(நா.தனுஜா)
நியூயோர்க்குக்கு வருகைதந்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இனப்பிரச்சினைக்கான தீர்வை உடனடியாக வழங்குவதற்கு அழுத்தம் பிரயோகிக்குமாறு அமெரிக்க உயர்மட்டப் பிரதிநிதிகளிடம் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
அதுமாத்திரமன்றி நியூயோர்க்கில் ஆரம்பமாகவுள்ள 78 ஆவது ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக்கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் பங்கேற்கவுள்ள நிலையில், அவருடனான சந்திப்பின்போது இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து அழுத்தம் பிரயோகிக்குமாறும் சுமந்திரன் அவர்களிடம் வலியுறுத்தினார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடருக்கு முன்பதாக உறுப்புநாடுகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்புக்காக ஜெனிவா சென்றிருந்த இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், அதனைத்தொடர்ந்து தற்போது அமெரிக்காவில் முக்கிய உயர்மட்ட சந்திப்புக்களில் ஈடுபட்டுவருகின்றார்.
அதன்படி கடந்த வியாழக்கிழமை வரை வொஷிங்டனில் தங்கியிருந்த அவர், அங்கு தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்க இராஜாங்க உதவிச்செயலர் டொனால்ட் லூ, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உலகளாவிய குற்றவியல் நீதிக்கான தூதுவர் பெத் வான் ஸ்காக், அமெரிக்கத் திறைசேரி அதிகாரிகள், சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் அதிகாரிகள், அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள், செனெட் சபையின் வெளியுறவுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடனும் சந்திப்புக்களை நடாத்தியிருந்தார்.
குறிப்பாக தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்க இராஜாங்க உதவிச்செயலர் டொனால்ட் லூ மற்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உலகளாவிய குற்றவியல் நீதிக்கான தூதுவர் பெத் வான் ஸ்காக் ஆகியோருடனான சந்திப்புக்களின்போது ஜெனிவாவில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடர் பற்றிக் கலந்துரையாடப்பட்டது. பேரவை அமர்வில் இலங்கை தொடர்பில் தனியாகவும், இணையனுசரணை நாடுகளுடன் இணைந்து கூட்டாகவும் அமெரிக்கா வெளியிட்ட அறிக்கைகள் தொடர்பில் பேசப்பட்டது. அதுமாத்திரமன்றி ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் இலங்கை தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் பொறுப்புக்கூறல் செயற்திட்டம் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்தும், அதனூடாக அடுத்தகட்டமாக முன்னெடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இச்சந்திப்புக்களின்போது விரிவாக ஆராயப்பட்டது.
மேலும் இவ்வாண்டு கொண்டாடப்பட்ட 75 ஆவது சுதந்திர தினத்துக்கு முன்னர் இனப்பிரச்சினைக்கான தீர்வை வழங்குவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்திருந்த போதிலும், இன்னமும் தீர்வு வழங்கப்படவில்லை என்று அமெரிக்க உயர்மட்ட அதிகாரிகளிடம் சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.
அதுமாத்திரமன்றி நாளைய தினம் நியூயோர்க்கில் ஆரம்பமாகவுள்ள 78 ஆவது ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக்கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் பங்கேற்கவுள்ள நிலையில், அவருடனான சந்திப்பின்போது இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து அழுத்தம் பிரயோகிக்குமாறும் சுமந்திரன் அவர்களிடம் வலியுறுத்தினார்.
அதேபோன்று நல்லிணக்கம் குறித்து அரசாங்கம் தொடர்ச்சியாகப் பேசினாலும், அதற்கு முரணான விதத்திலேயே செயற்பட்டுவருகின்றது என்று சுட்டிக்காட்டிய சுமந்திரன், தமிழ் மக்கள் செறிந்துவாழும் பகுதிகளில் பௌத்த விகாரைகளை நிர்மாணித்தல், இந்துக்களின் வழிபாட்டுத்தலங்களைத் தொல்லியல் பகுதியாகப் பிரகடனப்படுத்தல் என்பன உள்ளடங்கலாக வட, கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்றுவரும் பௌத்த சிங்களமயமாக்கல் குறித்து விரிவாக விளக்கமளித்தார்.
அத்தோடு முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாயில் கண்டறியப்பட்ட மனிதப்புதைகுழியில் அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், அங்கு கண்டறியப்படும் மனித எச்சங்களை அமெரிக்க ஆய்வுகூடங்களில் ஆய்வுசெய்வதற்கான சாத்தியப்பாடு குறித்து பரிசீலனை செய்யுமாறும் அமெரிக்க உயர்மட்டப் பிரதிநிதிகளிடம் சுமந்திரன் வேண்டுகோள்விடுத்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM