(நேர்காணல் - நா.தனுஜா)
அதிகளவான காபனீரொட்சைட் வெளியேற்றத்தின் விளைவாக கடல்நீர் மட்டம் படிப்படியாக உயர்வடைந்துவரும் நிலையில், 2050 – 2100ஆம் ஆண்டுக்குள் யாழ்ப்பாணம், மன்னார், புத்தளம், கொழும்பு, காலி உள்ளடங்கலாக நாட்டின் பல பகுதிகள் நீரில் மூழ்கக்கூடிய அபாயம் காணப்படுவதாக சூழலியல் நீதிக்கான நிலையத்தின் பணிப்பாளர் ஹேமந்த விதானகே எச்சரித்துள்ளார்.
மொரோக்கோவில் நிலநடுக்கம், லிபியாவில் வெள்ளப்பெருக்கு என நாளுக்கு நாள் உலகளாவிய ரீதியில் இயற்கை அனர்த்த சம்பவங்கள் பதிவாகிவரும் நிலையில், இவற்றின் பின்னணியில் உள்ள காலநிலை மாற்றம், சூழலியல் பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்குக் காரணமான மனித நடத்தைகள் பற்றிய பல கேள்விகள் தொக்கி நிற்கின்றன.
அதன்படி இலங்கையில் நிலவும் சூழலியல் பிரச்சினைகள், எதிர்காலத்தில் நாடு முகங்கொடுக்கக்கூடிய அனர்த்தங்கள், அவற்றுக்கான தீர்வுகள், மக்கள் நடத்தையில் ஏற்பட வேண்டிய மாற்றம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் சூழலியல் நீதிக்கான நிலையத்தின் பணிப்பாளர் ஹேமந்த விதானகே, 'வீரகேசரி' வாரவெளியீட்டுக்கு வழங்கிய நேர்காணலில் பகிர்ந்துகொண்டார். அவருடனான நேர்காணலின் முழுமையான வடிவம் வருமாறு:-
கேள்வி : கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் அண்மைய சில வருடங்களில் உள்நாட்டிலும் சர்வதேச அரங்கிலும் சூழலியல் பிரச்சினைகள் மற்றும் காலநிலை மாற்றம் குறித்து அதிகம் பேசப்படுகின்றது. இந்த மாற்றத்தை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?
பதில் : 1992ஆம் ஆண்டு முதல் நாம் காலநிலை மாற்றம் தொடர்பில் பேசுகின்றோம். இதுகுறித்து 1992 இல் 'காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் பிரகடனம்' உருவாக்கப்பட்டது. பின்னர் 1997 இல் 'கியோட்டோ உடன்படிக்கை' கைச்சாத்திடப்பட்டது. அதன் நீட்சியாக 'பாலி செயற்திட்டம்' தயாரிக்கப்பட்டது. 2012இல் கியோட்டோ உடன்படிக்கை முடிவுக்கு வந்தபோது எட்டப்படாத இணக்கப்பாடு, 2015 இல் எட்டப்பட்டது. இது 'பரிஸ் பிரகடனம்' என்று அழைக்கப்படுகின்றது. இந்த இணக்கப்பாட்டின் பிரகாரம் இதில் கைச்சாத்திட்டுள்ள நாடுகள் எதிர்வரும் 2030 ஆம் ஆண்டாகும்போது நிறைவேற்ற வேண்டிய நடவடிக்கைகள் பற்றிக் குறிப்பிடப்பட்டிருப்பதுடன், அனைத்து நாடுகளும் 'தேசிய பங்களிப்பு செயற்திட்டம்' என்ற ஆவணத்தைத் தயாரிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய இலங்கை தயாரித்துள்ள ஆவணத்தின் பிரகாரம் 2030 ஆம் ஆண்டாகும்போது வனப்பகுதியின் அளவை 32 சதவீதத்தினால் அதிகரிக்க வேண்டும். காபனீரொட்சைட் வெளியேற்றத்தை 20 சதவீதத்தினால் குறைக்கவேண்டும்.
இவ்வாறானதொரு பின்னணியில் 2017 ஆம் ஆண்டு பதிவான அதிக மழைவீழ்ச்சி மற்றும் வெள்ளப்பெருக்கு என்பன இலங்கையை வெகுவாகப் பாதித்தன. அவ்வெள்ளப்பெருக்கினால் 275 பேர் உயிரிழந்தனர். அவ்வாண்டு உலகளாவிய ரீதியில் காலநிலை மாற்றத்தினால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை 2 ஆம் இடத்தில் இருந்தது. 2018 ஆம் ஆண்டு காலநிலை மாற்றத்தினால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை 6 ஆம் இடத்தில் இருந்தது.
எது எவ்வாறெனினும் 2100 ஆம் ஆண்டளவில், அதாவது இந்த நூற்றாண்டின் முடிவில் உலகளாவிய ரீதியில் சுமார் 700 – 750 மில்லியன் பேர் காலநிலை மாற்றம் மற்றும் அதனுடன் தொடர்புடைய அனர்த்தங்களின் விளைவாக அகதிகளாவர் என்றும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
காலநிலையில் ஏற்படும் எதிர்மறை மாற்றங்களுக்கான முக்கிய காரணம் காபனீரொட்சைட் வெளிவிடப்படுதலேயாகும். நிலக்கரி, வாகனங்களில் பயன்படுத்தப்படும் எரிபொருள், கப்பல் மற்றும் விமானத்தில் பயன்படுத்தப்படும் எரிபொருள் உள்ளிட்ட அனைத்தும் அதிகளவான காபனீரொட்சைட் வெளியேற்றத்துக்குக் காரணமாக அமைகின்றன. எனவே, இவற்றின் பயன்பாட்டைக் குறைக்கவேண்டும். அபிவிருத்தியடைந்த நாடுகள் 2030 ஆம் ஆண்டளவிலும், ஏனைய அனைத்து நாடுகளும் 2050 ஆம் ஆண்டளவிலும் இதனை பூச்சிய மட்டத்துக்குக் கொண்டுவர வேண்டும்.
அதேவேளை, திடீரென அதிகரித்த மழைவீழ்ச்சி மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படல், 4 வருடங்களுக்கு ஒருமுறை மிகவும் உயர்வான வெப்பநிலை பதிவாதல் (எல்நினோ) என்பனவும் காலநிலை மாற்றத்தின் பிறிதொரு பக்கமாகும். எனினும் காலநிலை மாற்றத்தை சீரமைப்பதன் ஊடாக இதனுடன் தொடர்புபட்டதாக எமது நாட்டில் நிலவும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண முடியாது. கடந்த காலங்களில் வனப்பகுதிகள் மனிதர்களால் தீவைத்துக் கொளுத்தப்பட்டன. விலங்குகள் நீர் அருந்தும் பகுதிகளில் விஷமிடப்பட்டு, அவ்விலங்குகள் கொல்லப்பட்டன. இவற்றுக்கும் காலநிலை மாற்றத்துக்கும் எவ்வித தொடர்புமில்லை. ஆனால், இவ்வாறான நடத்தைகள் சூழலியல் பிரச்சினைகளை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன.
காலநிலைமாற்ற சவால்களைக் காரணங்காட்டி இலங்கை மக்கள் காடுகளைத் தீயிட்டுக்கொளுத்துவதையும், யானைகளைக் கொல்வதையும், உயிரியல் பல்வகைமையை சீர்குலைப்பதையும், குடிநீரில் விஷம் கலந்து விலங்குகளைக் கொன்று அவற்றை விற்பனை செய்வதையும், வனப்பகுதிகளை அழித்து சோளப்பயிர்ச்செய்கையில் ஈடுபடுவதையும், சூழலுக்கு விரோதமான முறையற்ற விவசாய நடவடிக்கையில் ஈடுபடுவதையும் ஒருபோதும் நியாயப்படுத்தவோ, ஏற்றுக்கொள்ளவோ முடியாது. அநேக சந்தர்ப்பங்களில் சூழலுக்கு மனிதர்களால் இழைக்கப்படும் தீங்கை ஒதுக்கிவைத்துவிட்டு, 'அனைத்துப் பாதிப்பும் காலநிலை மாற்றத்தினால்தான் ஏற்பட்டது' என்று கூறிக்கொண்டிருக்கின்றோம். ஆனால், உண்மையில் இச்சூழலியல் பிரச்சினைகளுக்கு சாதாரண விவசாயி தொடக்கம் நாட்டின் ஜனாதிபதி வரை அனைவரும் பொறுப்புக்கூற வேண்டும்.
விவசாயிகள் உள்ளடங்கலாக கிராமங்களில் வாழும் மக்கள் ஏதுமறியாதவர்கள் என்றும், அவர்கள் சூழலுக்குத் தீங்கிழைப்பதில்லை என்றும் நான் முன்னர் நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால், அவர்கள் தான் பெருமளவான வனப்பகுதிகளை அழிக்கிறார்கள். விலங்குகளைக் கொல்கிறார்கள்.
கேள்வி : இருப்பினும் சூழலுக்குப் பாரிய தீங்கிழைக்கும் பெருமுதலாளிகளை விடுத்து, சாதாரண விவசாயிகளை எந்த அடிப்படையில் குற்றஞ்சாட்டுகின்றீர்கள்?
பதில் : எமது நாட்டில் தவறான விவசாய செயன்முறையே பின்பற்றப்பட்டுவருகின்றது. ஒட்சிசன், உணவு, மருந்து, நிழல், தூய வளி என எமக்கு அவசியமான அனைத்தையும் தருகின்ற வனப்பகுதிகளை அழித்து, அவற்றில் சோளத்தைப் பயிரிட்டு, அதன்மூலம் குருவிகளுக்கு அவசியமான உணவைத் தயாரிக்கின்றோம். அவற்றை உண்பதற்கு குருவிகள் இருக்கின்றதா, உயிரியல் பல்வகைமை பேணப்படுகின்றதா என்பது பற்றி நாம் சிந்திப்பதில்லை.
காடுகளை அழித்து சோளத்தைப் பயிரிடும் விவசாயி, அவற்றை விற்பனை செய்வதன் மூலம் சொற்பளவான இலாபத்தைப் பெறுகின்றார். ஆனால், அந்தக் காடுகள் அழிக்கப்படாவிடின், அதன்மூலம் வெளிவருகின்ற ஒட்சிசன் நாட்டில் வாழும் 22 மில்லியன் மக்களையும் சென்றடையும். எனவே, பெரும்பான்மையானோர் அடையக்கூடிய நன்மையைப் புறந்தள்ளி, மிகச்சொற்பளவானோர் மேற்கொள்ளும் இந்நடவடிக்கைகள் எமது நாட்டில் நடைமுறையிலுள்ள தவறான விவசாய செயன்முறையின் பிரதிபலிப்புக்களேயாகும்.
இலங்கையில் 21 சதவீதமான நிலப்பரப்பே வனப்பகுதிகளாக உள்ளன. இவற்றில் பெரும்பான்மையானவை வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் சொற்பளவானவை ஊவா மாகாணத்திலும் உள்ளன. ஏனைய பகுதிகளில் உள்ளவை மிகச்சிறிய காடுகளாகும். எனவே மேற்கூறப்பட்ட பகுதிகளிலுள்ள வனாந்தரங்களே காடழிப்பு என்ற அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன.
மேற்குறிப்பிட்ட 21 சதவீதமான வனப்பகுதியில் 17 சதவீதமானவையே அவற்றின் இயல்புநிலை பாதிக்கப்படாத காடுகளாக இருக்கின்றன. அதேபோன்று நாட்டில் வருடாந்தம் சுமார் 8,000 ஹெக்டேயர் காடுகள் அழிக்கப்படுகின்றன.
கேள்வி : இந்த நிலையை சீரமைப்பது எப்படி?
பதில் : வனப்பகுதிகளைப் பாதுகாக்க வேண்டுமெனில் அவைதொடர்பில் நிலவும் அச்சுறுத்தலைக் குறைக்கவேண்டும். அந்த அச்சுறுத்தல்களில் விவசாயம் பிரதானமானதாகும். இலங்கையில் விவசாயத்துறையை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் பெருமளவு நிதியைச் செலவிடுகின்றது. அவ்வாறிருப்பினும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்துறையின் பங்களிப்பு வெறுமனே 8 சதவீதம் மாத்திரமேயாகும்.
இந்நிலையில் நாம் சூழலுக்கு சாதகமான விவசாய செயன்முறையை நோக்கி நிலைமாற்றமடைய வேண்டும். இது முற்றுமுழுதாக சேதன உரத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளும் இயற்கை விவசாயம் அல்ல. மாறாக மண்ணில் உள்ள பக்ரீறியா உள்ளிட்ட நுண்ணுயிர்களை உரம் மற்றும் கிருமிநாசினி போன்றவற்றைப் பயன்படுத்தி அழிக்காமல், அவற்றைப் பாதுகாத்தவாறு மேற்கொள்ளும் விவசாயத்தைக் குறிக்கின்றது. அதேபோன்று பெரும் நிலப்பரப்பில் பயிரிட்டு, அதன்மூலம் ஈட்டுகின்ற ஆதாயத்தை சிறிய நிலப்பரப்பில் பயிரிடுவதன் ஊடாக ஈட்டுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும். இவ்வாறான பயிர்ச்செய்கை முறைமை இந்தியாவில் நடைமுறையில் உள்ளது.
கேள்வி : நாடளாவிய ரீதியில் இம்முறைமையை அமுல்படுத்தக்கூடியவாறான செயற்திட்டத்தை உங்களது அமைப்பின் ஊடாகத் தயாரித்து அரசாங்கத்திடம் கையளிக்கலாம் அல்லவா?
பதில் : இலங்கை உள்ளடங்கலாகப் பெரும்பான்மையான நாடுகளில் சிவில் சமூக அமைப்புக்களின் ஆலோசனைகளுக்கு செவிசாய்க்கின்ற அரசாங்கங்கள் இல்லை. அரசாங்கம் எமக்கு செவிசாய்க்காததன் காரணமாகவே சூழலுக்குப் பாதிப்பேற்படுத்தக்கூடிய அவர்களது செயற்பாடுகளுக்கு எதிராக நாம் நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்கின்றோம். இதுவரையில் அரசாங்கத்துக்கு எதிராக சுமார் 35 வழக்குகளைத் தாக்கல் செய்திருக்கின்றோம்.
அதேபோன்று இலங்கையிலுள்ள விவசாயத்துறைசார் நிபுணர்கள் கூறுவதை அரசியல்வாதிகள் கேட்பதில்லை. இலங்கையில் மிகச்சிறந்த விவசாயத்துறை நிபுணர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் ஒன்றிணைந்து நாட்டுக்குப் பொருத்தமான விவசாய முறைமை தொடர்பில் செயற்திட்டமொன்றைத் தயாரிக்கவேண்டும்.
நாட்டின் யதார்த்தநிலையை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில், நாம் ஐக்கிய நாடுகள் சபையினால் அங்கீகரிக்கப்பட்ட பயனுறுதிவாய்ந்த செயற்திட்டங்கள் குறித்துப் பேசினாலும் அவை சாதாரண விவசாயிகளைச் சென்றடைவதற்கு 50 வருடங்கள் ஆகலாம்.
கேள்வி : சூழலோடு பின்னிப்பிணைந்த வாழ்வியல் முறையைக் கொண்டிருக்கும் விலங்குகள் மனிதர்களின் செயற்பாடுகளால் இடருறும் பல சம்பவங்கள் அண்மையக் காலங்களில் பதிவாகியுள்ளன. விலங்குகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான உங்களது யோசனைகள் என்ன?
பதில் : யானை – மனித மோதலைத் தடுப்பதற்கான செயற்திட்டமொன்றைத் தயாரித்து வழங்குமாறு நீதிமன்றம் எம்மிடம் கோரியிருக்கின்றது. இலங்கையைப் பொறுத்தமட்டில் யானை –-மனித மோதல் உள்ளடங்கலாக விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இடையில் ஏற்படும் அனைத்து மோதல்களுக்குமான பிரதான காரணம் அவற்றின் வாழிடங்கள் மனிதர்களால் அழிக்கப்படுகின்றமையே ஆகும். மனிதர்களால் தமக்கான வீடுகளை அமைத்துக்கொள்ளமுடிந்தாலும், விலங்குகளால் அதனைச் செய்யமுடியாது. இயற்கையாக வடிவமைக்கப்பட்ட வாழிடங்களே விலங்குகளின் வீடுகளாக இருக்கின்றன. எனவே விலங்குகள் வாழும் வனாந்தரங்கள் அழிக்கப்படுவதை நிறுத்தவேண்டும். மனிதர்களால் தன்னிச்சையாகக் கையகப்படுத்தப்பட்டுள்ள வனப்பகுதிகளிலிருந்து அவர்களை (மனிதர்களை) வெளியேற்ற வேண்டும்.
நாட்டின் மொத்த நிலப்பரப்பில் குறைந்தபட்சம் மூன்றில் ஒரு பகுதியையேனும் விலங்குகளுக்கும், இயற்கையுடன் தொடர்புபட்ட நடத்தைகளுக்கும் (ஆறு, குளம், ஏரிகளைப் பேணல், மரங்களை வளர்த்தல், உயிரியல் பல்வகைமையைப் பாதுகாத்தல்) ஒதுக்க வேண்டும்.
தன்னிச்சையாகக் காணிகளைக் கைப்பற்றல் போன்ற பொதுமக்களின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகளுக்கு இடமளித்த வண்ணம் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் முயற்சிக்குமேயானால், 2050 ஆம் ஆண்டாகும்போது இலங்கை என்ற நாடே இருக்காது. 2050 ஆம் ஆண்டுக்கு முன்னர் நாட்டில் நீருக்கான யுத்தம் ஏற்படும். கடந்தகாலத்தில் சமனல வாவியிலிருந்து உடவளவைக்கு நீரை விடுவிக்குமாறு உடவளவ மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டார்கள். நீரைப் பெறுவதை இலக்காகக்கொண்ட இத்தகைய போராட்டங்கள் நாளடைவில் கைகலப்பாக மாறும். நாம் இன, மத ரீதியில் ஏற்படக்கூடிய முரண்பாடுகளை மாத்திரம் கருத்திற்கொள்கின்றோமே தவிர, குடிநீர் உள்ளிட்ட வளங்கள் இன்மையால் ஏற்படக்கூடிய முரண்பாடுகள் குறித்துக் கவனம்செலுத்துவதில்லை. உடவளவ நீருக்கான போராட்டத்தை ஒத்த போராட்டங்கள் இன்னமும் 10 -– 15 வருடங்களில் நாட்டில் பல பாகங்களிலும் நடைபெறும்.
கேள்வி : தற்போது வட, கிழக்கில் நீருக்கான தட்டுப்பாடு நிலவும் அதேவேளை, 2050 ஆம் ஆண்டாகும்போது வட மாகாணத்தை அண்டிய கடல்நீர் மட்டம் உயரும் என்றும், அப்பகுதிகள் நீரில் மூழ்கும் என்றும் எதிர்வுகூறப்படுகின்றது. இதன் உண்மைத்தன்மை குறித்து விளக்கமுடியுமா?
பதில் : ஆம், இந்த எதிர்வுகூறல் உண்மை என்பதுடன் அதற்கான வரைபடங்களும் உள்ளன. கடல்நீர் மட்டம் உயர்வடையும்போது யாழ்ப்பாணத்தில் சுமார் 18,000 - ,20,000 ஏக்கர் நிலப்பரப்பும், மன்னாரில் 18,000 ஏக்கர் நிலப்பரப்பும், புத்தளத்தில் ஏறக்குறைய 18,000 ஏக்கரை அண்மித்த நிலப்பரப்பும், கொழும்பு மற்றும் காலி மாவட்டத்தின் பல பகுதிகளும் நீரில் மூழ்கக்கூடிய அச்சுறுத்தல்நிலை காணப்படுகின்றது. தற்போது கடல்நீர் மட்டம் 40 சென்ரிமீற்றர் அளவால் உயர்வடைந்திருக்கிறது. எனவே இக்கடல்நீர் மட்டம் மேலும் உயர்வடைந்து நாட்டின் பல பகுதிகள் மூழ்குவதற்கு இந்நூற்றாண்டின் இறுதி வரை காத்திருக்கத் தேவையில்லை.
கேள்வி : இந்த அச்சுறுத்தல் நிலையிலிருந்து எம்மைப் பாதுகாத்துக்கொள்வதற்கு இப்போதிருந்து முன்னெடுக்கக்கூடிய நடவடிக்கைகள் என்ன?
பதில் : இவ்விடயத்தைப் பொறுத்தமட்டில் நாடு என்ற ரீதியில் தேசிய மட்டத்தில் பல்வேறு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுத்தாலும், உலகளாவிய ரீதியில் அனைத்து நாடுகளும் அர்த்தமுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் உணரத்தக்க மாற்றமொன்றை ஏற்படுத்துவது சாத்தியமல்ல. அவ்வாறு உணரத்தக்க மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு உலகளாவிய ரீதியில் காபனீரொட்சைட் வெளியேற்றத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். இருப்பினும் அதனைச் செய்யமுடியாது.
எனவே, இச்சூழ்நிலைக்கு ஏற்றவாறு எம்மைத் தகவமைத்துக்கொள்வதே எம்மைப்போன்ற சிறிய நாடுகளுக்கு இருக்கின்ற ஒரேயொரு தெரிவாகும். அதன்படி எதிர்காலத்தில் நீரில் மூழ்கக்கூடிய அச்சுறுத்தல் காணப்படுவதாக எதிர்வுகூறப்பட்டுள்ள பகுதிகளில் குடியேறுவதையும், வீடுகளை நிர்மாணிப்பதையும், பயிர்ச்செய்கை மேற்கொள்வதையும், வாழ்வாதாரத் தொழில்களில் ஈடுபடுவதையும் தவிர்த்துக்கொள்ளவேண்டும். அதேவேளை இனிவரும் நாட்களில் காடுகளை அழிப்பதையும், குடியிருப்புக்களுக்கு அண்மையிலுள்ள மரங்களை வெட்டுவதையும் முற்றாக நிறுத்தவேண்டும். சூழலுக்கு வெளிவிடப்படும் காபனீரொட்சைட்டை உள்ளீர்த்து, ஒட்சிசனை வெளியேற்றுவதன் மூலம் நாம் வாழும் புறச்சூழலை சுத்தப்படுத்துகின்ற மாபெரும் ஆற்றல் மரங்களைத் தவிர வேறெந்த இயந்திரத்துக்கும் இல்லை.
கேள்வி : கொழும்பு துறைமுக நகர செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட வேளையில், அதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்ததுடன் அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் குறித்து தொடர்ச்சியாகப் பிரசாரம் செய்துவந்த அமைப்பு என்ற ரீதியில், தற்போது அத்திட்டம் குறித்த பார்வை எத்தகையதாக இருக்கின்றது?
பதில் : உரியவாறான சூழலியல் பகுப்பாய்வின்றி இச்செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டமையே எமது பிரதான கரிசனையாக இருந்தது. ஆனால், அதனைக் கருத்திற்கொள்ளாமல் கடலுக்குள் மணல் நிரப்பப்பட்டது. அதன் விளைவான சூழலியல் பாதிப்பு ஏற்பட்டு முடிந்துவிட்டது. தற்போது அதனை மாற்றமுடியாது. மறுபுறம் சீனாவினால் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டது வெறுமனே 1.5 பில்லியன் டொலர் பெறுமதியான செயற்திட்டம் மாத்திரமே. இருப்பினும் கடற்பகுதியை நிரப்புவதற்காக நாம் வழங்கிய மணல் மற்றும் கற்களின் பெறுமதி 4.2 பில்லியன் டொலர்கள் (கடற்பகுதியை மணல் இட்டு நிரப்பும் பணிகள் இடம்பெற்றபோது நிலவிய சந்தை விலைகளின் அடிப்படையிலான கணிப்பீடு).
இச்செயற்திட்டத்துக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ள இயற்கை வளங்கள் இந்நாட்டு மக்களுக்குச் சொந்தமானவையாகும். அதேவேளை துறைமுக நகரத்தில் ஏற்கனவே திட்டமிடப்பட்டவாறான நிர்மாணப்பணிகள் 2045 ஆம் ஆண்டுக்குள் நிறைவுசெய்யப்படவேண்டும். இல்லாவிடின் இச்செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டமைக்கான நோக்கம் அடையப்படாமலே தோல்வியைத் தழுவவேண்டியிருக்கும். எனவே தற்போது துறைமுக நகர செயற்திட்டத்தினால் சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பு ஒருபுறமிருக்க, 'வெள்ளை யானையாக' மாறியிருக்கும் இத்திட்டத்தினால் பொருளாதார ரீதியிலும் பெரும் இழப்பை சந்திக்கவேண்டிய நிலையில் இலங்கை இருக்கின்றது. அதேபோன்று இச்செயற்திட்டத்தின் விளைவாக ஏற்பட்ட இராஜதந்திர ரீதியான மோதலும் இலங்கைக்கான முக்கிய சவாலாகும்.
கேள்வி : கொழும்பிலிருந்து குப்பைகளைக் கொண்டுசென்று புத்தளம், அருவக்காலு பகுதியில் கொட்டுகின்ற நடவடிக்கை, மக்கள் மத்தியிலிருந்து கிளம்பிய எதிர்ப்பின் பின்னர் நிறுத்தப்பட்டது. இருப்பினும் ஏற்கனவே கொட்டப்பட்ட குப்பைகள் இன்னமும் அகற்றப்படாமையினால் ஏற்படக்கூடிய சூழலியல் பாதிப்புக்களைக் குறைமதிப்பீடு செய்யமுடியாதல்லவா?
பதில் : ஆம், அதனால் அச்சூழல் மிகமோசமாகப் பாதிப்படையும். கொழும்பு குப்பைகள் முறையான திட்டமிடலின்றி புத்தளம், அருவக்காலு பகுதியில் கொட்டப்பட்டன. அக்குப்பைகள் இன்னமும் அங்கிருந்து அகற்றப்படாததன் விளைவாக அதிலுள்ள இரசாயனப் பதார்த்தங்கள் மண்ணுடன் சேரும். அதுமாத்திரமன்றி அது 103 மில்லியன் டொலர் பெறுமதியான செயற்திட்டமாகும். அரசாங்கம் குப்பைகளை அகற்றுவதற்கான முறையான திட்டத்தை வகுக்காததன் விளைவாக மீத்தொட்டமுல்ல, அருவக்காலு, கெரவலப்பிட்டிய ஆகிய பகுதிகளில் பாரிய சூழலியல் சேதம் ஏற்பட்டிருக்கின்றது. அதுமாத்திரமன்றி நாடளாவிய ரீதியில் சுமார் 350 இடங்கள் குப்பைகளைக் கொட்டுவதற்கான திறந்தவெளி இடங்களாக இருக்கின்றன. இவை சூழலியல் பாதிப்புக்களை மாத்திரமன்றி, அண்டிய பகுதிகளில் வாழும் மக்களுக்கு சுகாதாரப் பாதிப்புக்களையும் ஏற்படுத்துகின்றன. எனவே இவற்றைக் கருத்திற்கொண்டு குப்பைகள் உள்ளிட்ட கழிவுகளை முறையாக அகற்றுவதற்கான செயற்திட்டமொன்றை அரசாங்கம் வகுக்கவேண்டும். காலநிலை மாற்றத்தினால் ஏற்படக்கூடிய தாக்கங்களுக்கு முன்பதாக உயிரியல் பல்வகைமை சீர்குலைவினால் இலங்கை மிகமோசமாகப் பாதிக்கப்படும். இன்னும் 10 – 15 வருடங்களில் நாட்டிலுள்ள வனப் பகுதிகளில் விலங்குகள் இருக்காது. அதன்விளைவாக சூழல் சமநிலை சீர்குலையும். எனவே இவற்றால் ஏற்படக்கூடிய பேரழிவைக் கருத்திற் கொண்டு இப்போதிருந்தே நாட்டுமக்கள் பொறுப்புணர்வுடன் செயற்படவேண்டும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM