாக்கள் மூடப்பட்டன.
நாடகசபாக்கள் மூலமாக இஸ்லாமிய சமூகத்தினரும் மலையகத்தில் இருந்துள்ளார்கள் என்பது இதன் மூலம் புலனாகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM