கொரோனாவைத் தடுப்பதற்கு ஊரடங்கு சிதைந்துபோன அடிப்படை உரிமைகள்

Published By: Vishnu

17 Sep, 2023 | 11:47 AM
image

ஆர்.ராம்

எனது குழந்தைக்கான பால்மா தீர்ந்துவிட்டது. குழந்தையின் தேவையைப் பூர்த்தி செய்வதே ஒரு தந்தையின் முதற்கடமையாக உணர்ந்தேன். ஊரடங்கைப் பொருட்படுத்தவில்லை. அருகிலிருந்த மருந்து விற்பனை நிலையத்திற்குச் சென்று வரலாமென வீட்டிருந்து வெளியேறி கால்நடையாக பிரதான வீதிக்கு வந்தேன்.

சொற்ப நேரத்தில் நான் எங்கு செல்கின்றேன் என்ற விபரங்களை கோரிய பொலிஸாருக்கு தெளிவு படுத்திய போதும், எந்த இரக்கமுமின்றி கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டேன். அங்கு ஒருநாளை முழுமையாக கழித்ததன் பின்னர் தனிமைப்படுத்தல் மையத்திற்கு கட்டாயத்தின் பேரில் அனுப்பி வைக்கப்பட்டேன்.

நான் வீட்டிலிருந்து வெளியே வந்தபோது முககவசம், மற்றும் கையுறை கூட அணிந்திருந்தும் 14நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டேன். அந்த நாட்களில் எனது மனைவியும் குழந்தையும் பெரும் சிரமங்களை அனுபவித்தனர்என்று குரல் ததும்பக் குறிப்பிட்டார் மாபொலவில் வசிக்கும் 37வயதான மொஹமட் ரியாஸ் என்ற குடும்பத்தலைவர்.

மொஹமட் ரியாஸைப் போன்றே கம்பஹாவைச்சேர்ந்த கசூன் வீரதுங்கவும், வவுனியாவைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை குணசேரகமும் வெவ்வேறு காரணங்களுக்காக இதேபோன்ற வாழ்நாளில் மறக்கமுடியாத எதிர்மறையான அனுபவங்களைக் கொண்டிருக்கின்றனர்.

29வயதாகும் கசூன் வீரதுங்க, “எனது மூத்த சகோதரர் இத்தாலியில் உள்ளார், அவருடைய மனைவியும், குழந்தைகளும், கிரிபத்கொடவில் தனியாக இருந்தனர். ஊரடங்கு அறிவிப்பால் அவர்கள் தனியாக சிரமப்படுவார்கள் என்பதற்காக அவர்களை எமது பெற்றோரின் இல்லத்திற்கு அழைத்து வருவதற்காக எனக்குச் சொந்தமான காரில் சென்றிருந்தேன்.

எனினும், ஊரடங்கு நேரம் என்பதால் நான் தடுத்து நிறுத்தப்பட்டு பின்னர் வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டேன். 14நாட்கள் கழித்தே மீள வீடு செல்வதற்கு அனுமதிக்கப்பட்டதோடு, பெரும் சிரமங்களுக்கு மத்தியில் வாகனத்தையும் மீட்டுக்கொண்டேன்என்கிறார்.

நான், தனியார் பல்பொருள் அங்காடியொன்றை வைத்திருக்கின்றேன். திடிரென்று ஊரடங்கு அறிவித்தல் வெளியிடப்பட்டது. இதனால் எனது அங்காடியில் காணப்பட்ட பழுதடையக்கூடிய பொருட்களை விற்பனை செய்ய முடியாது விட்டாலும் வீட்டுப்பாவனைக்காக பயன்படுத்தலாம் என்று தீர்மானித்தேன்.

அவற்றை எடுத்து வருவதற்காக எனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டேன். பிரதான வீதியில் நின்றிருந்த பொலிஸார் என்னை தடுத்து நிறுத்தி பின்னர் தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பினார்கள். இதனால், எனது குடும்பத்தினரும், வயதான தயாரும் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுக்க வேண்டியிருந்துஎன்று தனது கடினமான அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார் 47வயதான கணபதிப்பிள்ளை குணசேரகம்.

இவர்கள் மட்டுமல்ல, இலங்கையில் கொரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதன் பெயரால் அவசரகால ஒழுங்கு விதிகளின் கீழ் அமுலாக்கப்பட்ட ஊடரங்கு சட்டத்தால் இனமத, பேதமின்றி பல தரப்பினரும் கசப்பான அனுபவங்களைக் கொண்டிருக்கின்றார்கள்.

தொற்று நோய் விஞ்ஞானப்பிரிவின் தகவல்களுக்கு அமைவாக, 2020ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் திகதி நாட்டில் முதலாவது கொரோனா தொற்றுக்கு உள்ளானவர் இனங்காணப்பட்டார். இதனையடுத்து தொற்றாளர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்தது.

2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் திகதி அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஊடகப் பிரிவினால் அவசரகால ஒழுங்கு விதிகளின் கீழ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

தொடர்ந்து, பிளேக், கொலரா, மஞ்சள் காய்ச்சல், டைபஸ், சின்னம்மை போன்ற கொடிய நோய்கள் தொற்றிப் பரவுவதைத் தடுப்பதற்காக 1897 ஆம் ஆண்டு 3ஆம் இலக்க நோய்த்தடுப்புச் சட்ட ஏற்பாடு தொற்றொதுக்கச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது.

இந்தச்சட்டம் 1925, 1933, 1946 ஆகிய நாடு சுதந்திரமடைவதற்கு முந்திய ஆண்டுகளில் தேவைக்கேற்ப திருத்தங்களுக்கு உள்ளாக்கி ஆளுனரின் பிரகடனத்துக்கமைய பயன்படுத்தப்பட்டதோடு, நாடு சுதந்திரமடைந்த பின்னர் 1960ஆம் ஆண்டு மாற்றத்திற்கு உள்ளாகியது.

இந்நிலையில் குறித்த சட்டம், சுகாதாரத்துறை அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சியினால் 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2167/18 என்ற இலக்கம் கொண்ட விசேட வர்த்தமானியில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றைத் தடுப்பதற்காகப் பயன்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

நோய்த் தொற்றொதுக்கச் சட்டம் அமுலுக்கு வந்ததையடுத்து, அதனை நடைமுறைப்படுத்துவதற்கான அதிகாரமளிக்கப்பட்ட தரப்பாக பொலிஸார் காணப்பட்டமையால், கொரோனா தடுப்புக்காக விதிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் மற்றும் நோய் தடுப்பு கட்டளைச் சட்டத்தின் விதிகள் மற்றும் ஒழுங்குவிதிமுறைகளை மீறுவதைத் தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் 2020 மார்ச் 20ஆம் திகதி மாலை ஆறு மணி முதல் 'பொலிஸ் ஊரடங்குச் சட்டம்' அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் ஊடக அறிக்கையின் மூலம் அறிவித்தல் விடுத்தார்.

இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட அடுத்த 25நாட்களில் அதாவது 2020 ஏப்ரல் 14ஆம் திகதி காலை 6மணி வரையிலான காலத்தில்ஊரடங்கு சட்டத்தினை மீறியமைக்காக 26 ஆயிரத்து 637 பேர் கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள்கள், கார்கள், முச்சக்கர வண்டி மற்றும் சொகுசு வாகனங்கள் உள்ளிட்ட 6,799 வாகனங்கள் கைப்பற்றப்பட்டதாக, 2020ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் திகதி பொலிஸ் தலைமையகம் வெளியிட்டிருந்த ஊடக அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

அதுமட்டுமன்றி, கொரோனா பரவலின் முதலாவது அலையான, 2020 ஜனவரி 27 முதல், ஒக்டோபர் 3ஆம் திகதி வரையிலும், இரண்டாவது அலையான, 2020 ஒக்டோபர் 4ஆம் திகதி முதல் 2021 ஏப்ரல் 14 ஆம் திகதி வரையிலும் ஊரடங்குச் சட்டத்தை மீறியதற்காக கைது செய்யப்பட்ட 33,155 பேரின் மீது வழக்குத் தொடர்வதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இதனைவிடவும், முறையான அதிகாரி மற்றும் நோய்க்குட்பட்ட இடப்பிரதேசம் என்பவற்றை வரைவிலக்கணப்படுத்துவதற்காக 2020 மார்ச் 25 திகதியிடப்பட்ட 2168/6ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி, நடமாட்டத்தின் மீதான மட்டுப்பாடும், பொது இடங்களில் பின்பற்றப்படவேண்டிய வழிகாட்டிக்குறிப்புகளையும் உள்ளடக்கிய வியாழக்கிழமை, 2020 செப்டெம்பர் 15 திகதியிடப்பட்ட 2197/25ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி ஆகியனவும் வெளியிடப்பட்டன.

இந்த வர்த்தமானி அறிவித்தல்கள் ஊடாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற அதிகாரங்களுக்கு அமைவாக, 2020 செப்டெம்பர் 30 முதல் 2021 மே 10 வரையிலான காலப்பகுதியில் முகக்கவசம் அணியத் தவறியமை மற்றும் சமூக இடைவெளியைப் பேணாமை போன்ற தனிமைப்படுத்தல் ஒழுங்குவிதிமுறைகளை பின்பற்றாததற்காகக் மொத்தம் 7,316 பேர் கைது செய்யப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப்பிரிவின் அறிக்கை குறிப்பிட்டிருந்தது.

அத்துடன் குறித்த தினத்தில், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண, “தனிமைப்படுத்தல் ஒழுங்குவிதிமுறைகளை மீறும் நபர்கள் மீது தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்புச் சட்டங்களை மீறும் வகையில், முகக்கவசம் அணியத் தவறியமை மற்றும் சமூக இடைவெளியைப் பேணாமை போன்றவற்றுக்காக தனிமைப்படுத்தல் மற்றும் நோயத்தடுப்பு கட்டளைச்சட்டத்தின் பிரிவுகள் 4 மற்றும் 5 மற்றும் தண்டனைச் சட்டக்கோவையின் பிரிவு 264 ஆகியவற்றின் கீழ் நடவடிக்கைகளை எடுக்கவுள்ளோம்என்று அறிவித்தார்.

எவ்வாறாயினும், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச சமவாயத்திலுள்ள மட்டுப்படுத்தல் மற்றும் மதிப்பு தாழ்வுபடுத்தல் பற்றிய 198ஆம் ஆண்டின் சிரகூசா (Siracusa) கோட்பாடுகள் 'பொது அவசரநிலைகளை கையாளுவதற்காக அரசுகளினால் எடுக்கப்படுகின்ற அனைத்து நடவடிக்கைகளும் உறுதிப்படுத்தக்கூடிய சட்டப்படியான நோக்கங்களைக் கொண்டிருக்க வேண்டும்' எனக் குறித்துரைக்கின்றது.

இலங்கை அரசாங்கம் குறித்த சமவாயத்தினை ஏற்றுக்கொண்டு கையொப்பமிட்ட நாடு என்ற வகையில் அதனைப் பின்பற்றுதல் அவசியமாகின்றது. ஆனால், கொரோனா காலப்பகுதியில் அரசாங்கம் முன்னெடுத்த செயற்பாடுகள் மேற்படி கோட்பாட்டிலிருந்து நேரெதிரே விலகிச் செல்வதாகவே அமைந்திருந்தமையை உள்நாட்டு, வெளிநாட்டு சிவில் பிரதிநிதிகளும் அமைப்புக்களும் சுட்டிக்காட்டியுள்ளன.

அதேநேரம், 1978ஆம் ஆண்டில் இலங்கை அரசியலமைப்பின் உறுப்புரை 11இல், ஆளெவரும் சித்திரவதைக்கு, அல்லது கொடூரமான மனிதாபிமானமற்ற அல்லது இழிவான நடத்துகைக்கு அல்லது தண்டனைக்கு உட்படுத்தலாகாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், உறுப்புரை 14 இல், ஒவ்வொரு பிரஜையும், வெயிடுதலுட்பட பேச்சு சுதந்திரமும் கருத்துத் தெரிவித்தற் சுதந்திரமும், அமைதியான முறையில் ஒன்று கூடுவதற்கான சுதந்திரம், ஒருங்கு சேர்வதற்கான சுதந்திரம், தொழிற்சங்கம் அமைக்கவும் அதில் சேர்வதற்கும் உள்ள சுதந்திரம், ஏதேனும் சட்ட முறையான முயற்சியில் தொழிலில் வியாபாரத்தில் தொழிலில் அல்லது தொழில் முயற்சியில் தானாக அல்லது ஏனையவர்களுடன் சேர்ந்து ஈடுபடுவதற்கான சுதந்திரம் ஆகியவற்றுக்கு உரித்துடையவராகின்றார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், 2020 மார்ச் 18 ஆம் திகதி முதல் பகுதி பகுதியாகவும் பின்னர் நாடு முழுவதுமாகவும் தொடராகவும் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கானது அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்ட சாதாரண பிரஜைகளுக்கான அடிப்படை உரிமைகளை மீறும் வகையிலே அமைந்திருந்ததோடு, அந்த ஊரடங்கின் சட்ட வலிதுடைமை தொடர்பிலும் கேள்விகள் உள்ளன.

குறிப்பாக கொரோனா காலத்தில் அரசாங்கம் பிறப்பித்த ஊரடங்கின் சட்டவலிதுடைமை தொடர்பான விடயத்தினை ஜனாதிபதி சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.. சுமந்திரன், கடந்த 2020 ஏப்ரல் 4 ஆம் திகதி நுகேகொடை நிதிவான் நீதிமன்றில் இடம்பெற்ற வழக்கொன்றில் ஆஜராகி முன்வைத்த வாதம் உறுதிப்படுத்துவதாக உள்ளது.

ஊரடங்கு உத்தரவை மீறியமை, பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்பட்ட வழக்கில் ஆஜராகியிருந்த சுமந்திரன்,

நாட்டில் ஊரடங்குச் சட்டம் ஒன்றை அமுல்படுத்துவதற்கு சட்டத்தில் போதுமான ஏற்பாடுகள் உள்ளன. எனினும் இங்கு அவற்றைக் கையாளாது, வெறுமனே ஊடக அறிக்கைகள் மூலமாக மாத்திரமே ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் சட்ட ரீதியாக பிறப்பிக்கப்படாத ஊரடங்குச் சட்டத்தை மீறியதாக எவ்வாறு குற்றம்சாட்ட முடியும்? சட்ட ரீதியாக பிறப்பிக்கப்படாத ஊரடங்குக்கு ஏன் பொலிஸாரிடம் அனுமதிப்பத்திரம் பெற வேண்டும்?” என அவர் கேள்வியெழுப்பியிருந்தார்.

இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நுகேகொடை நீதிவான் ரஞ்சன் ராமநாயக்கவை பிணையில் விடுவிப்பற்கு அனுமதி அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கொரோனா காலத்தில் அரசாங்கம் பிறப்பித்த ஊரடங்கு, பிரஜைகளின் கருத்து வெளியிடும் சுதந்திரம், ஒன்றுகூடும் சுதந்திரம், நடமாடும் சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை திட்டமிட்டு இலக்கு வைத்தது போர்க்கால நிலைமைகளை விடவும் மோசமான சர்வாதிகாரச் சூழலை ஏற்படுத்தியதாக சிவில் செயற்பாட்டாளரான ஷெரீன் சரூர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக, “2020 ஜுன் முதல் வாரத்தில் தர்கா நகரில், ஓடிசம் குறைபாடுடைய 14 வயதான சிறுவன் தாரிக் அஹமட் ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாகக் கூறி பொலிஸாரினால் கடுமையாக தாக்கப்பட்டார். 2021 ஜுன் மாதத்தில், பாணந்துறையில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறியதாக கூறி பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட 42 வயதான அலி கான் எனும் இரண்டு பிள்ளைகளின் தந்தை, பொலிஸ் பொறுப்பில் இருந்தபோது மர்மமான முறையில் மரணித்தார்.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் போராட்டம், கொத்தாலவ பல்கலைக்கழக சட்டத்திற்கு எதிரான போராட்டம் ஆகியவை தடுக்கப்பட்டு போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டமைஎன்று ஷெரீன் சரூர் அவலங்களை பட்டியலிடுகின்றார்.

அத்தோடுபாராளுமன்றம் கலைக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்துவதன் பெயரால், பாராளுமன்றத்தின் அனுமதி இல்லாமல் ஊரடங்கு உத்தரவை நடைமுறைப்படுத்தி, நாட்டு மக்களை இறுக்கமாகக் கட்டுப்படுத்தும் போக்கில் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ செயற்பட்டார்.

இதற்காக அவர், 2020 ஏப்ரல் 22 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியில் ஜனாதிபதி பொதுமக்கள் பாதுகப்புச் சட்டத்தின், 40 அத்தியாயத்தின் 12 ஆவது பிரிவின் கீழ் நாட்டில் பொது ஒழுங்கைப் பேணுவதற்காக இராணுவத்தினரை சேவையில் ஈடுபடுமாறு ஜனாதிபதி அழைத்திருந்தார்என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், “கொரோனா விதிமுறைகள் காரணமாக அனைத்து சமூகங்களின் அடிப்படை உரிமைகளும் பறிக்கப்பட்டதோடு, பொலிஸ் நிலையங்களில் சித்திரவதைகள் அதிகரித்திருந்தன. மரணங்கள் நிகழ்ந்திருந்தன. எனினும், அவை பற்றி எந்தவிதமான தகவல்களையும் எம்மால் பெற்றுக்கொள்ள முடியாத சூழல் காணப்பட்டது.

எனினும், அரசியலமைப்பின் உறுப்புரை 126 இன் கீழ் பிரஜை ஒருவரின் அடிப்படை உரிமைகள் நிறைவேற்று அல்லது நிர்வாக நடவடிக்கைகளினால் மீறப்படுகின்ற போது உயர் நீதிமன்றத்திற்கு விண்ணப்பம் செய்து நிவாரணத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதன் பிரகாரம் நீதிமன்றத்தினை நாடியபோதும், கொரோனா நிலைமைகளை காரணம் காண்பித்து எமது மனு நிராகரிக்கப்பட்டதுஎன்றும் சுட்டிக்காட்டினார்.

இவருடைய கருத்துக்களை வலுப்படுத்தும் வகையில், 2021ஆம் ஆண்டு ஜனவரியில் .நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் மிச்சல் பாச்லெட் .நா. மனித உரிமைகள் பேரவைக்கு எழுதிய அறிக்கையில்இலங்கையில் சட்டம் ஒழுங்கு மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாடு பற்றிய இராணுவமயமாக்கப்பட்ட அணுகுமுறைக்கு மத்தியில் இடம்பொறும் 'பொலிஸ் தடுப்பக்காவலிலான இறப்பு மற்றும் குற்றஞ்சாட்டப்பட்ட குற்றவாளிகள் கும்பல்கள் தேடுதல் மற்றம் பாதுகாப்பு நடவடிக்கைகளின் போது பொலிஸ் அதிகாரிகளினால் சுட்டுக்கொல்லப்படல்' தொடர்பில் நிகழ் அதிகரித்துள்ளன. 2020 ஜுன் முதல் ஒக்டோபர் வரையிலான முடக்கல் நிலைமைகள் நீடித்த காலத்தில் இலங்கை பொலிஸ் அதிகாரிகளுடன் தொடர்புடைய ஐந்து நீதிக்குப் புறம்பான கொலைகள் இடம்பெற்றுள்ளன' என்று குறிப்பிட்டுள்ளார்.

மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் சிரேஷ்ட ஆய்வாளராகவும் சட்டத்தரணியாகவும் பணியாற்றும் பவானி பொன்சேகா, வழங்கிய பிரத்தியோக நேர்காணலில் பிரஜைகளின் அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் கொரோனா காலத்தில் அரசாங்கம் பிறப்பித்த ஊரடங்கின் சட்டவலிதுடைமையின்மைக்கான காரணங்களை தெளிவு படுத்தியதோடு, நாட்டில் காணப்படுகின்ற அவசரகால நிலைமைகளின் போதான சட்ட ஏற்பாடுகளை அரசாங்கம் முற்றாக நிராகரித்துச் செயற்பட்டமையையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதற்கு அமைவாக, “கடந்த 2020 மார்ச் மாதம் 20 முதல் நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட  தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்பு கட்டளைச் சட்டமானது அடிப்படையில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்துவதற்கான எவ்வித ஏற்பாட்டினையும் கொண்டிருக்கவில்லை.

'ஊரடங்கு' என்ற சொல்லானது பொது மக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் பிரிவு 16 இல் மட்டுமே காணப்படுகின்றது என்பதுடன் இது ஜனாதிபதியினால் அமுல்படுத்தப்பட வேண்டியதாகும். பொது மக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் பிரிவு 21(2) ஆனது, பிரிவு '2 இன் உபபிரிவு (3) இன் ஏற்பாடுகள், பிரிவு 12, பிரிவு 16 அல்லது பிரிவு 17 இன் கீழ் ஆக்கப்படுகின்ற கட்டளையொன்று தொடர்பிலும் பரஸ்பரமாக ஏற்புடையதாகும்என்று குறிப்பிடுகின்றார் பவானி பொன்சேகா.

மேலும், “பொது மக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் பிரிவு 02(3) ஆனது, 'இப்பிரிவில் முற்கூறப்பட்டுள்ள ஏற்பாடுகளின்கீழ் பிரகடனமொன்று செய்யப்படுகின்றபோது, அப்பிரகடனம் செய்யப்பட்டமை தொடர்பில பாராளுமன்றத்திற்கு உடனடியாக அறிவிக்கப்படுதல் வேண்டும் என்பதுடன், அக்காலப்பகுதியில் பாராளுமன்றம் பத்து நாட்களுக்குள் முடிவுறாத ஒத்திவைப்பு அல்லது கூட்டத்தொடர் முடிவு நீடிப்பொன்றினால் பிரிந்திருக்குமாயின், அப்பிரகடனமானது பத்து நாட்களுக்குள் பாராளுமன்றக் கூட்டமொன்றிற்காக வழங்கப்பட வேண்டும்என்பதும் அவசியமாகும் என்றும் அவர் தெரிவிக்கின்றார்.

ஆகவே, சட்டத்தின்படி, ஊரடங்கு அமுலாக்கம் தொடர்பாக உத்தியோகபூர்வமாக வர்த்தமானியிலிட வேண்டிய கடப்பாடு ஜனாதிபதிக்கு உண்டு என்பதுடன் அதன்பின்னர் வர்த்தமானி தொடர்பான தகவல்களை பாராளுமன்றத்திற்கு வெளிப்படுத்த வேண்டும். எனினும் குறித்த நடைமுறை ஊரடங்கு அமுலாக்கத்தின் போது பின்பற்றப்படவில்லைஎன்றும் பவானி பொன்சேகா சுட்டிக்காட்டுகின்றார்.

அத்தோடு, “ஊரடங்கு உத்தரவை விதிக்க பொலிஸிற்கு சட்டப்பூர்வமாக அதிகாரம் அளிக்கும் வெளிப்படையான சட்ட ஏற்பாடுகள் எதுவும் இல்லை. எவ்வாறாயினும், அவசரகால சூழ்நிலைகளின் போது இலங்கையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் என்கின்ற விடயம் அடிக்கடி நடைமுறைப்படுத்தப்பட்டு வந்துள்ளது. பொலிஸ் ஊரடங்கு உத்தரவு என்பது தொடர்பிலான கருத்தேற்பு தொடர்பில் வெளிப்படையான கருத்தேற்பு எதுவும் பொலிஸ் கட்டளைச் சட்டத்தில் இல்லை

மேலும், “இலங்கையிலுள்ள எவரேனும் ஆளின் அல்லது ஆட்கள் தொகுதியின் பாதுகாப்புக்கு அல்லது ஆரோக்கியத்துக்கு ஆபத்தாயிருக்கின்ற அல்லது ஆபத்தாயிருப்பதற்கு அச்சுறுத்துகின்ற நிகழ்ந்துள்ள அல்லது நிகழக்கூடிய சாத்தியமுள்ள இயற்கையான அல்லது மனிதனால் ஏற்படுத்தப்பட்ட சம்பவம்' என்று 2005ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க இலங்கைப் பேரழிவுச் செயலாட்சிச் சட்டம் பேரழிவினை வரைவிலக்கணப்படுத்துவதோடு 'தொற்றுநோய் பரவுகையினையும்' உள்ளடக்கியுள்ளது'” என்றும் சட்டத்தரணி பவானி பொன்சேகா குறிப்பிடுகின்றார்.

அத்தோடு, “ஏதேனும் பேரழிவு ஏற்படும் பட்சத்தில், அவசரகால உதவி, மீட்பு, நிவாரணம், புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு என்பவற்றை ஏற்பாடு செய்தல், நிகழக்கூடிய அல்லது நிகழ்ந்துள்ள ஏதேனும் பேரழிவின் விடயத்தில், உள்ளுர் மற்றும் சமுதாயத் தன்னம்பிக்கையை ஏற்படுத்துதலும் ஆதரவளித்தலும், இயைபான அதிகாரசபைகள் மற்றும் குழக்கள் அத்துடன் 1993ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க புனரமைப்பு, புனர்வாழ்வு நிதியச்சட்டத்தால் தாபிக்கப்பட்ட புனரமைப்பு, புனர்வாழ்வு நிதியம் என்பவற்றிலிருந்து பேரழிவுச் செயலாட்சிக்கான நிதிகள் குறித்தொதுக்கப்படுவதனை விதந்துரைத்தல் ஆகியவற்றை இலக்காக கொண்டிருக்கும் குறித்த சட்டத்தின் வரம்பிற்குள் கொரோனா நெருக்கடியும் நிச்சயமாக உள்ளடங்கும்என்றும் அவர் தெரிவிக்கின்றார்.

ஆகவே, “இலங்கைப் பேரழிவுச் செயலாட்சிச் சட்டத்தினை அமுல்படுத்துவதன் ஊடாக தேசிய பேரழிவுச் செயலாட்சிப் பேரவையினைக் கூட்டுதல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினை செயற்படுத்தல் உள்ளிட்ட விடயங்களை கையாள்வாதில் அரசாங்கம் சிறிதளவும் கரிசனை கொண்டிருக்காத நிலைமைகளே நீடித்திருந்தன. அதற்கு அரசாங்கம் பதிலளிக்கவல்லாத நிலையில் தற்போது வரையில் இருக்கின்றது. இந்நிலையால் சாதாரண பொதுமக்களின் நிலைமைகள் மோசமடைந்திருக்கின்றனஎன்றும் பவானி பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, கொரோனா காலத்தில் அரசாங்கத்தினால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டம் சட்டவலிதுடைத்தன்மை இல்லை என்பதை தனது நீதிமன்றத்தின் தீர்ப்பின் ஊடாக உறுதிப்படுத்தியுள்ள ஜனாதிபதி சட்டத்தரணி எம்..சுமந்திரன், ஜனநாயக விழுமியங்களை பேணிக்காக்கும் நோக்குடனும், தேசிய நலனின் அடிப்படையிலும் கொரோனா போன்ற பேரிடர் நிலைமைகளைக் கையாள்வதற்காக தனிநபர் பிரேரணையொன்றை முன்னகர்த்தியபோதும் அதனை நிறைவேற்றுவதற்கு ஆளும் தரப்பில் கரிசனைகள் கொள்ளப்படவில்லை என்று விசனம் வெளியிட்டுள்ளார்.

அத்தோடு, “பொதுச் சுகாதார அவசரகால நிலையின் இருப்பு அல்லது உடனடித் தன்மையைக் கருத்தில் கொண்டு, என்னால் முன்வைக்கப்பட்ட தனிநபர் சட்டமூலமானது பொதுச் சுகாதார நலன்களுக்கானதாக உள்ளது. கொரோனா தொற்றுநோயின் தீவிரத்தன்மை தற்போது குறைவடைந்திருந்தாலும், எதிர்காலத்தில் அதை எதிர்த்துப் போராடுவதற்கான நடவடிக்கைகளை சட்டபூர்வமாக வழங்குவது நாட்டிற்குப் பயனுள்ளதாகும்என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அச்சட்டமூலத்தின் படிபிரிவு 2 இன் கீழ் ஒரு பொதுச் சுகாதார அவசரநிலை அறிவிக்கப்பட்டால், பொதுச் சுகாதார அவசர நிலைப் பேரவை என்று அழைக்கப்படும் ஓர் அமைப்பை உருவாக்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அந்த அமைப்பில், ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், சுகாதார, சமூக நலன் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல அமைச்சுக்களைப் பொறுப்பானதாக் கொண்டிருக்கும்என்றும் ஏம்..சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

 “கொரோனா பரவலால் ஏற்பட்ட நெருக்கடியான காலத்தில், இலங்கை அரசாங்கத்தின் கட்டமைப்புகள் சுகாதார நெருக்கடியை தீர்க்கத் தவறிவிட்டிருந்ததோடு இராணுவமயமாக்கப்பட்ட அணுகுமுறை தீவிரமாக இருந்தது. ஆகவே கொரோனாவைக் கையாள்வதில் சுகாதாரத்துறை சார்ந்த நிபணர்களின் வகிபாகம் மிகவும் முக்கியமாகின்றதுஎன்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்காலத்தில் கொரோனா பரவல் போன்றதொரு தீவிரமான நிலைமையை அரசாங்கம் பிரஜைகளின் உரிமைகளுக்கு மதிப்பளித்து, ஜனநாயக விழுமியங்களை பேணிக்காத்து, சட்டவலிதுடைத்தன்மையான சட்டங்களை நடைமுறைப்படுத்தி வெளிப்படையுடன் செயற்படுவதற்காக புதிய சட்டமொன்றை உருவாக்குவதற்க முனைப்புக் காண்பிக்கின்றதென்றால் பரந்து பட்ட கலந்துரையாடல்கள் சட்ட வரைவை மேம்படுத்துவதற்கு பங்களிப்புச் செய்வதற்கு சிவில் மற்றும் துறைசார்ந்த அமைப்பினர் தயாராகவுள்ளதாக சட்டத்தரணி பவானி பொன்சேகா தெரிவிக்கின்றார்.

ஆனால், கடந்த காலத்தில் இழைக்கப்பட்ட தவறுகள் தொடர்பிலான விடயங்களுக்கு பொறுப்புக்கூறல் மற்றும் எதிர்காலத்தில் மீள நிகழாமையை உறுதிப்படுத்துவதற்கு எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் பதிலளிப்பதற்காக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, சுகாதார சுகாதார அமைச்சின் செயலாளர் ஜானக்க ஸ்ரீ சந்திரகுப்த, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன ஆகியோரை பலதடவைகள் தொடர்பு கொண்டபோதும் அவர்கள் வௌ;வேறு காரணங்களைக் கூறி தவிர்ந்து கொண்டுள்ளனர்.

தொற்று நோய் விஞ்ஞானப்பிரிவின் தரவுகளின் பிரகாரம், இலங்கையில் 2020ஆம் ஆண்டு ஜனவரி 27முதல் இவ்வாண்டின் கடந்த ஏப்ரல் 30ஆம் திகதி வரையிலான காலத்தில் 6இலட்சத்து 72ஆயிரத்து 171பேர் தொற்றுக்கு இலக்காகியிருந்ததோடு 16ஆயிரத்து 842 மரணங்கள் சம்பவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கையை புதுப்பிக்க...

2025-12-11 09:59:15
news-image

அரசியல்வாதிகள் பின்பற்றுவதற்கு உதாரணத்தை வகுக்கும் மக்கள்

2025-12-10 11:43:39
news-image

இலங்கை தீவின் முந்தைய அழகு இரட்டிப்பாகும்...

2025-12-10 19:27:57
news-image

மீட்சிக்குக் கைகொடுக்கும் சர்வதேசம் ; தோழனாகத்...

2025-12-10 10:38:27
news-image

இலங்கை கடற்படையின் 75வது ஆண்டு நிறைவு...

2025-12-09 17:13:07
news-image

சர்வதேச ஊழல் ஒழிப்பு தினம் –...

2025-12-09 11:50:13
news-image

பெறுமதியான பொருட்களை கழிவுகளாக மாற்றிய 'தித்வா'

2025-12-08 20:01:31
news-image

சம்பவங்களுக்கு பிறகு சகலரும் புத்திசாலிகள்

2025-12-08 12:02:59
news-image

கூட்டணி அரசியலை மையமாகக்கொண்ட தமிழ்நாட்டு தேர்தல்கள்

2025-12-08 10:37:55
news-image

மாகாண சபைத் தேர்தலுக்கான மக்கள் இயக்கம்...

2025-12-07 17:54:14
news-image

'பூமாலை' தொடக்கம் 'சாகர் பந்து' வரை

2025-12-07 17:55:35
news-image

பொறுப்புக்கூற வேண்டியவர்கள் யார்?

2025-12-07 17:41:22