நாட்டாரியல் என்பது நாட்டுப்புற மக்களின் பழக்கவழக்கங்கள், பண்பாடுகள், விழுமியங்கள், நம்பிக்கைகள், இலக்கியங்கள், கதைகள், பாடல்கள், பழமொழிகள், சடங்குகள் போன்றவற்றை சேகரித்து வகைப்படுத்தி, தொகுத்து, ஆராய்ந்து, அவற்றை ஆவணப்படுத்தும் துறையாகும்.
மேலும் விரிவாக கூறுவதென்றால் மரபுகள், நம்பிக்கைகளை தாண்டி வாழும் கிராமத்து மக்களது விளிம்பு நிலை வாழ்வியலை அச்சொட்டாக எடுத்துக்காட்டுவதே நாட்டாரியல்.
நாட்டாரியல் மூலமாகத்தான் ஒவ்வொரு மனிதனும் தமது பரம்பரை அல்லது தமது மூதாதையர் கடந்து வந்த வரலாற்றை அறிய வேண்டியுள்ளது.
எமது உரிமைகள், எமது இருப்பு, எமது பண்டைய வரலாறுகள் பல அரசியல் பின்புலங்களினால் இன்று கேள்விக்குறியாகியுள்ள நிலையில், நாம் காலங்காலமாக பின்பற்றி வரும் எமது மரபுசார் அடையாளங்கள் மூலமாகத்தான் அவற்றை நிலைநிறுத்திக்கொள்ள முடியும்.
இன்று பல கோடி வசூலை சம்பாதிக்கும் சினிமா பாடல்கள் கூட நாட்டார் பாடல்களை ஊடறுத்துச் சென்றவைதான்.
இலங்கையை ஆண்ட இறுதி தமிழ் மன்னன் பண்டாரவன்னியன் என்று வரலாறு கூறுகிறது. எனினும் பண்டாரவன்னிய மன்னன் தமிழரா, சிங்களவரா என்ற கேள்விகளும் ஒரு சாராரால் முன்வைக்கப்பட்டிருக்கும் இந்த வேளையில் யாழ்ப்பாண மாவட்டத்தின் ஊர்காவற்துறை பிரதேசத்தில் தம்பாட்டி எனும் இடத்தில் காந்திஜி நாடக மன்ற குழுவினரால் காலங்காலமாக பண்டாரவன்னியன் கூத்து மேடை ஏற்றப்பட்டு வருகிறது.
எனவே, இவ்வாறான சில ஆதாரங்கள் மூலமாகத்தான் எமது வரலாறுக்கான ஆவணங்களை சேமித்து வைக்க வேண்டியுள்ளது.
'பாயும் புலி' பண்டாரவன்னியன் என்பவன் வன்னி நிலப்பரப்பிலே வெள்ளையர்களுக்கு எதிராக நின்று தமிழ் மண்ணை ஆண்ட இறுதி மன்னன்.
பண்டாரவன்னியன் ஒரு சிற்றரசன். இவனது முழு பெயர் குலசேகரம் வைரமுத்து பண்டாரவன்னியன்.
பண்டாரவன்னியன் முல்லைத்தீவிலிருந்து வற்றாப்பளை அம்மன் கோயில் வரையுள்ள 2000 சதுர மைல் நிலப்பரப்பை ஆட்சி செய்த தமிழ் மன்னன் ஆவான்.
அவன் அமைச்சர்களான தனது தம்பி கைலாய வன்னியனையும் தளபதியாக கடைசி சகோதரன் பெரிய மைனரையும் கொண்ட குழுவை அமைத்து அரசமைப்பை பேணி வந்தான். அவனுக்கு ஒரே ஒரு சகோதரி. அவளது பெயர் நல்லநாச்சாள்.
நல்லநாச்சாள் பார்ப்பதற்கு மிக அழகான பெண்ணாக காணப்பட்டாள். அவள் கலைகள் கற்பிக்கும் அவைப்புலவன் மீது காதல் கொண்டாள். அதே நேரத்தில் வன்னி நிலத்தை ஆண்டு வந்த குறுநில மன்னனான காக்கை வன்னியன் நல்லநாச்சாளை மணம் புரிய ஆசைப்பட்டான். அதற்காக பல முறை பண்டாரவன்னியனிடம் ஓலை அனுப்பியபோதும் அவன் அதற்கு சம்மதிக்கவில்லை.
ஒரு முறை நந்தவனத்தில் நல்லநாச்சாள் புலவரிடம் காதல் கொண்டிருப்பதை கண்ட காக்கைவன்னியன் புலவரிடம் சண்டைக்கு போக, புலவர் வாள் சண்டையிட்டு நையப் புடைத்து அனுப்பிவிட்டார்.
இந்த சம்பவத்தால் புலவர் அரச பரம்பரையில் இருந்து வந்தவர் என்பதை அறிந்து அவர்களின் காதலுக்கு பண்டாரவன்னியன் சம்மதம் தெரிவிக்கின்றான்.
வன்னியில் பண்டாரவன்னியன் திறை செலுத்த மறுத்த காரணத்தினால் வெள்ளையர்கள் படையெடுத்து வந்து வெற்றி காண முடியாமல் புறமுதுகு காட்டி பின்வாங்கினர். தனிப்பட்ட ரீதியாகவே பண்டாரவன்னியனோடு பகை கொண்ட காக்கைவன்னியன் வெள்ளையர்களுடன் கூட்டு சேர்ந்துகொள்கின்றான்.
பல முறை பண்டாரவன்னியனோடு போரிடச் சென்று வெள்ளையர்கள் தோல்வியையே சந்தித்தார்கள்.
இவ்வாறான சமயத்தில் பண்டாரவன்னியனை தந்திரத்தால் மட்டுமே வெல்ல முடியும் என காக்கைவன்னியன் வெள்ளையர்களுக்கு ஆலோசனை கூறுகின்றான்.
அந்தத் திட்டத்தின் ஓர் அங்கமாக தான் திருந்திவிட்டதாக பொய் கூறி பண்டாரவன்னியனோடு சேர்ந்துகொள்கின்றான். தம்பிமார்களான மந்திரியும் தளபதியும் காக்கைவன்னியனை தம்மோடு சேர்த்துக்கொள்ள வேண்டாம் என்று கூறியும், "மறப்போம் மன்னிப்போம்" என்ற உயர்கொள்கை கொண்ட பண்டாரவன்னியன் காக்கைவன்னியனை தன்னோடு இணைத்துக்கொள்கின்றான்.
பின்னர் வெள்ளையர்களோடு இணைந்து சதித்திட்டம் தீட்டி மன்னனை தனியாக கூட்டிச் சென்று, கண்டியில் ஓர் இடத்தில் நிறுத்துகிறான். அங்கேதான் பண்டாரவன்னியன் கொலை செய்யப்படுகிறான்.
இதுதான் பண்டாரவன்னியன் நாடகத்தின் கதை சுருக்கமாக கூறப்படுகிறது.
பண்டாரவன்னியன் கூத்தானது ஆரம்ப காலங்களில் கூத்தாக நிகழ்த்தப்பட்டாலும் தற்போதைய காலங்களில் இவை ஒரு மேடை நாடகமாகத்தான் ஆடப்படுகிறது.
பண்டாரவன்னியன் நாடகத்தில் வசனம், கதை, பாடல் என மூன்றுமே இணைந்து வரும். இவை எல்லாமே ஆரம்ப காலத்தில் இருந்தே மூதாதையர்களிடமிருந்து வாய்மொழி மரபாகத்தான் பேணப்பட்டு வருகிறது. இந்த நாடகத்தை ஆரம்பித்தவர் இவர்தான் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. இது மரபு வழியாக பேணப்பட்டு வரும் ஒரு நாட்டார் கலை ஊடகமாகும்.
நாடகமானது தென்மோடி, வடமோடி என்ற பிரிவுகளுக்குள் அடங்காமல் பிரத்தியேகமாக 'முல்லை மோடி' என்ற தனிப்பாணியில் அமையப்பெற்றதாக கூறப்படுகிறது.
தொலைக்காட்சி, தொலைபேசி, இணைய வசதிகள் எதுவுமே இல்லாத காலப்பகுதியில் மக்களை இணைக்கும் ஒரு கருவியாக கூத்துக்களே காணப்பட்டன என்றால் அது மிகையில்லை. அவ்வாறான காலகட்டத்தில் ஒவ்வொரு காட்சிகளுக்கும் திரை திறக்கப்பட்டு, மூடப்பட்டு நாடகங்கள் அரங்கேற்றப்பட்டன.
ஆனால் இன்றைய காலகட்டத்தில் மக்களை கவர்ந்துகொள்வதற்காக திரைகள் மூடப்படுவதில்லை.
மேலும் நேரம், காலத்துக்கு ஏற்பவும் நாடகம் சுருங்கி விரிவடையக்கூடியதாக அரங்கேற்றப்படுகிறது.
தம்பாட்டி எனும் இந்தப் பிரதேசத்தை பொருத்தவரையில், நாடகக் கலைஞர்கள் சிலர் தாம் மூதாதையர்களிடம் இருந்து கற்றுக்கொண்ட இந்த கலைகள் அழிந்துவிடக்கூடாது எனும் நல்லெண்ணத்தில் தாமாகவே முன்வந்து அடுத்த தலைமுறைக்கு இதனை பயிற்றுவிக்கின்றார்கள்.
இவர்கள் இந்த கூத்தை தமது பிரதேசத்துக்குள் மட்டும் நிகழ்த்தாமல் பல வெளி மாவட்டங்களுக்கும் சென்று நிகழ்த்தியுள்ளார்கள்.
இந்நாடக கலைஞர்கள் கலாபூஷணம், கலைக்குரிசில், யாழ். முத்து போன்ற கலைஞர்களுக்கான உயரிய விருதுகளையும் பெற்றுள்ளார்கள்.
நாட்டார் கலைகள் என்னதான் சமூகத்தில் பெறுமானம் மிக்க ஊடகமாக காணப்பட்டாலும் கூட அவற்றுக்கும் இருள் நிறைந்த பக்கங்களுண்டு.
சமூகத்தில் மக்கள் மத்தியில் நல்ல மதிப்பையும் வரவேற்பையும் பெரும் கலைகளாக கூத்து வடிவங்கள் காணப்படுகின்றன. நாட்டார் கலைஞர்களும் பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் தான் இந்த கூத்துக்களை அரங்கேற்றி வருகின்றார்கள். பண்டாரவன்னியன் கூத்தும் அன்றிலிருந்து இன்று வரை பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் தான் அரங்கேற்றப்பட்டு வருகிறது.
தமது மூத்த கலைஞர்கள் விட்டுச் சென்ற பாரம்பரிய சொத்து தங்களோடு அழிந்து போய்விடக்கூடாது என்பதற்காக அடுத்த தலைமுறைக்கும் பயிற்றுவிக்கும் உயரிய நோக்கில் இக்கூத்துக் கலைஞர்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள்.
எனவே, கூத்துக்களை வளர்க்கவும் அவற்றை பாதுகாக்கவும் இன்றைய இளைய சமுதாயம் முன்வர வேண்டும். எமது பாரம்பரிய அடையாள சின்னங்களை நாம்தான் பாதுகாப்பான முறையில் ஆவணப்படுத்தி வைக்க வேண்டும்.
எனவே, இதுபோன்ற கூத்துக்களையும் நாடகங்களையும் இனிமேலாவது இளைய சமுதாயத்தினர் கையிலெடுத்து, மேன்மை மிகுந்த கலைகளை அழியவிடாமல் பேணிக் காப்போம்!
உதயகுமார் ரதிகலா
ஊடக கற்கைகள் துறை
யாழ். பல்கலைக்கழகம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM