மார்க் ஆண்டனி - திரை விமர்சனம்

16 Sep, 2023 | 07:59 PM
image

தயாரிப்பு : மினி ஸ்டுடியோஸ்

நடிகர்கள் : விஷால், எஸ். ஜே. சூர்யா, சுனில், ரிது வர்மா, செல்வராகவன், அபிநயா, ரெடின் கிங்ஸ்லி, நிழல்கள் ரவி மற்றும் பலர்.

இயக்கம் : ஆதிக் ரவிச்சந்திரன்

மதிப்பீடு : 2.75 / 5

'திரிஷா இல்லனா நயன்தாரா',  'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்', 'பஹீரா' என தரம் குறைந்த படைப்புகளை வழங்கி விமர்சனத்திற்குள்ளான இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் திரைப்படம் 'மார்க் ஆண்டனி'. இந்தத் திரைப்படம் அவர் மீதான விமர்சனத்தை உறுதிப்படுத்தியதா? மாற்றியமைத்ததா? என்பதனைத் தொடர்ந்துக் காண்போம்.

அறிவியல் கண்டுபிடிப்பாளரான சிரஞ்சீவி (செல்வ ராகவன்) டைம் டிராவல் செய்யும் தொலைபேசி கருவி ஒன்றை கண்டுபிடிக்கிறார். இதன் மூலம் கடந்த காலத்திற்கு சென்று தொலைபேசி மூலம் பேசி எதிர்காலத்தை மாற்ற முடியும். இந்த ஒரு விடயத்தை..வசதியை வைத்துக்கொண்டு தன் தந்தை ( அண்டனி - விஷால்) யின் மரணத்தின் பின்னணியை அறிந்து கொள்கிறார் மார்க். இதன் பிறகு அவர் ஜாக்கி பாண்டியனை( எஸ்.ஜே.சூர்யா) யும் அவருடைய மகனான மதன் பாண்டியனையும் என்ன செய்தார் என்பது தான் படத்தின் கதை.

படத்தின் முதல் பாதியை விட இரண்டாம் பாதி ரசிகர்களுக்கு கலகலப்பை தருகிறது.‌ மார்க்காக நடித்திருக்கும் விஷாலை விட...எண்பதுகளின் டான் அண்டனி வேடத்தில் விஷால் நன்றாக நடித்திருக்கிறார்.‌ இவரை விட ஜாக்கி பாண்டியனாகவும், மதன் பாண்டியனாகவும் நடித்திருக்கும் எஸ் ஜே சூர்யா தனக்கு கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்தி ( வசன உச்சரிப்பு, டைமிங், உடல் மொழி...) ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடிக்கிறார்.‌

டைம் ட்ராவல் செய்யும் தொலைபேசி ஒன்றை வைத்துக்கொண்டு டைம் ட்ராவல் எனும் சயின்ஸ் பிக்சன் படமாகவும், ஃபேண்டஸி படமாகவும், காமெடி படமாகவும்... கலந்து கட்டி ரசிகர்களுக்கு வழங்கி உற்சாகப்படுத்தி இருக்கிறார் இயக்குநர்.

திரைக்கதை முழுவதும் விஷால் - எஸ். ஜே. சூர்யாவின் ஆக்கிரமிப்பும், ஆதிக்கமும் அதிகம். ஏனைய கதாபாத்திரங்களில் ரெடின் கிங்ஸ்லி சிரிப்பை வரவழைக்க கடும் முயற்சிக்கிறார்.

தமக்குள்ள படைப்பு சுதந்திரத்தை.. லாஜிக் மீறலை பற்றி கவலைப்படாமல் இஷ்டத்திற்கு வளைத்து படைப்பை வழங்கி இருக்கிறார் இயக்குநர். ஆனால் ரசிகர்களை யோசிக்கவிடாமல் உற்சாகப்படுத்துவதால் மார்க் ஆண்டனி தப்பித்து விடுகிறார்.

அபிநந்தன் ராமானுஜத்தின் ஒளிப்பதிவு தனித்துவமான கவனத்தை பெறுகிறது. குறிப்பாக உச்சகட்ட காட்சியில் வரும் சண்டைக்காட்சியை குறிப்பிடலாம். இரண்டாம் பாதியில் ரெட்ரோ ஃபீலை தன்னுடைய பிரத்தியேக ஒளி வெளிச்சத்தின் மூலம் வெளிப்படுத்தி ரசிகர்களை மாயாஜாலத்தில் ஆழ்த்துகிறார்.

படத்தில் இடம்பெறும் ஒரிஜினல் பாடல்களை விட.. ஏற்கனவே வெளியாகி வெற்றி பெற்ற பாடல்கள் இடம்பெறுவது ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்துகிறது. 

மார்க் ஆண்டனி - ஹாப்பி டைம் டிராவல் மேஜிக்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right