யார் எப்போது மொட்டை அடித்துக் கொள்ளலாம்...?

18 Sep, 2023 | 02:22 PM
image

எம்மில் சிலர் தங்களுடைய தொழிலில்... தங்களுடைய முயற்சியில் ...கடினமாக உழைத்தும், எதிர்பார்த்த பலன் கிட்டுவதில்லை.

வேறு சிலருக்கு எந்த தொழிலை அமைத்துக் கொண்டாலும் அதில் கடினமாக உழைத்தாலும் லாபம் என்பது சிறிதும் கிடைப்பதில்லை.

இதற்கு காரணம் பலவாக இருந்தாலும் இதிலிருந்து முழுமையான நிவாரணம் பெற ஒப்பற்ற பரிகாரமாக ஆன்மீக பெரியோர்கள் முன்மொழிவது மொட்டை போடுவது தான்.‌

உடனே எம்மில் சிலர்,' மொட்டை தானே சார்! எப்போது போட வேண்டும் சொல்லுங்கள். போட்டுக் கொள்கிறோம்!' என்பர். இந்த மொட்டை போடுவதிலும் ஒரு சூட்சமம் அடங்கியிருக்கிறது. யார்? எப்போது? மொட்டை போட்டால் நல்ல பலன் கிடைக்கும் என்பதனை ஜோதிட நிபுணர்களும் தெளிவாக விளக்கம் அளித்திருக்கிறார்கள்.

மொட்டை போடுவது என்பது முடி காணிக்கை மட்டுமல்ல.. எம்முடைய உடலின் தலை பாகமான முகத்தின் மேல் தலைப்பகுதியில் அமைந்திருக்கும் முடிகளை இழப்பதும் தான்.. மொட்டை போடுவது போல் தான்.

இது லக்னாதிபதி நீசம் அடைந்திருந்தாலும்... உங்கள் ஜென்ம நட்சத்திரத்தின் வேதகனுடைய நட்சத்திரத்தில் செய்துகொண்டாலும்... சரியான பலனை அளிக்கும் பரிகாரமாக திகழ்கிறது என்றும் ஜோதிட நிபுணர்கள் வலியுறுத்துகிறார்கள். இது தொடர்பான விளக்கத்தை தொடர்ந்து காண்போம்.

நீங்கள் மேசம் மற்றும் விருச்சிக லக்னக்காரர்களாக இருந்தால்... உங்களுடைய லக்னாதிபதி செவ்வாய் பகவான்- கடக ராசியில் நீச்சமடைவார். இந்த காலகட்டத்தில் நீர் நிலைகளுக்கு அருகில் உள்ள அல்லது உலக புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்று மொட்டை அடித்துக் கொண்டால் ..உங்களுடைய முயற்சிக்கேற்ற பலன் எதிர்பார்த்ததை விட கூடுதலாக கிடைக்கும்.

செவ்வாய் பகவான் ஒரு ராசியில் ஏறத்தாழ ஒன்றரை மாதங்கள் பயணிப்பதால்... கடக ராசியில் பிரவேசிக்க குறைந்தபட்சம் ஒன்றரை ஆண்டுகளாவதாகும். அதனால் நீங்கள் ஒரு முறை மொட்டை அடித்துக் கொண்டால்.. ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு தான் மீண்டும் அடிக்க வேண்டியதிருக்கும். அதற்குள் உங்களுடைய முயற்சிகள் நல்ல நிலையில் வெற்றியை தேடித்தரும்.

நீங்கள் ரிஷபம் மற்றும் துலா லக்னக்காரர்களாக இருந்தால்.. உங்களின் லக்னாதிபதியான சுக்கிரன்- கன்னி ராசியில் நீச்சமடைவார். அந்த காலகட்டத்தில் மொட்டை அடித்துக் கொள்ளலாம். பலன் கிடைக்கும்.

நீங்கள் மிதுனம் மற்றும் கன்னி லக்கினக்காரர்களாக இருந்தால் ... உங்களின் லக்னாதிபதியான புதன்- மீன ராசியில் நீச்சமடைவார். புதன் பகவான் மீன ராசியில் சஞ்சரிக்கும் போது நீங்கள் மொட்டை அடித்துக் கொள்ளலாம். புதன் பகவான் பெருமாளை குறிப்பதால் இந்த தருணத்தில் நீங்கள் திருப்பதி சென்று மொட்டை அடித்துக் கொண்டால் நல்ல பலன் விரைவாக கிடைக்கும்.

நீங்கள் கடக லக்னக்காரர்களாக இருந்தால்... உங்களுடைய லக்னாதிபதி  சந்திரன் -விருச்சிகத்தில் நீச்சமடைவார். சந்திரன் வேகமாக சுழலும் கிரகம் என்பதால், கோச்சாரத்தில் சந்திரன் விருச்சிக ராசியில் பிரவேசிக்கும் தருணத்தில் எல்லாம் நீங்கள் மொட்டை அடித்துக் கொண்டால் பலன் கிடைக்கும்.

நீங்கள் சிம்ம லக்னக்காரர்களாக இருந்தால்... உங்களுடைய லக்னாதிபதி சூரியன் - துலா ராசியில் நீச்சமடைவார். சூரியன் துலா ராசியில் பிரவேசிக்கும்  ஐப்பசி மாதத்தில் நீங்கள் மொட்டை அடித்துக் கொண்டால் சிறப்பு பலன் கிடைக்கும்.

நீங்கள் தனுசு மற்றும் மீன லக்னக்காரர்களாக இருந்தால்... உங்களுடைய லக்னாதிபதி குரு பகவான் -  மகர ராசியில் நீச்சமடைவார்.‌ அந்த தருணத்தில் மொட்டை அடித்தால் சிறப்பு பலன் கிட்டும்.

நீங்கள் மகர லக்னம் மற்றும் கும்ப லக்னக்காரர்களாக இருந்தால்.. உங்களுடைய லக்னாதிபதி சனி -மேஷ ராசியில் நீசமடைகின்றார். இதனால் மேஷ ராசியில் சனி நீசம் அடையும் காலகட்டத்தில் நீங்கள் மொட்டை அடித்துக் கொள்ளலாம்.  இங்கு இரண்டரை வருட காலங்கள் இருப்பதால் உங்களுடைய திசை, புத்தி மற்றும் உங்களுடைய ஜென்ம நட்சத்திரத்திற்கு வேதகன் நட்சத்திரம் இருக்கும் காலகட்டத்தில் நீங்கள் மொட்டை அடித்துக் கொண்டால் உங்களுடைய பலன் சிறப்பாக கிடைக்கும்.

தகவல் : பாலசுப்பிரமணியன்

தொகுப்பு : சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்