ஆர்.ஹஸ்தனி
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள். நோய்களால் ஆட்கொள்ளப்பட்டு துன்பப்படுவது நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமல்லாது அவர்களது குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் முழு நாட்டுக்குமே விளைவுகளை ஏற்படுத்தக்கூடியதாகும்.
ஒரு நாட்டின் அபிவிருத்திக்கும் பொருளாதார ரீதியான வளர்ச்சிக்கும் ஆரோக்கியமான தனிநபர்களை உள்ளடக்கிய சமூகக் கட்டமைப்புகள் அவசியமானவையாக உள்ளன.
பௌதீக ரீதியில் உடலையும் உணர்வு ரீதியில் உள்ளத்தையும் வாட்டும் நோயிலிருந்து விடுபட வேண்டும் என்ற எண்ணத்துடன் மருத்துவமனைகளை நாடும் நோயாளர்கள் மருத்துவத் துறையின் பல்வேறு மட்டங்களிலான குறைபாடுகள், தவறுகள் மற்றும் அலட்சியங்கள் காரணமாக மேலும் மீள முடியாத நோய் வலைக்குள் சிக்கி துன்பப்படும் சந்தர்ப்பங்கள் எமது வாழ்வின் அனுபவப் பாடங்களாக உள்ளன.
குறிப்பாக இலங்கையைப் பொறுத்த வரை நாடு எதிர்கொண்டுள்ள வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியுடன் இணைந்த பிரச்சினையாக மருந்துத் தட்டுப்பாட்டு பிரச்சினை மாறியுள்ளது. பல மருத்துவமனைகளில் நோயெதிர்ப்பு மருந்துகள், குருதி உறைதலைத் தடுக்கும் மருந்துகள், வலிநீக்கி மருந்துகள், மயக்க மருந்துகள், புற்றுநோய்க்கான மருந்துகள், முக்கிய அறுவைச் சிகிச்சைகளுக்குத் தேவையான மருந்துகள் உள்ளடங்கலாக மருந்து வகைகளின் தட்டுப்பாடுகள் காரணமாக நோயாளர்கள் பெரும் அவல நிலையை எதிர்கொண்டுள்ளனர்.
இலங்கை மருத்துவ சங்கத்தின் மருத்துவ விநியோகப் பிரிவின் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலான தரவுகள் 383 அத்தியாவசிய மருந்துகளில் 164 மருந்துகள் கையிருப்பில் இல்லை எனத் தெரிவிக்கிறது.
அதேசமயம் கையிருப்பிலிருந்த ஏனைய பல மருந்துகளும் பற்றாக்குறை நிலையிலேயே இருந்தன. உடனடி சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டிய தேவைப்பாட்டிலுள்ளவர்கள் மருந்துத் தட்டுப்பாட்டால் சிகிச்சைகளுக்கு மாதக்கணக்காகக் காத்திருக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதால் அவர்கள் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளது. முக்கிய மருந்துகளின் கையிருப்புக் குறைந்ததால் ஒருபோதும் இடம்பெற்றிராத சுகாதார நெருக்கடியொன்றை இலங்கை எதிர்கொண்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் இந்த வருடம் ஜனவரி மாதத்தில் வெளியிட்ட அறிக்கையில் எச்சரித்திருந்தது.
இலங்கைக்கு இந்த வருடம் முழுவதற்குமாக தேவைப்படும் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருத்துவப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு சுமார் 300 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான நிதி தேவையாகவுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இலங்கைக்கு நன்கொடை வழங்கும் நாடுகள் மற்றும் ஸ்தாபனங்களிடமிருந்து இந்த வருடத்தில் சுமார் 80 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான நிதியை மட்டுமே பெறுவது சாத்தியமாகவுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் அச்சமயத்தில் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் நாட்டின் பொருளாதாரம் தற்போது மேம்பாடடைந்து வருவதாக இலங்கை அரசாங்கம் தெரிவிக்கின்ற போதும், மருந்துகளுக்கான தட்டுப்பாடு மோசமான முறையில் தொடர்ந்து நீடித்து வருகிறது.
இலவச மருத்துவம் குறித்து தன்கென தனி முத்திரையைப் பதித்துள்ள இலங்கையில் தற்போது பொது மருத்துவமனைகளில் முக்கிய மருந்துகள் இல்லாத நிலை ஏற்பட்டிருப்பது நோயாளர்களை அசௌகரியங்களுக்குள்ளாக்குவதாக உள்ளது. பொருளாதார நெருக்கடியையடுத்து இலங்கை ரூபாவின் பெறுமதி டொலருக்கு எதிராக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் மருந்து இறக்குமதிகளுக்கான செலவினம் மலைக்க வைக்கும் வகையில் அதிகரித்துள்ளமை மருந்து இறக்குமதியிலும் அதன் விலைகளிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதன் காரணமாக தனியார் மருந்தகங்கள் பலவும் மருந்து இறக்குமதிகளின் அளவை மட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. பொது மருத்துவமனைகளில் ஏற்பட்டுள்ள மருந்துத் தட்டுப்பாடு காரணமாக தமது மருந்துத் தேவைப்பாடுகளை பூர்த்தி செய்வதற்கு தனியார் மருந்தகங்களை நாடும் நோயாளர்கள் மருந்துகளின் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளதால் அவற்றை கொள்வனவு செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த துர்ப்பாக்கிய நிலை காரணமாக வீதி வீதியாக ஒருவேளை உணவுக்கு பிச்சை எடுப்பவர்கள் மத்தியில் மருந்துச் சீட்டுகள் சகிதம் மருந்துகளை வாங்குவதற்கு உதவிகோரி பிச்சை எடுப்பவர்கள் கூட்டம் அதிகரித்து வரும் நிலை தோன்றியுள்ளது.
கொழும்பு வீதியொன்றில் தனது மருந்துச் சீட்டைக் காண்பித்து பிச்சையெடுத்துக் கொண்டிருந்த வயோதிப பெண்ணொருவர் தனக்கு போஷாக்கு இல்லை எனத் தெரிவித்து மருத்துவர் வெ ளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சுமார் நான்காயிரம் ரூபா பெறுமதியான பால் மாவை அருந்த எழுதிக் கொடுத்திருப்பதாகவும் மருந்து வாங்கவே பணம் கையில் பணம் இல்லாத நிலையில் அந்தப் பால் மாவுக்கு என்ன செய்வது எனவும் புலம்பிய சம்பவம் மனதை நெகிழ வைப்பதாக இருந்தது. பிச்சையெடுப்பதைத் தொழிலாகக் கொண்டிராத நடுத்தர குடும்பமொன்றைச் சேர்ந்தவராக தோன்றிய அந்தப் பெண் தனக்கான மருந்துகளின் அதிகரித்து வரும் விலை காரணமாக கையேந்தி யாசகம் வாங்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
அதேசமயம் நாட்டில் மருந்துகளுக்கான அவசர தேவைப்பாடுகளைக் காரணம் காட்டி தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் தரப் பரிசோதனையின்றி மருந்துகளை பாவனைக்கு விடும் செயற்கிரமங்கள் அரங்கேறி வருகின்றமையும் நோயாளர்களை மென்மேலும் ஆபத்தில் தள்ளுவதாக உள்ளது.
பேராதனையிலுள்ள ஒரு போதனா வைத்தியசாலையில் சத்திரசிகிச்சையின்போது வழங்கப்பட்டதாகக் கூறப்படும் தரமற்ற மருந்தால் கர்ப்பிணிப் பெண்ணொருவர் உட்பட இரு பெண்கள் உயிரிழந்த விவகாரம், வயிற்றுவலிக்காக சிகிச்சை பெற வந்த 21 வயது பெண்ணொருவர் தரமற்ற மருந்தால் உயிரிழந்தமை என்பன போன்ற சம்பவங்கள் இலங்கையில் தரமற்ற மருந்து பாவனையால் இடம்பெற்ற மரணங்களுக்கு ஒரு சில உதாரணங்கள் மட்டுமேயாகும்.
அதேசமயம் தரமற்ற மருந்து பாவனையானது உயிரிழப்புகளை ஏற்படுத்துவது மட்டுமல்லாது நோய் கடுமையடைவதற்கும் நோயாளர்களுக்கு உடற்குறைபாடுகளை ஏற்படுத்தி அவர்கள் வாழ்நாள் முழுவதும் விசேட தேவையுள்ளவர்களாக துன்பப்படுவதற்கும் வழி வகை செய்வதாக உள்ளது.
குறிப்பாக இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கண்நோய்களுக்கான சொட்டு மருந்தான பிரெட்னிசோலோன் காரணமாக இரு கண் மருத்துவமனைகளில் சத்திரசிகிச்சைக்கு சென்ற 20 க்கும் மேற்பட்ட நோயாளர்கள் பலதரப்பட்ட சுகாதாரப் பிரச்சினைகளை எதிர்கொண்டனர். அவர்களில் சிலர் கண் சத்திரசிகிச்சையையடுத்து தாம் கண் பார்வையை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ இழந்துள்ளதாக முறைப்பாடு செய்திருந்தனர். அந்த மருந்தில் நுண்ணுயிர் தொற்று ஏற்பட்டிருந்தமையே மேற்படி பாதிப்புக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
அத்துடன் பொது மருத்துவமனையில் மருத்துவ சேவையைப் பெறுவதற்கு நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய அவல நிலை மற்றும் தனியார் மருத்துவமனையில் மருத்துவ சேவையைப் பெறுவதற்கு அதிக கட்டணத்தை செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் என்பவற்றைக் கருத்திற் கொண்டு நோயாளர்கள் பலர் மருத்துவரின் ஆலோசனையையோ பரிந்துரையையோ பெறாது தமது விருப்பத்திற்கு ஏற்ப மருந்துகளைப் பெற்றுப் பயன்படுத்தும் போக்கு அதிகரித்து வருவது நோயாளர்களின் உயிருக்கு ஆபத்தைத் தேடித் தருவதாக உள்ளது.
அரசாங்கத்தால் விதிக்கப்பட்டுள்ள கடும் கட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு பல மருந்தகங்கள் மருத்துவரின் பரிந்துரையின்றி மருந்துகளை வழங்குவதற்கு மறுத்து வருகின்றபோதும் ஆங்காங்கே சில மருந்தகங்கள் இலாப நோக்குக் கருதி விதிமுறைகளை மீறி நோயாளர்கள் கேட்கும் மருந்துகளை வரையறைக்குட்பட்ட எண்ணிக்கையில் வழங்கி வருகின்றன.
அத்துடன் சிலர் தமக்கு ஏதாவது நோய் ஏற்பட்டால் அதே நோய் அறிகுறிகளுடன் காணப்படும் குடும்ப அங்கத்தர்களுக்கும் நண்பர்களுக்கும் மருத்துவர்களால் வழங்கப்பட்ட மருந்தை எதுவித பரிசீலனையுமின்றி பயன்படுத்தும் வழக்கமும் காணப்படுகிறது. வேறுபட்ட நோய்களுக்கு ஒரே நோயறிகுறிகள் வெளிப்படுவது வழமையாகவுள்ள நிலையில் இவ்வாறு நோயறிகுறிகளை மட்டும் வைத்து மருந்துகளைப் பெற்றுப் பயன்படுத்துவது உயிராபத்து விளைவிக்கக் கூடியதாகும். இலங்கையில் 8 சதவீதம் முதல் 12 சதவீதமானவர்கள் இவ்வாறு ஏனையவர்களால் பயன்படுத்தப்படும் மருந்துகளை தமது நோய்களுக்குப் பயன்படுத்தி சுய வைத்தியம் செய்து கொள்வதில் ஈடுபட்டு வருவதாக பிந்திய ஆய்வொன்று தெரிவிக்கிறது. அத்துடன் இலங்கையின் மொத்த சனத்தொகையில் 46 சதவீதத்தினர் மருந்து குறித்து போதிய அறிவின்றி உள்ளதாக அந்த ஆய்வு கூறுகிறது.
நோயாளர்கள் பலரும் தாம் பயன்படுத்தும் மருந்தின் பெயர் என்ன, அதனால் பக்க விளைவுகள் ஏற்படுமா, அது ஒவ்வாமை விளைவை ஏற்படுத்துமா, அந்த மருந்தை உணவுக்கு முன்பா அல்லது பின்னரா எடுப்பது, மருந்தின் காலாவதியாகும் காலம் என்ன, அதனை எத்தனை நாட்களுக்கு உபயோகிப்பது, நோய் குணமான பின்னரும் அந்த மருந்தை உபயோகிக்க வேண்டிய கட்டாயம் உள்ளதா, எடுக்கும் மருந்தின் அளவு சரியானதா, மருந்தை ஒரு தடவை எடுக்கத் தவறினால் என்ன செய்வது, ஏற்கனவே வேறு நோய்களுக்காக பயன்படுத்தும் மருந்துகளுடன் புதிய மருந்தை உள்ளெடுக்கலாமா, மருந்தை எப்போது நிறுத்துவது என்பன குறித்து தெளிவற்ற நிலையில் உள்ளனர். பலர் அது குறித்து மருத்துவர்களிடம் ஆலோசனை பெறுவது தொடர்பில் சிந்திக்காது உள்ளனர். அதே சமயம் இன்றைய அவசர உலகில் மருத்துவர்களில் சிலர் நோயளிக்கு மருந்து பாவனை தொடர்பில் முக்கியமான விபரங்களை எடுத்துக் கூறுவதற்கு தாமாக முன்வராத போக்கும் காணப்படுகிறது.
அத்துடன் மருத்துவரின் கையெழுத்தை விளங்கிக் கொள்வதில் உள்ள பிரச்சினை காரணமாக மருத்துவத்தாதிகளாலும் மருந்தாளர்களாலும் தவறான மருந்துகள் வழங்கப்படும் அபாயமும் உள்ளது. பல மருந்துகளை ஒன்றாக வைத்து உபயோகிக்கும் சந்தர்ப்பத்தில் மருந்துகளின் அளவை தவறாகப் பயன்படுத்தும் அச்சுறுத்தல் உள்ளது.
உலகளாவிய ரீதியில் பாதுகாப்பற்ற மருத்துவ சிகிச்சைகள் மற்றும் தவறுகளால் 50 சதவீதமான நோயாளர்கள் தீங்கை எதிர்கொண்டு வருவதாக சர்வதேச ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அத்துடன் உலகளாவிய ரீதியில் இடம்பெறும் மருத்துவத் தவறுகளால் 42 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வருடாந்த செலவினம் ஏற்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
அதேசமயம் மருத்துவ ரீதியில் இடம்பெறும் தீங்குகளால் அதிக வருமானம் பெறும் நாடுகளை விட குறைந்த வருமானம் பெறும் நாடுகள் இரு மடங்கு பாதிக்கப்படுவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. மேலும் இலங்கை அரசாங்கமானது அந்நியச் செலாவணியை ஊக்குவிப்பதற்காக அரசாங்கத் துறையில் கடமையாற்றுபவர்களுக்கு குறிப்பிட்ட காலத் தவணைக்கு சம்பளமில்லா விடுமுறையில் வெளிநாடுகளில் சென்று பணியாற்ற அனுமதி வழங்கியிருந்தது. இதனால் நிபுணர்கள் உள்ளடங்கலான மூளைசாலிகள் நாட்டை விட்டு வெளியேறுவது அதிகரித்துள்ளதால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட துறையாக மருத்துவத் துறை உள்ளது.
அரசாங்கத்தின் இந்த சலுகையையடுத்து பல மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ உத்தியோகத்தர்களுக்கு கடும் பற்றாக்குறை நிலவுகிறது. ஊதிய உயர்வு கோரி மருத்துவர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் பணிப் பகிஷ்கரிப்பு போராட்டங்களும் நோயாளர்களை பெரிதும் பாதிப்பதாக உள்ளது.
சில தனியார் மருத்துவமனைகள் அவசர நிலைமைகளில் வரும் நோயாளிகளுக்கு சாதாரண அறைகள் எதுவுமில்லை எனவும் குளிரூட்டி வசதியுள்ள கட்டணம் கூடிய அறைகள் மட்டுமே உள்ளதாகவும் தெரிவித்து அதிக கட்டணங்களை வசூலிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவது, நோயாளியின் நோய்க்கு சம்பந்தப்பட்ட வைத்தியர்கள் அல்லாது இருக்கும் அனைத்து மருத்துவர்களையும் அவரைப் பார்வையிட அனுமதித்து அதற்கு மேலதிகமாக கட்டணங்களை அறவிடுவது, நோயாளிக்கு அவசியமற்ற மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள நிர்ப்பந்தித்து கட்டணத்தின் அளவை அதிகரிப்பது போன்றவற்றில் ஈடுபட்டு வருவதால் நோயாளர்கள் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
அத்துடன் மருத்துவமனையில் பராமரிக்க நியமிக்கப்படுபவர்களால் நோயாளர்கள் முறையாகப் பராமரிக்கப்படாது தாக்கப்படும் சம்பவங்கள் பலவும் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில் உலக சுகாதார ஸ்தாபனம் நோயாளர்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அது தொடர்பில் உலகளாவிய ரீதியில் காத்திரமானநடவடிக்கைகளை முன்னெடுக்கவும் டபிள்யூ.எச்.ஏ. 72.6 தீர்மானத்தை 2019 ஆம் ஆண்டு நிறைவேற்றியிருந்தது. மேற்படி தீர்மானத்தின் பிரகாரம் உலக நோயாளர் பாதுகாப்பு தினத்தை ஒவ்வொரு வருடமும் செப்டெம்பர் 17 ஆம் திகதி வேறுபட்ட தொனிப்பொருட்களில் அனுஷ்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த வகையில் இன்று ஞாயிற்றுக்கிழமை அனுஷ்டிக்கப்படும் நோயாளர் பாதுகாப்பு தினத்தின் தொனிப்பொருள் 'நோயாளரின் பாதுகாப்புக் குறித்து நோயாளர்களை ஈடுபடுத்தல்' என்பதாகும். நோயாளர்களுக்கு தமது நிலை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது இதன் நோக்கமாகும்.
அதேசமயம் மேற்படி தினத்தின் இந்த வருடத்திற்கான சுலோகம் நோயாளர்களின் குரலை உயர்த்துவது என்பதாகும். இது நோயாளர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் பராமரிப்பாளர்கள், உள்ளடங்கலான அனைத்து மட்டங்களிலுமுள்ளவர்கள் செயற்படுவதற்கான தேவை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி முயற்சிகளை முன்னெடுப்பது, நோயாளர்களுக்கான சுகாதாரக் கவனிப்பை ஒழுங்குமுறைப்படுத்த நோயாளர்களையும் குடும்பங்களையும் வலுவூட்டுவது, நோயாளர்களையும் அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் 2021-2030 ஆம் ஆண்டு காலப் பகுதிக்கான உலக நோயாளர் பாதுகாப்பு தொடர்பான பரந்தளவான திட்டத்தில் இணைக்க அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பன இந்த வருடத்திற்கான உலக நோயாளர்கள் பாதுகாப்பு தினத்தின் குறிக்கோள்களில் சிலவாகும்.
வருடாந்தம் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உழைக்கும் நாடுகளில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளர்களில் சுமார் 134 மில்லியன் பேர் பாதகமான சம்பவங்களை எதிர்கொள்வதாகவும் அதன் பெறுபேறாக வருடாந்தம் 2.6 மில்லியன் பேர் இறந்து வருவதாகவும் உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவிக்கிறது.
இந்நிலையில் நோயாளர்கள் தமக்கு ஏற்பட்டுள்ள நோய் மற்றும் உபயோகிக்கும் மருந்துகள் குறித்து விழிப்புணர்வுடன் இருப்பது அவசியமாகும். நோய்களுக்கு சுயமாக மருந்துகளை எடுத்துக்கொள்வதைத் தவிர்த்து மருத்துவரின் ஆலோசனையுடன் மருந்துகளை உரிய முறையில் பயன்படுத்துவது அவசியமாகும்;. அதேசமயம் நோயாளர்களுக்கு சரியான முறையில் மருந்துகள் விநியோகிக்கப்படுவதையும் அவர்கள் உரிய முறையில் பராமரிக்கப்படுவதையும் உறுதிப்படுத்துவது அரசாங்கத்தினதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளினதும் முக்கிய கடமையாகவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM