சதீஷ் கிருஷ்ணபிள்ளை
அனர்த்தங்களை நமது வசதிக்கேற்ப வகைப்படுத்திக் கொள்கிறோம். இயற்கை அனர்த்தம், மனிதனால் உருவாக்கப்பட்ட அனர்த்தம் என்ற வகைப்படுத்தல் பொதுவானது.
மனிதப் பேரவலத்திற்கு வித்திடக்கூடிய இயற்கை அனர்த்தங்கள் நிகழ்கின்றன. எட்டு நாட்களுக்கு முன்னர் மொரோக்கோவில் நிகழ்ந்த பூகம்பத்தைப போல.
கடந்த வாரம் மத்திய தரைக் கடலில் உருவாகி, லிபியாவின் கிழக்குப் பிராந்தியத்தைத் தாக்கிய டேனியல் சூறாவளியும் இதுபோன்ற இயற்கை அனர்த்தம் தான்.
இந்தத் தேசத்தை வெள்ளக்காடாக மாற்றி, ஆயிரக்கணக்கில் உயிர்களைப் பலிகொண்ட வெள்ளப்பெருக்கை வெறும் இயற்கை அனர்த்தம் என்றோ, மனிதனால் உருவாக்கப்பட்ட அனர்த்தம் என்றோ வகைப்படுத்தி விடுவது இலகுவானது அல்ல.
நீரின் ஊழித்தாண்டவம் போல் எங்கும் வெள்ளக்காடு. பல்லாயிரக்கணக்கான மரணங்கள். இருந்த சுவடே தெரியாமல் சிதைந்து கிடக்கும் கட்டடங்கள். நகரங்களே கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் அறிவித்துள்ளன.
கிழக்கில் இருக்கும் டெர்னா என்ற துறைமுக நகரில் அதிக பாதிப்புகள். இந்நகரின் கால்வாசிப் பகுதி காணாமல் போயிருப்பதாக நகரவாசிகள் ஆதங்கப்படுகிறார்கள்.
பெரும் சுனாமியொன்று ஏற்படுத்தியிருக்கக்கூடிய தாக்கத்தை விடவும் மோசமான பேரழிவு. இது வெறுமனே இயற்கை அனர்த்தமா? ஏனித்தனை பாதிப்புக்கள் என்று கேட்டால், இரு நீர்த்தேக்கங்களை காரணம் காட்டுகிறார்கள்.
இந்த நீர்த்தேக்கங்கள் தகர்ந்ததால், மூன்று கோடி கனமீற்றர் நீர் நகருக்குள் பெருவெள்ளமாக பாய்ந்து, பேரழிவை ஏற்படுத்தியதாக அதிகாரிகள் கூறுகிறார்கள்.
நீர்த்தேக்கங்களை முறையாக கவனித்திருந்தால், அவை தகர்ந்திருக்க மாட்டாதென்ற விளக்கம் வேறு. இங்கு தான் அரசியல் தொடங்குகிறது.
டெர்னா நகரின் நீர்த்தேக்கங்களைப் பராமரிப்பது யார்? அற்பப்புழுவைப் போல கொன்று புதைக்கப்பட்ட முவம்மர் கடாபியின் ஆவியா?
'ஓழிந்தார், கடாபி. இனிமேல் லிபியாவிற்கு பொற்காலம் என்ற பொய்மையில் கட்டமைக்கப்பட்டு, ஐக்கிய நாடுகளின் ஆதரவுடன் அமைக்கப்பட்ட 'தேசிய ஐக்கிய அரசாங்கமா'?
அல்லது, இந்த தேசிய அரசாங்கத்தைப் பகைத்துக் கொண்டு பிரதிநிதிகள் சபை என்ற பெயரில் கூட்டம் நடத்திக் கொண்டு, கிழக்கில் இருந்து ஆட்சி செய்ய முனையும் தரப்பா?
கடாபியின் ஆட்சி காலத்தில் உயர்ந்த வாழ்க்கைத்தரம்.. இலவசக் கல்வி. இலவச சுகாதாரம் என எல்லாமுமே இருந்தன. மக்கள் சந்தோஷமாக வாழ்ந்தார்கள்.
அவரது வீழ்ச்சியைத் தொடர்ந்து, எல்லாமே சின்னாபின்னமாகின. ஆட்சி நிர்வாகத்திற்குள் ஆயிரம் சிக்கல்கள். ஆதிக்கம் செலுத்த முனையும் ஆயுதக் குழுக்களுக்கு இடையிலான மோதல்கள். இவை சிவில் யுத்தமாக பரிணமித்தன.
இன்று லிபியாவின் மேற்கில் தேசிய ஐக்கிய அரசாங்கத்தின் ஆட்சியென்றால், கிழக்கின் பெரும்பாகத்தை பிரதிநிதிகள் சபை தனது கட்டுபாட்டுக்குள் வைத்திருக்கிறது.
இந்தத் தரப்புக்களிடம் தான் அதிகாரம் உள்ளதா என்று கேட்டால், அதுவும் இல்லை என்பார்கள்.
ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவுடன் இயங்கும் லிபிய தேசிய இராணுவம் என்ற ஆயுதக்குழுவின் தலைவர் ஜெனரல் கலீபா ஹப்தார் என்பவரிடமே அதிகாரம் உள்ளதாக கூறுவார்கள்.
பகைமை பூண்ட இரு அரசுகளுக்கு ஆதரவு வழங்கும் ஆயுதக்குழுக்களுக்கு இடையிலான ஆயுதமோதல் பெரும் சிக்கலான நிலையை ஏற்படுத்தியது.
ஆட்கள் ஆயிரக்கணக்கில் இடம்பெயர்ந்தார்கள். பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. பொருள் விலை உச்சத்தைத் தொட்டது.
இதற்குள் ஆட்சி நிர்வாகத்தை எப்படி ஒழுங்காகக் கவனிப்பது?
கடாபியின் ஆட்சி காலத்தில் டேனியல் புயல் தாக்கியிருந்தால், இத்தனை பாதிப்புக்கள் ஏற்பட்டிருக்குமா?
ஒரு உத்தரவில் அத்தனை காரியங்களும் நடக்கக்கூடிய கட்டமைப்பை அல்லவா, கடாபி பேணியிருந்தார்?
ஒரு சின்னாபின்னமான தேசத்தின் நிலப்பரப்பை தமது வசமாக்கி அரசியல் சண்டை செய்கின்ற காரியமெல்லாம் பேரனர்த்த சமயங்களில் வேலைக்கு ஆகப்போவதில்லை.
இத்தகைய அனர்த்தங்களை மிகவும் துரிதமாக சமாளிக்க வேண்டும். சகல தரப்புக்களையும் ஒருங்கிணைத்துக் கொண்டு, ஒரு திட்டத்தின் அடிப்படையில் செயற்பட வேண்டும்.
இரு அரசுகளாக பிரிந்து கொண்டு அதிகாரப் போட்டிக்குள் நீயா நானா என்று சண்டை பிடிப்பதும், இது உன் நிர்வாகத்திற்கு உட்பட்ட பகுதி என்பதால் நான் கவலைப்பட அவசியமில்லை என நிராகரிப்பதும் சரிவராது.
டேனியல் சூறாவளியைப் பொறுத்தவரையில், இதுவே நடந்தது.
டேனியல் புயல் மையங்கொண்ட சமயமே சுதாரித்துக் கொண்டு, சகல மக்களையும் பாதுகாக்க கூட்டு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
ஆனால், ஒவ்வொரு அரசுகளும் தனித்தனியாக முற்பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆயத்தப்படுத்தின. அவையும் முழுமைபெறாத நடவடிக்கைகள்.
சமாளித்திருக்கக்கூடிய நிலைமை கட்டுக்கடங்காமல் போவதற்கு இவையே காரணங்கள் என்பதை விளங்கிக் கொள்வது எளிது.
ஆனால், கடாபியை கொன்றொழித்த மேலைத்தேய நாடுகள் விழுந்தும் மீசையில் மண் ஒட்டவிலலை என்று பாசாங்கு காட்டி வருகின்றன.
லிபிய வெள்ளப்பெருக்கில் ஆகக்கூடுதலான பேரழிவு டெர்னா துறைமுக நகரில் நிகழ்நதது. இந்த நகரம் பற்றி மேலைத்தேய ஊடகங்கள் புதுக்கதையைக் கூறி வருகின்றன.
கடாபியின் ஆட்சியில் அவரது அடாவடித்தனங்களை ஆட்சேபித்த மக்கள் இருந்தார்கள். அந்த மக்கள் கூட்டத்தில் டெர்னா நகரைச் சேர்ந்தவர்கள் முதன்மையானவர்கள் என்பது மேற்குலக சக்திகளின் வாதம்.
தமக்கு அடிபணிய விரும்பாத டெர்னா மக்களை கடாபி பழிவாங்க நினைத்தார். அதற்காக, அந்நகரைப் புறக்கணித்தார் என ஊடகங்கள் வாதிடுகின்றன.
டெர்னாவின் நீர்த்தேக்கங்கள் கவனிக்கப்படவில்லை. அங்கு உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுததப்படவில்லை. இங்கு முறையான வைத்தியசாலைகள் கூட இல்லை. டேனியல் புயல் தாக்கி வெள்ளம் ஏற்பட்டபோது, காயமடைந்தவர்களை முறையாக பராமரிக்கக்கூடிய வசதிகளும் இருக்கவிலலையென மேலைத்தேசம் குற்றம் சுமத்துகிறது.
இது எத்தனை அபாண்டமான குற்றச்சாட்டு?
கடாபி ஒழுங்காக ஆட்சி செய்யவில்லை என்பதற்காகத் தானே, நேட்டாவின் தலைமையில் அணிதிரண்ட மேலைத்தேய சக்திகள் அவரை ஆட்சிபீடத்தில் இருந்து தூக்கியெறிந்தன.
மக்கள் அபிமானம் வென்ற தலைவரை வீதியில் ஓடச் செய்து மிகவும் அவமானப்படுத்தி கொன்றன.
கடாபியை ஒழித்து விட்டால், அங்கு ஜனநாயகத்தை மலரச் செய்திருக்க வேண்டாமா? அவரது ஆட்சியை விடவும் சிறப்பான ஆட்சி நிர்வாகத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டாமா? உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய நீர்த்தேக்க அணைக்கட்டுகளைத் திருத்தியிருக்க வேண்டமா?
கடாபி கொல்லப்பட்டு 12 வருடங்கள் ஆகின்றன. அந்த இடைவெளிக்குள் அராஜகத்தைப் புகுத்தி, பேரழிவிற்குக் காரணமான சக்திகளைப் பொறுத்தவரையில், இது இயற்கை அனர்த்தம் அல்லது மனிதன் உருவாக்கிய அனர்ததம்.
இத்தகைய முக்காடிட்ட வார்த்தைகளுக்குள் அராஜகங்களை மறைக்கும் அரசியலை லிபிய மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
தற்போதைய இக்கட்டான நிலையில் இருந்து மீண்டெழுந்து உயிர் பிழைத்திருக்கவேனும பிரித்தாளும் தந்திரங்களை புறந்தள்ள வேண்டும்.
வெளியில் இருந்து கிடைக்கக்கூடிய உதவிகள், உரியவர்களை சென்று சேர கருத்தொருமித்த பொறிமுறையை உருவாக்கிக் கொள்வது அவசியம்.
சில சமயங்களில், புத்தகங்கள் போதிக்க முடியாத பாடங்களை பேரனர்த்தங்கள் கற்றுக் கொடுக்கின்றன.
அந்த அனுபவப் பாடங்களைக் கற்றுக் கொண்டு, சாதுர்யமாக செயற்பட்டால், தேசத்தையும் கட்டியெழுப்ப முடியும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM