சிவலிங்கம் சிவகுமாரன்
தோட்டத்தொழிலாளர் குடும்பமொன்று சட்டவிரோதமாக தோட்டக் காணியில் குடியிருப்பை அமைத்தனர் என அதை தகர்த்தெறியும் இரண்டாவது மோசமான நிகழ்வு இரத்தினபுரி காவத்தை தோட்டத்தின் வெள்ளந்துரை பிரிவில் இடம்பெற்றுள்ளது. இதற்கு முன்னர் மாத்தளை ரத்வத்தை தோட்டத்தில் இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றமையை நாடே அறியும்.
இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் மலையகப் பிரதிநிதிகளின் பிரதிபலிப்புகள் எவ்வாறு இருந்தன என்பதை மலையக சமூகத்தினர் கூடுதலாக சமூக ஊடகங்கள் வாயிலாக பார்த்திருப்பர். ஏனென்றால் மக்கள் பிரதிநிதிகள் மக்களுடன் தமது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளக்கூடிய இடமாக இக்காலத்தில் சமூக ஊடகங்களே விளங்குகின்றன. இங்கு உடனடியாக பின்னூட்டங்கள் கிடைக்கின்றன. விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. மாற்றுக்கருத்துக்கள் பேசப்படுகின்றன. மிக முக்கியமாக எதிரணி ஆதரவாளர்களும் தாராளமாக கருத்துப் பரிமாற்றங்களை செய்யும் இடமாக இவை விளங்குகின்றன.
மாத்தளை சம்பவத்தில் களத்துக்கு நேரடியாக சென்ற அமைச்சர் ஜீவன் அங்கு முகாமைத்துவ அதிகாரி ஒருவருடன் வாக்குவாதப்பட்டார். நாடாளுமன்ற சபா மண்டபத்தின் நடுவே மலையகப் பிரதிநிதிகள் பதாகைகளுடன் அமர்ந்து இடம்பெற்ற சம்பவத்துக்கு கண்டனம் வெளியிட்டனர். சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென முழக்கமிட்டனர்.
அடித்தால் திருப்பி அடியுங்கள் அது சட்ட வரம்புக்குட்பட்டது என தமிழ் முற்போக்குக் கூட்டணி உறுப்பினர் மனோ கணேசன் அறிக்கை விடுத்தார். ஆனால் குடியிருப்பை அடித்து நொறுக்கிய உதவி முகாமையாளர் மீது அப்படி ஒன்றும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அமைச்சர் ஜீவன் ஆக்ரோஷமாக நடந்து கொண்டமையை பலர் வரவேற்றனர். சிலர் நாடகமென்றனர்.
இரண்டாவதாக இரத்தினபுரி காவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவத்தில் அமைச்சர் ஜீவன் சற்று பொறுமையாக நடந்து கொண்டார். சம்பவ இடத்துக்குச் சென்றாலும் அங்கு யாருடனும் தர்க்கப்படவில்லை. ஏனென்றால் தோட்ட நிர்வாகம் சார்பாக அங்கு யாரும் இருந்ததாகத் தெரியவில்லை. எனினும் மறுபக்கம் தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவர் இது குறித்து பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சருடனும் காவத்தை பிரதேச பொலிஸ் அதிகாரியுடனும் கதைத்ததாக அறிக்கை விடுத்திருந்தார். ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளதாகவும் அறிவித்தார்.
இதையடுத்தே இருதரப்பின் ஆதரவாளர்கள் மத்தியிலிருந்து வாதப் பிரதிவாதங்கள் ஆரம்பித்தன. முகநூலில் இருதரப்பு ஆதரவாளர்களும் நாகரிகமாகவே மோதிக்கொண்டார்கள்.
அறிக்கை விடுவதை விடுத்து களத்திற்கு வருமாறு த.மு.கூ தலைவருக்கு இ.தொ.கா ஆதரவாளர்கள் அறைகூவல் விடுத்தனர். களத்திலிருந்து செய்ய வேண்டியதை தான் தலைநகரிலிருந்து செய்வதாக த.மு.கூ தலைவர் சார்பாக பதில் வழங்கப்பட்டது. ஆனால் இந்த குடியிருப்பு தகர்த்தல் சம்பவங்களின் பின்னணியில் இருக்கக்கூடிய நில உரிமையற்ற சமூகம் தொடர்பில் கடந்த காலங்களில் எவரும் காத்திரமான, அவர்களின் உரிமைகள் தொடர்பான செயற்பாடுகளில் எவருமே ஈடுபடவில்லை என்பதை குறித்த பிரதிநிதிகள் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
தொடர்ச்சியாக இந்த சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி 45 வருடங்கள் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு, பிரதி அமைச்சு, இராஜாங்க அமைச்சுப் பொறுப்புகளை வகித்த இந்த பிரதிநிதிகள் இப்போது குடுமிச் சண்டை பிடித்துக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை.
ஒருவரையொருவர் சாடிக்கொண்டும் நாடகம் அரங்கேற்ற வேண்டாம் என்றும் ஆதரவாளர்களை வைத்து கருத்துப் பரிமாற்றங்களை அவர்கள் முன்னெடுத்தாலும் பிரதிநிதிகளின் நாடகங்களை மக்கள் அறிந்தேயுள்ளனர்.
மாத்தளை ரத்வத்த சம்பவங்களைப் போன்று இதற்கு முன்பதாக பல அட்டூழியங்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால் அந்நேரம் சமூக ஊடகங்கள் இல்லை அவ்வளவுதான். கடந்த காலங்களில் தொழிலாளர்களின் சம்பளத்தை பிரதானமாகக்கொண்டே பல வருடங்களை பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் கழித்தனர். அது ஒன்றையே பேசுபொருளாக்கி அரசியல் செய்த காலகட்டத்தில் நிலவுரிமைப் பற்றி எவருமே வாய்திறக்கவில்லை.
தோட்டத் தொழிலாளர்களின் காணி உரிமை தொடர்பில் மிக அண்மைக்காலமாகவே பேசப்பட்டு வருகின்றது. காணி உரிமைப் பற்றி பேசும் அரசு சார்பற்ற மற்றும் சிவில் அமைப்புகள் இந்த விடயத்தை சட்ட ரீதியாக எவ்வாறு அணுகுவது என்பது குறித்த எந்த தெளிவுகளும் இல்லாமல் ‘காணி உரிமை தினம்’ என்ற ஒன்றை மட்டும் வருடந்தோறும் அனுஷ்டித்து ஒரு வட்டத்துக்குள் சுற்றி வந்து கொண்டிருக்கின்றன.
தற்போதும் கூட மாத்தளை, காவத்தை சம்பவங்களை தடுக்க ஜனாதிபதியிடம் பேச வேண்டும் மாநாடு நடத்த வேண்டும் என தமிழ் முற்போக்குக் கூட்டணி வலியுறுத்துகின்றது. ஆனால் ஜனாதிபதி நாட்டிலேயே இல்லை. அரசாங்கத்தின் பக்கமிருக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸானது இரண்டு சம்பவங்கள் குறித்தும் ஜனாதிபதியுடன் ஏன் உடன் பேச்சு நடத்தவில்லை என்பது தெரியவில்லை.
பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரே கம்பனிகளின் அடாவடித்தனத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்று வெளிப்படையாகக் கூறுகின்றார் என்றால், குடியிருப்பு உடைப்பு சம்பவங்களுக்கு இனி அவரை நம்பி பிரயோசனமில்லை என்பதை பிரதிநிதிகள் உணர்ந்துகொள்ளல் அவசியம்.
வெளிப்படையாக கூறப்போனால், தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளை முற்று முழுதாக தீர்க்கும் எந்த நல்லெண்ணமும் மலையக அரசியல்வாதிகள் எவரிடமும் இல்லை. அவர்களுக்கு தமது அரசியலை முன்னெடுக்க ஏதாவதொரு பிரச்சினை இங்கு இருக்க வேண்டும் என்று நினைக்கின்றனர்.
இந்த விடயத்தில் கட்சி, தொழிற்சங்க, கூட்டணி வேறுபாடுகள் இல்லாமல் அனைவரும் ஒற்றுமையாகவே இருக்கின்றனர் என்பது வெள்ளிடை மலை.
மாத்தளை, காவத்தை சம்பவங்கள் இனியும் தொடரத்தான் போகின்றன. பிரதிநிதிகளும் அடுத்த தேர்தல் வரை இதை பேசுபொருளாக்கிக்கொண்டு மாத்திரமே இருக்கப்போகின்றனர். அவர்களின் அரசியல் இருப்பு தொழிலாளர்களின் வாக்குகளில் அல்லாது தற்போது அவர்களின் பிரச்சினைகளிலேயே தங்கியுள்ளன என்பது தான் உண்மை!
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM