வவுனியா தனியார் பஸ் நிலையத்தில் இன்றிலிருந்து பஸ் சேவைகளை மேற்கொள்வதில்லை என முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா தனியார் பஸ் உரிமையாளர் சங்கத் தலைவர் திரு. எஸ். ராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், 

வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற உயர் மட்ட பேச்சு வார்த்தையின் போது இணைந்த சேவை மேற்கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் இ.போ.ச.  சாலை ஊழியர்கள், தனியார் பஸ் சாரதிகள் முன்னைய சேவையினை மேற்கொண்ட இடங்களில் மார்ச் 31 வரை மேற்கொள்ளவும், அதற்கிடையே ஒரு இணைந்த சேவையினை மேற்கொள்வதற்கு முடிவு எட்டப்படும் வரை புதிய பஸ் நிலையத்தை தற்காலிகமாக மூடுவதற்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

எனவே இரு பகுதியினருக்கும் ஒரு நிரந்தரத் தீர்வு பெற்றுத்தரும்வரை ஒத்துழைப்பு வழங்கி புதிய பஸ் நிலையத்தினை மூடி தனியார் பஸ்கள் தமது சேவையினை முன்னர் மேற்கொண்ட இடத்திலிருந்து மேற்கொள்ளுமாறு முதலமைச்சரின் செயலாளர், வட மாகாண போக்குவரத்து அமைச்சர் ப. டெனீஸ்வரன் ஆகியோர் கேட்டுக் கொண்டதற்கு அமைவாக இன்றிலிருந்து (10) தனியார் பஸ்கள் தமது சேவைகளை முன்னர் மேற்கொண்ட இடத்தில் மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளதாகவும் நேற்றைய தமது பேரணிக்கு ஆதரவளித்த அனைவருக்கும் தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் வவுனியா தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத் தலைவர் திரு. எஸ். ராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார்.