(எம்.மனோசித்ரா)
இலங்கையில் மாத்திரமின்றி சர்வதேச ரீதியிலும் காலம் காலமாக பேசப்படும் ஒரு விடயமாக சிறுவர் துஷ்பிரயோகம் காணப்படுகிறது. சிறுவர் உரிமைகள், சிறுவர் பாதுகாப்பு என்பனவற்றுக்கென சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டாலும் இன்றும் நூறு வீதம் இவை தவிர்க்க முடியாதவையாகவே காணப்படுகின்றன. நாடு முழுவதிலுமிருந்து தினந்தோறும் வெளியாகும் செய்திகளில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்ச்சியாக பயமுறுத்தும் அதிர்வெண்ணுடன் காணப்படுவதால், சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான பரவலான பிரச்சினையை இலங்கை எதிர்கொள்கிறது என்பது வெளிப்படையாக தெரியவருகிறது. அதற்கமைய சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் பதிவாகும் சம்பவங்களின் எண்ணிக்கையை கடந்த பத்து ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் பாரியளவில் வீழச்சி ஏற்பட்டுள்ளதாகத் தெரியவில்லை.
இலங்கையில் சிறுவர்களைக் கடத்தல், யாசகம் பெறச் செய்தல், தொழிலுக்கமர்த்தல், கல்வியை இடைநிறுத்தல், கொடுமைப்படுத்தல், பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தல், பாலியல் சுரண்டலுக்கு உட்படுத்தல், பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தல், சட்டபூர்வமான பாதுகாவலரிடமிருந்து சிறுவர்களைக் கடத்தல், பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தல், பாலியல் உறவுக்கு தொடர்புகளைப் பெறுவதற்கு தூதாக சிறுவர்களைப் பயன்படுத்தல், சிறுவர்களை கவனிக்காமை, 16 வயதுக்கு குறைந்த சிறுமியை விபச்சாரத்துக்கு பயன்படுத்தல் என பல்வேறு வகையான சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகின்றன.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னரும் சரி, இன்றும் சரி மேற்கூறப்பட்டவை எண்ணிக்கை அடிப்படையில் சற்று வீழ்ச்சியடைந்துள்ளனவே தவிர, முழுமையாக குறைவடையவில்லை. குறிப்பாக, சிறுவர்களை கொடுமைப்படுத்தல், துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தல், கல்வியை இடைநிறுத்தல், கடத்தல், தொழிலுக்கு உட்படுத்தல் என்பன உயர் மட்டத்திலேயே காணப்படுகின்றன.
(கீழுள்ள விளக்கப்படத்தில் இதனை அவதானிக்கலாம்)
இவை வருடந்தோறும் பதிவாகும் அல்லது முறைப்பாடளிக்கப்படுவதால் வெளிவரும் சம்பவங்கள் குறித்த எண்ணிக்கை மாத்திரமே. சமூகத்தின் மீதான அச்சம், அறியாமை, கலாசாரம் உள்ளிட்ட காரணிகளால் பதிவு செய்யப்படும் சம்பவங்களைவிட, மூன்று மடங்கு பதிவு செய்யப்படாத சம்பவங்கள் சமூகத்தில் உள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவிக்கின்றது.
கடந்த 10 ஆண்டுகளிலும் இவ்வாண்டிலும் சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் தொடர்பில் ஆயிரக்கணக்கான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. (விளக்கப்படம் 2இல் இதனை அவதானிக்கலாம்)
சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் கூற்றுப்படி இந்த எண்ணிக்கைகளில் 3 மடங்கு அதிகமான சம்பவங்கள் பதிவாகியிருக்கக்கூடும்.
இலங்கையில் சிறுவர்களைப் பாதுகாக்க சட்டங்கள் உள்ளன. அதற்காக அமைச்சுகளும் திணைக்களங்களும் அதிகார சபைகளும் நிறுவப்பட்டுள்ளன. அவ்வாறிருந்தும் சிறுவர்களை ஏன் எம்மால் பாதுகாக்க முடியவில்லை?
அனைத்து சிறுவர்களுக்கும் உயிர்வாழ்வதற்கும், பாதுகாப்பாக இருப்பதற்கும், சுதந்திரமாக இருப்பதற்கும், போதுமான கவனிப்பைப் பெறுவதற்கும், பாதுகாப்பான சூழலில் வளருவதற்கும், கல்வியைப் பெறுவதற்கும் உரிமை உண்டு. எனினும் அந்த உரிமைகள் மீறப்படுவதில் சமூகம் மற்றும் சட்டம் ஆகிய இரண்டும் தொடர்புபடுகின்றன.
வறுமை, மது, போதைப்பொருள், குடும்ப வன்முறை மற்றும் பாலியல் விரக்தி போன்ற சமூகக் காரணிகள் சிறுவர் துஷ்பிரயோகக் குற்றங்களுடன் நேரடியாகத் தொடர்புடையவையாகக் காணப்படுகின்றன.
இலங்கையில் வருடாந்தம் சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான குடும்ப வன்முறைச் சம்பவங்கள் பதிவாகின்றன. அதன் அடிப்படையில் சிறுவர்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் அல்லது துஷ்பிரயோகம் என்பது சமூகத்தில் பொதுவான ஒரு விடயமாக மாறிக்கொண்டிருக்கிறது.
பாலியல் கல்விக்கு முக்கியத்துவம் வழங்கப்படாமை இதற்காக பிரதான காரணமாக இருக்கக் கூடும். பாடசாலை பாடத்திட்டத்தில் பாலியல் கல்வி நிச்சயம் சேர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
இனப்பெருக்க அமைப்பு மற்றும் பாலுணர்வு பற்றிய விடயங்களை உள்ளடக்கி கடந்த 2019ஆம் ஆண்டு சுகாதார அமைச்சு, சுகாதார மேம்பாட்டு பணியகம் மற்றும் கல்வி அமைச்சு என்பன இணைந்து 'ஹதே அபே பொத' என்ற பாடசாலை மாணவர்களுக்கு விநியோகித்தன. ஆனால் அந்த புத்தகத்தின் உள்ளடக்கங்கள் சிறுவர்கள் மத்தியில் பாலியல் தொடர்பான முறையற்ற விடயங்களை ஊக்குவிப்பதாகவும், சிறுவர்களின் மனதைக் கெடுக்கும் வகையிலும் இருப்பதாகக் கூறி, பௌத்த தேரர்கள் சிலர் கடும் எதிர்ப்பினை வெளியிட்டமையால் அவை அனைத்தும் திரும்பப் பெறப்பட்டன.
வயதுக்கேற்ற, விரிவான பாலியல் கல்வி என்பது பதின்ம வயதினருக்கும், இளம் பருவத்தினருக்கும் மட்டுமின்றி சிறுவர்களுக்கும் அவசியமாகும். ஊடகங்களும், கல்வி சார் அமைப்புகளும் இந்த விடயத்தைப் பற்றி வெளிப்படையாகப் பேச வேண்டும். ஆனால் இவற்றை உதாசீனப்படுத்துவதன் மூலம் எமது நாட்டின் கலாச்சாரத்தின் பாரம்பரிய மற்றும் குறுகிய மனப்பான்மை ஒரு தேசமாக இலங்கையர்களின் பின்னடைவுக்கு வழிவகுக்கிறது.
அதேபோன்று நாட்டில் நடைமுறையிலுள்ள சிறுவர் பாதுகாப்புச் சட்டமும் குறைபாடுடையதாகவே காணப்படுகிறது. குறிப்பாக, இலங்கையின் தண்டனைச் சட்டக் கோவையில் ஆண் சிறார்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக பிரத்தியேகமாக எந்த சட்டமும் இல்லை.
இலங்கையின் தண்டனைச் சட்டக் கோவையின்படி, 16 வயதுக்குட்பட்ட ஒரு சிறுமியுடன் அவளது சம்மதத்துடன் அல்லது சம்மதம் இல்லாமல் பாலுறவு கொள்வது குற்றமாகும்.
மேலும் திருமணம் அனுமதிக்கப்படும் வயது 18 ஆகும். ஆனால், 16 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் எதிர்பாராது கர்ப்பம் தரித்தால், அவர்கள் திருமணம் செய்து கொள்ளவோ அல்லது கருக்கலைப்பு செய்யவோ சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், எதிர்பாராத பதின்ம வயதில் (Teenage Pragnancy) கர்ப்பமடையும் சிறுமியொருவர் அல்லது பாலியல் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்ட சிறுமியொருவர் அதனை ஏற்று வாழ நிர்ப்பந்திக்கப்படுகின்றார். இந்த சூழல் அவர்களது வாழ்வை முற்றாக மாற்றிவிடும்.
சிறுவர் துஷ்பிரயோகம் சம்பந்தமாக சட்டத்தில் காணப்படும் ஏற்பாடுகள் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் சட்ட அமுலாக்கல் பிரிவின் பணிப்பாளர் சட்டத்தரணி சஜீவனி அபேகோன் விளக்கமளிக்கையில்,
'பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளான சிறுமியொருவர் கர்ப்பமடைந்தால் அவர்களுக்கு கருக்கலைப்பினை மேற்கொள்ள முடியாது. மாறாக பிரசவத்தின் பின்னர் குழந்தை பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அல்லது சட்ட ரீதியான பாதுகாலர்களிடம் ஒப்படைக்கப்படும். அத்தோடு இவ்வாறானவற்றுக்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
மற்றொரு விடயம் சிறுவர் துஷ்பிரயோகம் மாத்திரமின்றி எந்தவொரு குற்றச் செயல் தொடர்பிலும் கைது செய்யப்படும் சந்தேகநபர்களுக்கு பிணையில் விடுதலையாவதற்கான உரிமை இருக்கிறது.
பிணை சட்டத்துக்கமைய வழக்கு விசாரணைகள் நிறைவடையும்வரை பிணை வழங்காமல் சந்தேக நபர்களை தடுத்து வைத்திருக்க முடியாது. ஆனால் வழக்கு விசாரணைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து, சட்டமா அதிபருக்கு வழக்கு தொடர்பான கோப்புக்களை சமர்ப்பித்து, அவரின் ஆலோசனைக்கமைய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியும்.
வழக்கு விசாரணைகளின் நிறைவில் குற்றம் நிரூபிக்கப்பட்டு சந்தேகநபர் குற்றவாளியாக உறுதிப்படுத்தப்பட்டால் அவருக்கு சிறை தண்டனை வழங்க முடியும்.
எனவே சந்தேகநபரொருவர் பிணையில் விடுதலை செய்யப்படுகின்றார் என்பதற்காக அவர் குற்றங்களிலிருந்து அல்லது வழக்கு விசாரணைகளிலிருந்து விடுதலையாகின்றார் என்று கருத முடியாது' எனத் தெரிவித்தார்.
குறிப்பாக பாலியல் துஷ்பிரயோகங்களின் போது, அவற்றுடன் தொடர்புடைய நபர்கள் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் நெருங்கிய குடும்ப அங்கத்தவராகக் காணப்படும் சந்தர்ப்பங்களில் குடும்ப உறவுகளை அடிப்படையாகக் கொண்டு அவை மறைக்கப்படுகின்றன. இதன் காரணமாக பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் வெளிவரும் சம்பவங்களின் எண்ணிக்கை குறைவாகக் காணப்படலாம்.
அதாவது கடந்த 10 ஆண்டுகள் நாட்டின் சகல மாவட்டங்களிலும் பதிவாகியுள்ள சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பான புள்ளி விரபங்களை அவதானிக்கும் போது மேல் மாகாணம் உயர் மட்டத்திலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் கீழ் மட்டத்திலும் காணப்படுகின்றன. (விளக்கப்படம் 3இல் இதனை அவதானிக்கலாம்)
இவை சனத்தொகை அடிப்படையில் பதிவாகின்றனவா அல்லது உண்மையில் இந்த பிரதேசங்களில் மாத்திரம் தான் சிறுவர் துஷ்பிரயோகங்கள் பதிவாகின்றனவா என்ற சந்தேகம் காணப்படுகிறது. இது தொடர்பில் கேட்ட போது,
'உண்மையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிறுவர் துஷ்பிரயோகங்கள் இடம்பெறுகின்ற போதிலும், அவை தொடர்பில் முறைப்பாடடு அளிக்கப்படுவதில்லை. காரணம் காலாசாரத்தை அடிப்படையாகக் கொண்டு அவை தொடர்பில் அறிவிப்பதற்கு வடக்கு, கிழக்கு மக்கள் ஊக்குவிக்கப்படுவதில்லை. குறிப்பாக முஸ்லிம் சமூகத்தினர் இவ்வாறான சம்பவங்களை மறைக்கும் நிலைமை காணப்படுகின்றது' என சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் சட்ட அமுலாக்கல் பிரிவின் பணிப்பாளர் சட்டத்தரணி சஜீவனி அபேகோன் தெரிவித்தார்.
போதிய கல்வி அறிவின்மை அல்லது பெற்றோரின் அறியாமையும் இவ்வாறான சம்பவங்கள் வெளிப்படுத்தப்படாமலிருப்பதற்கான காரணிகளாகவுள்ளன. சில சந்தர்ப்பங்களில் ஒரு சிறுமி அல்லது சிறுவன் பல சந்தர்ப்பங்களில் துஷ்பிரயோகத்துக்கு ஆளாகும் நிலைமையும் காணப்படுகிறது. ஆனால் விழிப்புணர்வின்மை அல்லது கல்வியின்மை காரணமாக பெற்றோர் அது தொடர்பில் புகாரளிப்பதில்லை. அண்மையில் நுவரெலியா மாவட்டத்தில் பாடசாலை ஆசிரியர் ஒருவரால் 7 வயது மாணவியொருவர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு, 7 மாதங்களின் பின்னர் அது தொடர்பான விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டமை இதற்கு சிறந்த உதாரணமாகும்.
உட்கட்டமைப்பு வசதிகள் இன்மையும் இதில் பிரதானமாக தாக்கம் செலுத்துகிறது. அதாவது பின்தங்கிய கிராமங்களில் வாழும் மக்களுக்கு போக்குவரத்து பிரச்சினை, அருகில் பொலிஸ் நிலையங்கள் இன்மை உள்ளிட்டவற்றால் முறைப்பாடளிக்க முடியாத சூழல் காணப்படுகிறது. சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் குறைவாக பதிவு செய்யப்படுவதற்கு இது போன்ற பிரச்சினைகளும் முக்கிய காரணிகளாகவுள்ளன.
பெரும்பாலான அபிவிருத்தியடைந்த நாடுகளில் ஆண்டுதோறும் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் தொடர்பான கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. முறைப்பாடளிக்கப்படாத சம்பவங்களை கண்டறிவதற்கு இது ஒரு உத்தியாகும். இந்த முறைமையை இலங்கையிலும் நடைமுறைப்படுத்தலாம். இவ்வாறான சம்பவங்களை அடையாளம் காண்பதற்கான மற்றொரு உத்தி சுய அறிக்கை கணக்கெடுப்பு முறைமையாகும். 'பொலிஸ்மா அதிபரிடம் கூறுங்கள்' மற்றும் 'பகிடிவதை தொடர்பான முறைப்பாடு' போன்ற திட்டங்களை இதற்கான உதாரணமாகக் குறிப்பிடலாம்.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, இலங்கை பொலிஸ் மற்றும் பிற பொறுப்பான அரசாங்க திணைக்களங்களில் இத்தகைய இலகுவாக அணுகக்கூடிய முறைகளை உருவாக்க முடியும். எனவே, பாதிக்கப்பட்டவர்கள் எளிதாகப் புகாரளிக்க முடியும். இதுபோன்ற முறைமைகளை அமுல்படுத்தினால், மேலும் பல குற்ற சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வரும்.
ஆரம்பத்தில் இவ்வாறான சம்பவங்கள் ஒரு குறிப்பிட்ட சமூக மட்டத்தில், பொதுவாக குறைந்த வருமானம் பெறும் மற்றும் கல்வி அறிவற்ற அல்லது குறைவான சமூகத்தில் அதிகளவில் பதிவாகி வருவதாகக் கூறப்பட்டது. ஆனால் இன்று அவ்வாறு எந்த பாகுபாடும் இன்றி சகல மட்டத்திலுமுள்ள சிறார்கள் துஷ்பிரயோகங்களுக்கும் துன்புறுத்தல்களுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர்.
இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு சிறார்கள் மத்தியிலும், முதியோர் மத்தியிலும் விழிப்புணர்வை ஏற்படுத்துவது மாத்திரம் தீர்வாகாது. சிறுவர் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு நாட்டில் தற்போது முறையான கட்டமைப்புக்களோ, வழிமுறைகளோ இல்லை. பாடசாலை மட்டத்திலும் கிராம உத்தியோகத்தர் மட்டங்களிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை செயற்படுத்த வேண்டும்.
எத்தனை வருடங்களாக இவை தொடர்பில் பேசப்பட்டு வந்தாலும், சிறுவர் துஷ்பிரயோகம் உள்ளிட்ட குற்றங்கள் ஒவ்வொரு நாளும் பதிவாகி வருகின்றதே தவிர, இந்த பிரச்சினைக்கு ஒரு முடிவு இருப்பதாக தெரியவில்லை. மிக முக்கியமாக, சிறுவர்களின் பாதுகாப்பில் முதற்பாகம் குடும்பத்துக்குரியதாகும். குடும்பத்துக்கு அப்பால் சிறுவர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கும் பொறுப்பு பாடசாலைகளினதும், சமூகத்தினதும் பொறுப்பாகும்.
இலங்கையின் குற்றவியல் சட்டக் கட்டமைப்பில் பாரிய பின்னடைவு காணப்படுகிறது. சில சந்தர்ப்பங்களில், பாலியல் துஷ்பிரயோகங்களுடன் தொடர்புடைய வழக்கு விசாரணைகளை நிறைவு செய்ய பல ஆண்டுகள் செல்லும் நிலைமையும் காணப்படுகிறது. இவ்வாறான காலதாமதங்களைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது நீதித்துறையுடன் தொடர்புடைய துறைகளின் பொறுப்பாகும்.
மற்றுமொரு முக்கியமான விடயம் கைதிகளுக்கான புனர்வாழ்வளித்தலாகும். சிறுவர் துஷ்பிரயோகக் குற்றங்களில் ஈடுபடும் சந்தேக நபர்களை மீண்டும் சமூகத்தில் விடுவிக்கும் முன் அவர்களுக்கு உளவியல் ரீதியாக மறுவாழ்வளிக்கப்பட வேண்டும். அவர்களை சிறையில் தடுத்து வைப்பதால் மாத்திரம் அவர்களின் மனநிலை மாறாது. எனவே, இலங்கையின் எதிர்கால சந்ததியினரின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பொறுப்பான மற்றும் நம்பகமான சேவையை வழங்குவதற்கு பொறுப்பு வாய்ந்த நிறுவனங்கள் பொறுப்புக்கூறலுடன் செயற்படுவது மிகவும் முக்கியமானது.
--
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM