உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பிரித்தானியாவின் சனல்–4 தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணப்படம் இலங்கை அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றது. ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறும் நோக்கத்துடன் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இந்த ஆவணப்படத்தில் குற்றம்சாட்டப்பட்டிருக்கின்றது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றியை இலக்காக கொண்டு இந்த தாக்குதல் அரங்கேற்றப்பட்டுள்ளதாகவும் இதில் இராணுவப் புலனாய்வு பிரிவின் பிரதானி சுரேஷ் சலே உட்பட்டோர் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவநேசத்துரை சந்திரகாந்தனின் பேச்சாளராகவும் செயலாளராகவும் பணியாற்றியிருந்த அசாத் மெளலானா மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பிரதம பொலிஸ் பரிசோதகர் நிசாந்த டி சில்வா ஆகியோரின் வாக்குமூலங்களை அடிப்படையாகக் கொண்டே இந்தக்குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.
இந்த ஆவணப்படத்தை அடுத்து உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் சனல்–4 தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணப்படம் குறித்தும் சர்வதேச ரீதியில் விசாரணை நடத்தப்பட்டு உண்மை நிலை கண்டறியப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
கொழும்பு மறை மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை , எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் இராணுவத் தளபதியும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன ஆகியோர் உட்பட்ட பலரும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட்டு உண்மை நிலை கண்டறியப்படுவதுடன் சூத்திரதாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான பொதுஜன பெரமுனவும் சர்வதேச விசாரணை இடம்பெற வேண்டும் என்று தற்போது வலியுறுத்தியுள்ளது. பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் இந்த கருத்தை தெரிவித்திருக்கின்றார். இவ்வாறு சர்வதேச விசாரணைக்கான கோரிக்கைகள் மேலெழுந்திருந்த நிலையில் இதற்கு அரசாங்கமும் இணங்குவதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக் ஷ பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கத் தயார் என்று ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க கூறியுள்ள போதிலும் உரிய தரப்பினர் அதற்கு சாதகமான நிலைப்பாட்டை தெரிவிக்கவில்லை. குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஆளும் தரப்பினரும் எதிர்தரப்பினரும் முரண்பட்டுக்கொண்டால் ஒருபோதும் உண்மையை கண்டுபிடிக்க முடியாது. ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். குண்டுத்தாக்குதலில் நாட்டு மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று நீதியமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
இவ்வாறு சர்வதேச விசாரணைக்கான கோரிக்கைக்கு பல தரப்பினரும் தற்போது வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் சனல் –4 தொலைக்காட்சி ஆவணப்படத்தில் வெளியிடப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் தலைமையில் குழுவொன்றினை நியமிப்பதற்கும் முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா பதவி விலகும் போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தெரிவித்த கருத்து குறித்து விசாரிப்பதற்கு பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை அமைப்பதற்கும் ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்திருந்தது
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென்று சகலரும் தற்போது வலியுறுத்திவருகின்றனர். இதற்கான ஒத்துழைப்புக்களை வழங்கத் தயார் என்றும் கூறி வருகின்றனர். ஆனாலும் சர்வதேச விசாரணையை நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக உள்நாட்டில் இரு குழுக்களை அமைத்து விசாரித்து அதன் அறிக்கைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு திட்டமிட்டிருக்கின்றது. இதற்கு இணங்க குழு ஒன்றையும் ஜனாதிபதி நியமித்துள்ளார்.
இந்த நிலையில் பாராளுமன்றத்தில் நியமிக்கப்படும் தெரிவுக்குழு , ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள விசாரணைக் குழு என்பன தொடர்பில் நாட்டு மக்களுக்கு நம்பிக்கை கிடையாது. உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணையே அவசியமானது. ஏனெனில் நாட்டின் பாதுகாப்பு மற்றும் அரசியல் கட்டமைப்பு மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்று பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்திருக்கின்றார்.
இந்த விடயம் தொடர்பில் சுதந்திர மக்கள் சபையின் முக்கியஸ்தரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீ.எல். பீரிஸ் மேலும் கருத்து தெரிவிக்கையில்,உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் சனல் –4 தொலைக்காட்சியில் வெளியிட்டுள்ள காணொளி தற்சமயம் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் பாரிய சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. காணொளி வெளியாகியுள்ள காரணத்தால் அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை உண்மை என்று ஏற்றுக்கொள்ளவும் முடியாது. விசாரணை செய்யாமல் பொய் என்று தட்டிக்கழிக்கவும் முடியாது. எனவே சர்வதேச விசாரணை இந்த விடயத்தில் நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
ஆட்சிக்கு வந்து மூன்று மாத காலத்துக்குள் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் முக்கிய சூத்திரதாரியை சட்டத்தின் முன் நிறுத்துவதாக பொதுஜன பெரமுன நாட்டு மக்களுக்கு குறிப்பாக கத்தோலிக்க சமூகத்துக்கு வாக்குறுதி வழங்கியது. ஆட்சிக்கு வந்தவுடன் அந்த வாக்குறுதி மறக்கப்பட்டது என்றும் பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் ஜீ.எல். பீரிஸின் இந்தக்கருத்துக்கள் உள்ளூர் விசாரணையில் நாட்டு மக்களுக்கு நம்பிக்கை இல்லை. இதனால் சர்வதேச விசாரணையே இறுதியானது என்பதை எடுத்துக்கூறுவதாகவே அமைந்திருக்கின்றது.
முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா குமாரதுங்க, மஹிந்த ராஜபக் ஷ ஆகியோரின் ஆட்சிகாலத்தில் பல்வேறு முக்கிய அமைச்சுப் பொறுப்புக்களை ஜீ.எல். பீரிஸ் வகித்திருந்தார். 1994ஆம் ஆண்டு சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாக பதவியேற்றதையடுத்து புதிய ஆட்சியில் அரசியல் யாப்பு விவகார அமைச்சராக பீரிஸ் நியமிக்கப்பட்டார். சமாதான தேவதையாக அன்று ஆட்சிக்கு வந்த சந்திரிக்கா குமாரதுங்க இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படவேண்டும் என்ற எண்ணத்தில் அரசியல் யாப்பு விவகார அமைச்சராக பீரிஸை நியமித்திருந்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ ஆட்சி காலத்தில் வெளிவிவகார அமைச்சராகவும் பீரிஸ் கடமையாற்றினார். இவ்வாறு வெளிவிவகார அமைச்சராக பணியாற்றியபோது ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கையின் பொறுப்புக்கூறல் விவகாரம் தொடர்பில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட போது அதற்கு எதிராக பீரிஸ் செயற்பட்டார். தமிழ் மக்களினால் சர்வதேச விசாரணை கோரிக்கை முன்வைக்கப்பட்ட போது அது நாட்டுக்கு செய்யும் துரோகம் என்ற விமர்சித்தார்.
தமிழ் மக்களின் சர்வதேச விசாரணை கோரிக்கைக்கு எதிராக அவர் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டார். நாட்டை காட்டிக்கொடுக்கும் செயற்பாட்டில் தமிழ் தலைவர்கள் ஈடுபடுவதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார். இவரைப்போன்றே தற்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு சர்வதேச விசாரணை கோரும் பல அரசியல் தலைவர்களும் கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.
இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக்குற்றங்கள் தொடர்பில் உள்ளக விசாரணையில் நீதி கிடைக்காததை அடுத்தே நம்பிக்கை இழந்த தமிழ் மக்கள் சர்வதேச விசாரணை கோரிக்கையை முன்வைத்திருந்தனர். ஐ.நா. மனித உரிமை பேரவை மூலமாகவேனும் தமக்கு நீதி கிடைக்கும் என்று எதிர்பார்த்தனர். அதுவும் ஏமாற்றத்தில் முடிவடைந்ததையடுத்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையை நிறுத்துமாறு தமிழ் மக்கள் கோரிவருகின்றனர்.
அன்று சர்வதேச விசாரணை கோரிக்கையை துரோகம் என்று கூறியவர்கள் இன்று உயிர்த்த ஞாயிறு விவகாரத்தில் சர்வதேச விசாரணை வேண்டுமென்று கோரிவருகின்றனர். உண்மையிலேயே உயிர்த்த ஞாயிறு விவகாரத்தில் உண்மையை வெளிக்கொண்டு வருவதற்கு சர்வதேச விசாரணை அவசியமானது. அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
அதேபோன்றே இறுதி யுத்தத்தின் போதான மீறல்கள் தொடர்பில் விசாரிப்பதற்கும் சர்வதேச விசாரணை அவசியமானது. இதனை அன்று துரோகம் என்று விமர்சித்த தலைவர்கள் புரிந்துகொள்ளவேண்டும். தமிழ் மக்களின் சர்வதேச விசாரணை கோரிக்கை யதார்த்தபூர்வமானது என்பதை இனியாவது இவர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும் என்பதை சுட்டிக்காட்ட விரும்பு கின்றோம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM