ஆசிய கிண்ணத்துக்கு குறிவைத்து இலங்கை - இந்திய அணிகள் இன்று மோதுகின்றன

Published By: Vishnu

17 Sep, 2023 | 02:16 PM
image

(நெவில் அன்தனி)

சுப்பர் 4 சுற்றில் மாறுபாடான பெறுபேறுகளை ஈட்டிய இலங்கையும் இந்தியாவும் கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை (17) நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் ஆசிய கிண்ணத்தை சுவீகரிக்கும் குறிக்கோளுடன் ஒன்றையொன்று எதிர்த்தாடவுள்ளன.

சுப்பர் 4 சுற்றில் பங்களாதேஷை இலகுவாகவும் பாகிஸ்தானை பரபரப்புக்கு மத்தியிலும் வெற்றிகொண்ட இலங்கை, கடைசி சுப்பர் 4 சுற்றில் இந்தியாவிடம் தோல்வி அடைந்திருந்தது.

மறுபக்கத்தில் பாகிஸ்தானையும் இலங்கையையும் மிக இலகுவாக வெற்றிகொண்ட இந்தியா, கடைசிவரை பரபரப்பை ஏற்படுத்திய பங்களாதேஷுடனான போட்டியில் ஒரு பந்து மீதமிருக்க தோல்வி அடைந்தது.

இந்த பெறுபேறுகளை நோக்கும்போது இரண்டு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல என்பது தெளிவாகிறது.

எனினும் இரண்டு அணிகளும் சம்பந்தப்பட்ட போட்டியில் ஈட்டிய வெற்றி இந்தியாவுக்கு நம்பிக்கையைக் கொடுத்துள்ள அதேவேளை தோல்வி அடைந்த இலங்கைக்கு  சிறு அழுத்தத்தை எதிர்கொள்ளவுள்ளது.

கிரிக்கெட் உலகில் மிகவும் உன்னதம் வாய்ந்ததும் உயரியதுமான உலகக் கிண்ணப் போட்டி நடைபெறவுள்ள நிலையில் ஆசிய கிண்ண இறுதிப் போட்டி இரண்டு அணிகளுக்கும் ஒத்திகை ஆட்டமாக அமையும் என்பது நிச்சயம்.

எனவே, இன்றைய இறுதிப் போட்டி இரண்டு அணிகளினதும் இரசிகர்களை பரபரப்பின் உச்சத்திற்கு இட்டுச்செல்லும் என நம்பப்படுகிறது.

எவ்வாறாயினும் சீரற்ற காலநிலை ஆட்டத்தை பாதிக்கச் செய்துவிடுமோ என்ற அச்சமும் இரசிகர்கள் மத்தியில் இருக்கத்தான் செய்கிறது.

இது இவ்வாறிருக்க, இரண்டு அணிகளினதும் துடுப்பாட்ட வீரர்களை ஒப்பிடும்போது  இந்தியா  சற்று முன்னிலையில் இருப்பதாக தெரிகிறது.

விராத் கோஹ்லி, கே.எல். ராகுல், ஷுப்மான் கில் ஆகியோர் சதங்களை விளாசியுள்ளதுடன் ரோஹித் ஷர்மா, இஷான் கிஷான், ஹார்திக் பாண்டியா ஆகியோர் அரைச் சதங்களைக் குவித்துள்ளனர்.

இலங்கை அணியைப் பொறுத்தமட்டில் குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, சரித் அசலன்க ஆகிய மூவரே அரைச் சதங்களைப் பெற்றுள்ளனர். ஏனையவர்களில் தனஞ்சய டி சில்வா, துனித் வெல்லாலகே, பெத்தும் நிஸ்ஸன்க ஆகியோர் 40 ஓட்டங்களைக் கடந்த போதிலும் அந்த எண்ணிக்கையை பெரிய எண்ணிக்கைகளாக ஆக்குவதில் தவறினர்.

பந்துவீச்சைப் போறுத்த மட்டில் இலங்கை சற்று முன்னிலையில் இருக்கிறது.

மதீஷ பத்திரண (11 விக்கெட்கள்), துனித் வெல்லாலகே (8) ஆகிய இருவரும் பந்துவீச்சில் திறமையை வெளிப்படுத்தியுள்ளனர்.

மஹீஷ் தீக்ஷனவும் 10 விக்கெட்களுடன் சிறப்பாக செயற்பட்ட போதிலும் உபாதை காரணமாக இறுதிப் போட்டியில் விளையாடாதது இலங்கைக்கு பெரும் ஏமாற்றத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்திவிட்டுள்ளது.

தீக்னவுக்குப் பதிலாக சகலதுறை வீரர் சஹான் ஆராச்சிகே இலங்கை குழாத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

இந்திய பந்துவீச்சில் குல்தீப் யாதவ் (9), ரவிந்த்ர ஜடேஜா (6), ஷர்துல் தாகூர் (5) ஆகியோரே 5 விக்கெட்கள் அல்லது அதற்கு மேல் கைப்பற்றியுள்ளனர்.

இரண்டு போட்டிகளில் விளையாடிய சுழல்பந்துவீச்சு சகலதுறை வீரர் அக்சார் பட்டேல் பங்களாதேஷுடனான போட்டியில் காயமடைந்ததால் இறுதிப் போட்டியில் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இறுதிப் போட்டியில் எந்த அணி சரியான வியூகங்களையும் திட்டங்களையும் வகுத்து மைதானத்தில் அவற்றைப் பின்பற்றி விளையாடுகின்றதோ அந்த அணிக்கே வெற்றி கிடைக்கும்.

கடந்த வருடம் நடைபெற்ற இருபது 20 ஆசிய கிண்ணப் போட்டியில் ஆரம்பப் போட்டியில் தோல்வி அடைந்த அதன் பின்னர் தொடர்ச்சியாக வெற்றிபெற்று சம்பியனான இலங்கை, இந்த வருடம் 50 ஓவர் கிரிக்கெட்டில் ஆசிய சம்பியனாக முயற்சிக்கவுள்ளது.

அதேவேளை, கடைசியாக 2018இல் ஆசிய சம்பியனான இந்தியா, தனது சொந்த மண்ணில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணப் போட்டியை ஆசிய சம்பியன் என்ற பட்டத்துடன் எதிர்கொள்ள முயற்சிக்கும் என்பது உறுதி.

அணிகள்

இலங்கை: பெத்தும் நிஸ்ஸன்க, குசல் பெரேரா, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, சரித் அசலன்க, தனஞ்சய டி சில்வா, தசுன் ஷானக்க (தலைவர்), துனித் வெல்லாலகே, சஹான் ஆராச்சிகே அல்லது துஷான் ஹேமன்த, ப்ரமோத் மதுஷான், மதீஷ பத்திரண.

இந்தியா: ரோஹித் ஷர்மா (தலைவர்), ஷுப்மான் கில், விராத் கோஹ்லி, கே.எல். ராகுல், இஷான் கிஷான், ஹார்திக் பாண்டியா, ரவிந்த்ர ஜடேஜா, வொஷிங்டன் சுந்தர் அல்லது ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், மொஹமத் சிராஜ், ஜஸ்ப்ரிட் பும்ரா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெங்களூருவின் தொடர் வெற்றிகளுக்கு முடிவுகட்டிய ராஜஸ்தான்...

2024-05-23 00:33:02
news-image

தம்புள்ள தண்டர்ஸின் உரிமையாளரின் உரிமைத்துவம் முடிவுறுத்தப்பட்டுள்ளது

2024-05-22 23:11:12
news-image

அவுஸ்திரேலியாவின் பன்முக கலாசார தூதுவர்களில் ஒருவராக...

2024-05-22 20:34:29
news-image

தொடர் தோல்விகளுடன் ராஜஸ்தானும் தொடர் வெற்றிகளுடன்...

2024-05-22 15:55:38
news-image

லங்கா பிறீமியர் லீக் அணி உரிமையாளர்...

2024-05-22 15:14:04
news-image

ஹைதராபாத்தை 8 விக்கெட்களால் வீழ்த்தி இறுதிப்...

2024-05-22 01:15:35
news-image

LPL 2024 அதிக விலைக்கு ஏலம்...

2024-05-21 23:34:51
news-image

ஆசிய தொடர் ஓட்ட சம்பியன்ஷிப்: ஆண்களுக்கான...

2024-05-21 22:09:27
news-image

ஐ.பி.எல். இறுதிப் போட்டிக்கு தகுதிபெறும் முதல்...

2024-05-21 17:27:35
news-image

உலக பரா F44 பிரிவு ஈட்டி...

2024-05-21 16:20:15
news-image

ஆசிய கலப்பு இன 4 x...

2024-05-20 22:09:57
news-image

உலக பரா மெய்வல்லுநர் போட்டியில் இலங்கையின்...

2024-05-20 19:04:00