(ஆர். பிரேமதாச அரங்கிலிருந்து நெவில் அன்தனி)
இலங்கையிலும் பாகிஸ்தானிலும் நடத்தப்பட்ட 16ஆவது ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்தியா சம்பியனானது.
இதன் மூலம் இந்திய பிரதமர் நரேந்த்ர மோடியின் 73ஆவது பிறந்த தின பரிசாக இந்திய அணியினர் இவ் வெற்றியை சமர்ப்பணம் செய்கின்றனர்.
கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை (17) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கையை 50 ஓட்டங்களுக்கு சுருட்டிய இந்தியா 10 விக்கெட்களால் வெற்றியீட்டி ஆசிய கிண்ணத்தை 8ஆவது தடவையாக சுவீகரித்தது.
அத்துடன் 6 கோடியே 35 இலட்சம் ரூபா பணப்பரிசை இந்தியா தனதாக்கிக்கொண்டது.
இரண்டாம் இடத்தைப் பெற்ற இலங்கைக்கு 3 கோடியே 17 இலட்சம் ரூபா பணப்பரிசு வழங்கப்பட்டது.
இப் போட்டி ஆரம்பமாவதற்கு முன்னர் சிறு மழை பெய்ததால் ஆட்டம் 40 நிமிடங்கள் தாமதித்தே ஆரம்பமானது.
மேலும் ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் 30,000க்கும் மேற்பட்ட இரசிகர்கள் குழுமியிருந்ததுடன் அந்த எண்ணிக்கையில் 80 வீதத்துக்கும் மேற்பட்ட இலங்கை இரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்திருப்பர் என்பதில் சந்தேகம் இல்லை.
ஆசிய கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் நிர்ணயிக்கப்பட்ட மிகவும் குறைந்த வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 6.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 51 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றியீட்டி சம்பியனானது.
ஷஜப்மான் கில் 27 ஓட்டங்களுடனும் இஷான் கிஷான் 23 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.
இந்த வெற்றியில் மொஹமத் சிராஜின் சாதனைமிகு பந்துவீச்சும் ஹார்த்திக் பாண்டியாவின் துல்லியமான பந்துவீச்சும் முக்கிய பங்காற்றின.
இப் போட்டியில் 21 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களை வீழ்த்திய சிராஜ், ஆசிய கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் இரண்டாவது அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியைப் பதிவுசெய்தார். இந்தப் பந்துவீச்சுப் பெறுதி சர்வதேச ஒருநாள் போட்டியில் சிராஜின் தனிப்பட்ட அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியாகவும் அமைந்தது.
இந்தியாவுக்கு எதிராக கராச்சியில் 2008இல் நடைபெற்ற ஆசிய கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இலங்கையின் அஜன்த மெண்டிஸ் 13 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களைக் கைப்பற்றியமையே ஆசிய கிண்ண பந்துவீச்சு சாதனையாக தொடர்ந்தும் இருந்துவருகிறது.
இந்தப் போட்டி 116 நிமிடங்களிலும் 21.3 ஓவர்களிலும் நிறைவடைந்தமை விசேட அம்சமாகும்.
இப் போட்டியில் இந்திய வேகப்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்ட இலங்கை 15.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 50 ஓட்டங்களுக்கு சுருண்டது.
ஆசிய கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் இது மிகக் குறைந்த மொத்த எண்ணிக்கை என்பதுடன் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் இலங்கை பெற்ற இரண்டாவது மிகக் குறைந்த மொத்த எண்ணிக்கையாகும்.
இதற்கு முன்னர் பாகிஸ்தானுக்கு எதிராக 2000ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் பெற்ற 87 ஓட்டங்களே மிகக் குறைந்த மொத்த எண்ணிக்கையாக இருந்தது.
அத்துடன் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இலங்கை பெற்ற இரண்டாவது மிகக் குறைந்த மொத்த எண்ணிக்கையாகவும் இது பதிவானது.
தென் ஆபிரிக்காவுக்கு எதிராக 2012இல் பார்ல் விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டியிலேயே இலங்கை மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தது.
அப் போட்டியில் ஒரு கட்டத்தில் 13 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களை இநழ்திருந்த இலங்கை, 43 ஓட்டங்களுக்கு சுருண்டிருந்தது. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதுவே இலங்கை அணியின் மிகக் குறைந்த மொத்த எண்ணிக்கையாகும்.
இன்றைய போட்டியில் இலங்கை துடுப்பாட்டத்தில் குசல் மெண்டிஸ், துஷான் ஹேமன்த ஆகிய இருவரே 10 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.
மொஹமத் சிராஜ் தனது 2ஆவது ஓவரில் 4 விக்கெட்களை வீழ்த்தி இலங்கையை மோசமான நிலைக்கு தள்ளினார்.
மொஹமத், சிராஜ், ஹார்திக் பாண்டியா, ஜஸ்ப்ரிட் பும்ரா ஆகிய 3 வேகப்பந்துவீச்சாளர்கள் இலங்கையின் 10 விக்கெட்களையும் பகிர்ந்துகொண்டமை மற்றொரு சிறப்பம்சமாகும்.
இன்றைய இறுதிப் போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட குசல் ஜனித் பெரேரா தான் எதிர்கொண்ட இரண்டாவது பந்திலேயே மிக மோசமான அடி தெரிவினால் ஆட்டம் இழந்தார்.
ஜஸ்ப்ரிட் பும்ராவின் அகன்று செல்லும் பந்தை நோக்கி அரை மனதுடன் துடுப்பை கொண்டு சென்ற குசல் பெரேரா, விக்கெட் காப்பாளர் கே. எல். ராகுலிடம் பிடிகொடுத்து ஓட்டமின்றி வெளியேறினார்.
அதன் பின்னர் வீக்கெட்கள் சீரான இடைவெளிகளில் விழத் தொடங்கின.
4ஆவது ஓவரில் மொஹமத் சிராஜ் 4 விக்கெட்களை வீழ்த்தி இந்தியாவை பலமான நிலையில் இட்டார்.
அந்த ஓவரின் முதல் பந்தில் பெத்தும் நிஸ்ஸன்க (2), 3ஆம், 4ஆம் பந்துகளில் முறையே சதீர சமரவிக்ரம (0), சரித் அசலன்க (0), கடைசிப் பந்தில் தனஞ்சய டி சில்வா (4) ஆகியோரை சிராஜ் ஆட்டம் இழக்கச் செய்தார்.
சிராஜ் தனது அடுத்த ஓவரில் தசுன் ஷானக்கவின் (0) விக்கெட்டை நேரடியாகப் பதம் பார்த்ததுடன் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதலாவது 5 விக்கெட் குவியலைப் பதிவுசெய்தார். (12 - 6 விக்)
தொடர்ச்சியாக தனது 6ஆவது ஓவரை வீசிய சிராஜ், அந்த ஓவரில் குசல் மெண்டிஸின் (17) விக்கெட்டையும் நேரடியாக சரித்தார். (33 - 7 விக்.)
இந் நிலையில் வளர்ந்துவரும் வீரர் துனித் வெல்லாலகே ஏதாவது சாதிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் ஹார்திக் பாண்டியாவின் பவுன்சர் பந்தை அடிக்க விளைந்து ராகுலுக்கு இலகுவான பிடி ஒன்றைக் கொடுத்து 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். (40 - 8)
ஹார்திக் பாண்டியா தனது 3ஆவது ஓவரில் ப்ரமோத் மதுஷான் (1), மதீஷ பத்திரண (0) ஆகியோரை ஆட்டம் இழக்கச் செய்தார்.
துஷான் ஹேமன்த 13 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். அதில் ஒரு பவுண்டறி விராத் கோஹ்லியின் 'ஒவர் த்ரோ' மூலம் கிடைத்தது.
பந்துவீச்சில் மொஹமத் சிராஜ் ஒரு ஒட்டமற்ற ஓவர் அடங்கலாக 7 ஓவர்களைத் தொடர்ச்சியாக வீசி 21 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களைக் கைப்பற்றினார். இது அவரது அதிசிறந்த ஒரு நாள் பந்துவீச்சுப் பெறுதியாகும்.
அவரை விட ஹார்திக் பாண்டியா 2.2 ஓவர்களில் 3 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜஸ்ப்ரிட் பும்ரா 23 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
ஆட்டநாயகன்: மொஹமத் சிராஜ்.
இதேவேளை, இன்றைய போட்டியில் ஆட்டநாயகனாக தெரிவான இந்திய அணியின் மொஹமட் சிராஜ் தனக்கு கிடைத்த 5 ஆயிரம் அமெரிக்க டொலரை ஆர்.பிரேமதாஸ மைதானத்தின் ஊழியர்களுக்கு நன்கொடையாக வழங்கினார்.
இன்றைய போட்டியை பார்வையிடுவதற்காக இலங்கைக்கு வருகை தந்திருந்த தென்னிந்திய நடிகர் பிரபுதேவாவும் ஆர். பிரேமதாஸ மைதானத்திற்கு வருகை தந்திருந்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM