சிவலிங்கம் சிவகுமாரன்
கொட்டகலை பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பத்தனை சந்தி காட்டுமாரியம்மன் ஆலயத்துக்கு செல்லும் வழியில் அமைந்துள்ள ஐந்து கடையறைகள் கொண்ட கட்டடம் தொடர்பான சர்ச்சைகள் தொடர்ந்தவண்ணமுள்ளன.
தற்போது இக்கட்டடத்தை ஏலத்தில் விடுவதற்கு நுவரெலியா மேல் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவொன்றை கடந்த 04/09/2023 அன்று பிறப்பித்துள்ளது. இக்கட்டடமானது எந்த வித நடைமுறைகளையும் பின்பற்றப்படாமல், பிரதேச சபையின் அனுமதியின்றி அவ்விடத்தில் அமைக்கப்பட்டதாக கொட்டகலை பிரதேச சபையானது, நாம் கோரியிருந்த தகவல் வழங்கும் சட்டத்தின் அடிப்படையில் சமர்ப்பித்திருந்த விண்ணப்பத்துக்கு 11/07/2022 அன்று திகதியிடப்பட்ட கடிதத்தில் பதில் வழங்கியிருந்தது.
குறித்த கட்டடம் அமைந்த காணியானது அவ்விடத்தில் அமைந்துள்ள ஆலய பரிபாலன சபையினரால் பராமரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும், நாம் ஆராய்ந்து பார்த்ததில் அந்த ஆலயத்துக்கு ஒரு நிர்வாக சபையொன்று இருக்கவில்லை என்ற உண்மை தெரியவந்தது.

அது குறித்த தகவல்களை நாம் அறிக்கையிட்ட பின்னர் மேற்படி ஆலயத்துக்கு நிர்வாக சபையொன்றை உருவாக்க 27/11/2022 அன்று கூட்டமொன்று இடம்பெறவுள்ளதாக குறித்த பிரிவு கிராம அதிகாரியினால் அறிவித்தல் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. எனினும் குறித்த தினம் இடம்பெற்ற நிகழ்வில் பிரதேச மக்கள் தமது எதிர்ப்பை தெரிவிக்கவே அந்த கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
பின்னர், இது குறித்த மேலதிக தகவல்களை வழங்கக் கோரி நாம் விண்ணப்பித்திருந்தமைக்கு அமைவாக 15/09/2022 திகதியிடப்பட்ட பதில் கடிதத்தில் கொட்டகலை பிரதேச சபையானது, ஆலய பரிபாலன சபையினால் பொய்த் தகவல்கள் வழங்கப்பட்டதாகவும் இக்காணி குறித்த எந்த ஆவணங்களும் இல்லாத காரணத்தினால் நகர அபிவிருத்தி அதிகார சபையின் சட்டங்களுக்கிணங்க ஹட்டன் நீதவான் நீதிமன்றில் பரிபாலன சபைக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் (வழக்கு எண்–42811) தெரிவிக்கப்பட்டிருந்தது.
அக்காணியை சட்டபூர்வமாக பிரதேச சபைக்கு ஒப்படைக்க காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்கு கோரிக்கை விடுத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், குறித்த கட்டடமானது 05/09/2023 அன்று ஏலம் விடப்படுவதாக கொட்டகலை பிரதேச சபை, பத்திரிகைகளில் கேள்வி அறிவித்தலை விடுத்திருந்தது.

ஆரம்பத்திலிருந்தே இக்கட்டடம் குறித்த சந்தேகங்களை எழுப்பி வந்த பிரதேச சபையின் மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் சுப்ரமணியம் ராஜா, இந்த சட்ட விரோத கட்டடத்தின் கட்டுமானங்கள் நம்பகரமானதாக இல்லை என்றும் இக்கட்டடம் பிரதேச சபைக்கு எவ்வாறு உரித்தானது என்ற கேள்விகளை முன்வைத்து நுவரெலியா மேல் நீதிமன்றில் மனுத்தாக்கல் ஒன்றை செய்தார்.
இம்மனு மீதான விசாரணைகள் 04/09/2023 அன்று மேற்கொள்ளப்பட்டபோது, கட்டடம் குறித்த உரிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால் மறுநாள் 5ஆம் திகதி இடம்பெறவிருந்த ஏலத்தில் விடும் செயற்பாடுகளுக்கு இடைக்கால தடை விதித்து மேல் நீதிமன்றம் உத்தரவொன்றை பிறப்பித்திருந்தது.
இந்நிலையில் சர்ச்சைக்குரிய இக்கட்டடத்தை கொட்டகலை பிரதேச சபையானது தனக்குரியது என கருதி எவ்வாறு ஏலத்தில் விடுவதற்கு தீர்மானித்தது என்ற கேள்விகளை முன்வைத்து நாம் தகவல் அறியும் சட்டமூலம் ஊடாக விண்ணப்பித்தமைக்கு 05/09/2023 திகதியிடப்பட்ட கடிதம் மூலம் எமக்குக் கிடைத்த பதில்களை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆக்கம் எழுதப்படுகிறது.
கட்டடத்தை அமைத்தவர் யார்?
மேற்படி கட்டடமானது தலவாக்கலைப் பகுதி வர்த்தகர் ஒருவரினால் அவ்விடத்தில் அமைக்கப்பட்டதாகக் கூறும் பிரதேச சபையானது, 1/03/2023 அன்று மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் ஊடாக கட்டடத்தை அமைத்தவரினால் கொட்டகலை பிரதேச சபைக்கு பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. (ஒப்பந்த கடிதம் இணைக்கப்படவில்லை)
எனினும், இக்கட்டடத்தை அமைப்பதற்கு கொட்டகலை பிரதேச சபையால் அனுமதி வழங்கப்படவில்லை என்ற விடயத்தில் சபையானது உறுதியாகவுள்ளது.
அதேவேளை இக்காணி உரித்து தொடர்பில் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கு பிரதேச சபையால் வாபஸ் வாங்கப்பட்டு விட்டதாகவும் சபை பதில் அளித்துள்ளது.
இக்கட்டடத்தில் அமைந்துள்ள ஐந்து கடையறைகளையும் ஏலத்தில் விடுவதற்கான அனுமதியை உள்ளூராட்சி ஆணையாளர் வழங்கியுள்ளாரா என்று கேள்விக்கு ஆம் என்ற பதிலுடன் அனுமதி கடிதத்தின் பிரதியும் இணைக்கப்பட்டுள்ளது. இதே வேளை இக்கட்டிடம் தொடர்பான பெறுமதியை கணிப்பீடு செய்தல் மற்றும் காணி சீர்திருத்த ஆணைக்குழுவால் அளவீடு செய்யப்பட்டமைக்கான கொடுப்பனவுகள், தொடரப்பட்ட வழக்குக்கான செலவீனம், கட்டிட கேள்வி அறிவித்தலுக்கான பத்திரிகை விளம்பர அறிவித்தலுக்கான கட்டணங்கள் என ஒரு தொகை தொடர்பான தகவல்களையும் சபை வழங்கியுள்ளது.
மேலும் ஒரு கடைத்தொகுதியிலிருந்து சபைக்கு வருமானமாக எதிர்ப்பார்க்கப்படும் தொகையாக பத்து இலட்சம் ரூபாய் கணிக்கப்பட்டுள்ளது. மேலே கூறப்பட்ட சகல செலவீனங்கள் மற்றும் எதிர்ப்பார்க்கப்படும் வருமானத்தின் மொத்தத் தொகையாக கணிக்கப்பட்டிருக்கும் தொகை 14,527,684 ரூபாய் ஆகும். (ஒரு கோடியே 45 இலட்சத்து இருபத்து ஏழாயிரத்து 684 ரூபாய்) இத்தொகையை ஐந்து கடையறைகளுக்குப் பிரித்துப் பார்க்கும்போது முப்பது இலட்சத்துக்கு கிட்டிய தொகையான 2905537 ரூபாய் வருகின்றது.
இதன் அடிப்படையிலேயே ஒரு கடைத்தொகுதி 30 இலட்சம் ரூபாய் என்ற ஏலத்தொகை தீர்மானிக்கப்பட்டு கேள்வி அறிவித்தல் விடுக்கப்பட்டிருக்கின்றது.
இதேவேளை இக்கட்டடம் பிரதேச சபையின் அனுமதியின்றியும் தொழில்நுட்ப அதிகாரியின் வழிகாட்டல் ஆலோசனைகளின்றி அமைக்கப்பட்டதால் கட்டடத்தின் உறுதித் தன்மை குறித்த உத்தரவாதத்தை பிரதேச சபை வழங்குமா என்ற கேள்வியை நாம் எழுப்பியிருந்தோம். அதற்குப்பதிலளித்துள்ள தகவல் அதிகாரி, (பிரதேச சபையின் செயலாளர்) கொட்டகலை பிரதேச சபையில் தொழில்நுட்ப அதிகாரி ஒருவர் இல்லாத காரணத்தினால் நுவரெலியா பிரதேச செயலகத்தின் தொழில்நுட்ப அதிகாரியிடம் நற்சான்றிதழ் பெற்றுக்தருமாறு கோரப்பட்டுள்ளதாகவும் அதே வேளை இதே அதிகாரியினால் கட்டுமான உறுதிக்கு உத்தரவாதத்தைப் பெற்றுத் தருமாறு கோரப்பட்டுள்ளதாகவும் பதில் வழங்கப்பட்டுள்ளது.
இக்கட்டடம் ஏலம் விடுவது தொடர்பில் உள்ளூராட்சி உதவி ஆணையாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் எமக்கு பதில் வழங்கப்பட்டுள்ளது. எனினும் இங்கு எமக்கு சில கேள்விகள் எழுகின்றன.
காணி உரித்து தொடர்பில் அருகிலுள்ள காட்டுமாரியம்மன் ஆலய நிர்வாகசபையினருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடர்ந்த பிரதேச சபையானது சட்டவிரோத கட்டடத்தை அமைத்தவருக்கு எதிராக நகர அபிவிருத்தி அதிகார சபையின் சட்டத்தின் கீழ் ஏன் வழக்கு தொடரவில்லை?
1982ஆம் ஆண்டின் 4ஆம் இலக்கம் மற்றும் 1987 ஆம் ஆண்டின் (திருத்தியமைக்கப்பட்ட) 41ஆம் இலக்க நகர அபிவிருத்தி அதிகார சட்டத்தின், 8 ஏ (1) பிரிவின் கீழ், சபையின் அனுமதி இன்றி அமைக்கப்படும் சட்டவிரோத கட்டடத்துக்கு எதிராக உள்ளராட்சி சபைகளால் வழக்கு தொடர முடியும். அது தொடர்பில் சட்டவிரோத கட்டுமானத்தை குறிப்பிட்ட காலத்துக்குள் அகற்றுவதற்கு சபையின் தவிசாளரால் உரிய நபருக்கு கடிதம் அனுப்ப முடியும். அறிவித்தலை சட்டவிரோத கட்டிடத்தில் காட்சிப்படுத்த முடியும். அவ்வாறு இடம்பெறாவிடின், நகர அபிவிருத்தி அதிகார சபை சட்டத்தின் 28 அ (3) பிரிவின் கீழ் நீதிமன்ற கட்டளையைப்பெற்று இக்கட்டடத்தை உடைத்து அகற்றுவதற்கும் சபைக்கு அதிகாரங்கள் உள்ளன. ஆனால் இதை சபை நிர்வாகம் ஏன் பின்பற்றவில்லை?
மாறாக குறித்த சட்டவிரோத கட்டிடத்தை அமைத்தவரிடம் ஒரு ஒப்பந்தத்துக்கு சென்று அக்கட்டிடத்தை ஏலம் விடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு மார்ச் 20ஆம் திகதி உள்ளூராட்சி சபைகளின் ஆயுட்காலம் முடிவடையும் வரை கொட்டகலை பிரதேச சபையின் நிர்வாகம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் வசம் இருந்தமை முக்கிய விடயம்.
மக்களுக்காக போராடுவேன்
இக்கட்டிடத்தை ஏலம் விடுவதற்கு நீதிமன்றத்தின் இடைக்கால தடை உத்தரவை பெற்றுள்ள கொட்டகலை பிரதே சபையின் முன்னாள் ஜே.வி.பி. உறுப்பினர் சுப்ரமணியம் ராஜா கருத்துத் தெரிவிக்கையில்,
இந்த சட்ட விரோத கட்டடம் அமைவதற்கு முன்பதாக இந்த காணியில் இப்பிரதேச மக்களின் நலன் கருதி சமூர்த்தி வங்கி அமைப்பதற்கே தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது. சமூர்த்தி அதிகார சபையின் அதிகாரிகளால் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் அனுமதியும் பெறப்பட்டிருந்தது. ஆனால் திடீரென அவ்விடத்தில் வர்த்தகர் ஒருவர் வந்து கட்டடம் அமைக்கும் வரை பிரதேச சபையும் ஏனைய அதிகாரிகளும் என்ன செய்து கொண்டிருந்தனர்?
கொட்டகலை பிரதேச சபை தலைவரையும் சேர்த்து 16 உறுப்பினர்களை கொண்டது. எதிர்கட்சி வரிசையில் ஏழு பேரும் தமிழ் முற்போக்குக் கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள். ஆனால் இந்த விவகாரம் குறித்து நான் மட்டுமே சபை கலைக்கப்படும் வரை குரல் கொடுத்துக்கொண்டிருந்தேன்.
நாம் மக்களுக்காக போராடுபவர்கள். எமது தலைமை பாராளுமன்றில் மக்களுக்காக குரல் கொடுப்பதை போன்று நானும் பிரதேச சபையில் குரல் கொடுத்தேன். ஆனால் எனக்கு ஆதரவை விட அழுத்தங்களே அதிகமாக இருந்தன. எனினும் இந்த இடம் தனி ஒரு நபருக்கு சொந்தமாவதை அனுமதிக்க முடியாது. இது மக்களை சென்றடைய வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன் என்றார்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM